டாடா குழுமத்தில் ரத்தன் டாடாவுக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையே நடந்துவந்த மோதல் தற்போது க்ளைமாக்ஸைத் தொட்டிருக்கிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் தனக்கிருக்கும் பங்குகளை விற்றுவிட்டு டாடா நிறுவனத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற விரும்புவதாகச் சொல்லி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி.
சைரஸ் மிஸ்திரி ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், கடந்த கால வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தாக வேண்டும்.
பிரச்னைக்குக் காரணமான நீக்கம்
டாடா குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும் இந்த நிறுவனங்களின் பங்குகளை நிர்வகித்துவரும் நிறுவனம்தான் டாடா சன்ஸ். டாடா சன்ஸில் டாடா குடும்பத்துக்கு 66% பங்குகள் உள்ளன. எனவே, டாடா சன்ஸின் தலைவர் யாரோ, அவரே டாடா குழுமத்தின் தலைவராக இருப்பார்.
2012-ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா ஓய்வு பெற வேண்டிய நேரம். அடுத்த தலைவரைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தார் சைரஸ் மிஸ்திரி. அவரிடம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.37% பங்குகள் இருந்தன. டாடா சன்ஸில் டாடா குடும்பத்துக்கு அடுத்து அதிக பங்குகளை வைத்திருந்த தனிநபர் அவர்தான். எனவே, அவரே டாடா குழுமத்தின் தலைவராக இருப்பது சரி என்று முடிவெடுத்து, அந்தப் பொறுப்பு அவரிடம் அளிக்கப்பட்டது.
ஆனால், நான்கு ஆண்டுகள் மட்டுமே அவரால் அந்தப் பொறுப்பில் இருக்க முடிந்தது. 2016 அக்டோபர் 24-ம் தேதி அன்றுதான் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்குக் காரணமானவர் வேறு யாருமல்ல, அவரை அந்தப் பதவியில் அமரவைத்த ரத்தன் டாடாதான்.
அடமானம் வைக்கப்படும் மிஸ்திரி பங்குகள்
டாடா சன்ஸ் இயக்குநர் குழுவின் இந்த முடிவை எதிர்த்து, 2016-ம் ஆண்டு அக்டோபரில் என்.சி.எல்.டியிடம் முறையீடு செய்தார் சைரஸ் மிஸ்திரி. ஆனால், அவருடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். தீர்ப்பாயம் மிஸ்திரியை நீக்கியது செல்லாது என அறிவித்தது.
ஆனால், டாடா குழுமத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார் மிஸ்திரி. ஆனால், டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இடம்பெற நினைத்தார். ஆனால், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டாடா குழுமம் வழக்கு தொடுத்தது.
இப்படி வழக்குகள் தொடரும் நிலையில், மிஸ்திரி தன்வசமுள்ள டாடா சன்ஸ் பங்குகளை அடமானமாக வைத்து, ரூ.3,750 கோடி திரட்ட முடிவெடுந்தார். இதற்காக புரூக்பீல்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த நிலையில், டாடா சன்ஸ் பங்குகளை மிஸ்திரி அடமானம் வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தொடுத்தது டாடா குழுமம்.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த அக்டோபர் 28-ம் தேதி வெளியானது. ‘‘டாடா சன்ஸ் பங்குகளை அடமானம் வைக்கக் கூடாது’’ என உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்றுவிட்டு, மிஸ்திரி வெளியேற விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.
உலகளவில் மிகப்பெரிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஒன்று, சைரஸ் மிஸ்திரி வசமுள்ள பங்குகளின் விலையை 30-40% தள்ளுபடி விலையில் தந்தால், வாங்கத் தயார் என்று சொல்லியிருக்கிறது.
கடனில் தவிக்கும் மிஸ்திரி நிறுவனம்
டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை மிஸ்திரி விற்க விரும்புவதற்கு முக்கியமான காரணம், கடன் சிக்கலில் சிக்கியிருப்பதுதான். மிஸ்திரி குழுமத்துக்கு ரூ.30,000 கோடிக்கும் மேல் கடன் இருக்கிறது. தவிர, இந்தக் கடனை சரியாகத் திருப்பித் தர முடியாத சூழலும் நிலவுகிறது. எனவே, இந்தக் கடனை ஒழித்துக்கட்டும் ஒரு நடவடிக்கை யாகத்தான் பங்குகளை அடமானமாக வைத்து நிதி திரட்ட மிஸ்திரி குழுமம் முடிவெடுத்தது. ஆனால், டாடா தடுத்ததால் அதுவும் நடக்காத நிலையில், பங்குகளை விற்று, கடன் இல்லாத நிறுவனமாக மாற முடிவெடுத் துள்ளது மிஸ்திரி குழுமம்.
எளிதான செயலா?
டாடா சன்ஸின் பங்குகளை விற்க சைரஸ் மிஸ்திரி முடிவெடுத்தாலும் அது அவ்வளவு எளிதான விஷயமல்ல எனச் சந்தை வல்லுநர்கள் கருதுகிறார்கள். டாடா சன்ஸ் என்பது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் எந்தச் சிக்கலும் இல்லை.
சந்தை விலையை அடிப்படையாக வைத்து பங்குகளை எளிதாக விற்று, வெளியேறிவிட முடியும். ஆனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டிய லிடப்படாதா பல நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு எல்லாம் சந்தை மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மிஸ்திரி குழுமத்தின் கணக்கின் படி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.9.70 லட்சம் கோடி இருக்கும். இதில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மதிப்பு ரூ.7.79 லட்சம் கோடியாகவும், பட்டிலிடாத நிறுவனங்களின் மதிப்பு 44,084 கோடியாகவும் இருக்கிறது. மீதமுள்ள ரூ.1.46 லட்சம் கோடி ரூபாயை டாடா சன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பாக மிஸ்திரி குழுமம் கணித்திருக்கிறது.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது, 18.3% பங்குகளுக்கு ரூ.1.78 லட்சம் கோடியை மிஸ்திரி குழுமம் எதிர்பார்க்கிறது. இந்தச் சந்தை மதிப்பை டாடா குழுமம் ஏற்றுக் கொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்வி.
யார் வாங்குவார்?
டாடா குழுமம் பெரிய நிறுவனமாக இருந்தாலும் உடனடியாக இந்தப் பங்குகளை வாங்க முடிகிற நிதிநிலையில் இல்லை. ஏற்கெனவே டாடா குழுமத்தின் சில நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. டாடா மோட்டார்ஸ், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் கடன் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கடன் அதிகரித் திருக்கிறது. கடந்த ஆண்டு டாடா சன்ஸ் சுமார் ரூ.60,000 கோடி கடன்களைத் தீர்த்தது. மேலும், டி.சி.எஸ் தவிர மற்ற டாடா குழும நிறுவனங்கள் சிறப்பான லாப வரம்பில் இல்லை.
இந்த நிலையில், இந்தப் பங்குகளை வாங்குவதற்கு டாடா குழுமம் மேலும் கடன் வாங்க வேண்டியிருக்கும். அல்லது டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் விற்று நிதி திரட்ட வேண்டியிருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். (இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த புதன் அன்று 2.23% வரை குறைந்தது!) தவிர, சைரஸ் மிஸ்திரி வசமிருக்கும் பங்குகளை வாங்க டாடா குழுமம் சிறப்பு நிதி அமைப்பு (Special purpose vehicle) ஒன்றை ஏற்படுத்தவிருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.
உலகளவில் மிகப்பெரிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஒன்று, சைரஸ் மிஸ்திரி வசமுள்ள பங்குகளின் விலையை 30-40% தள்ளுபடி விலையில் தந்தால், வாங்கத் தயார் என்று சொல்லியிருக்கிறது.
முடிவுக்கு வரும் 70 ஆண்டு உறவு?
டாடா குடும்பம் மற்றும் மிஸ்திரி குடும்பங்களுக்கு இடையேயான 70 ஆண்டுக் கால உறவு முடியும் தருவாயில் உள்ளது என்பது மட்டும் தற்போது நிச்சயமாகத் தெரிகிறது. ஆனாலும், இந்தப் பிரச்னை இத்துடன் முடியுமா அல்லது இன்னும் மோசமான நிலைக்குச் செல்லுமா என்பது ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்திரி ஆகிய இரண்டு நபர்களைப் பொறுத்தது.
பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்று..!
நன்றி : நாணயம் விகடன்
Recent Comments