நன்றாக படிப்பவர்களுக்கே வேலை கிடைப்பதில் சிக்கல் இருக்கும் போது சுமாராக படிப்பவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், படிப்பை முடிக்காதவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? ஆனால் இதுபோன்ற பிரிவினருக்கான வேலைவாய்ப்பினை வழங்கித் தருகிறது ’லயம்’ ‘Layam’ எனும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர் ரமேஷுடன் சில நாட்களுக்கு முன்பு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இவர், ஹூண்டாய் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த முதல் இந்தியர் என்பது கூடுதல் தகவல். தற்போது 66 வயதாகும் இவர், நிறுவனத்தை தொடங்கியது 55 வயதில் என்பதும் கவனிக்கத்தக்கது. அவருடனான உரையாடலில் இருந்து…
சொந்த ஊர் திருச்சியாக இருந்தாலும், அப்பாவின் வேலை காரணமாக வட இந்தியாவிலே என்னுடைய ஆரம்ப காலம் இருந்தது. எம்பிஏ படித்தேன். அப்பா அரசு துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்தாலும் எனக்காக எங்கும் சிபாரிசு செய்யததில்லை. அதனால் சொந்த முயற்சியில் நேர்காணலுக்கு சென்றேன். அப்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தில் நேர்முகத்துக்கு சென்றேன். இறுதியாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ருசி மோடியுடன் நேர்காணல் நடந்தது. நிறுவனத்தின் எந்த இடத்தில் பணிபுரிய விருப்பம் என அவர் கேட்டவுடன் தாமதிக்காமல் நீங்கள் பணியை தொடங்கிய தன்பாத் நிலக்கரி சுரங்கத்தில் வேலைக்கு செல்கிறேன் எனக் கூறினேன். அந்த இடம் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று அவர் கூறினாலும் நான் கேட்டுக்கொண்டதால் சுரங்கப் பிரிவில் மனிதவளத்தை கையாளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.
தென் இந்தியர் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள் என்னும் எண்ணம் எனக்கு இருந்தது. அதனை மாற்றி விட்டாய் என ருசி மோடி என்னிடம் கூறியது மகிழ்ச்சியான தருணமாகும். 4,000 நபர்கள் பணியாற்றும் சுரங்கத்தில் வேலை. புதிதாக நான் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறேன் என்று சுரங்கப் பிரிவின் உயர்திகாரிடம் சென்றால் அவர் ருசி மோடியை விட கடுமையாக திட்டினார். இங்கு ஏன் வந்தாய் என்று கேட்டார். ஒரு வழியாக வேலைக்குச் சேர்ந்தால், அடுத்த நாள் சுரங்கப்பிரிவின் மேலதிகாரிக்கு வேறு வேலை கிடைத்ததால் சென்றுவிட்டார்.
தலைமை அலுவலகத்துக்கு விஷயத்தை தெரிவித்தால் என்னையே பொறுப்பேற்கச் சொன்னார்கள். என் வாழ்நாளில் அதிகம் கற்றுக்கொண்டது இங்குதான். நான் பணிபுரிந்த இடத்தில் பணத்தை வட்டிக்குக் கொடுப்பது, கொலை செய்வது போன்றவை மிகவும் சாதாரணமாக நடக்கும். அதனால் பணியாளர்களிடம் எப்போதும், யாரிடத்திலும் நம்பிக்கையற்ற தன்மை இருக்கும். அதனால் அவர்களிடத்தில் நம்பிக்கையை உருவாக்கும் பணியை செய்தேன். 2,000 அடி ஆழ சுரங்கத்தில் பணியாளர்கள் இருப்பார்கள். நானும் அவர்களுடன் 2,000 அடி ஆழத்துக்கு சென்று அவர்களுடன் உரையாடுவேன்.
இதுபோல சுரங்க பணியாளர்களுக்குத் தேவையான பல விஷயங்களை செய்தேன். டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றேன். இந்த சமயத்தில் அப்பா டெல்லியில் இருந்தார். அம்மா இறந்துவிட்டதால், அப்பாவை பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. அதனால் என்பிசிசி என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இங்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே இருந்தேன். மீண்டும் டாடா குழுமத்தில் இணைந்தேன். இந்த முறை 10 ஆண்டுகள் குழுமத்தின் பல பிரிவுகளில் பணியாற்றினேன்.
இந்த சமயத்தில் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து ஒரு வாய்ப்பு தேடி வந்தது. தொழிற்சாலையும் சென்னையில் அமைய இருந்ததால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டேன். தவிர மற்றொரு காரணமும் இருக்கிறது. வேலையில் அடுத்தடுத்த முன்னேற்றம் இருக்கும் போது நாம் தனிமைப் படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் உயர்பொறுப்பில் இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு தனியாக இருக்க வேண்டி இருக்கும். இந்த பிரச்சினையை என் அப்பா சந்தித்தார். சொந்த ஊரில் இருக்கும்போது தனிமைப் பிரச்சினை இருக்காது. அதனால் தமிழகம் திரும்புவது குறித்து என் அப்பாவும் அடிக்கடி பேசி இருக்கிறார். நானும் வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
ஹூண்டாய் போன்ற பெரிய நிறுவனத்தில் இருந்து வாய்ப்பு வந்தவுடன் அதனை பயன்படுத்திக்கொண்டேன். ஹூண்டாய் தலைமையகத்தில் இருந்து 70 உயரதிகாரிகள் வந்திருந்தனர். இவர்களை தவிர நான் ஒருவன் மட்டுமே இந்தியன். நான் சென்ற பிறகுதான் அனைத்து முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை பணியமர்த்தினோம். இங்கு மூன்று முக்கியமான விஷயங்களை நாங்கள் செய்தோம். முதலாவது தொழிற்சாலை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்தோம். அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்தவர்களை அழைத்து தொழிற்சாலையை சுற்றிகாண்பித்து அவர்களின் பதற்றத்தை நீக்கினோம். பணியாளர்களை தொழிற்சாலை அருகில் இருந்து மட்டும் எடுக்காமல் தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்கள் அமைத்து ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தேர்வு செய்தோம்.
தொழிற்சாலையை கட்டமைக்கும் பணி நடந்து வந்ததால், தேர்வு செய்த பணியாளர்கள் சுமார் 200 நபர்களை பயிற்சிக்காக கொரியா அனுப்பி வைத்தோம். அதனால் கட்டுமானம் பணி முடிவடைந்த சமயத்தில் நன்கு பயிற்சி பெற்ற பொறியாளர்கள் எங்களிடம் இருந்தால் உற்பத்தியை உடனடியாக தொடங்க முடிந்தது. இதனால் எங்களின் பிரேக் ஈவன் அடையும் காலம் குறைந்தது. இது போல பல பணியாளர்கள் ஊக்குவிப்பு பணிகளை செய்தோம். இந்த சமயத்தில் கனடாவை சேர்ந்த நிறுவனத்தின் தலைமைபொறுப்பினை ஏற்கும் வாய்ப்பு வந்தது. இரு ஆண்டுகள் அந்த பொறுப்பை ஏற்று நடத்தினேன்.அதனைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு ’லயம்’ நிறுவனத்தை நானும் என்னுடைய மகன் ரோஹித்தும் இணைந்து தொடங்கினோம்.
சொந்த நிறுவனம் தொடங்கக் காரணம் என்ன?
வேலைக்கு வருபவருக்கு படிப்பு முக்கியம். ஆனால் அது மட்டுமே முக்கியமல்ல. நன்றாக படித்தவர்கள் பணியில் அடுத்தடுத்து மேலே உயர முடியவில்லை. அதேபோல ஓரளவுக்கு படித்தவர்கள் தங்களின் திறமையால், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வத்தால் அடுத்தடுத்து மேலே உயர்ந்திருக்கிறார்கள். 30 ஆண்டுகள் மனிதவளத்துறை அனுபவத்தில் இது போல பல உதாரணங்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் கல்வியில் தோற்றவர்களுக்கு அல்லது பெரிய மதிப்பெண் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனத்தை உருவாக்கினோம்.
தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தால் போதும். அதனால் தமிழகம் முழுவதும் தோல்வி அடைந்த மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களை பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அனுப்புகிறோம். சில ஆண்டுகள் எங்களிடம் பணிபுரிந்த பிறகு அந்தத் துறையில் உள்ள நிறுவனங்களில் அவர்களுக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான நிறுவனங்களில் 6,000க்கும் அதிகமான நபர்கள் எங்கள் மூலமாக மற்ற நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்,” என்றார்.
பொதுவாக வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் நாங்கள் தமிழர்கள் இந்தியா முழுவதும் வேலைக்கு அமர்த்துகிறோம். சமீபத்தில் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் உத்தராகண்ட் ஆலைக்கு இங்கிருந்துதான் பணியாளர்களை தேர்வு செய்து அனுப்பி வைத்தோம். ஆட்டோமொபைல் துறையில் டொடோடா, போர்டு, ஐஷர், நிசான், ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு எங்கள் பணியாளர்களை அனுப்புகிறோம். தவிர பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிதிச்சேவை துறையிலும் வேலை வாய்ப்பினை வழங்கிறோம்.
2014-ம் ஆண்டு ரூ.30 கோடி வருமானம் ஈட்டினோம். தற்போது ஐந்து மடங்கு வளர்ந்திருக்கிறோம். வேலைத்தேடி எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் எந்தவிதமான கட்டணமும் வசூலிப்பதில்லை. அவர்களுக்கு ஆரம்பக்கட்ட பயிற்சி அளித்து பணியமர்த்துகிறோம். நிறுவனங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பணியாளர்களை நாங்கள் வழங்கிவிடுவோம். அவர்களுக்குத் தேவையானவற்றினை நாங்கள் பார்த்துக் கொள்வோம். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு நிறுவனத்தில் எங்கள் பணியாளர்கள் அதிகரிக்கும் போது எங்களுடைய ஹெச்.ஆர் பணியாளர் ஒருவர் அங்கு இருப்பார் என்பதால் நிறுவனங்களுக்கு பணியாளர்களை கையாளும் பிரச்சினை இல்லை, தேவையான வேலையை பெற்றுக் கொள்ளமுடியும்.
அதேபோல பணியாளர்களுக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து அடுத்துகட்டத்துக்கு செல்ல முடியும் என ரமேஷ் கூறினார். வாழ்க்கையில் படிப்பு என்னும் வாய்ப்பினை தவற விட்டவர்களுக்கு வேலை என்னும் வாய்ப்பினை வழங்கும் இவர்கள் மேலும் உயர வாழ்த்துக்கள்!
நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்
Recent Comments