ஸ்டார்ட்அப்களைப் பொறுத்தவரை, யுனிகார்ன் (ஒரு பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் நிறுவனங்களை யுனிகார்ன் என்று அழைக்கிறார்கள்) என்பது பெருமை தரும் அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை அன்அகாடமி (Unacademy) நிறுவனம் சமீபத்தில் பெற்றிருக்கிறது.
கல்வித் தொழில்நுட்பம் என்னும் எஜுடெக் பிரிவில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கொரோனா பல தொழில்களை முடக்கியிருந்தாலும், சில தொழில்களில் அபரிமிதமான வளர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, கல்வி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. இந்தப் பிரிவில் சில மாதங்களுக்கு முன் பைஜூஸ் நிறுவனம் யுனிகார்ன் நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.
அன்அகாடமி வளர்ந்த கதை
அன் அகாடமி நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் கௌரவ் முஞ்சல். 2010-ம் ஆண்டு பொழுதுபோக்காக ஒரு யூடியூப் சேனல் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு முதல் அன் அகாடமி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. சில நாள்களுக்கு முன் 15 கோடி டாலர் முதலீட்டைத் (இதுவரை மொத்தமாக 34.85 கோடி டாலர் முதலீட்டைத் திரட்டியிருக்கிறது) திரட்டியது. இந்த முதலீட்டில் சாஃப்ட்பேங்க் முன்னிலை வகித்தது. ஜெனரல் அட்லாண்டிக், செக்யோயா, நெக்ஸஸ் வென்ச்சர் பார்னட்ஸ், ஃபேஸ்புக் மற்றும் புளூம் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளன.
இந்த முதலீட்டையடுத்து அன் அகாடமியின் சந்தை மதிப்பு 1.45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மூன்று மடங்குக்கு உயர்ந்திருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன் பிப்ரவரில் இதன் சந்தை மதிப்பு 51 கோடி டாலராக இருந்தது.
‘‘சாஃப்ட்பேங்க் நிறுவனம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எங்களைக் கவனித்து வருகிறது. ஆனால், இந்த முதலீடுக்கான திட்டம் 45 நாள்களுக்கு முன்பாகத் தொடங்கப் பட்டது. இந்த முதலீட்டை விரிவாக்கப் பணிகளுகாகச் செலவு செய்ய இருக்கிறோம். எங்கள் கவனம் இப்போதைக்கு இந்தியாவிலேயே இருக்கும். வெளிநாட்டுச் சந்தையைக் குறித்து தற்போது எதுவும் திட்டமில்லை’’ என கௌரவ் கூறியிருக்கிறார்.
வேகமாக வளரும் எஜுடெக்
கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனா வைரஸுக்குப் பிறகு, இந்தத் துறையின் வளர்ச்சி பல மடங்காக உயர்ந்திருக் கிறது. மாணவர்கள் எங்கும் வெளியே செல்ல முடியாத சூழலில் கல்வி கற்க இணையத்தை நாட வேண்டியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் பல வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.
அன் அகாடமியைப் பொறுத்தவரை, 35 போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை வழங்குகிறது. 18,000-க்கும் மேற்பட்ட பயிற்றுனர்கள் உள்ளனர். மேலும், மூன்று கோடிக்கும் மேலான நபர்கள் இதை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள். 3.5 லட்சம் நபர்கள் பணம் செலுத்தி படிக்கிறார்கள். தவிர, Wifistudy, Kreatryx, PrepLadder, CodeChef உள்ளிட்ட நிறுவனங்களை அன்அகாடமி கையகப்படுத்தியிருக்கிறது. இந்தத் தளத்தில் 200 கோடி நிமிடங்களுக்கான கன்டென்ட் உள்ளதாக இதன் நிறுவனர்கள் தெரிவிக் கின்றனர். மேலும், ஒவ்வொரு மாதமும் 20,000 இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் கிடைத்த மொத்த வருமானம் தற்போது ஒரு மாதத்தில் கிடைப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2019-ம் ஆண்டு பணம் செலுத்திப் படிக்கும் முறையை நிறுவனம் கொண்டுவந்தது. ஐ.ஏ.எஸ், வங்கி, கல்லூரி நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேர்வு முறையைப் பொறுத்து 20 டாலர் முதல் 150 டாலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து ரிபோர்ட் பீ நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த மணியிடம் பேசினோம். ‘‘தற்போது கல்வி சார்ந்த நிறுவனங்களுக்கு நல்ல முதலீடு கிடைத்து வருகிறது. இது வரவேற்கத்தகுந்த விஷயம். ஆனால், இந்த நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி கோவிட்-19 முடிந்தபிறகே தெரியவரும்’’ எனக் கூறினார்.
ஆன்லைன் தொழில்நுட்பம் கல்வியை பூகோள ரீதியிலான தடைகளைக் கடந்துசெல்ல உதவியிருக்கிறது என்பதற்கு அன்அகாடமியின் வெற்றி ஒரு நல்ல உதாரணம்.
Recent Comments