காக்னிஸன்ட் (Cognizant) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த ராம்குமார் ராமமூர்த்தி, அந்த நிறுவனத்திலிருந்து கடந்த 17-ம் தேதி விலகியதில் பலருக்கும் ஆச்சர்யம்.

சுமார் 22 ஆண்டுகள் நிறுவனத்தில் பல முக்கியப் பொறுப்புகள் வகித்த அவர், நாணயம் விகடனுக்கு அளித்த பேட்டி இங்கே…

காக்னிஸன்ட் நிறுவனத்தில் நீங்கள் எப்போது சேர்ந்தீர்கள்?

‘‘நான் பிறந்தது கும்பகோணம் என்றாலும் சென்னையில்தான் படித்து வளர்ந்தேன். ஜர்னலிசம் படித்தேன். ஆரம்பகட்டத்தில் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினேன். சில காலம் கல்லூரி முதல்வராகவும் இருந்தேன். ஐ.டி நிறுவனங்கள் வளர்ந்துவந்த காலம் அது. தகவல் தொடர்புக்கான நபர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், டி.சி.எஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். அங்கு இரண்டரை ஆண்டுகள் வேலை செய்தேன். அதன் பிறகு காக்னிஸன்ட் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 98-ம் ஆண்டு தொடக்கத்தில் சேர்ந்தேன். அப்போது காக்னிஸன்ட் தொடங்கி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தது.’’

டி.சி.எஸ் என்ற பெரிய நிறுவனத்திலிருந்து காக்னிஸன்ட் என்ற சிறிய நிறுவனத்துக்கு ஏன் மாறினீர்கள்?

‘‘அப்போது காக்னிஸன்ட்டில் சுமார் 1,000 பேர் மட்டுமே இருந்தார்கள். (இப்போது 2,00,000 பேர்) அமெரிக்காவைச் சேர்ந்த `டுன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட்’ (Dun and Bradstreet) நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவாக இந்தியாவில் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. அப்போது நிறுவனத்தின் முன்னோடிகளில் ஒருவரான லஷ்மி நாராயணன் என்னிடம் சொன்னார்… ‘‘டுன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட்-ல் பணிபுரிந்த நான்கு பேர் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்கிறார்கள். நீங்கள் திறமையாகச் செயல்பட்டால் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் உயர முடியும்.’’ நான் இந்தியப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது லஷ்மி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது. காக்னிஸன்ட் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், ஊடகம், தொழில் அமைப்புகள், சர்வதேசத் தலைவர்களின் சந்திப்பு எனக் கடந்த 20 ஆண்டுகளில் பல வாய்ப்புகள் கிடைத்தன. எனது செயல்பாட்டைப் பார்த்து, பல நிறுவனங்களிலிருந்து எனக்குப் பல வாய்ப்புகள் வந்தன. எந்த வாய்ப்பையும் நான் பரிசீலனைகூடச் செய்யவில்லை.’’

காக்னிஸன்ட்டில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

‘‘பல விஷயங்கள் இருக்கின்றன. முதலாவது, காக்னிஸன்ட்டில் என்ன முக்கிய முடிவு எடுத்தாலும், அது வாடிக்கையாளர் நலன் சார்ந்தே இருக்கும். ஒரு முடிவால் வாடிக்கையாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை உறுதி செய்த பிறகே அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்.

இரண்டாவது, உலகளாவிய சிந்தனை (Think Big and Think Global). இந்தச் சிந்தனை இருப்பதால்தான் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் சர்வதேச அளவில் முக்கியப் பங்குவகிக்கிறது.

மூன்றாவதாக, எங்களைவிட திறமைசாலிகளைத் தேர்ந்தெடுப்பது. தகவல் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, மனிதர்கள்தான் முக்கியமான முதலீடு. திறமைசாலிகள் சுற்றி இருக்கும்போது பல அதிசயங்கள் நிகழும்.

நான்காவதாக, நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம். காக்னிஸன்ட் 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியது. `அடுத்த ஒரு பில்லியன் டாலரை ஈட்ட எவ்வளவு காலம் ஆகும்?’ என்று லஷ்மி கேட்டார். அப்போது ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொன்னோம். ‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடுத்த ஒரு பில்லியன் டாலரை ஈட்டத் தேவையான திட்டங்களை உருவாக்க வேண்டும்’ என அவர் கூறினார். அதெல்லாம் நடக்காது என நினைத்தோம். ஆனால், 18 மாதங்களில் அந்த இலக்கை அடைந்தோம். இதைத் தொடர்ந்து 2009 முதல் 2017-ம் ஆண்டு வரை கூடுதலாக ஒரு பில்லியன் டாலர் வருமானம் என்னும் இலக்கை அடைந்தோம்.’’

உங்களுக்கு இப்போது 53 வயதுதான். ஏன் இந்த திடீர் ராஜினாமா?

‘‘டெக்னாலஜி துறைக்கு வருவதற்கு முன்னர் ஆசிரியராக இருந்தேன். அதனால், `50 வயதுக்குப் பிறகு மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். 50 வயதைத் தொட்ட பிறகு அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி டிசோசாவிடம் இது குறித்துப் பேசினேன். அப்போது முக்கிய உயரதிகாரிகளான லஷ்மி மற்றும் சந்திரா ஆகியோர் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றார்கள். அதனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பதற்காகச் செயல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி பிரையன் ஹம்ப்ரீஸ் (Brian Humphries) பொறுப்பேற்றார். இந்தியப் பிரிவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதால், அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

இந்த நேரத்தில், தமிழக கவர்னர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஒரு சந்திப்பு நடத்தினார். ஊட்டியிலுள்ள ராஜ்பவனில் நடந்த இந்தக் கூட்டத்தில் நான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினேன். அப்போது பல துணைவேந்தர்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில்தான் கல்வித்துறையில் மீண்டும் நுழைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதைத் தொடர்ந்து கல்வித்துறைத் தலைவர்கள் பலருடன் பேசியதன் விளைவாக, கல்வித்துறையில் மீண்டும் செயல்பட முடிவு செய்துள்ளேன். தவிர, காக்னிஸன்ட்டில் அடுத்தகட்டமாகப் பல தலைவர்கள் இருப்பதால், நான் விலகினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. இருந்தாலும் காக்னிஸன்ட் அறக்கட்டளையின் இயக்குநர்குழுவில் தொடர்கிறேன்.’’

அடுத்து என்ன செய்யத் திட்டம்?

‘‘25 ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்தேன் என்பதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தத் திட்டமும் கிடையாது. கல்விப்பணியில் ஏதேனும் ஒருவகையில் ஈடுபடப் போகிறேன். பல வாய்ப்புகள் இருக்கின்றன. எதையும் இன்னும் இறுதி செய்யவில்லை.

‘‘இனி நான் ஒரு ஆசிரியர்,
ஆலோசகர்..!’’ - ‘காக்னிஸன்ட்’ ராம்குமார்

அதேபோல, சிறிய நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கலாம் என நினைக்கிறேன். இதன் மூலம் சிறிய நிறுவனங்களை வளர்ச்சியடைய வைக்கலாம் என நினைக்கிறேன். இப்போதிருந்தே பல அழைப்புகள் வருகின்றன. ஆனால், எந்த முடிவையும் எடுக்கவில்லை.’’

தற்போது `வீட்டிலிருந்து வேலை’ (Work From Home) என்பது ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. இது சரியான வேலை முறையா?

‘‘அலுவலகத்துக்கு வெளியே வேலை செய்ய முடியும் என்பதை கோவிட்-19 சாத்தியப்படுத்தியுள்ளது. வரும் காலத்தில் இது அதிகமாகும் என்றாலும், எவ்வளவு சதவிகிதம் என்பதைச் சொல்ல முடியாது. `வீட்டிலிருந்து வேலை’ என்பதை, `அலுவலகத்துக்கு வெளியேயிருந்து வேலை’ என நான் பார்க்கிறேன். இதில் பல மாடல்கள் உருவாகலாம். உதாரணமாக, ஒரு அபார்ட்மென்ட்டில் ஜிம், பார்க், நடைபாதை இடம் என்பதுபோல வேலை செய்வதற்கான பொது இடத்தையும் உருவாக்கலாம். பொது நூலகங்கள்போல, பொது வேலையிடங்களை அரசு உருவாக்கலாம். இதுபோல, இதில் பல மாடல்கள் உருவாகலாம்.

இன்னும் எந்த வகையான மாற்றங்கள் நடக்கும் என்பதை இப்போதைக்குக் கணிக்க முடியாது.’’

`கடந்த காலங்களில் ஐ.டி துறையில் இருந்த வளர்ச்சி இனி இருக்காது’ என்னும் கருத்து இருக்கிறதே?

‘‘இந்த கருத்தை நான் ஏற்க மாட்டேன். டிஜிட்டல், ஐ.ஓ.டி., கிளவுடு எனப் பல மாற்றங்கள் நடந்துள்ளன. இதுவரை மனிதனும் மனிதனும் பேசிக்கொண்டிருக்கும் டேட்டாக்கள்தான் கம்யூட்டரில் உள்ளன. இப்போது மெஷின்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், உருவாகும் டேட்டாவின் அளவு மிக அதிகமாக இருக்கும். அவற்றைக் கையாள்வதற்கான தேவையும் பெரிதாக உருவாகும். எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த வாய்ப்பை கைப்பற்றப் போகின்றன என்பது தெரியாது. ஆனால், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

‘‘இனி நான் ஒரு ஆசிரியர்,
ஆலோசகர்..!’’ - ‘காக்னிஸன்ட்’ ராம்குமார்

300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவும் சீனாவும் சர்வதேச ஜி.டி.பி-யில் பெரிய பங்கு வகித்தன. ஆனால், இந்தியாவின் பங்கு தொடர்ந்து சரிந்துவந்தது. தற்போது தகவல் தொழில்நுட்பம், திறமையான பணியாளர்கள் இருப்பதால் சர்வதேச ஜி.டி.பி-யில் இந்தியாவின் பங்களிப்பு உயரும் காலம் உருவாகும்.’’

நன்றி : நாணயம் விகடன்