தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனால் தொடங்கிய தொழில்கள் அத்தனையும் வெற்றியடையுமா என்னும் சந்தேகம் இருக்கும். ஏற்கெனவே வெற்றியடைந்த ஒரு தொழிலில் மற்ற இடத்தில் தொடங்குவதன் மூலம் வெற்றிக்கான சாத்தியம் சிறிதளவுக்கு உயர்கிறது. இதனை பிரான்ஸைசி என்று கூறுவார்கள். உதாரணத்துக்கு நேச்சுரல்ஸ் சலூன் வெற்றியடைந்த பிராண்ட். இதனை மற்ற ஊர்களில் பிரான்ஸைசி அடிப்படையில் விரிவுப் படுத்தி தங்களின் பிராண்டை பிரபலமாக்கி வளர்ச்சி அடைந்தனர். இந்தப் பின்னணியில், பிரான்ஸைசி ஆலோசனை வழங்குவதையே தொழிலாகத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஐயப்பன் ராஜேந்திரன். தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்லாமல், ஓரளவுக்கு வெற்றி அடைந்த பிராண்டுகளை பிரான்ஸைஸி முறையில் எப்படி விரிவு படுத்த முடியும் என்பது குறித்த ஆலோசனையும் Strategizer என்னும் நிறுவனம் மூலம் வழங்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இவரது ஆரம்ப கால வாழ்க்கை, பிரான்ஸைசி முறை உள்ளிட்ட பலவற்றை குறித்தும் உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து…
திருவாரூர் அருகே பிறந்து வளர்ந்தேன். அப்போது எங்கள் ஊரில் எஸ்எஸ்ஐ இன்ஸ்டியூட் வந்தது. மென்பொருள் துறைக்கான தேவை உயர்ந்து வந்த நேரம் அது. அதனால் அங்கு படிக்கச் சென்றேன். படித்து முடித்த பிறகு அங்கேயே பயிற்சி அளிக்கும் நபராக சேர்ந்தேன். சாப்ட்வேர் கோடிங் தெரிந்திருந்தாலும் இந்த தொழில் எப்படி நடக்கிறது என்பதில்தான் ஆர்வமானேன். அப்போதுதான் பிரான்ஸைசி முறையில் எங்கள் ஊரில் இந்தத்தொழில் நடைபெறுகிறது என்பது எனக்கு புரிந்தது. அங்கேயே சில காலம் வேலை செய்த பிறகு சென்னைக்கு வந்தேன். இங்கு கேட் செண்டரில் பணிபுரிந்தேன். அப்போது பிரான்ஸைசி அடிப்படையில் செயல்படும் ஒரு கிளையை முழுமையாக நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிபிஎல்ஆர் என்னும் நிறுவனம் பிரான்ஸைசி முறையில் விரிவுபடுத்த திட்டமிட்டார்கள். அதனால் அவர்களுடன் பயணித்து அவர்களின் பிராண்டினை விரிவு படுத்தும் பணியை செய்தேன். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கல்வித் துறை சார்ந்த பணிகளிலே இருந்துவிட்டதால் இதர துறைக்கு மாற வேண்டும் என திட்டமிட்டேன். அப்போது குர்லான் மெத்தைகள் பிராண்டின் ரீடெயில் பிரிவு மேலாளராக பணியாற்றினேன். வேலை பளு மற்றும் பயணம் காரணமாக அந்த பணியை தொடர முடியவில்லை. அதனைத் தொடர்ந்து பிரான்ஸைசி இந்தியா என்னும் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது,” என்றார்.
இந்தியாவில் பிரான்ஸைசி தொழிலுக்கென செயல்படும் பிரத்யேக நிறுவனம் இது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸைசி பிரிவில் கவனம் செலுத்தியதால் இது சார்ந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என நினைத்தேன். நமக்குத் தெரிந்த தொழிலில் பிரான்ஸைசி எடுக்கலாமா என்பது குறித்து கூட யோசித்தேன். ஆனால் Franchise என்னும் பெரிய கடலில் இருந்து ஒரு தொழிலுக்கு மாறுவது அவ்வளவு சிறப்பான எண்ணமாக தோன்றவில்லை. அதனால் வேலையை விட்ட பிறகு strategizer என்னும் பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தேன். முதலில் ’மெட்ராஸ் காபி ஹவுஸ்’ நிறுவனத்தை பார்த்து அவர்களுக்கு பிரான்ஸைசி மூலம் விரிவுப் படுத்துவதற்கான ஆலோசனை வழங்குகிறேன் என அவர்களை அணுகினேன். அவர்கள் ஒப்புக்கொண்டாலும் நான் ஆலோசனைக்காக கேட்ட தொகையை கொடுக்க முற்படவில்லை.
இருந்தாலும் அவர்கள் கொடுக்க ஒப்புக்கொண்ட தொகைக்கு அவர்களுடன் பயணித்தேன். தவிர மற்ற சிறிய நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்கிவந்தேன். முதலில் வீட்டில் ஒரு அறையை அலுவலகமாக பயன்படுத்தினேன். அதனைத் தொடர்ந்து பல நபர்களை சந்திக்க வேண்டி இருப்பதால் தனியாக அலுவலகம் வைத்தேன். இதற்கிடையே தொடர்புகள் மூலமாக பல நிறுவனங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சுமார் 10 நிறுவனங்களுக்கு பிரான்ஸைசி மூலம் விரிவாக்கம் செய்யும் பணியை செய்து வருகிறோம். இதுதவிர தொழில்தொடங்க பலரும் தயாராக இருக்கிறார்கள்.
அவர்களுடன் உரையாடி அவர்களின் அனுபவம் ஆர்வம் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுக்கு எந்த பிராண்டு ஏற்புடையாக இருக்கும் என்பது குறித்த ஆலோசனையை வழங்குகிறோம். ஆரம்பத்தில் இலவசமாக இந்த ஆலோசனையை வழங்கி வந்தேன். ஆனால் மாதத்துக்கு 100 நபர்களை சந்தித்தாலும் அனைத்து தகவல்களை கேட்டும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்கள். இதனால் 100 நபர்களை சந்தித்தாலும் 4 நபர்கள் கூட பிரான்ஸைசி எடுக்க முன்வருவதில்லை. அதனால் தற்போது ஆலோசனைக்காக கட்டணம் நிர்ணயம் செய்திருக்கிறேன். குறைந்தபட்சம் 5 லட்ச ரூபாய் இருந்தால்தான் பிரான்ஸைஸி தொழிலை செய்ய முடியும். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்ய இருப்பவர்கள் ஆலோசனைக்காக பணம் செலவு செய்யத் தயாராக இல்லை எனில் அவர்களிடம் பேசுவது தேவையற்ற வேலை என்பதால் கட்டணம் நிர்ணயம் செய்தேன், என்றார் ஐயப்பன்.
ஏன் பிரான்ஸைசி?
10 லட்ச ரூபாய் முதலீடு செய்து ஏன் மற்ற பிராண்ட் கீழ் தொழில் செய்ய வேண்டும்? நாமே ஏன் தொழில் தொடங்கக் கூடாது என தொழில்முனைவோர் நினைக்க வாய்ப்பு இருக்கிறது. இது சரிதான். ஆனால், “ ஏற்கெனவே வெற்றியடை பிராண்டின் பிரான்ஸைசி மூலம் தொழில் தொடங்குவதன் மூலம் முதல் நாளில் இருந்தே வருமானம் ஈட்ட முடியும். புதிதாக ஒரு பிராண்டினை உருவாக்க வேண்டும் என்றால் அதிக செலவாகும். அந்த பிராண்ட் வெற்றியடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை,” என விளக்குகிறார். உதாரணத்துக்கு அமெரிக்காவில் ரீடெய்ல் விற்பனையில் 45 சதவீதமும் பிரான்ஸைசி மூலமாகவே நடைபெறுகிறது. தற்போது இந்தியாவிலும் பிராண்ட் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்கெனவே வெற்றி அடைந்த பிராண்டின் பிரான்ஸைசி எடுப்பதன் மூலம் குறைந்தபட்சம் 24 மாதங்களில் முதலீட்டை எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
எப்படி, எந்தத் துறை?
உணவு, ரீடெய்ல், அழகு, கல்வி ஆகிய துறைகளில் பிரான்ஸிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எந்த முறையில் பிரான்ஸைசி எடுக்க வேண்டும் என்பதில் தொழில்முனைவோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Franchise Owned Franchise Operated என்பது ஒரு முறை. இந்த முறையில் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமை மற்றும் செயல்பாடு ஆகியவை பிரான்ஸைசி எடுப்பவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். தொழில் குறித்த முழுமையான அனுபவமும் கிடைக்கும். சம்பந்தப்பட்ட பிராண்டுக்கு ராயல்டி மட்டும் செலுத்தினால் போதுமானது.
Franchise Owned Company Operated- இது ஒருவகை. இங்கு பிரான்ஸைசி எடுப்பவர் ஒரு முதலீட்டாளர் மட்டுமே. சமப்ந்தப்பட்ட கடையை கம்பெனியே நடத்தும். இது முதலீடு மட்டும் என்பதால் இதில் கூட கவனம் செலுத்தலாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, Company Owned Franchise Operated மாடல். இங்கு சம்பந்தப்பட்ட இடம், வாடகை உள்ளிட்ட அனைத்துமே பிராண்டின் பொறுப்பு. கடையை நடத்துவது மட்டுமே பிரான்ஸைசி எடுப்பவரின் பணி. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மேலாளரை நியமனம் செய்வதற்கு பதிலாக பிரான்ஸைசி கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் என ஐயப்பன் கூறினார்.
Franchising என்பது பொதுவான வார்த்தையாக இருந்தாலும் எந்தத் தொழில், எந்த இடம் உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது அவசியம் என ஐயப்பன் விளக்கினார். தொழில்முனைவோர்கள் பிரான்ஸைசி குறித்தும் சிந்திக்கலாம், உரிய வழிகாட்டுதலுடன் வெற்றியாளரும் ஆகலாம்.
நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்
Recent Comments