சந்தையில் புதுப்புது வாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும். இதில் எந்த வாய்ப்பு சிறந்தது என்பதை கணிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி கணிப்பவர்கள் வெற்றி அடைகிறார்கள். அதில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த சி.ஆர்.வெங்கடேஷ். டாட்காம் இன்ஃபோவே (Dotcom Infoway), மேக்ஸ்டர் (Magster), கலாட்டா டாட் காம் (Galatta.com) உள்ளிட்ட நிறுவனங்களை நிறுவிய தொடர் தொழில்முனைவர் வெங்கடேஷ். தற்போது கலாட்டா நிறுவனத்தை ‘ரிட்ஸ்’ (ritz magazine) குழுமத்துக்கு விற்றுவிட்டார். மேக்ஸ்டர் நிறுவனத்தை இவரது நண்பர்கள் நடத்துகின்றனர். இதில் முதலீட்டாளராக தொடர்கிறார். தற்போது டாட் காம் இன்ஃபோவே நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

டெக்னாலஜி நிறுவனங்கள் என்றாலே சென்னை அல்லது பெங்களூருவில் செயல்படும் என்பது பொதுவான பிம்பம் உருவாகும் சூழலில் மதுரையில் இவரது நிறுவனம் செயல்பட்டு வருகிறது சிறப்பு. சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தவரிடம் உரையாடினேன். தொழில் தொடங்கியது முதல் தற்போதைய சூழல் வரை பேசினார். அதன் சுருக்கமான வடிவம் இதோ.

சொந்த ஊர் மதுரை. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்) படித்தேன். 90களின் இறுதியில் மதுரையில் இணையம் இல்லை. ஆனால் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இண்டெர்நெட் வரத்தொடங்கி இருந்தது. அதனால் மதுரைக்கும் விரைவில் இணையம் வரும் என்பதால் அதன் சார்ந்த தொழில் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தேன். அப்பா சொந்தமான ஸ்பின்னிங் மில் வைத்திருந்தார். அதனால் படித்து முடித்து சில ஆண்டுகள் அவர் நிறுவனத்தில் வேலை செய்தேன். 2000ம் ஆண்டு இணைய நிறுவனத்தைத் தொடங்கினோம். நிறுவனங்களுக்குத் தேவையான இணையதளத்தை உருவாக்கலாம் என திட்டமிட்டோம். இந்தியாவில் இணையமே இல்லாத சூழலில் இந்திய நிறுவனங்கள் எங்களின் இலக்காக இல்லை. அதனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இணையதளம் வடிவமைத்துக் கொடுக்கத் தொடங்கினோம், என்றார்.

வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கொடைக்கானலில் ஒரு ஓட்டல் திறந்திருந்தார். அவருக்காக நாங்கள் வடிவமைத்த இணையதளம் தான் எங்களுடைய முதல் ஆர்டர். ஐந்து பக்கம் இருக்கக் கூடிய static website சுமார் 2.5 லட்ச ரூபாய்க்கு வடிவமைத்து கொடுத்தோம். இதனைத் தொடர்ந்து தொழில்நுட்பம் வளர்வதற்கு ஏற்ப, நாங்கள் வழங்கும் சேவைகளும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வந்தோம். இணையதளம், எஸ்சிஓ, டிஜிட்டல் மார்கெட்டிங், ஆப்ஸ் வடிவமைத்தல் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கிவருகிறோம். இதற்கிடையே இணையதளதால் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை உணர்ந்தோம். இந்தியாவில் சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு ஆகியவை பிரதான இடம்பிடிக்கின்றன. அதனால் சினிமா தொடர்பான செய்திகளுக்கான தளம் உருவாக்க வேண்டும் என்பதற்காக ‘கலாட்டா டாட் காம்’ தளத்தை தொடங்கினோம். “நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. 2017ம் ஆண்டு ரிட்ஸ் நிறுவனத்துக்கு கலாட்டாவை விற்றுவிட்டோம். ஆனால் எவ்வளவுக்கு விற்றோம் என்பதை கூற இயலாது என்றவர் அடுத்தகட்டம் குறித்து சொல்லத்தொடங்கினார்.”

மேக்ஸ்டர் (Magzter)

நானும் என்னுடைய நண்பர் கிரிஷும் இணைந்து டாட் காம் இன்போவே நிறுவனத்தை நடத்தி வந்தோம். அப்போது கிரிஷின் நண்பர் விஜய் கிட்டத்தட்ட எங்களைப் போன்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அதனால் அந்த நிறுவனத்தை வாங்கினோம். நாங்கள் கையகப்படுத்திய சமயத்தில் ஆப் (செயலி) பிரபலமாகத் தொடங்கியது. அதனால் பல நிறுவனங்களுக்கு ஆப் வடிவமைக்கத் தொடங்கினோம். அப்போது பத்திரிகைகளை படிப்பதற்காக ஆப் வடிவில் கொண்டுவந்தால் என்ன என்னும் யோசனை தோன்றவவே ‘மேக்ஸ்டர்’ என்னும் ஆப் வடிவமைத்தோம்.

ஆரம்பத்தில் பத்திரிகை நிறுவனங்களைச் சென்றடைய சிரமமாக இருந்தாலும் மெல்ல மெல்ல புதுப்புது பத்திரிகைகள் எங்களுடன் இணைந்தார்கள். அதனால் அந்த நிறுவனத்தை (ஆப்) தனியாக பிரித்து நடத்த முடிவெடுத்தோம். அதற்கென பிரத்யேகமான நிதித் திரட்டினோம். நான் டாட் காம் இன்ஃபோ நிறுவனத்தை மட்டும் நடத்தினேன். இதுவரை சுமார் 800 நிறுவனங்களுக்கு ஆப்  வடிவமைத்து கொடுத்திருப்போம். சர்வதேச அளவில் பல முக்கியமான நிறுவனங்கள் எங்களது வாடிக்கையாளர்காக இருக்கிறார்கள், என்று பகிர்ந்தார் வெங்கடேஷ். தற்போதைய சூழலில் ஆப் மூலமே அனைத்தும் நடக்கிறது என்றாலும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஆப் தேவையில்லை. குறைந்த செலவில் ஆப் உருவாக்க முடியும் என்பதற்காக பல நிறுவனங்களும் அதை உருவாக்குகிறார்கள். இணையம் என்பது பொதுவில் இருக்கும். ஆனால் ஆப் நம்முடைய போனில் இருக்கக்கூடியது. அதனால் அனைத்து நிறுவனங்களுக்கும் ஆப் தேவையில்லை. ஆனால் அனைத்து நிறுவனங்களுக்கும் இணையம் தேவை என தன்னுடைய ஆலோசனையையும் வழங்கினார்.

அடுத்தகட்டமாக கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான தீர்வுகளை வழங்க இருக்கிறோம். பள்ளி நிர்வாகம், மாணவர்களின் திறன் மேம்பாடு, ஆசிரியர் பெற்றோர் தொடர்பு என அனைத்தையும் மேம்படுத்துவதற்கு ஏற்ப தீர்வுகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. தற்போது ஐந்து பள்ளிகள் எங்களது சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள். மேலும் அதிக பள்ளிகளை இணைக்கும் நடவடிக்கையில் இருக்கிறோம், என தனது அடுத்தக்கட்ட தொழில் முனைவு பற்றியும் சொன்னார்.

மதுரை பலம்

மதுரையில் இருந்து தொழில்நுட்ப நிறுவனத்தை எப்படி நடத்த முடியம் என்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது. மதுரையில் இருப்பதால் குறைந்த செலவில் ஊழியர்கள் கிடைக்கிறார்களா அல்லது தரமான நபர்கள் கிடைக்கிறார்களா என்பது பொதுவான கேள்வியாக இருக்கிறது. மதுரையைச் சுற்றி பல முக்கியமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தரமான மாணவர்கள் இருக்கிறார்கள். அதனால் ஊழியர்களின் தரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. தற்போது மதுரை அலுவலகத்தில் 120 நபர்கள் பணிபுரிகிறார்கள். அதே சமயத்தில் மதுரையில் இருப்பதால் குறைவான சம்பளம் கொடுத்தால்போதும் என்பது தவறான வாதம். லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களும் எங்களிடம் இருக்கிறார்கள், என்றார்.

முதலீடு

நிறுவனத்தை வளர்ப்பது மட்டுமல்லாமல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதை முக்கியம் என கருதுகிறேன். அதனால் இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் மற்றும் நேட்டிவ் ஏஞ்சல் நெட்வொர்க் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறேன். இதுவரை மூன்று ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்திருக்கிறேன். ஆனால் ஒரு நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. மற்ற இரண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, என்றார். இப்போதைக்கு எங்களது நிறுவனம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது. அடுத்த இரு நிதி ஆண்டுகளுக்குள் 2.5 மில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்ட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம் என வெங்கடேஷ் கூறினார். இணையம் தொடங்கிய காலத்திலேயே அதிலுள்ள தொழில் வாய்ப்பை புரிந்து களத்தில் இறங்கிய வெங்கடேஷ், அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தியதால் இன்றளவும் அந்நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது இவருடனான உரையாடலில் இருந்து புரிகிறது. இணையத்தின் தொடக்கக் காலம், தற்போதைய ஆப்’களின் ஊடுறுவல் என கடந்த 20 ஆண்டுகளில் நடந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இவரின் தொழில்நுட்ப பிசினசுக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்