எஸ்டோனியா (Estonia) என்னும் பெயரில் ஒரு நாடு இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் ஸ்கைப் நிறுவனம் குறித்து தெரியும். எஸ்டோனியா நாட்டில் தொடங்கப்பட்டதுதான் ஸ்கைப் நிறுவனம். எஸ்டோனியா நாட்டின் அதிபர் கூட எங்களது நாடு குறித்து உங்களுக்கு தெரியாது. ஸ்கைப் உருவான நாட்டின் அதிபர் என குறிப்பிட்டால் நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என பொது நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

ரஷ்ய எல்லையில் அமைந்திருக்கும், ஐரோப்பிய யூனியன் நாடு இது. இந்த நாட்டின் மக்கள் தொகையே 13 லட்சம்தான். இதைவிட டெல்லியின் மக்கள் தொகை 20 மடங்கு அதிகம். பெங்களூருவில் மட்டும் 85 லட்சம் மக்கள் உள்ளனர்.

பட உதவி: DW

பட உதவி: DW

2003-ல் ஸ்கைப்

ஸ்கைப் நிறுவனம் 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சர்வதேச கவனம் இந்த நாட்டுக்குக் கிடைக்கத் தொடங்கியது. பல வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் எஸ்டோனியாவில் தொடங்கப்பட்டும் நிறுவனங்களில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். (ஸ்கைப் நிறுவனத்தை 2005-ம் ஆண்டு இ-பே நிறுவனம் வாங்கியது, 2011-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது)

தற்போது ஸ்கைப் தவிர டாக்ஸிபை (Taxify), பிளேடெக் (Playtech) மற்றும் டிரான்ஸ்பர்வைஸ் (TransferWise) ஆகிய நிறுவனங்கள் பிரபலமாக உள்ளன.

ஸ்டார்ட் அப்’களின் எண்ணிக்கை

தற்போது 550 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. 2020-ம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் செல்லும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகையின் காரணமாக இங்கு தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை உயரும் என கருதப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் மூலம் 4,600 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் 25 சதவீத பணியாளர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். இந்த நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 100 கோடி யூரோ அளவுக்கு நிதி திரட்டி இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் சிலிகான் பள்ளத்தாக்கு மற்றும் ஐரோப்பாவில் இருந்து வந்தவையாகும்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 24 கோடி யூரோ அளவுக்கு எஸ்டோனிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை திரட்டி இருக்கின்றன. இந்த ஆண்டு முடிவுக்குள் 35 கோடி யூரோ அளவுக்கு முதலீடு திரட்டக்கூடும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வென்ச்சர் கேபிடல் முதலீட்டாளர்கள் ’எஸ்டோனியாமாபியா’ என்னும் ஹாஷ்டேகில் இது குறித்து எழுதி வருகிறார்கள்.

ஸ்டார்ட் அப் விசா

2017-ம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்டார்ட் அப் விசா என்னும் திட்டத்தை எஸ்டோனியா அரசு கொண்டுவந்தது. ஸ்கைப் நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு பல நிறுவனங்கள் இங்கு தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்களில் பணிபுரிவதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படும். அதனால் ஸ்டார்ட் அப் விசா மூலம் ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளை சேர்ந்தவர்கள் எளிதாக விசா பெறமுடியும். தவிர வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவது மற்றும் மற்ற நாடுகளில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எஸ்டோனியாவில் எளிதாக விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக இந்த விசா நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

எஸ்டோனிய ஐடி அமைச்சர் உர்வே பாலோ

எஸ்டோனிய ஐடி அமைச்சர் உர்வே பாலோ

50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல நூறு விண்ணப்பங்கள் இந்த பிரிவின் கீழ் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த எஸ்டோனிய அமைச்சர் இந்தியாவில் இருந்து 7,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை என குறிப்பிட்டிருந்தார்.

ஏன் எஸ்டோனியா?

உலகின் முக்கியமான வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்திருப்பதால் இங்கு முதலீட்டுக்கான சூழல் இருப்பதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. தவிர பல காரணங்களை இந்த அரசு கூறியிருக்கிறது.

1. லாபத்தை மறுமுதலீடு செய்யும் பட்சத்தில் வரி செலுத்த வேண்டாம்.

2. உலக வங்கி வெளியிட்டிருக்கும் எளிதாக தொழில்புரிவதற்கான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் 20 இடங்களுக்குள் உள்ள நாடு.

3. 15 நிமிடத்தில் இங்கு நிறுவனம் தொடங்க முடியும்.

4. இங்கு 99 சதவீத வங்கி பரிமாற்றங்கள் இணையதளம் மூலமாகவே நடக்கின்றன. அதாவது வெளிப்படைத்தன்மை அதிகம்.

5. ரஷ்யா, ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியத்துக்கு மத்தியில் இந்த நாடு அமைந்திருக்கிறது.

6. தேவையான பணியாளர்களை பெறமுடியும். பள்ளிக்கல்வியில் இருந்து தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

7. நாட்டின் நிலப்பரப்பில் 51 சதவீதம் காடுகள் உள்ளன. இரண்டு புரங்களில் கடல் இருப்பதால் தூய்மையான சுற்றுச்சுழல் நிலவுகிறது.

8. எஸ்டோனிய மொழியை கற்றுக்கொள்வது கடினம் என்றால் தொழிலுக்குத் தேவையான ஆங்கிலத்தை எஸ்டோனியர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இது போல பல காரணங்கள் இருப்பதால் எஸ்டோனியாவில் தொழில் தொடங்க அந்த அரசு அழைக்கிறது. இருந்தாலும் உங்களுடைய ஸ்டார்ட் அப் ஐடியாவை பரிசீலனைக்குப் பிறகுதான் இந்த அரசு ஏற்றுக்கொள்ளும். இதனை இறுதி செய்வதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக ஓர் ஆண்டுக்கு விசா வழங்கப்படும். தேவைக்கு ஏற்ப இந்த விசா நீட்டிக்கப்படும்.

ஸ்டார்ட் அப்கள் கவனத்துக்கு…