பிஸினஸ் தொடர்பான புத்தகங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு ஆர்.கோபாலகிருஷ்ணனை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ’THE CASE OF THE BONSAI MANAGER’, ’WHEN THE PENNY DROPS’, ’WHAT THE CEO REALLY WANTS FROM YOU’, ’SIX LENSES’ உள்ளிட்ட சில புத்தகங்களை எழுதியவர் ஆர்.கோபால கிருஷ்ணன். கடந்த ஜனவரி 10-ம் தேதி இவர் எழுதிய ’Made In India Manager’ என்னும் புத்தகத்தின் அறிமுக விழா மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷனில் நடந்தது. ஆனால் அதற்குள்ளேயே அவரது அடுத்த புத்தகமான கிராஷ் வெளியாகி விட்டது.

Made in India Manager

இந்த புத்தகம் குறித்த சிறிய அறிமுகத்துக்கு பிறகு சமீபத்திய புத்தகத்துக்கு செல்லலாம். அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இந்தியாவில் படித்தவர்கள்தான். எஸ் அண்ட் பி 500 பட்டியலில் உள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கு அடுத்து அதிக நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்கள் இந்தியர்கள். சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, இந்திரா நூயி, அஜய் பங்கா போன்ற பலர் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். இவர்கள் இந்தியாவில் பிறந்து, இளங்கலை கல்வி வரை இங்கு படித்தவர்கள். இதனால் இவர்களைப் பற்றி எழுத முடிவெடுத்தேன். இந்தியாவுக்கென பல பிரத்யேக தன்மைகள் உள்ளன. அதனால் இங்கு கல்லூரி படிப்படை படிப்பவர்கள் சர்தேச அளவில் தலைவராக இருக்க முடிகிறது.

இந்தியாவில் இருக்கும் போட்டிகள், இந்தியாவில் குடும்பங்களின் பங்களிப்பு, குழப்பான சூழலை கையாளுதல், பல சமூகங்களுடன் இணைந்திருப்பதால் உருவாகும் பிணைப்பு ஆகிய பல காரணங்களால் இந்தியர்கள் சர்வதேச அளவில் சாதிக்கின்றனர். இதேபோன்ற காரணங்கள் பல நாடுகளில் இருந்தாலும் இந்தியாவில் வளரும் போது அவை வேறு வடிவம் பெறுகிறது.

வரும் காலத்திலும் இந்தியாவில் இருந்து சர்வதேச தலைவர்கள் உருவாகுவார்கள். கிரிக்கெட் உதாரணத்துடன் சொல்வதென்றால் பும்ராவின் கை மற்றவர்களை போல் அல்ல, ஆனால் அந்த கை மேஜிக் செய்வதை போல இந்தியர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கவில்லை என்றாலும், இருக்கின்ற வசதிகளை அடிப்படையாக வைத்து தலைவராக முடியும் என கோபால கிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா ஆகியோரை மட்டுமே வைத்து இந்த புத்தகம் எழுதவில்லை. இவர்களை போல பலர் உள்ளனர் என குறிப்பிட்டார்.

Crash

கோபால கிருஷ்ணனின் எட்டாவது புத்தகம் இதுவாகும். 2015-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு எழுதுவது, நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவது, படிப்பது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இந்த புத்தகம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் பணியில் சேரும் போது ஒரு தலைமைச் செயல் அதிகாரிகளின் பணி காலம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் நான் பணியில் இருந்து ஓய்வு பெரும் சமயத்தில் தலைமைச் செயல் அதிகாரிகளின் பணி காலம் குறைந்து கொண்டே வருகிறதைப் பார்த்தேன். அதனால் சி இ ஒ’க்கள் எப்படி உயர்ந்து வீழ்கிறார்கள் என்பது குறித்து எழுத முடிவெடுத்தேன்.

தலைமைச் செயல் அதிகாரிகளின் நேர்மை, ஒழுக்கம் போன்ற காரணங்களால் பதவி இழந்தவர்கள் குறித்து எழுதவில்லை. ஆனால் இதர காரணங்களால் பதவி இழந்தவர்கள் குறித்து எழுதி இருக்கிறேன்.

ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன். அமெரிக்காவில் இரு பொம்மை நிறுவனங்கள் இருந்தன. இரண்டு நிறுவனங்களுமே இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தொடங்கப்பட்டவை ஆகும். 1980கள் வரை அதன் நிறுவனர்கள் மட்டுமே நடத்தி வந்தனர். சர்வதேச அளவில் கவனம் பெற்றன. ஆனால் அதன் பிறகு சிக்கலில் மாட்டிக்கொண்டன. அதனால் வெளியில் இருந்து தலைமைச் செயல் அதிகாரிகளை கொண்டு வந்தனர். ஆனால் இரண்டு நிறுவனங்களும் பெரிய வெற்றிய அடைய முடியவில்லை. ஒரு நிறுவனம் திவால் நிலைமைக்கு சென்றுவிட்டது. இறுதியாக அந்தத் துறை வல்லுநர்கள் கூறுவது இதுதான்; ஒரு நிறுவனம் புதுமை குறித்து சிந்திக்கவே இல்லை. இன்னொரு நிறுவனம் காலத்தை தாண்டி அதிகளவு புதுமையை புகுத்தியதால் வெற்றியடைய முடியவில்லை. தலைமைச் செயல் அதிகாரிகள் எவ்வளவு புதுமையை புகுத்தலாம் என்பது குறித்து தெரியாததால் வந்த விளைவு இது.

இரண்டு விஷயங்களால் தலைமைச் செயல் அதிகாரிகள் உச்சத்துக்கு செல்கின்றனர். முதலாவது செயல்பாடு, வளர்ச்சி மற்றும் லாபம். அடுத்த காரணம் உறவுகள். பணியாளர்கள், இயக்குநர் குழு, முதலீட்டாளர்களுடன் எவ்வாறு நட்பு இருக்கிறது என்பதை பொறுத்தே தலைமைச் செயல் அதிகாரிகளின் வாழ்க்கை இருக்கிறது.

உயரத்துக்கு செல்ல செயல்பாடுகள் முக்கியம் என்றாலும் பதவியை தக்கவைத்துக் கொள்ள உறவுகள் முக்கியம். அதாவது அந்த நிறுவனத்தின் தன்மைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். நிறுவன கலாச்சாரத்துக்கு ஏற்ப இயங்க முடியாத தலைமைச் செயல் அதிகாரிகள் வெளியேறும் சூழல் உருவாகிறது. இது குறித்து இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறேன் என கோபாலகிருஷ்ணன் கூறினார்.

15 தலைமைச் செயல் அதிகாரிகள் குறித்தும் அவர்கள் விலகியதற்கான காரணம் குறித்தும் இவர் ‘crash’ புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அவற்றில் சில; விஷால் சிக்கா – இன்ஃபோசிஸ், அன்ஷூ ஜெயின் – டாய்ஷ் பேங்க், விக்ரம் பண்டிட்- சிட்டி குரூப், ரமேஷ் சரின் – வோல்டாஸ், டிராவிஸ் கலாநிக் – உபெர், ஜிம் டொனால்ட் – ஸ்டார் பக்ஸ், ரிச்சர்ட் தாம்சன் – ஜெராக்ஸ், லி ஐயகோகா – போர்ட், ஜான் வால்டர் – ஏடி அண்ட் டி.