கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி வருமா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில் தடுப்பூசியின் சோதனை முடிந்து, அவசரகால ஒப்புதல் வழங்கப் பட்டுவிட்டது. கடந்த வாரத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனிகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தத் தடுப்பூசியை இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் உற்பத்தி செய்திருக்கிறது.

கோவாக்சின் என்னும் தடுப்பூசி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் உதவியுடன் (ஐ.சி.எம்.ஆர்) பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த இரு தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இதில் தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. கோவிஷீல்டு நிறுவனம் 70% அளவுக்கு பாதுகாப் பானது எனச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இதன் பாதுகாப்பு குறைவு என்றாலும் விதிமுறைகளின் படி இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கமுடியும். 70 சதவிகிதத் திறன் என்பது பொதுமக்களின் பயன் பாட்டுக்குப் போதுமானது என்பதால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், பாரத் பயோக்டெக் நிறுவனத்தின் கோவாக்சின் நிறுவனத்தின் மூன்றாம் கட்ட சோதனை தற்போது நடந்துவருகிறது. மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கும்போதே மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது அனைவரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது.

கோவாக்சினுக்கு அனுமதி கொடுத்தது அவசரமான முடிவு மட்டுமல்ல, ஆபத்தான முடிவும் கூட என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் மருத்துவத் துறை வல்லுநரான டாக்டர் ககன்தீப் காங் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார். அரசின் இந்த முடிவு குழப்பமாக இருக்கிறது, இதுவரை இதுபோன்ற முடிவை சர்வதேச அளவில் பார்த்ததில்லை எனக் கூறியிருக்கிறார் அவர்.

மார்ச் மாதத்தில் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா அறிவித்திருக்கிறார்.

சோதனை முடிவுக்கு வராத சூழலில் இந்த நிறுவனத்துக்கு ஏன் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்னும் கேள்விக்கு பதில் இல்லை. ஒருவேளை மாடர்னா அல்லது பைசர் அளவுக்கு திறன் இருக்கலாம். ஆனால், இதுவரையிலும் டேட்டா எதுவும் இல்லாத சூழலில் வழங்கப்பட்ட அனுமதி சர்ச்சையாகி யிருக்கிறது.

இந்த நிலையில் ஜிஃபோ ஆர் அண்ட் டி சொல்யூஷன்ஸ் நிறுவனத் தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜ்பிரகாஷிடம் தடுப்பூசி மற்றும் பொருளாதாரம் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

ராஜ்பிரகாஷ்

ராஜ்பிரகாஷ்

மத்திய அரசு இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. எந்தத் தடுப்பூசியை நாம் தேர்ந்தெடுக்கலாம்?

“இப்போதைக்கு பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்காது என்றே கணிக்கிறேன். அரசாங்கத்தின் திட்டம் மூலம் முதலில் விநியோகம் செய்யப்படும் என்பதால் எந்த மருந்து நிறுவனம் என்பது மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

உதாரணத்துக்கு, பொது சுகாதார திட்டத்தின் கீழ் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஆனால், எந்த நிறுவனம் என்பது நமக்குத் தெரியாது. அதேபோல அரசு மூலமாகவே இங்கு விநியோகம் இருக்கும். பொது சந்தைக்கு வந்த பிறகே, தடுப்பூசியை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.

தவிர, அரசாங்கத்துக்கு விலையாக 200 ரூபாயை சீரம் நிறுவனம் நிர்ணயம் செய்திருகிறது. அதனால் இந்தத் தொகை ஒப்பீட்டளவில் சிறிய தொகை என்பதால் அரசாங்கம் வழியாகத் தடுப்பூசி விநியோகம் இருக்கும்.”

தடுப்பூசி வந்துவிட்டாலும் மாஸ்க், சமூக இடைவெளி அவசியமா?

“ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுப் பரவும் சூழல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மற்றவர்களுக்காக மாஸ்க் அணிவது அவசியமாகும்.

அதற்காக இனி வரும் ஆண்டுகள் முழுவதும் மாஸ்க் அணிய வேண்டும் எனப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. பலருக்கும் தடுப்பூசி போட்டு சமூக அளவில் எதிர்ப்பு நிலை வரும் வரை மாஸ்க் தேவைப்படும்.”

தடுப்பூசி

தடுப்பூசி

இந்தத் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

“இதுவரையிலான ஆராய்ச்சி முடிவுகளில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. சாதாரண விளைவுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தடுப்பூசியால் மிகப்பெரிய எதிர்மறை பாதகங்கள் ஏதும் பதிவு செய்யப் படவில்லை.

ஆனால் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். உலகத்தில் சுமார் 800 கோடி நபர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளில் கோடியில் சிலருக்கு மயக்கம் வரலாம், தலைசுற்றல் ஏற்படலாம், காய்ச்சல் ஏற்படலாம், சில அசெளகர்யம் ஏற்படலாம். இந்த வாய்ப்புகள் அனைத்து கால கட்டத்திலும் ஏற்படும். தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு வேறு காரணத்தில்கூட இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

ஆனால், பாதிப்புகள் தடுப்பூசியால் ஏற்பட்டவையா அல்லது இயல்பானவையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.”

குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்தலாமா?

“இதுவரை நடந்த சோதனை களில் குழந்தைகள் மற்றும் கர்பிணிகளுக்கு தடுப்பூசி சோதனை செய்யப்படவில்லை என்பதால் இந்தத் தடுப்பூசி வேலை செய்யுமா செய்யாதா என்பதற்கான தகவல் ஏதும் இல்லை.

தவிர, குழந்தைகளுக்கு செலுத்தலாமா என்பதைவிட குழந்தைகளுக்குத் தேவையா எனப் பார்க்க வேண்டும். இதுவரை சர்வதேச அளவில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு கோவிட் எந்த சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. கோவிட் வந்தால் கூட சாதாரண காய்ச்சல், சளி ஏற்படுத்தும் பாதிப்பையே சர்வதேச அளவில் ஏற்படுத்தி யிருக்கிறது.”

உருமாறிய வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தடுப்பூசிகள் உருமாறிய வைரஸுக்கும் பொருந்துமா?

“மனித மரபணுவில் 320 கோடி நியூக்கிளியோலைட்கள் (Nucleotides) வரிசைமுறை உள்ளன. என்னைப் போன்ற வேறு ஆணுக்கும் இதே மாதிரிதான் இருக்கும். 99.99% எந்த பெரிய மாற்றமும் இருக்காது. சில சில வரிசை மாற்றங்கள் காரணமாகவே நான் நானாக இருக்கிறேன்.

ஆனால் கோவிட் வைரஸில் மொத்தம் 30,000 நியூக்கிளியோ லைட்கள் வரிசைமுறை உள்ளன. இந்த வரிசைமுறையில் மாற்றம் ஏற்பட்டால்கூட அது புதிய வேரியன்ட் என்றுதான் சொல்வோம். வைரஸில் மாற்றம் என்பது தற்போது முதல் முறையாக நடப்பது அல்ல. தவிர, அனைத்து மாற்றமும் ஆபத்தல்ல. இங்கிலாந்தில் ஒரு வேரியன்ட் வேகமாகப் பரவுவதால் நாம் பதற்றம் அடைகிறோம். வைரஸின் ஸ்பைக் புரோட்டீனில் மாற்றம் அடைந்திருப்பதால் வேகமாகப் பரவுவதாகக் கண்டறியப் பட்டிருக்கிறது. வைரஸ் மாற்றத்தால் பயமோ, பீதியோ அடையத் தேவையில்லை. ஆனால், எச்சரிகையாக இருப்பது அவசியம்.”

தடுப்பூசி பொருளாதாரத்தில் என்ன வகையான மாற்றத்தை ஏற்படுத்தும்?

“சில மாதங்களுக்கு முன் நிச்சயமற்ற சூழல் இருந்தது. காரணம் ஹெச்.ஐ.வி உள்ளிட்ட வைரஸ்களுக்கு தடுப்பூசி ஏதும் கிடையாது. ஒருவேளை தடுப்பூசி கண்டுபிடித்தால்கூட அது சரியாகப் பலன் அளிக்குமா என்னும் பல கேள்விகள் இருந்தன.

ஆனால், தற்போது தடுப்பூசிகள் வந்துவிட்டன, இந்த தடுப்பூசிகள் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் செய்கின்றன என்பதால் சாதகமான சூழல் உருவாகி இருக்கிறது.

தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் செப்டம்பர் மாதத்துக்குள் பெருமளவுக்கு பொதுமக்கள் பயன் பாட்டுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும்.

திட்டமிடலே தொழில்களுக்கு பிரதானம். நிச்சயமற்ற சூழல் இருப்பதால் திட்டமிடுவதில் சிக்கல் இருந்தது. ஆனால், தற்போது இரண்டாம் அரையாண்டுக்கு திட்டமிட நிறுவனங்கள் தொடங்கி விட்டன.

அதனால் நாள்கள் செல்லச் செல்ல தொழில்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். பெரிய பிரச்னைகளை நாம் கடந்துவிட்டோம் என்றே சொல்ல வேண்டும்.”

புதிய ஆண்டில் பொருளாதார வளர்ச்சி முன்னோக்கி இருக்கும் என நம்பிக்கையுடன் செயல்படுவோம்.