நிதி சார்ந்த முதலீடுகளை செய்பவர்களுக்கு பிஎம்எஸ் (Portfolio management services) குறித்து தெரிந்திருக்கும். ஆனால் இவற்றை ஒருங்கிணைப்பதற்கு இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை. மியூச்சுவல் பண்ட்களுக்கு பல இணையதளங்கள் உள்ளன. ஆனால் பிஎம்எஸ் முதலீட்டுக்கென பிரத்யேகமான எந்த தளமும் இல்லை. இதற்கான பிரத்தேக தளத்தை நான்கு நண்பர்கள் உருவாக்கி இருக்கின்றனர். அதற்கு முன்பு பிஎம்எஸ் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

பிஎம்எஸ் என்றால் என்ன?

பங்கு முதலீடு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்க முடியும் என்றாலும், நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வது என்பது கொஞ்சம் ரிஸ்கானது. அதுவும் பங்குச்சந்தை பற்றிய புரிதல் இல்லாமல் முதலீடு செய்யும் போது அந்த ரிஸ்க் மேலும் அதிகரிக்கரிக்கிறது. இதனை குறைப்பதற்கான மாற்றுவழிதான் மியூச்சுவல் பண்ட். மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பண்டின் மேனேஜர்கள் நமக்காக முதலீட்டினை செய்வார்கள். தேர்ந்தெடுத்து பங்குகளை வாங்கி ரிஸ்கினை குறைத்து லாபத்தை உயர்த்துவார்கள்.

கிட்டத்தட்ட பிஎம்எஸ் என்பதும் இதேபோலதான். ஆனால் சில முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன. முதலாவது மியூச்சுவல் பண்டில் மாதம் ரூ.500 கூட முதலீடு செய்ய முடியும். ஆனால் பிஎம்எஸ் குறைந்தபட்ச முதலீடு ரூ.25 லட்சம்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் தொகை முதலீட்டாளர்களுக்கு யூனிட்களாக வழங்கப்படும். ஆனால் பிஎம்எஸ்-ல் முதலீட்டாளர்களின் கணக்கில் பங்குகளாகவே இருக்கும். தவிர மியூச்சுவல் பண்ட் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் பிஎம்எஸ் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதுபோல முதலீட்டினை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

முதலீட்டுத் தொகை அதிகம் என்பதால் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பிஎம்எஸ் முதலீட்டில் ஈடுபவார்கள். அதனால் இந்தத் துறையின் தகவல்களை ஒருங்கிணைத்து வழங்குவதற்கான பிரத்யேக இணையதளம் இல்லை. இந்த இடைவெளியை புரிந்து கொண்டு நான்கு நண்பர்கள் உருவாக்கியத்துதான் www.pmsbazaar.com நிறுவனம்.

இடது முதல் வலது: ஹமீது ரஹ்மான், டேனியல், பல்லவராஜன் மற்றும் ராஜேஷ்குமார்

நான்கு நண்பர்கள் தொடங்கிய பஜார்

டேனியல், பல்லவராஜன், ஹமீத் ரஹ்மான் மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய நான்கு நண்பர்கள் இணைந்து இந்த நிறுவனத்தை இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்கள். இது குறித்து அவர்களுடன் நடத்திய உரையாடலின் முழுமையான வடிவம்.

நாங்கள் அனைவரும் மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் பணிபுரிந்தோம். ஒவ்வொரு பிரிவுக்கும் பிரத்யேக இணையதளம் இருக்கிறது. ஆனால் பிஎம்எஸ்-க்கு மட்டும் இல்லை என்பதை உணர்ந்தோம். இருந்தாலும் அதற்கான சந்தை இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்த போது அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. அதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தை நாங்கள் தொடங்கினோம்.

2000-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டாலும் சீரான வளர்ச்சி மட்டுமே அடைந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்தத் துறையின் வளர்ச்சி வேகமான இருக்கிறது. ஆனால் இதற்கு பிரத்யேகமான இணையதளமோ அல்லது தகவல்களோ இல்லை. தனிப்பட்ட டிஸ்ரிபியூட்டர் அல்லது வங்கிகள் மூலமாகவோ பிஎம்எஸ் முதலீடு நடந்து வருகிறது. என்னிடம் பணம் இருக்கிறது, என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது. வங்கிகள் கொடுப்பதில் உள்ளவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிலை இருந்தது.

அதனால் இந்தத் துறையில் உள்ள பல நிறுவனங்களை சந்தித்து அவர்களிடன் உரையாடி, இந்த தளத்தை நாங்கள் வடிவமைத்தோம். இப்போது 70-க்கும் மேற்பட்ட பிஎம்எஸ் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளன.

பிஎம்எஸ் பஜார் என்றாலும் எங்களிடம் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. அரசாங்கத்தின் விதிமுறைகள் இருப்பதால், எங்களது தளத்தில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களை நாங்கள் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான புராடக்ட்களை வழங்குகிறோம்.

சராசரியாக தினமும் 20 நபர்களை வரை எங்களது தளத்தில் பதிவு செய்கிறார்கள். அவர்களுக்கு சேவை செய்வதே போதுமானதாக இருக்கிறது. தற்போதைக்கு ரூ.40 கோடி அளவில் எங்கள் மூலமாக பிஎம்எஸ்-ல் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

விழிப்புணர்வு?

மியூச்சுவல் பண்ட் குறித்த விழிப்புணர்வே குறைவாக இருக்கும் போது, பிஎம்எஸ்-ல் யார் முதலீடு செய்வார்கள் என்னும் கேள்வி எழுவது நியாயமானதே. இதுவரை பங்குச்சந்தை/மியூச்சுவல் பண்ட் குறித்து தெரியாது, ஆனால் பிஎம்எஸ்-ல் முதலீடு செய்ய வேண்டும் என்று எங்களிடம் வந்தால் நாங்களே மியூச்சுவல் பண்டுக்கு அனுப்பி விடுவோம். காரணம் பங்குச்சந்தை குறித்த புரிதல் இல்லாமல் நேரடியாக வருபவர்களை நாங்கள் ஏற்க முடியாது. அதனால் எங்களால் புதிய முதலீட்டாளர்களை உருவாக்க முடியாது. ஆனால் ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்ட முடியும். தற்போது பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் தொடர்ந்து ரூ.25 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்துவரும் 20 லட்சத்துக்கு மேலான முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான் எங்களுடைய இலக்கு.

நீண்ட காலமாக பங்குச்சந்தையில் இருக்கும் பலரிடம் சொந்த போர்ட்போலியோ இருக்கும். அவர்களை நேரடியாக கையாளுவார்கள். இதில் சிலர் வெற்றிஅடைந்தாலும் பலர் தோல்வி அடைகிறார்கள். அதனால் ஏற்கெனவே பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்பவர்கள் எங்களுடைய வாடிக்கையாளர்கள். தவிர சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 லட்சம் என்பது பெரிய தொகை ஆனால் தற்போது அவ்வளவு பெரிய தொகை என கூற முடியாது. முன்பு பிஎம்எஸ்-ல் தொழில் புரிபவர்கள் மட்டுமே முதலீடு செய்தனர். ஆனால் தற்போது பணியில் இருப்பவர்கள் கூட வருகின்றனர்.

தற்போது மொத்தமாக 1.30 லட்சம் பிஎம்எஸ் முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என நினைக்கிறேன். அப்போது கூடுதலாக ரூ.1.7 லட்சம் கோடி பிஎம்எஸ் துறையின் முதலீடு உயரும். இதில் 10 சதவீதம் எங்களின் இலக்கு. சுமார் 17,000 கோடியை எங்கள் மூலமாக முதலீடு செய்ய வைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

நிதி திரட்டல்

நேரடியாக எங்கள் இணையதளம் மூலம் முதலீடு செய்ய முடியாது என்பதால் நாங்கள் வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பல பண்ட்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்களின் தேவை வருமானத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேரில் சந்திப்பது அவசியம். அதனால் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் அலுவலகங்கள் அமைக்கும் பணியை செய்து வருகிறோம். அனைத்து நகரங்களிலும் அலுவலகம் அமைக்க முடியாது என்றாலும் முக்கியமான நகரங்களில் அமைக்க முடிவெடுத்திருக்கிறோம். தற்போது இதற்கான நிதித் திரட்டலில் கவனம் செலுத்துகிறோம் என pmsbazaar நிறுவனர்கள் கூறினார்கள்