யூடியூப் என்பது பொழுதுபோக்கு மீடியம் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை ஒரு பிஸினஸ் மாடலாக உருவாக்க முடியும் என்பதை கண்டறிந்த நண்பர்கள் ராம்குமார், கார்த்திக் மற்றும் விக்னேஷ்காந்த் தொடங்கியதே ‘ஸ்மைல்சேட்டை’ சேனல். அதை வெற்றிகரமாக நடத்தி, அதில் பல சானல் பிரிவுகளைத்தொடங்கி யூட்யூபில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தாலும், அதற்கான வணிக மாதிரியை உருவாக்க பல தோல்விகளையும் சந்தித்திருக்கிறார்கள் இவர்கள்.

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று யூடியூப் சேனல்களுக்கு விளம்பரங்களை பெற்றுத்தரும் நிறுவனமான ’பிக் மை ஸ்லாட்’ (Pick My Slot) என்னும் நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்கள் இவர்கள். யூடியூப் சந்தை மற்றும் புதிய நிறுவனம் குறித்து இதன் நிறுவனர்களின் ஒருவரான ராம்குமார் யுவர்ஸ்டோரி தமிழுடன் விரிவாக விளக்கினார்.

நாங்கள் மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தோம். அப்போது முதலே மீடியாவில் எதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்குள் இருந்தது. விக்னேஷ் நிகழ்ச்சியின் முகமாகவும், கார்த்தி ஸ்கிரிப்டிலும் நான் பிஸினஸை கவனித்துகொள்ள வேண்டும் என ஏற்கெனவே முடிவு செய்திருதோம். இன்ஜீனியரிங் மற்றும் எம்பிஏ முடித்தேன். இதனை தொடர்ந்து ஐஎன்ஜி வைஸ்யா வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய வங்கிகளில் பணிபுரிந்தேன். இருந்தாலும் மீடியா சம்பந்தப்பட்ட எண்ணமே எங்களுக்குள் இருந்தது.

எங்கள் மூவரில் அதிகக் காலம் பிற துறை நிறுவனங்களில் வேலை செய்தது நான்தான். விக்கி எப்எம்-ல் வேலைக்குச் செய்தார். நானும் சில காலம் பகுதி நேரம் வேலை செய்திருக்கிறேன். நான் ஷோ செய்வது மட்டுமல்லாமல், பிஸினஸ் தொடர்பான வேலைகளையும் செய்தேன். இந்த அனுபவம் இருந்ததால் வெப் ரேடியோ ஒன்றினை தொடங்கினோம். ஆனால் இந்த முயற்சி மூலம் சில லட்சங்களை இழந்தோம்.

இதனைத் தொடர்ந்து ஸ்மைல்சேட்டை என்னும் யூடியூப் நிறுவனத்தை தொடங்கினோம். இது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் யூடியூப் மூலம் நல்ல வருமானம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் யூடியூப் மூலமான வருமானம் குறையத்தொடங்கியது. அப்போதுதான் நம் சேனலுக்காக பிரத்யேகமாக விளம்பரங்களை வாங்குவது குறித்த சிந்தனை வந்தது. இதற்கு பிராண்ட்களிடமும் ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது.

நம்முடைய வருமானம் குறையும் பட்சத்தில் மற்ற யூடியூப் சேனல்களின் வருமானமும் குறையுமே, அவர்களுக்கும் இந்தச் சேவையை வழங்கலாம் என யோசித்தோம். ஆரம்பத்தில் மற்ற யூடியூப் நிறுவனங்களுக்கு இந்த ஐடியாவில் பெரிய ஆர்வம் இல்லை. அடுத்த சில மாதங்களில் வருமானம் குறைந்தபோது அவர்கள் எங்களை அணுகினார்கள். அதனால் யூடியூப் நிறுவனங்களுக்கான விளம்பரங்களை வாங்கிக்கொடுக்கும் பணியை செய்தோம்.

பிராண்ட்கள் நேரடியாக யூடியூப் நிறுவனங்களையோ அல்லது யூடியூப் நிறுவனங்கள் நேரடியாக பிராண்டினையோ அணுகும் பட்சத்தில் நமக்கான வருமானம் குறையும் என கணித்தோம். நாங்கள் கணித்ததுபோலவே நடந்தது. அதனால் யூடியூப் நிறுவனங்களில், நாங்கள் முதலீடு செய்து விளம்பர ஸ்லாட் வாங்கினோம். புரிவதற்காக சொல்ல வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து ஸ்லாட் வாங்கி, இதைவிட அதிகத் தொகைக்கு விளம்பரம் வெளியிட வேண்டும். ஆனால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. மற்ற யூடியூப் சேனல்களுக்கு விளம்பரங்களை விற்பதன் மூலம் முதல் ஆண்டில் ஓரளவுக்கு லாபம் கிடைத்தது.

ஆனால் அடுத்த ஆண்டில் ஸ்லாட் மூலம் விற்பனை செய்ததில் சில பல சிக்கல்களை சந்தித்தோம். இப்போதும் மீண்டும் பிஸினஸ் மாடலை மாற்ற வேண்டிய தேவை உருவானது. ஆரம்பத்தில் ஸ்மைல்சேட்டை மூலம் நாங்கள் செயல்பட்டு வந்தோம். யூடியூப் வருமானம் குறைந்ததால் நிதி ஆதாரத்துக்காக ’டிரெண்ட்லவுட்’ என்னும் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டோம். சில காலத்துக்கு பிறகு ஸ்மைல் சேட்டை யார் வசம் செல்வது என்னும் பேச்சு வந்த போது அவர்களிடம் கொடுத்துவிட்டு நாங்கள் பிளாக்‌ஷீப் என்னும் புதிய சேனல் தொடங்கினோம். நாங்கள் மூவரும் இதில் பங்குதாரர்கள். என்னும் கிளைக்கதையை சொன்ன ராம், பிக்மைஸ்லாட் நிறுவனம் பிறந்த கதையை சொல்லத் தொடங்கினார்.

பிக் மை ஸ்லாட் Pick My Slot

யூடியூப் சேனல்களுக்கு விளம்பரத்தை விற்றால் நீண்ட காலத்துக்கான பிஸினஸாக இருக்காது. அதேபோல ஸ்லாட் எடுத்து விற்பனை செய்தால் நஷ்டம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் இரண்டுக்கும் நடுவில் வேறு ஒன்றை செய்ய வேண்டும் என திட்டமிட்டு உருவாக்கியதுதான் ’பிக் மை ஸ்லாட்’. பிராண்ட்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதற்காக பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இணையதளம் போன்றவற்றை உருவாக்கினோம். அதாவது பிராண்ட்களுக்கு ஏற்ற மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத் தீர்வினை வழங்கலாம் என திட்டமிட்டோம்.

“செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் மூலம் பிராண்டுக்குத் தேவையான தீர்வினை வழங்க, விளம்பரம் கொடுக்கும் பிராண்டுகளை கண்டறிந்தோம். அவர்களின் தேவை மற்றும் இலக்குக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் விளம்பரத்தை பெற்றுக்கொடுத்தோம். ”Ai மற்றும் தொழில்நுட்ப வழிகளில், சரியான வாடிக்கையாளர்கள் எங்கு இருப்பார்கள் என்பதை எங்களால் கண்டறிய முடிவதால் பிராண்ட்களும் எங்களை நோக்கி வரத் தொடங்கினார்கள். இப்போதைக்கு 3000-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். இது தவிர சில நூறு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நபர்களிடமும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். பிராண்ட்களின் தேவைக்கு ஏற்ப தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்,” என்றார் ராம்.

யூடியூபில் தற்போது சினிமா, பொழுதுபோக்கு, அரசியல், சமையல் உள்ளிட்ட பிரிவுகளில் அதிகப் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இது தவிர இன்னும் சில துறைகள் வளர்ந்து வரும் சூழலில் இருக்கின்றன. வருங்காலத்தில் இந்த வகை டிஜிட்டல் விளம்பரம் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், வருவாய்க்கும் முக்கியப் பங்காக இருக்கும் என்கிறார். பிக் மை ஸ்லாட் நிறுவனம் இவ்வகை பிராண்டிங் மற்றும் விளம்பரங்களுக்கு வழி செய்யும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தற்போது ஒரு ப்ராடக்டாகவே உருவாகியுள்ளது என்கிறார் ராம் குமார்.

மேலும், “பாரம்பரிய வழி விளம்பரங்களுடன், டிஜிட்டலில் செயற்கை நுண்ணறிவு கொண்டு செய்யும் விளம்பரங்களை ஒப்பிடும் போது, சரியான வாடிக்கையாளர்களை குறைந்த செலவில் அணுகமுடியும் என நிரூபித்துள்ளோம். தங்களின் ப்ராண்டை எங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் நிறுவனங்களின் செலவுகள் 30% குறைந்துள்ளது என்பதே இதன் சிறப்பு,“ என்கிறார்.

யூடியூப் சேனல் தொடங்கினால் பணம் சம்பாதிக்க முடியும் என பலரும் நினைக்கிறார்கள். பணம் சம்பாதிபதற்கான உடனடி வழி யூடியூப் கிடையாது. முதலில் சரியான கண்டென்ட் இருக்க வேண்டும். மேலும் நீண்ட நாட்கள் நிலையாக செயல்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்க முடியும். தவிர யூடியூப் மற்றொரு முக்கியமான விஷயம் shelf life அதிகம். ஒரு நல்ல கண்டெண்ட் மாதந்தோறும் கூட பணம் ஈட்டித்தரும். ஆனால் கண்டெண்ட் முக்கியம் என ராம்குமார் நம்மிடம் தெரிவித்தார்.
நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்