தொழில்நுட்பம் இந்த உலகை ஆளுகிறது என்னும் எண்ணம் நம் அனைவருக்கும் இருந்தாலும், சில துறைகளில் தொழில்நுட்பம் என்ன செய்துவிட முடியும் என்று நமக்கு தோன்றும். குறிப்பாக கட்டுமானத் துறையில் என்னதான் தொழில்நுட்பம் இருந்தாலும் என்ன பயன்? இங்கு உடல் உழைப்புதானே தேவை என பொதுவாக தோன்றலாம். ஆனால் தகவல் தொழில்நுட்பம் மூலம் கட்டுமானத்துறையிலும் திறனை உயர்த்த முடியும் என ’நதி இன்பர்மேஷன் டெக்னாலஜி’ (Nadhi) நிறுவனம் செய்துவருகிறது.

ஐஐடியில் படித்த இரு நண்பர்கள் இந்த நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கல்யாண் வைத்தியநாதன் மற்றும் ரவி முண்டோலி ஆகியோர் இந்த நிறுவனத்தை நிறுவினர். இருவருமே ஐஐடி மெட்ராஸில் சிவில் எஞ்சினியரிங் படித்தவர்கள். ஆனால் இருவரும் ஒரே பேட்ச் கிடையாது.

நதி நிறுவனர்கள் கல்யாண் மற்றும் ரவி

கல்யாண் 92-ம் ஆண்டும், ரவி 97-ம் ஆண்டு பட்டத்தை முடித்தார்கள். இருவருமே அமெரிக்காவில் மேல் படிப்பு படித்தார்கள். கல்யாண்; கார்நெல் பல்கலைக்கழகத்திலும், ரவி; மாசசூட்ஸ் பல்கழைக்கழலத்திலும் மேற்படிப்பு படித்தார்கள். அப்போது இருவருக்கும் பழக்கம் இல்லை. அதனைத் தொடர்ந்து அமெரிக்க நிறுவனமான i2 டெக்னாலஜியில் இருவரும் பணியாற்றினார்கள். அங்கு வேலை செய்த சமயம் இருவருக்கும் இடையே நட்பு உருவானது. அந்த நட்பு தொழில்முனைவு வரை கொண்டு வந்திருக்கிறது.

அமெரிக்காவில் இருந்தது போதும் என முடிவெடுத்து இருவரும் இந்தியா திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தை தொடங்கினர். இது குறித்து அவர்களுடன் நடத்திய விரிவான உரையாடலின் சுருக்கமான வடிவம்.

கட்டுமானத்துறையில் பல பணிகள் செய்ய வேண்டி இருக்கும். அதனால் எவ்வளவு திட்டமிட்டாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த ப்ராஜக்டை செய்து முடிக்க முடியாது. நேரம் தவறுவதால் நிறுவனங்களுக்கு, செலவு அதிகரிக்கும், அடுத்த ப்ராஜக்டில் கவனம் செலுத்த முடியாது என்பது உள்ளிட்ட பல சிரமங்கள் இருக்கின்றன.

திட்டம், பணியாளர்கள், தரம் உள்ளிட்ட பல விஷயங்களை கண்காணிக்க வேண்டி இருக்கும். கட்டுமானத் துறையில் அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைக்கும் சாப்ட்வேரை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டோம். உதாரணத்துக்கு கட்டுமான வேலை நடக்கும் இடத்தில் இன்று என்ன வேலை நடத்தது, எது நடக்கவில்லை, இந்த வேலை நடக்காத்தால் இந்தத் திட்டம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தள்ளிப்போகும் என்பது உள்ளிட்ட தகவல்களை நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு எங்களுடைய சாப்ட்வேர் தகவல் அளிக்கும்.

அதுமட்டுமல்லாமல் கட்டுமானத்தில் பல பொருட்கள் வர வேண்டி இருக்கும், ஆட்கள், நிதி உள்ளிட்டவற்றை தலைமை அலுவலகத்தில் திட்டமிடுவார்கள். அந்த திட்டமிடல் கட்டுமானம் நடக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு தெரியவரும்போதுதான் அதற்கேற்ப முடிவெடுத்து வேலை செய்ய முடியும். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ப்ராஜக்ட் இப்போது என்ன நிலையில் இருக்கிறது, என்ன சிக்கல் இருக்கிறது, இந்த சிக்கலுக்கு என்ன காரணம், எவ்வளவு நாட்களுக்கு இந்தத் திட்டத்தை முடிக்க முடியும் என்பது உள்ளிட்டவற்றை எங்களுடைய மென்பொருள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கும். ”ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் திட்டத்துக்கும் செயல்படுத்துதலுக்கும் உள்ள இடைவெளியை எங்களது மென்பொருள் குறைக்கிறது,” என்றார்கள்.

2008-ம் ஆண்டு நாங்கள் இந்தியாவுக்கு வந்திருந்தாலும், இந்த சாப்ட்வேரை அறிமுகம் செய்வதற்கு சில ஆண்டு காலம் அவகாசம் எடுத்துக்கொண்டோம். கட்டுமானத்துறையில் மென்பொருளை புகுத்த வேண்டும் என்றால் களத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மென்பொருளை உருவாக்க முடியும். அதுதவிர, கட்டுமான நிறுவனங்களும் நம்மை தகவல் தொழில்நுட்பம் மட்டுமே தெரிந்த நபர் என நினைத்துவிட கூடாது என்பதற்காக சில ஆண்டுகள் கட்டுமானத் திட்டங்களில் ஆலோசர்களாக இருந்தோம்.

2010-ம் ஆண்டு முதலில் கோவையில் உள்ள சிறிய பில்டருக்கு எங்களுடைய சாப்ட்வேரை கொடுத்தோம். அதனைத் தொடந்து சில மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினோம். 2014-ம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படுத்தத் தொடங்கினோம்.

நிறுவனங்களின் தயக்கம்?

ரியல் எஸ்டேட் துறையில் சாப்ட்வேர் விற்பனை செய்வதில் உள்ள முக்கிய சவால் இந்த சாப்ட்வேர் மூலம் அவர்களின் செயல்பாட்டினை மேம்படுத்த முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதே. அவர்களுக்கு தெரிந்து மொழியில், இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி நேரத்தை, பணத்தை மீதம் செய்ய முடியும் என்பதை விளக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அவர்கள் எளிதாக எங்கள் ப்ராடக்ட்களை வாங்குகிறார்கள். கட்டுமானம் என்றவுடன் வீடுகள் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் எங்களை பொறுத்தவரை வீடுகள் என்பது மிகவும் குறைவான பகுதிதான். சாலைகள், ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட பெரிய திட்டங்களுக்கும் எங்களுடைய சாப்ட்வேரை வழங்குகிறோம்.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் ஆறுகளை இணைக்கும் ரயில்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திலும் எங்களுடைய சாப்ட்வேர் பயன்படுகிறது, என்றார்.

சந்தாதாரர் மாடல்

எங்களுடைய வருமானம் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கிடைக்கிறது. ஒரே கட்டுமான நிறுவனம் பல திட்டங்களை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு திட்டத்துக்கும், அதன் அளவை பொறுத்து லைசென்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போதைக்கு 14 நாடுகளில் 250-க்கும் மேற்பட்ட திட்டங்களில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இப்போதைக்கு சுமார் 40 நபர்கள் கொண்ட குழுவுடன் செயல்பட்டு வருகிறோம். மென்பொருள் குழு மட்டுமல்லாமல் கட்டுமான குழுவுடன் உரையாடுபவர்களும் முக்கியம். அவர்கள்தான் எங்களுடைய மென்பொருளை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்குகிறார்கள்.

இதுவரைக்கும் எங்களுடைய சொந்த முதலீட்டில் வளர்ந்து வருகிறோம். ஆனால் வெளிநாட்டு சந்தையில் தடம்பதிக்க வேண்டும். மேலும் எங்களுடைய சாப்ட்வேரில் ஆராய்ச்சி செய்வதற்கான (R&D) தேவையும் இருக்கிறது. அதனால் நிதித் திரட்டுவது குறித்தும் விவாதித்து வருகிறோம். அதனால் வருமானம் குறித்த தகவல்களை பொதுவெளியில் எங்களால் சொல்ல இயலவில்லை என நிறுவனர்கள் கூறினார்கள்.

கட்டுமானத்துறையில் தொழில்நுட்பத்தை புகுத்தமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இவர்கள். இதுபோல தொழில்நுட்பம் செல்லாத துறையில் தொழில்முனைவோர்கள் கவனம் செலுத்தலாம்.