ஆண்டுதோறும் சென்னையில் நடக்கும் தொழில்முனைவு மாநாடுகளில் குறிப்பிடத் தகுந்தது டைகான் (TiECon) மாநாடு. ஒவ்வோர் ஆண்டும் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல தொழில் முனைவோர்கள் கலந்துகொள்வார்கள். ஆனால், இந்தமுறை கோவிட் அச்சம் காரணமாக இணையதளம் மூலமாகவே நடந்தது. வழக்கமாக, ஒரு நாள் முழுக்க நடக்கும் இந்தக் கருத்தரங்கு, இந்த முறை அக்டோபர் 5 – 9-ம் தேதி வரை ஐந்து நாள்கள் (மாலை 5 முதல் 8 வரை) நடந்தன.
தமிழில் நடந்த அமர்வுகள்
பொதுவாக, டைகான் கருத்தரங்கம் ஆங்கிலத்திலேயே நடக்கும். ஆனால், இந்த முறை தினமும் ஓர் அமர்வு தமிழில் நடந்தது குறிப்பிடத்தக்கது. தவிர, இணையதளத்தில் இந்த மாநாடு நடந்ததால், பல நகரங்களில் உள்ள முக்கியத் தொழில் தலைவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
95% குறைந்த வருமானம்..!
முதல் நாளில் மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் தலைவர் தீப் கர்லா உரையாற்றினார். கோவிட் தொற்று சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இணையம் சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. இதுவரை 11 கோடி நபர்கள் இணையத்தில் பொருள்களை வாங்குபவர்களாக இருந்தார்கள். ஆனால், தற்போது 20 கோடி நபர்களாக அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
ஆரம்பத்தில் நாங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக நிறுவனத்தைத் தொடங் கினோம். அப்போதுதான் 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் விமான டிக்கெட் முன்பதிவு குறைந்தது. அப்போது குறைந்த சந்தை மதிப்பில் வென்ச்சர் கேப்பிடல் மூலம் நிதி திரட்டினோம். 2005-ம் ஆண்டு என்பது எங்களுக்கு முக்கியமான ஆண்டு. அப்போதுதான் ஐ.ஆர்.சி.டி.சி தொடங்கப்பட்டது. அதனால் இந்தியர்கள் ரயில் முன்பதிவை ஆன்லைன் மூலம் செய்ய முடியும் என்பதை உணர்ந்தனர். அதனால் எங்களுக்கும் வளர்ச்சி இருந்தது.
ஒரு காலத்தில் விமான டிக்கெட் அதிக வருமானம் தந்தது. ஆனால், இப்போது விமான டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானம் மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது. கடந்த ஜூன் காலாண்டில் எங்கள் வருமானம் 95% அளவுக்குக் குறைந்தது. இதிலிருந்து நாங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.
தொழில்முனைவோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, காலத்தைக் கணிக்க வேண்டாம். ஒரு சில காலாண்டுகளில் பிசினஸைப் பிடித்து விட முடியாது. அதற்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அதேபோல, உங்களுடைய புராடக்ட் அல்லது சேவை முழுமையடையாமல் விளம்பரத்தில் ஈடுபட வேண்டாம். விளம்பரம் செய்யும்போதுகூட எத்தனை பேர் வாடிக்கை யாளர்களாக மாறுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அந்த விகிதம் சீராக உயர்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெரும்பாலான தொழில்முனைவோர்கள் போட்டியாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பொதுவாகத் தெரிந்து கொண்டால் போதும். உங்கள் கவனத்தை வாடிக்கையாளர்கள் மீது செலுத்துவதுதான் முக்கியம்’’ என்று பேசினார் தீப் கர்லா.
கோவிட் கற்றுத் தந்த பாடங்கள்..!
இரண்டாம் நாள் தொடக்க நிகழ்ச்சி தமிழில் நடந்தது. விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனுடன் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் உரையாற்றினார்.
‘‘விகடனின் 94 ஆண்டுக் கால வரலாற்றில் பத்திரிகையோ, தொலைக்காட்சித் தொடர்களோ முழுமையாக நிற்கும் சூழல் ஏற்படவே இல்லை. கோவிட் காரணமாக மூன்று வாரங்களுக்கு பத்திரிகையை அச்சிட முடியாத சூழல் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதே நான் கற்றுக்கொண்ட முதல் பாடம். இரண்டாவது, எங்களுடைய பணியாளர்கள் முக்கியம். அவர்கள்தாம் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனால், தேவைக்கு அதிகமாக ஒருவர்கூட இருக்கக் கூடாது என முடிவெடுத்தோம். மூன்றாவது, யாருடன் தொழில் செய்ய வேண்டும், யாருக்குக் கடன் கொடுக்க வேண்டும் என்பதில் சில முடிவெடுத்தோம்’’ என்று கூறினார்.
டிஜிட்டல் மாற்றத்துக்கு எப்படி தயாரானீர்கள் என்னும் கேள்விக்கு, ‘‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பார்கள். நான் மாற்றிச் சொல்வேன். மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி. சில ஆண்டுகளுக்கு முன் மக்கள், பத்திரிகையை மட்டுமே படித்து வந்தனர். ஆனால், தற்போது தொலைகாட்சி, சமூக ஊடகம், டிஜிட்டல், ஓ.டி.டி என வாசகர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள். வாசகர்கள் இருக்கும் இடத்துக்கு நாம் செல்ல வேண்டும் என்னும் பிள்ளையார் சுழியை மட்டுமே நான் போட்டேன். மற்றவற்றை எங்களுடைய பணியாளர்கள் பார்த்துக்கொண்டார்கள்’’ என்றார்.
முக்கிய நிகழ்வாக மாறிய விகடன் விருது..!
அடுத்து, வேல்யூ அன்லாக் (Value unlock) என்னும் முக்கியமான கேள்வியை ஆடிட்டர் கார்த்திகேயன் கேட்டார். ‘‘பலரும் ‘வேல்யூ அன்லாக்’ என்பதை நிறுவனத்தைப் பிரிப்பது, பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டைப் பெறுவது என நினைக்கிறார்கள். ஆனால், நான் வேறாக யோசிக்கிறேன். இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்னும் படம் வெளியானது. அந்தப் படம் விகடனில் வெளியான தொடரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அதனால் விகடனுக்கு எந்தப் பலனும் கிடையாது. அப்போதுதான் நாம் மிகப்பெரிய பொக்கிஷத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறோம் என்பது புரிந்தது. தற்போது விகடனில் வெளிவந்த கதைகள், சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஓ.டி.டி தளங்களில் கதைக்களம் தயார் செய்கிறோம். அதேபோல, முன்பெல்லாம் விகடன் விருதுகள் என்பது பத்திரிகைகளில் சில பக்கங்களை ஒதுக்குவதுடன் முடியும். ஆனால், தற்போது அதை முக்கியமான மிகப் பெரிய நிகழ்ச்சியாக நடத்துகிறோம். இதே அணுகுமுறையை எல்லாவற்றிலும் பின்பற்றுகிறோம்’’ எனக் கூறினார்.
புரோட்டோடைப்பை உருவாக்குங்கள்..!
எஃப்.எம்.சி.ஜி துறையின் முன்னோடி களில் ஒருவரான ஹரிஷ் மரிவாலா உரையாற்றினார். ‘‘முன்பெல்லாம் எஃப்.எப்.சி.ஜி துறையில் ஒரு பொருளை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான விஷயம். டிஸ்ட்ரிபியூட்டர் நெட்வொர்க் மற்றும் விளம்பரத்துக்கு அதிகம் செலவாகும். தற்போது இணையம் மூலமே விற்க முடியும்; விளம்பரமும் செய்ய முடியும்.
இளம் தொழில்முனைவோர்கள் சரியான வாய்ப்புகளைக் கண்டறிந்து, அந்த ஐடியாவை விவாதித்து வாடிக்கையாளர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கொடுக்கலாம். வாடிக்கையாளரின் தேவையை மார்க்கெட் ரிசர்ச் மூலம் கண்டறிய முடியாது. புரோட்டோ டைப் உருவாக்கி அதை வழங்கி, அதன்பின்னர் அதில் மாற்றங்களைச் செய்து சந்தைப்படுத்த வேண்டும்.
1970-களில் பாராசூட் டின்களில் இருந்தது. இதை மாற்ற வேண்டும் என நினைத்து பிளாஸ்டிக் கேன்களில் கொண்டுவந்தோம். ஆனால், சந்தை இதை ஏற்றுக்கொள்ள ஏழு ஆண்டுகள் ஆகின. இதில் உள்ள சிக்கல்களை நாங்கள் புரிந்துகொண்டதால், வங்கதேசத்தில் நான்கு ஆண்டுகளில் டின்களிலிருந்து பிளாஸ்டிக்குக்கு மாறினோம்.
சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஓட்ஸ் தயாரிப்பில் இறங்கினோம். இதில் சந்தையின் தேவைக்கேற்ப, சம்பந்தப்பட்ட நகரங்களின் தேவைக்கேற்ப பிரிவுகளை உருவாக்கினோம். தமிழ்நாட்டில் பொங்கல் ஓட்ஸ் முதல் சேவரி ஓட்ஸ் வரை பல புதிய ஓட்ஸ்கள் விற்பனையில் உள்ளன. தொழில்முனைவோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, புரோட்டோ டைப்பில் கவனம் செலுத்துங்கள் என்பதுதான்’’ என நிறைவு செய்தார்.
கடுமையான பாடத்திட்டங்கள் கூடாது..!
கடந்த புதன்கிழமை தமிழ் அமர்வில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவுடன் கலந்துரையாடினார் பத்ரி சேஷாத்ரி.
‘‘நாங்கள் தென்காசியில் எங்கள் கிளை அலுவகத்தை அமைத்துள்ளோம். சிறு நகரங்களில் வசிப்பவர்கள் அந்தந்த நகரங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால் சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங் களுக்குத்தான் போக வேண்டிய இருக்கும். ஆனால், தென்காசியில் எங்கள் கிளை அலுவலகத்தை அமைத்தன் மூலம் அந்தப் பகுதியில் பலருக்கும் வேலை தர முடிகிறது.
சிறு நகரங்களில் அலுவலகம் அமைப்பது நிறுவனங்களின் பொறுப்புதான். அந்த முன்னெடுப்பை நிறுவனங்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால், சாலை வசதி, குடிநீர் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விஷயங்களில் அரசு கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும்.
கல்வி அமைப்பைப் பலப்படுத்துகிறோம் எனக் கடுமையான பாடத்திட்டங்களை வைத்திருப்பதால், எந்தப் பயனும் இல்லை. அமெரிக்காவில் இதுபோல செய்ததால், பல மாணவர்கள் பள்ளியை விட்டே வெளியேறி விட்டார்கள். கடுமையான பாடத்திட்டமானது மாணவர்களின் ஆர்வத்தைக் (curiosity) குறைத்துவிடும். ஆர்வம் குறைந்த பிறகு, அடுத்தகட்டத்தை நோக்கி நகர அவர்கள் மறுக்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு 2.7 கோடி குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களுக்கான சூழலை உருவாக்குவது நம்முடைய பொறுப்பு’’ எனக் கூறினார்.
டைகான் கருத்தரங்கின் முதல் மூன்று நாள் நிகழ்ச்சிகள் நிறைவாக அமைந்தது. பிசினஸ் தொடர்பான விஷயங்களை தமிழில் தரத் தொடங்கியுள்ள டைகானுக்குப் பாராட்டுகள்!
Recent Comments