SaaS தொடர்பான கருத்தரங்கு கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்தது. SaaS பிரிவில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையை எப்படி SaaS மையமாகுவது? இந்தப் பிரிவின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் சாஸ் நிறுவனங்களுக்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இந்தியா முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிறுவனர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் நிறுவனங்களின் தன்மையைப் பொறுத்து 400 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் நிறுவனர்கள் ஆவார்கள். சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் ஆசியாவின் முக்கிய பகுதிகளில் இருந்து நிறுவனங்களின் நிறுவனர்கள் கலந்து கொண்டனர். தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய SaaS கருத்தரங்கு இது என கருதப்படுகிறது.
பிரஷ் வொர்க்ஸ் நிறுவனத்தின் கிரீஷ் மாத்ரூபுதம், ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனத்தின் சுரேஷ் சம்பந்தம், சார்ஜ் பீ நிறுவனத்தின் கிருஷ் சுப்ரமணியம் கிளவுட் செரி நிறுவனத்தின் வினோத் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் SaaS பூமி கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட SaaS நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் 10,000 நபர்கள் பணிபுரிகின்றனர். இங்கிருக்கும் தொழில் முனைவோர்கள் சர்வதேச நிறுவனங்களுக்கான புராடக்ட்களை உருவாக்கி வருகின்றனர். அதனால் சாஸ் பூமி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆரஞ்ச் ஸ்கேப் நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் கூறியதாவது: “சாஸ் பிரிவில் ஒரு டிரில்லியன் டாலர் வாய்ப்புகள் உள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் ஐடி துறை பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு துறையில் நிபுணத்துவம் உருவாகி இருக்கிறது. இந்த அனுபவத்தின் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவை ஒரு சாஸ் மையமாக மாற்ற முடியும். அதன் ஒரு பகுதியை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம். தற்போது சென்னை சாஸ் மையமாக இருக்கிறது. இதனை ஒவ்வொரு நகரங்களை உருவாக்கும் முயற்சியே சாஸ் பூமி என குறிப்பிட்டார்.”
பிரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் கிரீஷ் கூறும்போது : “இந்த நிகழ்ச்சி மூலம் சாஸ் பிரிவில் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒன்றாக இணைக்கிறோம். இதனால் இந்தத் துறையில் நடந்து வரும் மாற்றங்கள் மற்றும் ஆலோசனைகளை புதிய தொழில்முனைவோரால் நேரடியாக பெற முடியும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சாதகமான விஷயம் இருக்கும். இந்தியாவின் சாதகம் திறமையான பணியாளர்கள். அதனால் சர்வதேச அளவில் இந்தியாவை சாஸ் மையமாக மாற்ற முடியும். அதே சமயம் சிலிகான் பள்ளத்தாக்கினை போல இங்கு சிறப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் பட்சத்தில்தான் தரமான பணியாளர்கள் இங்கு பணிபுரிய வருவார்கள்,” எனக் கூறினார்.
ஆக்செல் முதலீட்டு நிறுவனத்தின் சேகர் கிரானி கூறும் போது சர்வதேச அளவில் இந்திய சாஸ் நிறுவனங்கள் பெருமளவுக்கு சாதித்திருக்கின்றன. இந்தியாவில் இதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்தி புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக வேண்டும் என கூறினார்.
அடுத்த பத்தாண்டுகளில் சாஸ் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு டிரில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் என கணிக்கபட்டிருக்கிறது. அதே சமயம் 10,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என சாஸ் பூமி கணித்திருக்கிறது.
சார்ஜ் பி நிறுவனத்தின் கிருஷ் சுப்ரமணியன், சாஸ் நிறுவனர்களுக்கு கூறியதாவது :”நீங்கள் இரண்டு புராடக்ட்களை உருவாக்குகிறீர்கள் ஒன்று உங்களுடைய புராடக்ட் அடுத்தது இணையதளம். இணையதளமும் ஒரு புராடக்ட் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். சர்வதேச அளவில் செல்லும் பட்சத்தில் உங்களின் இணையதளம் நம்பிக்கை உடையதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப உங்களது வடிவமைப்பு, கொள்கைகள், நிறுவனம் பற்றிய குறிப்பு மற்றும் கட்டணம் ஆகியவை இருக்க வேண்டும். இணையதளம் மூலம் மட்டுமே அடுத்தக்கட்டத்துக்கு செல்ல முடியும்.”
100 நபர்களை உங்களிடம் sign in செய்தார்கள் என்றால் அவர்களில் சராசரியாக எட்டு நபர்கள் வரை மட்டுமே வாடிக்கையாளராக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இணையதளத்தில் விலையை குறிப்பிடலாமா என்பதில் பல வகையான கருத்துகள் உள்ளன. சிலர் குறிப்பிட்ட காலத்துக்கு மென்பொருளை இலவசமாக வழங்கலாம் என்று கூறுவார்கள், சிலர் freemium முறையைக் கையாளலாம் என்று கூறுவார்கள். சிலர் மொத்த விலையை வெளிப்படையாக இருக்கலாம் என்று சொல்லுவார்கள். விலை வெளிப்படையாக இருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பென்ஸ் வாங்க நினைப்பவர்கள் சிறிய ரக கார்கள் குறித்த சிந்தனையே இருக்காது. அதனால் பெரிய நிறுவனங்கள் கூட வாடிக்கையாளர்களாக வர வாய்ப்பு இருப்பதால் விலையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. சில நிறுவனங்கள் இலவசமாக கொடுப்பதற்கு பதில் 1 டாலர் கட்டணம் மட்டுமே வசூலிக்கின்றன. அதனால் விலை நிர்ணயம் என்பது முக்கியமான கட்டம். இது நிறுவனங்களுக்கு நிறுவனம் வேறுபடும்.
சர்வதேச அளவில் தொழில் புரிவதற்கான சூழல் இருந்தாலும் ஆரம்பக் கால நிறுவனங்கள் அனைத்து நாடுகளிலும் கவனம் செலுத்தத் தேவையில்லை. சாஸ் நிறுவனங்களின் பெரும்பாலான வருமானம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வருகிறது. அதிக வாய்ப்புள்ள நாடுகளில் கவனம் செலுத்திய பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லலாம் என தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கில்கோ புருகல் நிறுவனத்தின் குமார் வேம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மார்க்கெட்டிங் பாடங்கள் குறித்து பிரஷ் வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி டேவிட் தாம்சன் பேசினார். மேலும் 12-கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களுக்கு முதலீட்டாளர்களுடன் உரையாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
Recent Comments