தொழில் முனைவோர்களுக்கு உதவுவதற்கு பல அமைப்புகள் உள்ளன. அதில் முக்கியமான அமைப்பு TiE (the indus entrepreneurs). சர்வதேச அளவில் செயல்படும் இந்த அமைப்பில், 180-க்கும் மேற்பட்ட சாப்டர்கள் உள்ளன. இந்தியாவை எடுத்துக் கொண்டால் இரண்டாவது பெரிய சாப்டர் சென்னைதான். கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச டை சாப்டர் விருதினை டை சென்னை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் டை சென்னை பிரிவின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வரை சந்தித்து உரையாடினோம்.

சென்னை பிரிவுக்கு விருது கிடைத்ததற்கு என்னக் காரணம், தொழில் முனைவோர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் என்ன என்பது குறித்து உரையாடினோம். தொழில்முனைவோர்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள் வழக்கமாகச் செய்யும் பணிகளைதான் நாங்களும் செய்கிறோம். ஆனால் சிறு சிறு வித்தியாசங்களோடு எங்கள் பணிகளை ஆக்கப்பூர்வமாக செய்கிறோம் என்று கூறுகிறார் அகிலா.

Mentor Connect தொழில் முனைவோர்களுக்காக பல நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் தொழில் பற்றிய பொதுவான அறிவு கிடைக்கிறது. ஆனால் நடைமுறை சிக்கல்களை விவாதிப்பதற்கும், தொழிலின் அடுத்தகட்டம் குறித்து விவாதிப்பதற்கும் ஆலோசர்களின் வழிகாட்டுதல் தேவை. இதற்காக நாங்கள் Mentor Connect என்னும் வாய்ப்பினை வழங்குகிறோம். எங்களிடம் 190-க்கும் மேற்பட்ட ஆலோசர்கள் உள்ளன, என்றார் அகிலா ராஜேஷ்வர். எங்களின் உறுப்பினர்கள் அவர்களின் தொழிலுக்கு ஏற்ற ஆலோசகர்களுடன் உரையாடும் வாய்ப்பினை நாங்கள் வழங்குவோம். எங்களின் இணையதளத்தில் ஆலோசகர்களின் பட்டியல் உள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களில் யாரிடம் உரையாட வேண்டும் என்பதை தொழில்முனைவோர் முடிவு செய்து விண்ணப்பம் கொடுத்தால், அது எங்களிடம் வந்து சேரும். சம்பந்தப்பட்ட ஆலோசகரின் நேரத்துக்கு ஏற்ப தொழில்முனைவோர் சந்தித்து உரையாட நேரம் ஒதுக்கி ஏற்பாடு செய்யப்படும். இதுவரை 120க்கும் மேற்பட்ட ஆலோசகர் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. தற்போதைய சூழலில் இந்த சந்திப்புகள் மிக மிக அவசியம்.

டெமோ டே Demo Day

புது முயற்சியாக ’டெமோ டே’ என்னும் புதிய கான்செப்டை உருவாக்கினோம். இதில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் தங்களுடைய புராடக்ட்கள் மற்றும் சேவைகள் குறித்து அறிமுகம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் டை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் மாணவர்கள், தொழில்முனைவு ஆர்வம் இருப்பவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதைவிட முக்கியம், முதலீட்டாளர்களும் கலந்து கொளவதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் நேரடியாக உரையாடும் வாய்ப்பினை பெற்றன.

வாட்ஸ் ஆப் குரூப்

இதில் என்ன புதுமை என நினைக்கத்தோன்றும். புதுமை கிடையாதுதான். ஆனால் எப்படி செயல்படுத்துகிறோம் என்பதை பொறுத்து இந்த குரூப்பின் வெற்றி இருக்கிறது. இந்த குரூப்பில் டை உறுப்பினர்கள் மட்டும் இருப்பார்கள். எங்களிடம் இந்த சேவை அல்லது புராடக்ட் இருக்கிறது என்னும் தகவலை தெரிவிப்பார்கள். சிலர் எங்களுக்கு இந்த பொருள், சேவை அல்லது பணியாளர்கள் தேவை எனக் கூறுவார்கள். பிஸினஸ் வளர்ச்சிக்காக மட்டுமே இந்த குழுமம் செயல்பட்டுவருகிறது. இந்த குழுமத்தில் காலை வணக்கம், மாலை வணக்கம், வாழ்த்துகள் போன்றவற்றுக்கு இடம் அளிப்பதில்லை. ஆரம்பத்தில் எங்களது குழுவினர் இவற்றை நெறிப்படுத்தி வந்தனர். ஒருகட்டத்தில் குழுமத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களே தாமாக முன்வந்து நெறிப்படுத்தினர். இப்போது அதற்கும் அவசியம் கிடையாது. பிஸினஸுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டு வருகிறது. மற்ற சாப்டர்களிலும் இதுபோன்ற வாட்ஸ் ஆப் குழுக்கள் செயல்பட்டு வந்தது. ஆனால் நெறிமுறைபடுத்தாமல் அவை கலைக்கப்பட்டதாக தெரிகிறது என்றார் அகிலா.

டை சந்தை TiE Sandhai

மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களும் வியக்கும் ஐடியா இது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் மிகப்பெரிய இரு நாள் கருத்தரங்கு நடக்கும். அப்போது சென்னையில் உள்ள முக்கியமான தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் வருவார்கள். அவர்களிடம் புராடக்ட் மற்றும் சேவைகளை  நேரடியாக எடுத்துச்சல்ல உருவாக்கப்பட்டதுதான் ’டை சந்தை’. இந்த ஆண்டும் இதேபோல நடைப்பெறும் டை சந்தையில் தங்கள் பொருட்களை பிரபலப்படுத்த முடியும். இதற்குக் கட்டணம் வசூலிக்கிறோம். ஆனால் எங்களின் இணையதளத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய புராடக்ட் மற்றும் சேவைகளை டை சந்தை பகுதியில் விளம்பரப் படுத்திக்கொள்ள முடியும். இணையதளத்தை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால் உறுப்பினர்கள் இலவசமாக தங்களை வெளி உலகுக்கு அறிமுகம் செய்துகொள்ள முடியும்.

 டை ரீச் TiE Reach

சென்னையில் இருக்கும் தொழில்முனைவோர்கள் தொழில் குறித்த சந்தேகங்களுக்கு எளிதாக தீர்வு காண முடியும். ஆனால் மற்ற ஊர்களில் இருக்கும் தொழில் முனைவோர்கள், வெற்றியாளர்களை, ஆலோசகர்களை சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அதனால் இரண்டாம் கட்ட நகரங்களில் ’டை ரீச்’ என்னும் பெயரில் கருத்தரங்குகளை நடத்துகிறோம். இதுவரை மதுரை, சேலம் மற்றும் கரூர் ஆகிய நகரங்களில் நடத்தி இருக்கிறோம். மேலும் சில நகரங்களிலும் நடத்தும் திட்டம் இருக்கிறது. இதுதவிர முதலீட்டாளர் சந்திப்பு, சி.இ.ஓ உடன் ஒரு நாள் உள்ளிட்ட பல புதுமைகளை நாங்கள் செய்து வருகிறோம். மேலும் தொழில்முனைவை கல்லூரிகளில் எடுத்துச் செல்வதற்காக சில கல்லூரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். இதுபோல தொழில்முனைவுக்கு பல நடவடிக்கைகள் எடுத்ததால் எங்களுக்கு இந்த சர்வதேச விருது கிடைத்திருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

பெண்கள் ஸ்பெஷல்

எங்களிடம் உள்ள உறுப்பினர்களில் 10 சதவீதம் வரை பெண் தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள். பெண்ணாக இருப்பது சலுகையும் அல்ல பாதகமும் அல்ல. ஆனால் பெண்கள் தொழிலுக்கு வரும் போது உள்ள சவால்கள் குறித்து விளக்குகிறோம். கடந்த ஆண்டு ஃபிக்கி அமைப்புடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். இதில் பல பெண் தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். இதுபோல அவ்வப்போது பெண்களுக்கான நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். ஆலோசனை தொழில்முனைவு சம்பந்தமான ஆலோசனையை பெறுவதற்கு யார் வேண்டுமானாலும் எங்களை அணுகலாம். ”சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில்முனைவு அமைப்புகளில் நிதி திரட்டுவதற்காக மட்டுமே உறுப்பினராக இணைந்தனர். நிதித் திரட்டுவதும் முக்கியம்தான், அதற்கான ஆலோசனையும் நாங்கள் வழங்குகிறோம். ஆனால் நிதி திரட்டுவதைவிடவும் தொழில் முனைவுச் சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலே நாங்கள் அதிகம் கவனம் செலுத்துகிறோம்,” என அகிலா தெரிவித்தார்.
நன்றி  : யுவர் ஸ்டோரி தமிழ்