`பெண்கள் தொழிலில் ரிஸ்க் எடுக்க பயப்படுவர்கள் அல்ல’- எழுத்தாளர் ஷோபா வாரியர்

பத்திரிகைத் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் ஷோபா வாரியர். இவரது சமீபத்திய புத்தகம் Dreamchasers: Entrepreneurs from the South of the Vindhyas. கடந்த வாரம் ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்த புத்தகத்தினை வெளியிட்டார். Dreamchasers என்னும் தலைப்பில் இவர் வெளியிடும் இரண்டாவது புத்தகம் இதுவாகும்.

முதல் புத்தகத்தில் 30 தொழில்துறையினர் குறித்த விரிவாக எழுதி இருந்தார். இதில் உள்ள 30 நபர்களில் மூவர் மட்டுமே பெண்கள். பெண்ணாக இருந்து கொண்டு மூவரை மட்டுமே எழுதி இருக்கிறீர்களே என விமர்சனங்கள் வந்திருந்த நிலையில் பெண் தொழில் முனைவோர்களை மையமாகக் கொண்டு புத்தகம் எழுத வேண்டும் என்னும் எண்ணம் உருவானதாக கூறினார்.

அதன் காரணமாகவே 14 பெண் தொழில்முனைவோர்களை குறித்து விரிவாக எழுதி இருக்கிறார் ஷோபா வாரியர். வெளியீட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ரெடிப் டாட் காம் தலைவர் அஜித் பாலகிருஷ்ணன். டிடிகே ஹாஸ்பிட்டலின் சாந்தி ரங்கனாதன் ஆகியோர் கலந்து கொண்டர்.

image

புத்தகம் தொடர்பாக ஷோபா வாரியரிடம் உரையாடியதில் இருந்து…

தொழில்முனைவோர்களை குறித்து எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?

ஆரம்பத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதி வந்ததேன். 1997-ம் ஆண்டு ஐஐடி பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலாவை சந்தித்து உரையாடினேன். தொழில்முனைவு என்னும் வார்த்தை பிரபலமாகாத காலத்தில் ஐஐடி இன்குபேஷன் மையம் தொடங்கி நடத்தி வந்தார். அப்போது தொழில்முனைவு குறித்து எழுதுமாறு பேராசிரியர் கூறினார். அதில் இருந்து தொழில்முனைவோர்களை கவனித்து எழுதத் தொடங்கினேன். அதன் பிறகு அதுவே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு ஐடியாவை எப்படி தொழிலாக மாற்றுகிறார்கள் என்பதை கற்றுக்கொள்ள ஆர்வமாகினேன்.

இந்த புத்தகத்தில் பெண்களை மட்டுமே எழுத வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

வெளியீட்டு விழாவில் கூறியது போல முதல் புத்தகத்தை எழுதும் போது 30 தொழில் முனைவோர்களை பற்றி எழுதவேண்டும் என்பதுதான் திட்டமாக இருந்தது. எழுதிய பிறகுதான் அதில் பெண்கள் பங்கு குறைவாக இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். அதன் பிறகுதான் பெண்களை மையாகக் கொண்டு இந்த புத்தகத்தை எழுத வேண்டும் என திட்டமிட்டோம்.

எந்த அடிப்படையில் இந்த 14 நபர்களை தேர்ந்தெடுத்தீர்கள். எதேனும் அளவு கோல் உண்டா?

எந்த அடிப்படையும் இல்லை. இந்த 14 பேரில் இருவரை தவிர மற்றவர்களை ஏற்கெனவே நேர்காணல் செய்திருக்கிறேன். சிலரை 20 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். பெண்களை பற்றி எழுத வேண்டும் என தோன்றியவுடனே இவர்களது நினைவு இயல்பாக வந்தது.

தொழில்முனைவோர்கள் என்பதை விட சமூக சேவையில் ஈடுபடுவர்களையும் இதில் குறிப்பிட்டிருக்கிறீர்களே?

இங்கு இருப்பவர்கள் அனைவரும் தொழில்முனைவோர்கள்தான். சிலர் சமூக மேம்பாட்டுக்கான தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பாக இவர்களை என்ஜிஓ என்றே குறிப்பிட்டு வந்தனர். தற்போதுதான் social entrepreneur என்னும் பதம் உருவாகி வருகிறது. மற்றவர்களை போலவே இவர்களும் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் இவர்களது தொழில் மூலம் சமூக மேம்பாடு நடக்கிறது. இவர்கள் இலவசமாக எதுவும் கொடுக்கவில்லை. அதே சமயத்தில் பணம் சம்பாதிப்பது தவறு என்று நான் நினைக்கவில்லை. இரு தரப்பினரையும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம்.

பெண்கள் தொழில் தொடங்குவதற்கு புறக் காரணங்களும் சூழ்நிலையும் அவசியமாகிறதா?

நீங்கள் அமைச்சர் பேசியதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். வெற்றியடைந்த பெண்கள், தங்களின் வெற்றிக்குக் காரணமானவர்களை குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குகின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டார். இந்த புத்தகத்தில் பெண் தொழில்முனைவோர்கள் தங்களது வெற்றிக்குக் காரணமானவர்களை பற்றி விரிவாக கூறியிருக்கின்றனர்.

தங்களது வெற்றிக்கு பின்னால் இருப்பவர்களை அங்கீகரிப்பதும், பின்னால் இருப்பவர்களால்தான் வெற்றி அடைகிறோம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

நீங்கள் எழுதி இருக்கும் 14 நபர்களுக்கு உள்ள பொதுவான ஒற்றுமை என்ன?

அனைவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவுக்காக கடுமையாக உழைக்கிறார்கள். ஒவ்வொரு அடுத்த அடி முன்னேற்றத்துக்கும் கடும் சவால்களை சந்திருக்கிறார்கள். அந்த விடா முயற்சி அனைவரிடத்திலும் இருக்கிறது.

இப்போது யோசித்தால் எனக்கு அவ்வளவு விடா முயற்சி இருக்குமா என்பது சந்தேகமே. மேலும் இவர்கள் அனைவரும் குழு உழைப்பினை நம்புகிறார்கள்.

அடுத்து என்ன புத்தகம்?

கனவுகாணும் நிறைய தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள். அதில் இருந்து ஒரு தீம் பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அல்லது கர்நாடகாவில் இருப்பவர்கள் என எதாவது ஒரு தீம் பிடித்து எழுத வேண்டும்.

பெண் தொழில்முனைவோர்கள் குறைவாக இருப்பதற்கு எதேனும் காரணம் இருக்கிறதா?

பெண்கள் ரிஸ்க் எடுக்க பயப்படுவர்கள் என கூறமாட்டேன். குடும்பச் சூழலில், பொறுப்புகளில் அவர்கள் வெளியே வரத் தயங்குகிறார்கள் என நினைக்கிறேன்.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்