இ-காமர்ஸ் துறையால் பொருட்கள் வாங்குவது எளிதாகி இருக்கிறது, தேவைக்கு ஏற்ப வேண்டியதை வாங்கிக்கொள்ள முடியும், கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்க முடியும் என்று பல சௌகர்யங்கள் இருக்கின்றன. இ-காமர்ஸ் வணிகம் வளர்ந்து வந்ததால், சிறு கடைகளின் வணிகம் தொடர்ந்து குறைந்து வந்ததை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.

அதனால் இ-காமர்ஸ் முறையிலான வணிகம் தவறு என்று குறிப்பிடுவதோ, சிறு கடைகளின் மீது பரிதாபப் படுவதினாலோ ஒன்றும் நடந்துவிடாது. இது காலத்தின் மாற்றம். சிறு வணிகர்களுக்கு தொழில்நுட்பத்தை சொல்லிக்கொடுப்பது மற்றும் அவர்களை டிஜிட்டலில் இணைப்பது மட்டுமே அவர்களின் வணிகத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கும். அதற்கான ஒரு படியாக ‘ஃபாலோஆட்ஸ்’ ‘FollowAds’ செயலி (https://followads.in) தொடங்கப்பட்டிருக்கிறது.

நிறுவனர்கள் முகம்மது ரிலுவான் கான், ஹூஸ்நுல் இஷ்ரத் மற்றும் சுப்ரிதா

இதற்கான அறிமுக விழாவில் தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன், மதிமுக-வின் மல்லை சத்யா மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் மற்றும் சிறு வணிகர்கள் பலரும் கலந்து கொண்டர். அப்போது பேசிய அமைச்சர், ”சிறுவணிகர்களை தொழில்நுட்பத்தின் மூலம் இணைப்பதற்கு முயற்சி எடுத்திருப்பது பாராட்டுக்குறியது. இதற்கான தேவையும் இங்கு இருக்கிறது. சில காலம் முன்பு வரை வெறும் ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு தொழில் புரிய முடியாது. ஆனால் இப்போது ஐடியாவை வைத்து முதலீட்டை திரட்ட முடியும்,” என்றார்.

மேலும், இதற்கான வாய்ப்புகள் குறித்து நிறுவனர்கள் யோசிக்க வேண்டும். தவிர முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தை குறிப்பிடும்போது நிறுவனத்தின் வருமானம் அல்லது லாபத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுவார்கள். தற்போது சந்தை மதிப்பு அடிப்படையிலே தொழில் உலகம் செயல்படுகிறது. லாபம் ஈட்டாத நிறுவனங்களின் சந்தை மதிப்புக் கூட பல நூறு கோடிகளில் இருக்கிறது. தற்போதைய சந்தை வாய்ப்பை பயன்படுத்தி பில்லியன் டாலர் நிறுவனமாக மாற வேண்டும் என வாழ்த்துகிறேன் என அமைச்சர் கூறினார்.

‘FollowAds’ செயலி உருவாக்கிய குழு

முகமது ரில்வான்கான், ஹூஸ்னுல் இஸ்ரத், சுப்ரிதா மற்றும் வெங்கட் ஆகிய நால்வரும் இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தலைமைச் செயல் அதிகாரி முகமது ரில்வான்கான் தன் தொழில்முனைவுப் பயணம் குறித்து விரிவாக யுவர்ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தேன். அங்கேயே இளங்கலை கல்வி முடித்தேன். சென்னையில் எம்.பி.ஏ முடித்தேன். முதலில் மாஃபா நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். அதனைத் தொடர்ந்து நிதிச்சேவைகள் துறையில் கணிசமான காலம் பணியாற்றினேன். அதனைத் தொடர்ந்து சொந்தமாக தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து ஏசி அவுட்டோர் யூனிட் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தொழிலை செய்துவந்தோம்.

இந்த தொழில் நன்றாக போய்கொண்டிருந்தது. ஒரு முறை உணவு குறித்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இனி நாட்டுக்கோழி மட்டுமே சாப்பிடலாம் என முடிவெடுத்தோம். இதற்காக நாங்கள் இருக்கும் பகுதி முழுவதும் சுற்றி தேடினேன். நாட்டுக்கோழி எங்கு கிடைக்கும் என்பதை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, வழக்கமான வழியில் செல்லாமல் வேறு  வழியில் வீட்டுக்குச் சென்றேன். அப்போது எங்கள் வீட்டுக்கு அருகேயே ஒரு நாட்டுக்கோழி கடை இருந்தது. அப்போதுதான் இந்த தொழிலுக்கான ஐடியா பிறந்தது.

”நம் வீட்டுக்கு அருகே இருந்தால் கூட நமக்கு இந்த விவரம் தெரியவில்லையே, தவிர அந்த சிறு கடைக்காரர்களுக்கும் டிஜிட்டல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களுக்கும் வியாபாரம் உயரும் என நினைத்தேன். ஓர் ஆண்டுக்கு முன்பே தோன்றினாலும் இந்த ஐடியா குறித்து சில மாதங்கள் விவாதித்தோம். அதனை தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இதற்கென குழு அமைத்து நிறுவனமாக தொடங்கினோம்,” என்கிறார்.

40 நபர்கள் கொண்ட குழுவுடன் செயல்பட்டு வருகிறார்கள். இப்போதைக்கு சென்னையில் மட்டும் செயல்படும் இவர்கள், சென்னையில் 5,000 கடைகளை தங்களுடைய செயலியில் இணைத்திருக்கின்றனர். மேலும் பல கடைகளை இணைக்கும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார் ரில்வான்.

இப்போதைக்கு சிறு கடைகளுக்கு எந்த கட்டணமும் நாங்கள் வசூலிக்கவில்லை. இப்போது எங்கள் செயலியை அறிமுகம் செய்திருக்கிறோம். ஒரு லட்சம் டவுன்லோட் என்னும் எண்ணிக்கையை தொட்ட பிறகுதான் அவர்களிடம் கட்டணம் குறித்து பேச வேண்டும், என்றார்.

FollowAds குழுவினர்

சிறு கடைகாரர்களின் தேவையைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு அண்ணாநகரில் உள்ள ஆண்களுக்கு மட்டும் அவர்களின் கடை குறித்த தகவல் செல்ல வேண்டும் என்றால் எங்களால் அத்தகவல்களை அனுப்ப முடியும். இது போல சிறு வணிகர்களின் தேவைக்கு ஏற்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நோட்டிபிகேஷன் மூலம் தகவல் அளிக்க முடியும். இதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கிறோம். 1,000 நபர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் ஒரு மாதத்துக்கு 300 முதல் 2000 வரையில் கட்டணம் இருக்ககூடும்,” என்றார்.

ஆப் ஏன் தேவை?

இ-காமர்ஸ் வந்த பிறகு இந்த செயலிக்கான தேவை இருக்கிறதா என்னும் கேள்வியை நாங்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். இருக்கிறது என்பதே உண்மை. போட்டியின் காரணமாக சிறு நிறுவனங்கள் தங்களது லாபத்தை குறைத்து பல சலுகைகள் வழங்கி வருகின்றனர். ஆனால் அவற்றை அனைவருக்கும் சென்று சேர்க்க முடியாத சூழல் இருக்கிறது.

குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கடை வைத்திருபவர் அதிக செலவு செய்து டிவி பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க முடியாது. அவர்கள் செய்ய முடிந்தது நோட்டீஸ் அடித்து வீடுகளுக்குக் கொடுக்கலாம். அல்லது அந்த பகுதிகளில் உள்ள முக்கிமான சந்திப்புகளில் போஸ்டர் ஒட்டலாம். ஆனால் இவை எந்த அளவுக்கு பயன் கொடுக்கும் எனத் தெரியாது. அதே சமயம் அதிக செலவும் பிடிக்கும்.

இப்போது செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அனைவரித்திடலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. நோட்டிபிகேஷன் மூலம் நமக்குத் தேவையான வாடிக்கையாளர்களை குறைந்த செலவில் சென்றடைய முடியும். ”இது சிறு கடை வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல், தொடர் சங்கிலி கடைகள் நடத்துபவர்களும் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். காரணம் அவர்களின் சலுகைகள், அவர்களுடைய தயாரிப்புகளை நேரடியாக வாடிக்கையாளர்களிடன் கொண்டு சேர்க்க முடியும் என்பதே,” என விளக்கினார் ரில்வான்.

இப்போதுதான் செயலி அறிமுகமாகி இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் ஒரு லட்சம் டவுன்லோட் என்னும் எண்ணிக்கையை தொட்டுவிடுவோம். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிடுவோம். அதனால் பிற முதலீடுகள் இல்லாமல் சொந்த முதலீட்டில் நிறுவனத்தை நடத்த முடியும்.

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் பெங்களூரு நகரங்களில் இதே திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். அப்போது தேவைப்பட்டால் நிதி திரட்டுவது குறித்து பரிசீலனை செய்வோம். அதுவரை நிறுவனத்தைச் சொந்த முதலீட்டிலே நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர் நிறுவனர்கள்.இப்போது இந்த லட்சம் டவுன்லோட் என்பதை எட்டுவதற்கான பணிகளில் தீவிரமாக இயங்குகிறோம் என ரில்வான்கான் கூறினார்.

சிறு வணிகர்களை இணைக்கும் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.