முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்கு என பல ஏஞ்சல் முதலீட்டாளர்கள், விசி நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். சில நிறுவனங்கள் டிஜிட்டல் சார்ந்த ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வார்கள். சில நிறுவனங்கள் டீப் டெக்னாலஜி’ என்று சொல்லக்கூடிய மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டப் பிரிவில் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். ‘எப்எம்சிஜி துறையில் செயல்படும் நிறுவனங்களில் மட்டும் சில ஏஞ்சல் நிறுவனங்கள் முதலீடு செய்யும்.
அதாவது ஒவ்வொரு முதலீட்டு நிறுவனம் குறிப்பிட்ட துறைச் சார்ந்தே முதலீடுகளைச் செய்யும். இதில் ‘நேட்டிவ்லீட் ஏஞ்சல் நெட்வொர்க்’ கொஞ்சம் வித்தியாசமானது. இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள தொழில்முனைவோர்கள் தொடங்கியுள்ள நிறுவனங்களில் மட்டும் இந்த ஏஞ்சல் அமைப்பு முதலீடு செய்கிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவரான சிவராஜா ராமனாதன், 2000-ம் ஆண்டுகளில் தொடக்கத்தில் மதுரையில் ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார். மதுரையில் செயல்படும் நிறுவனம் என்பதாலே முதலீடு கிடைப்பது சவாலாக இருந்தது. இந்த சிக்கல் இனி சிறு நகரங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக நண்பர்களுடன் இணைந்து இந்த ஏஞ்சல் நெட்வொர்க்கை தொடங்கி இருக்கிறார்.
இதுவரை 10 நிறுவனங்களில் ஏஞ்சல் முதலீடு செய்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் சிறு நகரங்களில் இருந்து சுமார் 1,000 நிறுவனங்களை (’ஆயிரம் பூக்கள் மலரட்டும்) வளர்தெடுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். அதன் தொடக்கமாக, “ஒரு நாள் – ஒரு மேடை – ஒரு கோடி” என்னும் புதிய முயற்சி. இது ஸ்டார்ட்-அப்’கள் நிதி உதவி பெறுவதற்கான ஒரு மேடை. இதற்கான நிகழ்ச்சி வரும் மார்ச் 14-ம் தேதி சென்னையில் மாபெரும் விழாவாக நடக்க உள்ளது. இந்த இறுதி நிகழ்விற்கு முன் நிதி உதவி பெற த்தகுதியான சுமார் 100 நிறுவனங்கள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பின்னர் அதில் இருந்து 10 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு கோடி ரூபாய் முதலீட்டை வழங்க நேட்டிவ் ஏஞ்சல்ஸ் திட்டமிட்டிருக்கிறது.
தேடல்
முதலீடு செய்வதற்கு நேட்டிவ் ஏஞ்சல்ஸ் தயார். ஆனால் முதலீட்டுக்கான நிறுவனங்கள்? இவற்றை தேர்வு செய்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களைய ‘தேடல்’ என்னும் நிகழ்வினை 10க்கும் மேற்பட்ட தமிழக நகரங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பெரு நகரங்களில் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, ஏஞ்சல் முதலீடு குறித்தும், அவை எப்படி செயல்படும் என்பது குறித்தும் புரிதல் நன்றாக இருக்கும். ஆனால் சிறு நகரங்களில் இருப்பவர்கள் தொழில் செய்துகொண்டிருப்பார்கள். அதில் ஓரளவுக்கு வருவாயும் இருக்கும். அந்த வருமானத்தை பெருக்குவதற்கு நிதி மற்றும் ஆலோசனை தேவைப்படும். பெரும்பாலும் தொழிலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான புரிதல் இல்லாததால் இருக்கும் வாய்ப்புகளை மட்டுமே சிறு நகரங்களில் உள்ள தொழில்முனைவோர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இவர்களை அடுத்துக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கும், ஏஞ்சல் முதலீடு குறித்த புரிதலை உருவாக்குவதற்கும் தேடல் என்னும் நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட சிறு நகரங்களில் நடத்தபடுகிறது. இதன் மூலம் கண்டறியப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி வகுப்பு இதுவரை மூன்று இடங்களில் முடிந்துள்ளது. மார்ச் 14ம் தேதிக்குள் சென்னை, வேலூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களிலும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது
இந்தப் பயிற்சி வகுப்பில், தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வழிகள், நிறுவனத்துக்கான மதிப்பைக் கணக்கிடுதல், கிடைக்கும் நிதியை எப்படி பயன்படுத்துவது, முதலீட்டாளர்களுடன் எப்படி உரையாடுவது என்பது குறித்த பயிற்சி வழங்கப்படும், நேடிவ்லீட் நிறுவனர் சிவராஜா தெரிவித்தார்.
‘கலிபோர்னியா போல’
அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் ஐந்தில் ஒரு பங்கு வருமானத்தை கலிபோர்னியா மூலம் மட்டுமே கிடைக்கிறது. இதற்குக் காரணம் அங்குள்ள ஸ்டார்ட் அப் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள்தான். அதுபோல தமிழகமும் இருக்க வேண்டும் என்றால் தொழில்முனைவு அதிகமாக இருக்க வேண்டும். இங்கு தொடங்கப்படும் தொழில்களும் விரிவடைய வேண்டும். இதற்காக எங்களால் முடிந்த இலக்கு ஆண்டுக்கு 100 தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிதி வழங்கி, அவர்களின் விரிவாக்கத்துக்கு தேவையானவற்றை செய்வதுதான், என்கிறார்.
தேடல் நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர்கள், 14-ம் தேதி நடக்கும் நிகழ்வில் முதலீட்டாளர்களுடன் நேரடியாக உரையாடுவார்கள். இதில் 10 தொழில்முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்றே நிதிக்கான உத்தரவாதம் வழங்கப்படும். ஒரு தொழிலுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்படும். நீங்கள் கொடுக்கும் தொகை போதுமானதாக இருக்குமா என்னும் கேள்வி எழுவது இயற்கையே. இந்த நிகழ்ச்சி மூலம் நாங்கள் வழங்கும் நிதி என்பது முதல் கட்ட நிதியாக இருக்கும். அதன் பிறகு அடுத்தகட்ட முதலீடுகளை நேட்டிவ்லீட் தொடர்ந்து வழங்கும் என சிவராஜா கூறினார்.
சென்னை கனெக்ட்
சென்னையை தவிர்த்து சிறு நகரங்களில் நேட்டிவ்லீட் சாப்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவுகள் மூலம் தொழில்முனைவோர்களைக் கண்டறியலாம். ஆனால் முதலீட்டாளர்களைக் கண்டறிவது கடினம். காரணம், சிறு நகரங்களில் ஓரளவுக்கு வெற்றியடைந்த உடன் தலைநகருக்கு இடம்பெயருகிறார்கள் அல்லது சென்னையில் இருக்கும் முக்கியமான தொழில்முனைவோர்கள் சிறு நகரங்களில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள்.
அதனால் முதலீட்டாளர்களை ஒருங்கிணைப்பதற்காக ‘சென்னை கனெக்ட்’ என்னும் பிரிவு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் சிறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த் தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள். இவர்களால்தான் சிறு நகரங்களில் உள்ள தொழில்முனைவோர்களின் சவாலை புரிந்துகொள்ள முடியும். சென்னை அல்லது பெங்களூருவில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு நிதி மட்டுமே பிரச்சினையாக இருக்கும். நிதி கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் வேகமாக அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள். ஆனால் சிறு நகரங்களில் தொழில் தொடங்குவோருக்கு ஆலோசனை தேவைப்படும். இந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை அங்கிருந்து தொழில் தொடங்கி வளர்ச்சியடைந்த ஒருவரால்தான் கொடுக்க முடியும் என சென்னை கனெக்ட் பிரிவின் துணைத் தலைவர் சிவகுமார் சடையப்பன் தெரிவித்தார்.
இப்போதைக்கு 25 உறுப்பினர்கள் இதில் உள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்த இருக்கிறோம். சென்னையில் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்கள் இதில் இணைவதன் மூலம் சிறு நகரங்களில் உள்ளவர்களுக்கு நிதி அல்லது ஆலோசனை வழங்க முடியும் என சிவகுமார் கூறினார். தமிழகம் முழுவதும் நடந்த தேடலில் பல நிறுவனங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்த நிகழ்ச்சியில் முதலீட்டாளர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் முதலீடு என்று நாங்கள் கூறியிருந்தாலும் இதை தாண்டியும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள் என்று நம்புவதாக சிவராஜா கூறினார். எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்பது மார்ச் 14-ம் தேதி தெரியும்.
நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்
Recent Comments