தொழில்துறை அமைப்பான டை (TiE) சார்பில் கடந்த வாரம் தொழில்முனைவோர் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இந்தியாவின் முக்கியத்தலைவர்கள் பலர் உரையாற்றினார். இதில் ஐடி பிரஷ் (iD fresh)நிறுவனத்தை உருவாக்கிய பிசி முஸ்தபாவின் பேச்சு தொழில்முனைவோருக்கு உத்வேகத்தை அளித்தது. அந்த உரையின் சுருக்கமான வடிவம்.
100 சதவீதம் கற்றுக்கொள்ள முடியாது…
என் தந்தை கூலி வேலை செய்து என்னை படிக்கவைத்தார். என்ஜினீயரிங் முடித்து, அதன் பிறகு ஐஐஎம் பெங்களூருவில் வேலை படித்தேன். தொழில் தொடங்கலாம் என்னும் யோசனையுடன் ஐடி பிரஷ் நிறுவனத்தை எங்கள் உறவினர்களுடன் சேர்ந்து தொடங்கினோம். முதலில் பெங்களூருவில் ஆலை அமைத்து நகருக்குள் விற்கத்தொடங்கினோம். 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நாங்கள் சப்ளை செய்திருந்த கடையில் இருந்து போன் வந்தது. உங்களுடைய மாவு பாக்கெட் வெடிக்கிறது, அவசரம் வரவும் என கூறினார்கள்.
நாங்கள் அனைவரும் அங்கு சென்றோம். கடைக்காரர் பிரிட்ஜினை துடைக்கs சொன்னார். அப்போது எங்களுடைய சேல்ஸ்மேன் ஒருவர் கடை உரிமையாளர்களிடம் சென்று, நாங்கள் தரமான பொருட்களை தயார் செய்கிறோம், பயப்பட ஒன்றும் இல்லை என்று விளக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் கையில் இருக்கும் மாவு பாக்கெட் வெடித்தது. அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
அந்த சம்பவத்துக்கு பிறகுதான் நொதித்தல் குறித்து (fermentation) எங்களுக்கு தெரியும். நொதித்தல் என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு மாவு தொழிலில் இறங்கவில்லை. தொழிலில் இறங்கிய பிறகு, தவறுகளில் இருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். 100 சதவீதம் ஒரு தொழிலை கற்றுக்கொண்ட பிறகுதான் தொழில் தொடங்குவேன் என்றால் அது நடக்காது.
சென்னை சிக்கல்
தொழில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து சென்னையில் விரிவாக்கம் செய்தோம். கணிசமான முதலீடு செய்து, கடைகளுக்கு வினியோகம் செய்தோம். ஆனாலும் அப்போது மிகப்பெரிய தோல்வி.
நாங்கள் ஒரு பாக்கெட் மாவு ரூ.50-க்கு விற்பனை செய்தோம். ஆனால் போட்டி நிறுவனங்கள் ரூ.10-க்கு (ஒரு கிலோ) விற்பனை செய்தார்கள். அதனால் இந்த போட்டியை எங்களால் சமாளிக்க முடியவில்லை. காரணம் நாங்கள் சந்தையில் அரசி வாங்குகிறோம். அவர்கள், அரசாங்க அரசியை வாங்குவதன் மூலம் ரூ.10-க்கு கொடுக்கிறார்கள்.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லை. இப்போது மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. கடன் வாங்கி சம்பளம் கொடுத்து நிறுவனத்தை நடத்துவது, போட்டி நிறுவனங்களை போல அரசாங்க அரிசியை வாங்குவது மூன்றாவது சென்னைக் கிளையை மூடுவதன் மூலம் நஷ்டத்தை குறைப்பது என்னும் வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. நாங்கள் மூன்றாவது வழியை தேர்ந்தெடுத்தோம். சென்னை கிளையை மூடி, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்தோம்.
இதன் மூலம் சொல்லவருவது உங்கள் தரத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டாம் என்பதுதான்.
லாபமா?, பொறுப்பா?
சில ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நாங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கினோம். 2015-ம் ஆண்டு சென்னை பெரு மழை. எங்கள் ஆலையும் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. சென்னையில் உணவுக்கு கூட இன்றி பலர் தடுமாறினார்கள். இந்த சூழ்நிலையில் லாபமா, பொறுப்பா என்னும் கேள்வி வந்தது. இத்தனைக்கும் எங்களுக்கும் பலத்த நஷ்டம். பெங்களூருவில் இருந்து மாவு பாக்கெட்களை கொண்டு வந்து பிரீமியம் விலைக்கு விற்றிருக்க முடியும். சில நிறுவனங்கள் இப்படி செய்தன. ஆனால் நாங்கள் பெங்களூரு ஆலையில் இருந்து மாவினை எடுத்து வந்து உணவு தயாரித்து கொடுத்தோம்.
லாபத்தை எப்போதும் சம்பாதிக்க முடியும். ஆனால் நமது பொறுப்பினை வெளிகாட்டுவதற்கு சில தருணங்கள் மட்டுமே கிடைக்கும். அந்த தருணங்களை நாம் இழக்கக் கூடாது.
நம்பிக்கை மையம்
நாங்கள் தரமான பொருட்களை தயாரிக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும். மக்களுக்கு நம்பிக்கையை எப்படி உருவாக்குவது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்தது. மக்கள் நம்பிக்கை வைத்தால்தான் உங்களின் தரம் தெரியவரும். அதனால் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்கு நம்பிக்கை மையங்களை உருவாக்கினோம்.
கிட்டத்தட்ட இது ஒரு கடைபோலதான். அங்கு எங்களுடைய அனைத்து விதமான பொருட்களும் இருக்கும். ஆனால் அங்கு சிசிடிவி காமிரா, விற்பனையாளர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். வாடிக்கையாளர்கள் வரலாம். தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் பணம் கொடுக்கலாம். இல்லையெனில் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். சில சமயங்களில் குழந்தைகள் விளையாடும் கரன்ஸி கூட எங்களுக்கு வரும். அடுத்த சில நாட்களுக்கு பிறகு ரூ.500 நோட்டும் எங்களுடைய பெட்டியில் இருக்கும். நாளடைவில் இந்த நம்பிக்கை மையத்தின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதனால் பல நம்பிக்கை மையங்களை உருவாக்கினோம்.
நகரின் ஒரு முக்கியான கடையில் விற்பனையாகும் அளவினை விட இந்த நம்பிக்கை மையத்தில் எங்களுக்கு வருமானம் அதிகம். இந்த மையங்களால் எங்களுக்கு எந்த செலவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
வாடிக்கையாளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன்பு, வாடிக்கையாளரிடம் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்கான பலனை நாங்கள் கண்கூடாக உணர்ந்தோம்.
காமன்சென்ஸ்
பிஸினஸுக்கு பல விஷயங்கள் தேவை. அதில் முக்கியமானது காமன்சென்ஸ். நாங்கள் செய்வது பெரிய விஷயம் இல்லை. இட்லிக்கு தேவையான மாவினை நாங்கள் விற்கிறோம். இதற்கான பல சிறிய கடை வைத்திருப்பவர்களிடம் பேசி உரையாடினோம். அவர்கள் கொடுத்த ஐடியா எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. பிஸினஸ் தொடங்க வேண்டும் என்றால் அதற்கான ஐடியா யாரிடமும் கிடைக்கலாம்.
சமீபத்தில் வடைக்கான மாவினை நாங்கள் விற்கத்தொடங்கி இருக்கிறோம். இதில் மிகப்பெரிய சவால், வடை வடிவமாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் நடுவில் ஓட்டை இருக்க வேண்டும். கிட்டத்தட்ட இதற்கான வடிவமைப்பை உருவாக்குவதற்கு எங்களுக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது.
ஆரம்பகட்டத்தில் எடுத்த பல முயற்சிகளில் எங்களுக்கு திருப்தி இல்லை. ஒரு கட்டத்தில் இந்த முயற்சியை கைவிட்டுவிலாம் என்னும் பேச்சும் எங்கள் குழுக்குள் இருந்தது. இறுதியாக எங்களுடைய உறவினர் கொடுத்த சிறிய ஐடியாவில் அந்த டிசைனுக்கான இறுதி வடிவம் கிடைத்தது. அவர் பெரிதும் படித்தவரில்லை. ஒரு சிறிய ஆலோசனை கொடுத்தார். அது அந்த வடிவத்துக்கு முக்கிய பங்காற்றியது. பிஸினஸுக்கு பெரிய பெரிய விஷயங்கள் முக்கியமானதுதான். அதேபோல காமன்சென்ஸும் முக்கியம்.
நன்றி : யுவர்ஸ்டோரி தமிழ்.
Recent Comments