தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். காரணம், பணத்தேவைகள், வேலையில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட இதர விஷயங்கள் காரணமாக இருக்கும். ஆனால் உண்மையிலே தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் பலருக்கு இருக்காது. காரணம் தொழில் என்பது அவ்வளவு எளிதல்ல என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியும். ஒரு தொழில் தொடங்குவதே எளிதல்ல என்னும் நிலையில் ஒரு தொடர் தொழில் முனைவோராக (serial entrepreneur) இருப்பது மிகவும் சவாலானது.

அப்படிப்பட்ட தொடர் தொழில் முனைவரும் அதில் வெற்றி கண்டவரும் ஆஸ்பயர் ஸ்வாமிநாதன் உடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிங்கப்பூரில் ’மேத்ஜிம்’ என்னும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை கற்றுக்கொள்ளலாம். பெரும்பாலானவர்கள், தான் செய்த சரியை மட்டுமே சொல்லுவார்கள். தவறுகளைச் சொல்ல விரும்புவதில்லை. ஆனால் ஸ்வாமிநாதன் தான் செய்த தவறுகளையும் வெளிப்படையாகப் பேசுகிறார், ஏனெனில் அது பலருக்கு ஒரு அனுபவப்பாடமாக இருக்கும் என்பதால். இவர் தொடங்கிய தொழில்கள், செய்த தவறுகள், தற்போதைய நிறுவனம் இவருடன் உரையாடுவதற்கு பல விஷயங்கள் இருந்தன. அவை உங்களுக்காக…

ஆரம்பத்தில் ஸ்டெர்லிங் ரிசார்ட் நிறுவனத்தில் தன்னுடைய பணி வாழ்க்கையை தொடங்கினார் ஸ்வாமிநாதன். இதனிடையே ஐஐஎம் பெங்களூருவில் நிர்வாக படிப்பினை முடித்துள்ளார். அடுத்து என்ஐஐடி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் வேலை செய்த பின், ஐஐஎம் நண்பர்கள் இணைந்து தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து இ-லெர்னிங் தளமான e-gurucool.com என்னும் நிறுவனத்தை தொடங்கினர். “சில காலத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தை நான் வேலை செய்த என்ஐஐடி என்னும் நிறுவனத்துக்கு விற்றேன்,” என்றார்.

முதல் தவறு

இப்போது ஆன்லைன் மளிகைக் கடைகள் பெருகி வருகின்றன. ஆனால் 2001-ம் ஆண்டே பூகாய்கனி டாட் காம் என்னும் நிறுவனத்தை தொடங்கினேன். மாலை 5 மணி வரை ஆர்டர் செய்பவர்களுக்கு அடுத்த நாள் காலையில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வதுதான் தொழில். நாங்கள் நினைத்த அளவுக்கு ஆர்டர்கள் வந்தன. டெலிவரி ஆட்கள், மொத்த விலை சந்தையில் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த நிறுவனத்தை இனியும் தொடர முடியாது என நிறுத்திவிட்டோம். அதாவது நமக்குத் தெரியாத தொழிலை செய்வது மிகவும் ஆபத்தானது என்னும் பாடத்தை இதில் இருந்து கற்றுக்கொண்டேன்.

இரண்டாம் தவறு

மீண்டும் கல்வித்துறையில் களம் இறங்கினேன். அப்போது பொறியியல் மற்றும் மருத்துவத்துக்கு நுழைவுத் தேர்வு இருந்தது. அதனால் ‘Aspire’ என்னும் பெயரில் நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை தொடங்கினோம். ஏழு ஆண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சி. ஆனால் பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு எதற்கு நுழைவுத் தேர்வு என தமிழக அரசு அதை ரத்து செய்துவிட்டது. அரசாங்கத்தின் தலையீடு நேரடியாக இருக்கும் வாய்ப்புள்ள தொழில்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இரண்டாவது பாடம். இதனைத் தொடர்ந்து தேசிய அளவில் உள்ள நுழைவுத் தேர்வுகளில் கவனம் செலுத்தி சமாளித்தோம். இந்தச் சூழலில் நிறுவனர்களுக்குள் சிறு கருத்துவேறுபாடு. அதனால் அப்போது அந்நிறுவனத்தைவிட்டு வெளியே வந்துவிட்டேன். ஆனால் தற்போது மீண்டும் ஆஸ்பயர் நிறுவனம் என்னிடம் வந்துவிட்டது என குறிப்பிட்ட ஸ்வாமிநாதன் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார்.

மூன்றாம் தவறு

ஆஸ்பயரில் இருந்து வெளியேறி ஸ்மார்ட்லெர்ன் வெப்டிவி என்னும் நிறுவனத்தை தொடங்கினேன். இணையம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம். ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டுமே மாணவர்கள் செலுத்தினால் போதும் என்பது போல விலையை நிர்ணயம் செய்தோம். விரைவில் லாபம் ஈட்டவும் தொடங்கினோம். இந்த நிலையில் வென்ச்சர் கேபிடல் முதலீட்டாளர்கள் 20 சதவீத பங்குகளுக்கு 1 மில்லியன் டாலர் முதலீடு செய்ய முன்வந்தார். இந்த சமயத்தில் மீண்டும் ஒரு சிக்கல். அப்போதைய மத்திய அமைச்சர் கபில் சிபல், ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நுழைவுத் தேர்வு தேவையா என்னும் ரீதியில் பேசினார். இதனால் ஒரு மில்லியன் டாலருக்கு மொத்த நிறுவனத்தையும் எட்சர்வ் நிறுவனத்துக்கு விற்றுவிட்டோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஸ்மார்ட்லெர்ன் வெப்டிவி மூலம் நல்ல லாபம் கிடைத்திருக்கும் என தோன்றலாம். நான் செய்த மூன்றாவது தவறு இது. தற்போதைய தொழில்முனைவோர்கள் செய்யக் கூடாத தவறும் கூட. எட்சர்வ் நிறுவனம் எங்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை. பணத்தின் மதிப்புக்கு ஈடாக எட்சர்வ் பங்குகளை கொடுத்தது. அதுவும் ஒர் ஆண்டுக்கு விற்க முடியாது என்னும் நிபந்தனையுடன்.

அப்போது அந்த பங்கு ரூ.250 என்னும் விலையில் வர்த்தகமானது. சந்தையின் எதிர்பார்ப்பு அடுத்தாண்டு 600 ரூபாய்க்கு மேலே செல்லும் என்பதுதான். இதனால் நாங்களும் பங்குகளாக வாங்கிக்கொண்டேன். ஆனால் ஓர் ஆண்டுக்கு பிறகு அந்த பங்குகளின் மதிப்பு 40 பைசா என்னும் நிலைமைக்கு சரிந்துவிட்டது. ”நாங்கள் வெற்றிகரமாக ஒரு நிறுவனத்தை விற்றுவிட்டாலும் அதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. எதிர்காலத்தில் பங்குகள் நன்றாக உயரும் என்றாலும் கூட கொஞ்சமாவது ரொக்கமாக மாற்றிக்கொள்வது நல்லது என்பது அதன் பிறகுதான் புரிந்தது. இதுபோல பல வெற்றிதோல்விகளை கடந்து ’மைபிஸ்கூல்’ ‘mybsckool.com’ என்னும் நிறுவனத்தை தொடங்கினேன். நிர்வாகம் படிக்க வேண்டும் என்பவர்களுக்காக தொடங்கப்பட்டது இது. பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி படிப்பவர்களுக்கு சான்றளிக்கிறோம். இந்த சமயத்தில் அரசியல் ஆர்வம் வந்த காரணத்தால் இந்த நிறுவனத்தை தலைமைச் செயல் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு சில காலம் அரசியலில் இருந்தேன்.

சிங்கப்பூர் Mathgym

சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் மேத்ஜிம் (singapore math gym) என்னும் நிறுவனத்தை தொடங்கினேன். தற்போதைய குழந்தைகள் எந்த பணியை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அடிப்படை கணக்கு குறித்த புரிதல் தேவை. இலக்கியத்துக்கு சில நாடுகள் பிரபலமாக இருக்கும், நிர்வாகத்துக்கு அமெரிக்கா பிரபலமாக இருக்கும். அதுபோல கணக்குக்கு சிங்க்ப்பூர் பிரபலம். அதனால் இந்த நிறுவனத்தை சிங்கப்பூரில் தொடங்கினோம். கடந்த ஜூன் மாதம் இந்தியா பிரிவை தொடங்கினோம். இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் விரிவுபடுத்தி இருக்கிறோம். நாங்கள் கணக்கினை வேகமாக போடுவது எப்படி என்பது குறித்து சொல்லித் தருவதில்லை. வித்தியாசமாக யோசித்தால், ஆராய்ச்சி, தகவல் பகுப்பாய்வு உள்ளிட்ட பல விஷயங்களை 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறோம். நாளைய சவால்களுக்கு நேற்று கற்றுக்கொண்ட திறன் போதாது, தவிர அனைத்து திறன்களுக்கு அடிப்படை கணக்கு என்பதால் இந்த பாடத்துக்காக மட்டுமே பிரத்யேக நிறுவனத்தை தொடங்கி இருக்கிறோம்.

சிங்கப்பூர் மேத் ஜிம், மை பி ஸ்கூல் மற்றும் ஆஸ்பயர் கோச்சிங் சென்டர் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு பிரத்யேக அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். இது தவிர சிறு நிறுவனங்களை ஊக்கப்படுத்த ’ஸ்டார்ட்அப் டு ஸ்கேல்அப்’ என்னும் பிரிவு உள்ளது. இதனை நானே நேரடியாக கவனித்து வருகிறேன். நிறுவனத்தை நடத்துவதில் உள்ள சிக்கல், நிதி திரட்டுவது குறித்து புதிய தொழில் முனைவோர்களுக்கு இந்த பிரிவு ஆலோசனை வழங்குகிறது என்று முடித்துக் கொண்டு நமக்கு விடைகொடுத்தார் ஸ்வாமிநாதன்.

சரியான செயல்களை சொல்வதற்கு பலர் இருக்கின்றனர். ஆனால் தவறுகளை வெளிப்படையாக சொல்வதுதான் புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஸ்வாமிநாதன் போல பல தொழில்முனைவோர்கள் தவறுகளை வெளியே சொல்வதன் மூலம் ஸ்டார்ட்-அப் சூழலில் உள்ளவர்களுக்கு நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும்.
நன்றி : யுவர் ஸ்டோரி