டெலிகாம் துறையில் கவனத்தைச் செலுத்தி வந்த ரிலையன்ஸ், அடுத்தகட்டமாக ரீடெயில் துறையில் கவனத்தைச் செலுத்தி வருகிறது. சென்னையைச் சேர்ந்த ஆன்லைன் பார்மசி நிறுவனமான நெட்மெட்ஸ் நிறுவனத்தின் 60% பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியிருக்கிறது. தவிர, நெட்மெட்ஸின் துணை நிறுவனங்களின் 100% பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியிருக்கிறது. இதன் மதிப்பு 620 கோடி ரூபாய். ஆன்லைன் பார்மசி துறையில் ரிலையன்ஸ் களம் இறங்குவது ஏன், இந்தத் துறையில் ரிலையன்ஸ் என்ன சாதிக்க விரும்புகிறது?
என்ன காரணம்?
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் மூலம் அனைத்துப் பொருள்களும் பரபரப்பாக விற்கப்பட்டு வந்தாலும், இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்கவில்லை. எனவே, மருந்துகளை விற்பதற்கென பிரத்யேகமான நிறுவனங்கள் உருவாகின. கோவிட்-19 வந்த பிறகு, மருந்துகளுக்காக நம் மக்கள் செலவழித்த தொகையைப் பார்த்தபின், பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய களத்தில் இறங்கியுள்ளன. கடந்த வாரத்தில் அமேசான் தன்னுடைய பார்மசிப் பிரிவை பெங்களூரில் தொடங்கியிருக்கிறது. பெங்களூரில் அடையும் வெற்றியைப் பொறுத்து மற்ற நகரங்களில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வரும் முடிவில் இருக்கிறது. அமேசான் நிறுவனத்துக்கு ஏற்கெனவே லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க் இருப்பதால், பார்மா தொடர்பான பொருள்களை வாடிக்கையாளர்களின் கையில் கொண்டுபோய் சேர்ப்பது பெரிய பிரச்னையாக இருக்காது.
ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் இது போன்ற ஏதேனும் ஒரு நிறுவனத்தைக் கையகப்படுத்துவதன் மூலமே உடனடியாகப் பெரிய அளவிலான சேவையைத் தொடங்க முடியும். அதற்கான முதல் முயற்சியாக சென்னையைச் சேர்ந்த நெட்மெட்ஸ் நிறுவனத்தைத் தற்போது கையகப் படுத்தியிருக்கிறது.
ஆன்லைன் பார்மசி
நம் நாட்டின் ஒட்டுமொத்த மருந்து விற்பனையில் ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனை வெறும் 2% என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. இருந்தாலும் கோவிட் சிக்கலுக்கு முன் இருந்த விற்பனையைவிட கணிசமான அளவுக்கு தற்போது ஆன்லைன் மூலமான விற்பனை உயர்ந்துள்ளது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றே பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போது கிடைக்கும் புள்ளி விவரங்கள்படி, 43 லட்சம் வீடுகளில் ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை வருகிற 2025-ம் ஆண்டு 6 கோடி வீடுகளாக உயரும் என ஆன்லைன் பார்மசி நிறுவனங்கள் கணித்துள்ளன. இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 36 கோடி டாலராக இருக்கும் இதன் வணிகம், 2023-ம் ஆண்டு 270 கோடி டாலராக உயரும் என எர்னஸ்ட் அண்ட் யங் கணித்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளுக்கு 63% வளர்ச்சி இருக்கும் என்பது பலரையும் இந்தத் துறையின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
தனிநபர் வருமானம் உயர்ந்துவருவது, ஸ்மார்ட்போன்களின் வருகை, எளிதாக ஆர்டர் செய்ய முடிவது உள்ளிட்ட காரணங்களால் இந்தச் சந்தை வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட முக்கியமான காரணம், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நீண்டகாலம் இருக்கும் நோய்களின் பாதிப்பு அதிக நபர்களுக்கு வரும் வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போது 2 சத விகிதமாக இருக்கும் ஆன்லைன் பார்மசி வணிகம், அடுத்த பத்தாண்டுகளில் 15 முதல் 20 சதவிகிதமாக வளரும் எனச் சொல்லப் படுகிறது.
ஏன் நெட்மெட்ஸ்?
ஆன்லைன் பார்மசி சேவையில் இருக்கும் பல சிறிய நிறுவனங்கள் இந்தியா முழுக்க உண்டு. என்றாலும், சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் நெட்மெட்ஸ் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது ரிலையன்ஸ். இந்த நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் தத்தா (Pradeep Dadha). இவரது குடும்பம் 1914-ம் ஆண்டு முதல் மருந்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தத்தா பார்மசூட்டிகல்ஸ் என்னும் பெயரில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை 1972-ம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கியது. இந்த நிறுவனத்தை 1996-ம் ஆண்டு சன் பார்மா கையகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கான மொத்த விற்பனையாளராக இந்த நிறுவனம் மாறியது.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிரதீப், லயோலா கல்லூரியில் படித்தார். படிப்பை முடித்த அவர், ரிலையன்ஸ் இன்போகாம் உள்ளிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றி விட்டு, தன்னுடைய குடும்பத் தொழிலுக்கு வந்தார்.
பார்மா துறையில் உள்ள அனுபவம் மற்றும் வளர்ந்துவரும் இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி ஆகிய காரணங்களால் நெட்மெட்ஸ் நிறுவனத்தை பிரதீப் தொடங்கினார். ஐந்தாண்டுகளில் 670 நகரங்களில் உள்ள 57 லட்சம் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கும் நிறுவனமாக நெட்மெட்ஸ் உயர்ந்தது. மருந்துகளை ஆன்லைனில் வாங்குவதற்கான இந்த நிறுவனத்தின் செயலியானது இதுவரை 50 லட்சம் போன்களில் டவுன்லோடு செய்யப் பட்டுள்ளன. ஆன்லைன் பார்மசித் துறையில் இந்த நிறுவனம் மட்டுமே 30% சந்தையை வைத்திருக்கிறது.
சிஸ்டெமா ஆசிய ஃபண்ட் உள்ளிட்ட சில வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் நெட்மெட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன. இருந்தாலும் கடந்த ஓர் ஆண்டாகப் பெரிய அளவிலான நிதியைத் திரட்ட முடியாததால் விற்பனையாளர்களைத் தேடிக்கொண்டிருந்தது நெட்மெட்ஸ். கோவிட் சூழலில் மற்ற தொழில்களுக்குச் சிக்கல் இருந்தாலும் அத்தியாவசியப் பிரிவில் இருந்ததால், மருந்து விற்பனை செய்யத் தடை செய்யப்படவில்லை. தவிர, மக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்ததால், ஆன்லைன் மூலம் மருந்து வாங்குவது உயர்ந்துள்ளது. இந்த லாக்டெளன் காரணமாக நல்ல சந்தை மதிப்பில் நிறுவனம் விற்கப்பட்டதாகவே சந்தை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ரிலையன்ஸுக்கு என்ன சாதகம்?
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோஹெல்த்ஹப் என்னும் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன்மூலம் மருத்துவப் பரிசோதனை, ஃபிட்னஸ் டிராக்கிங், ஆய்வகச் சோதனை, மருத்துவ ஆலோசனை உள்ளிட்டவற்றைச் செய்ய முடியும். மேலே சொன்னவற்றைவிட மருந்து விற்பனைமூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால், இதுவரை மருந்து விற்பனை செய்யும் வசதி இல்லை. நெட்மெட்ஸை வாங்கியதன் மூலம் மருந்து விற்பனையிலும் உடனடியாக ரிலையன்ஸ் கவனம் செலுத்த முடியும்.
அமேசான் ஆன்லைன் பார்மசி தொடங்கியுள்ள நிலையில், ஃப்ளிப்கார்ட்டும் இந்தச் சந்தையில் களம் இறங்குவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சந்தையில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இதற்கென பிரத்யேகமான விதிமுறைகள் இல்லை. 2016-ம் ஆண்டு முதல் இதற்கான விதிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகள் இருந்தாலும் தெளிவான விதிமுறைகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், ஆன்லைன் பார்மசி நிறுவனங்கள் மீது வழக்கமான ரீடெயில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன.
பார்மா துறை பங்குகள் உயர்ந்துவரும் இந்தச் சூழலில் ஆன்லைன் பார்மசிப் பிரிவும் பரபரப்பாகவே இயங்குகிறது.
—
இணையும் நிறுவனங்கள்..!
பார்ம் ஈஸி மற்றும் மெட்லைஃப் ஆகிய நிறுவனங்கள் இணைய இருக்கின்றன. மெட்லைஃப் நிறுவனம் 100% பார்ம் ஈஸி நிறுவனத்துடன் இணையும். ஒருங்கிணைந்த நிறுவனத்தில் 19.59% பங்கு மெட்லைஃப் நிறுவனத்துக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது. ஒருங்கிணைந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 120 கோடி டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைப்புக்காக ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றன.
நன்றி நாணயம் விகடன்
Recent Comments