கடந்த சில நாட்களாக யூகங்களாக வலம் வந்த இந்த செய்தி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா சன்ஸ் பேச்சு வார்த்தை நடத்துவதாக அறிவித்திருக்கிறது. அதே சமயம் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் டாடா சன்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த சிலமாதங்களாக நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் இருந்தது. அதனால் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் கடுமையாக சரிந்தன. இந்த நிலையில் கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் இந்த பங்கு 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 51 சதவீதம் அதன் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி வசம் இருக்கிறது. 24 சதவீத பங்குகள் எதிஹாத் நிறுவனம் வசம் இருக்கிறது. இந்த நிலைமையில் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான திட்டத்தில் டாடா சன்ஸ் இருக்கிறது.

பட உதவி: NDTV

பட உதவி: NDTV

ஜெட் சிக்கலின் காரணம்?

விமான நிறுவனங்களின் முக்கியமான செலவு விமானத்தின் எரிபொருள்தான். கச்சா எண்ணெயின் விலை 50 டாலரில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. தவிர டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்ததால் இரட்டை சவாலை சந்திக்க வேண்டி இருந்தது. இதனால் நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான நிதி குறைந்துகொண்டே வந்தது.

கடன் அதிகரித்தால் கடந்த சில காலாண்டுகளாக நஷ்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.1,261 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் செப்டம்பர் முடிவில் சுமார் ரூ.8,000 கோடி அளவுக்கு மொத்த கடன் இருக்கிறது.

இதனால் ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற நினைத்தால் உடனடியாக வெளியே அனுப்பி வைக்கப்படுகின்றனர். பொதுவாக ஒரு பைலட் வேலையை விட்டு வெளியேற நினைத்தால் ஆறு மாதம் பணியில் இருந்த பிறகுதான் (Notice period) வெளியேற முடியும். ஆனால் தற்போது உடனடியாக அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதுவரை 50 பைலட்கள் ஜெட் நிறுவமத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

மொத்தம் 16,000 பணியாளர்கள் ஜெட் ஏர்வேசில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை. செப்டம்பர் மாத சம்பளத்தில் 25 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். நவம்பர் மாதம் முடியப்போகிறது என்று நிலைமை படுமோசமாக போய்கொண்டிருக்கிறது.

இவ்வளவு கடனில் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தும் பட்சம் கிங்ஃபிஷர் வழியில் செல்ல வேண்டி நிறுவனத்தை விற்கும் பணியில் ஜெட் நிர்வாகம் இருக்கிறது.

டாடாவுக்கு என்ன பயன்?

124 விமானங்களும், முக்கியமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கு போக்குவரத்துக்கான அனுமதி ஜெட் ஏர்வேஸ் வசம் இருக்கிறது. சிக்கலில் இருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்கும்போது, இந்த அனுமதிகள் அந்த குழுமத்துக்கு கிடைக்கும்.

இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக டாடா இருந்தாலும், மத்திய அரசு தேசியமயமாக்கியதை தொடர்ந்து பல ஆண்டுகளாக விமான போக்குவரத்தில் ஈடுபடாமல் டாடா குழுமம் இருந்தது. தற்போது இரு நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து விமான போக்குவரத்து துறையில் டாடா குழுமம் உள்ளது.

ஏர் ஏசியாவுடன் இணைந்து பட்ஜெட் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்னும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்துகிறது டாடா.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கும்போது, அனைத்து விமானத்துறை நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க டாடா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதே சமயம் ஏர் ஏசியா கூட்டு நிறுவனத்தில் இருந்து டாடா விலகி விஸ்தாரா மற்றும் ஜெட் ஏர்வேஸில் மட்டும் கவனம் செலுத்த அக்குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முதலீடு டாடாவுக்கு ஆபத்தாக முடியுக்கூடும் என்ற கருத்தும் சந்தையில் இருக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கான முதலீடு மட்டுமல்லாமல், நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கும் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இந்த முதலீடு செய்யும் பட்சத்தில்தான் நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

தவிர, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்குவதை அரசும் விரும்புவதாக ப்ளும்பெர்க் கட்டுரை தெரிவிக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் ஜெட் ஏர்வேஸ் இதே நிலைமையில் நீடித்தால் இன்னும் சில மாதங்களில் திவால் ஆகும். தேர்தல் வரக்கூடிய சமயத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம் திவாலாகும் பட்சத்தில், அது மோசமான சமிக்கையாக தேர்தல் சமயத்தில் விவாதிக்கப்படும் என்பதால் அரசும் இந்த இணைப்பினை விரும்புவதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

ஏர் ஏசியாவில் இருந்து டாடா விலகக் காரணம்?

ஏர் ஏசியா கூட்டு நிறுவனத்தில் ஆரம்பத்தில் 30 சதவீத பங்குகள் மட்டுமே டாடா குழுமம் வசம் இருந்தது. ஆனால் மற்றொரு பங்குதாரர் வெளியேற முடிவெடுத்ததால் அவருடைய பங்குகளை டாடா குழுமம் வாங்க வேண்டி இருந்தது. அதனால் தற்போது ஏர் ஏசியா இந்தியாவில் 51 சதவீத பங்குகள் டாடா வசம் இருக்கிறது. தவிர இந்த நிறுவனத்தின் நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை நடக்கிறது. தவிர முறையற்ற `லாபி’யில் ஈடுபட்டதான குற்றச்சாட்டும் இருக்கிறது. அதனால் ஏர் ஏசியாவில் இருந்து விலகி விஸ்தாரா-ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரு பிராண்ட்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் சிக்கல் இருக்கும் ஏர் ஏசியா இந்தியாவின் பங்குகளை விற்பதும் சிரமம் என்னும் கருத்தும் இருக்கிறது.

ஜெட் திவால் ஆகுமா, டாடா சன்ஸுக்கு லாபமாக இருக்குமா என்பது என்.சந்திரசேகரனின் கையில் உள்ளது.

—-

இந்திய விமான சந்தையில் பெரும்பான்மையான சந்தையை வைத்திருப்பது இண்டிகோ நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் ஆதித்யா கோஷ். நிறுவனம் தொடங்கியது முதல் கடந்த சில மாதங்களாக இந்த பதவியில் இருந்தவர், சில மாதங்களுக்கு முன்பு விலகினார்.

டாடா குழுமம் சார்பில் ஜெட் ஏர்வேஸ்-விஸ்தாரா நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்க முடியுமா என கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஆதித்யா கோஷ் மறுத்துவிட்டதாக தெரிகிறது. தற்போது இவர் ஓயோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார்.