ரீடெய்ல் நிறுவனங்களுக்கான மாநாடு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதனை இந்திய ரீடெய்ல் நிறுவனங்களுக்கான சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ரீடெய்ல் துறையின் தற்போதைய போக்கு, துறையில் இருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் மென்பொருள் நிறுவனமான ’Freshworks’ நிறுவனர் கிரீஷ் மாத்ருபூதம் ஒரு வாடிக்கையாளராக ரீடெய்ல் நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். அதில் இருந்து அவர் தரும் மூன்று முக்கிய ஆலோசனைகள்…

பட உதவி: Factory daily

பட உதவி: Factory daily

ஊழியர்கள் தேர்வு

ரீடெய்ல் பிரிவில் ஆன்லைன் வளர்ந்து வருகிறது. ஆனால் அதற்காக மொத்த ரீடெய்லும் ஆன்லைனுக்கு செல்லப்போவதில்லை. தனிப்பட்ட முறையில் நான் நேரடியாகவும் பொருட்களை வாங்குகிறேன். ஆன்லைன் மூலமாகவும் வாங்குகிறேன். அதனால் ரீடெய்ல் நிறுவனங்களுக்கான தேவை இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் ஊழியர்கள் தேர்வில் ரீடெய்ல் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். பணியாளர்களுக்கு நன்றாக பயிற்சி அளித்து, அவர்களின் திறமையை உயர்த்த வேண்டும். அல்லது திறமையான, தங்களுக்குத் தேவையான பணியாளர்களை அமர்த்த வேண்டும்.

என்னை பொறுத்தவரையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பக் கூடாது. அவர்களை வாங்கிச்செல்ல வைக்க வேண்டும் என்றால் சரியான வாடிக்கையாளர்கள் சேவை இருக்க வேண்டும்.

அதாவது வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் அத்தனை கேள்விக்கு பதில் அளித்த பிறகு, அந்த திருப்தியான பதிலுக்காகவாது பொருள் வாங்குவார். இல்லையெனில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கான experience centres ஆக மட்டுமே ரீடெய்ல் நிறுவனங்கள் இருக்க முடியும். அதனால் ஊழியர்கள் தேர்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிடுங்கள்.

ஆன்லைனும் முக்கியம்

ரீடெய்ல் நிறுவனங்கள் ஆன்லைனுடன் போட்டி போட முடியாது. ஆனால் ஆன்லைன் அனுபவத்தை கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களிடம் தொடர்ந்து வாடிக்கையாளராக இருப்பார்.

ஆன்லைனில் மட்டுமே செயல்பட்டு வந்த லென்ஸ்கார்ட் நிறுவனம் ரீடெய்ல் கடைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல அமேசான் நிறுவனமும் ரீடெய்ல் கடைகளை கையகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் ரீடெய்ல் நிறுவனங்கள் தரமான ஆன்லைன் அனுபவத்தை வழங்குவதில்லை. அப்படி வழங்கும் பட்சத்தில் நேரடியாக உங்கள் கடைகளில் வாங்குவதை போலவே உங்களுடைய இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள்.

ஏற்கெனவே சொன்னது போல ஆன்லைன் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது. ஆனால் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான அனுபவத்தை வழங்குவதன் மூலம் நீண்ட காலம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும்.

கழிவறை வசதி

ஆன்லைனில் பொருள் வாங்குவது பல வசதிகள் உள்ளன. அதில் ஒன்று கழிவறைக்கு செல்லத் தேவையில்லை என்பதுதான்.

வாடிக்கையாளர்களின் முக்கியமான பிரச்சினை கழிவறை. ஆனால் பெரும்பாலான ரீடெய்ல் நிறுவனங்கள் இந்த பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. தூய்மையான கழிவறை என்பது வாடிக்கையாளரின் உரிமை. அந்த உரிமையை வழங்கவில்லை எனில் வாடிக்கையாளரை தக்கவைக்க முடியாது.

சத்யம் திரையரங்கு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. தொடர்ச்சியாக சத்யம் செல்வதற்கு முக்கியமான காரணம் அங்கு கிடைக்கும் தியேட்டர் அனுபவம் மட்டுமல்லாமல் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதினால் மட்டும்தான்.

ரீடெய்ல் நிறுவனங்கள் இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தும் பட்சத்தில் சந்தையில் நிலைத்து நீடித்திருக்க முடியும் என கிரீஷ் கூறினார்.