கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆகஸ்ட் 15-ம் தேதி தடுப்பூசி வெளியாகிறது’ எனச் செய்தி பரவ, ‘அப்பாடா…’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள் மக்கள். ஆனால், அது தவறான செய்தி என்று தெரிந்தவுடன், ‘தடுப்பூசி எப்போதுதான் வரும்?’ என்று ஏக்கத்தோடு கேள்வி கேட்டுவருகிறார்கள்.

பார்மா துறையில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான `ஜிஃபோ ஆர்.என்.டி சொல்யூஷன்ஸ்’ (Zifo RnD Solutions) பார்மா சார்ந்த ஆராய்ச்சிகளில் மட்டும் ஈடுபடுகிறது. கோவிட்-19 தொடர்பாக இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜ்பிரகாஷ் நமக்களித்த பேட்டி இங்கே…

கோவிட் 19-ஐ எதிர்கொள்ள பார்மாத் துறையில் நடைபெற்றுவரும் பணிகள் என்னென்ன?

‘‘இரண்டுவிதமான பணிகள் நடந்துவருகின்றன. முதலில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி. அடுத்தது மருந்து மூலம் குணப்படுத்தும் நடவடிக்கைகள். தடுப்பூசி என்பது வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக உருவாக்கப்படுவது. ஆனால், மருந்து என்பது வைரஸ் தாக்கும் வாய்ப்புள்ள இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு அல்லது வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்குக் கொடுப்பது. உதாரணமாக, மருத்துவ மற்றும் சுகாதாரத்துறைப் பணியாளர்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும்போது, அதிலிருந்து மீள்வதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில்கூட குறைந்த பாதிப்பிருக்கும் நபர்களைக் காப்பாற்றுவதற்கான மருந்துகள் வெளியாகின.’’

தடுப்பூசி கண்டுபிடிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும்?

‘‘நோய் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தடுப்பூசி வர முன்னர் ஐந்து அண்டுகள் ஆனது. தற்போது பலரும் நடவடிக்கை எடுத்து வருவதால், அவ்வளவு காலம் ஆகாது என்றாலும் நடப்பாண்டில் வர வாய்ப்பில்லை.’’

தடுப்பூசி வருவதால், மீண்டும் இயல்புநிலை திரும்பி, பொருளாதாரம் வளரத் தொடங்கிவிடுமா?

‘‘இது தவறான எண்ணம். உலகத்தில் 700 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். இன்னும் 1% பேருக்குக்கூட வைரஸ் பாதிப்பு இல்லை. (ஒரு கோடிப் பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்) ஆனால், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த சில வாரங்களில் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பயன்படுத்துவார்கள். ஒருவேளை ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பைவிட தடுப்பூசி ஏற்படுத்திய பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால் தடுப்பூசியை வேகமாகக் கண்டுபிடிக்க வேண்டிய அதே நேரத்தில், இதனால் வேறு ஏதும் சிக்கல் ஏற்படக் கூடாது. தடுப்பூசி மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும் என்றாலும், அதற்காக நாம் அவசரப்படக் கூடாது.’’

கோவிட்-19 தொடர்பாக உங்கள் நிறுவனம் செய்தவை என்னென்ன?

‘‘இந்தியாவில் களப் பணியாளர்களுக்கு ஹைடாக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. தவிர, வேறு சில மருந்துகளும் வழங்கப்பட்டன. சிலர் எந்தவிதமான மருந்துகளையும் எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற ஆராய்ச்சியில் நாங்கள் ஈடுபட்டோம். அதேபோல, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு (ஆறு முன்னணி பார்மா நிறுவனங்கள்) அவர்கள் சார்பாக சில சேவைகளை நாங்கள் செய்து கொடுத்தோம். ஆனால், அது பற்றி நாங்கள் வெளியில் சொல்ல முடியாது.

பார்மா உலகில் சீனாவின் பங்கு தவிர்க்க முடியாதது. சமீபத்திய அரசியல் காரணங்களால் பார்மா துறையில் மாற்றங்கள் ஏதும் நடக்குமா?

‘‘பார்மா துறையில் நாங்கள் ஆராய்ச்சிப் பிரிவில் செயல்பட்டுவருகிறோம். புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அந்த மருந்துக்குக் காப்புரிமை பெறப்படும். ஆனால், காப்புரிமை முடிந்த பிறகு யார் வேண்டுமானாலும் அந்த மருந்தைத் தயாரிக்க முடியும். இதை `ஜெனரிக்’ என்று கூறுவோம். இந்தப் பிரிவில்தான் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதனால் என்ன மாற்றம் நடக்கும் என்பதைப் பற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், சீனாவில் கோவிட்-19-க்கு தடுப்பூசி இறுதிக்கட்ட நிலையில் இருப்பதாக பார்மா துறையில் ஒரு பேச்சு இருக்கிறது.’’

கொரோனா நோயால் எந்தெந்தத் துறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது?

‘‘விமானம், சுற்றுலா, ஹோட்டல் போன்ற துறைகளுக்குத் தேவைகள் குறைந்துள்ளன. எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களுக்கு அதிக தேவை இருக்கிறது. ஆனால், அவர்களால் அந்த அளவுக்கு சப்ளை செய்ய முடியவில்லை. இவற்றைப் பார்க்கும்போது நாங்கள் குறைவாக பாதிக்கப்பட்டோம் எனலாம்.

பார்மா துறையில் இருப்பதால், நீண்டகால அடிப்படையில் லாக்டௌன் இருக்கும் என்பதை முன்பே கணித்தோம். அதனால் மார்ச் இரண்டாம் வாரத்திலேயே எங்களுடைய பணியாளர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பிவிட்டோம். 70% பணியாளர்கள் (பணியாளர்களின் எண்ணிக்கை 500-க்குமேல்) தற்போது சென்னைக்கு வெளியே இருக்கிறார்கள். தற்போது வீட்டிலிருந்து வேலை செய்துவருகிறோம்.’’

கொரோனா ஏற்படுத்தக்கூடிய பொருளாதார பாதிப்புகள் என்னவாக இருக்கும்?

‘‘பொருளாதாரச் சிக்கல் அதிகமாக இருக்கும். சர்வதேச அளவிலேயே பொருளாதாரம் சுருங்கும் நிலைமையில்தான் இருக்கிறது. கோவிட்-19 சிக்கல் எப்படி முடியும் என்பதைப் பொறுத்துத்தான் பொருளாதார மீட்சி இருக்கும். எப்படி இருந்தாலும் 2019-ம் ஆண்டு நிலையை எட்டுவதற்கு இன்னும் சில ஆண்டுகள்கூட ஆகலாம்.

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நிலநடுக்கம், எரிமலை, மழை போன்ற சூழல்களில் கட்டுமான சேதம் மற்றும் அதிக உயிரிழப்புகள் இருக்கும். ஆனால், கோவிட் காரணமாக கட்டுமானத்துக்கு ஆபத்து இல்லை. உயிரிழப்புகள் உண்டு என்றாலும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மனிதர்களின் இறப்பு குறைவாக இருக்கிறது என்பதுதான். இந்தச் சிக்கல் விரைவாக முடிந்தால், பழைய நிலைமைக்கு மீண்டும் திரும்புவோம். ஒருவேளை, நீண்டகாலம் நீடித்தால் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் தேவையில் மாறுதல் ஏற்படும். இதனால் சந்தையில் தேவை குறையும்.’’

டுப்பூசியில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது… ஒரு தடுப்பூசியின் விலை எவ்வளவாக இருக்கும்?

‘‘பொதுவாக, ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க 2 பில்லியன் டாலர் வரை (ரூ.15,000 கோடி) செலவாகும். ஆரம்பகட்ட நிலையிலிருந்து சந்தைக்கு வரும் வரையிலான காலத்துக்கு இந்தத் தொகை செலவாகும். பார்மா துறையில் இருக்கும் அனைவருக்கும் இது தெரியும். இருந்தாலும், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் உள்ளன. 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மனித சோதனைகளில் உள்ளன. முன்பெல்லாம் ஏதாவது ஒரு தடுப்பூசி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டால் மற்றவர்கள் நிறுத்திவிடுவார்கள். ஆனால், தற்போது பொதுநலன் கருதி அனைவரும் தடுப்பூசி கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அரசுகள், அறக்கட்டளைகள் பலவும் இணைந்திருப்பதால், தடுப்பூசிக்கான விலை ஒரு பிரச்னையாக இருக்காது. ஜான்சன் அண்ட் ஜான்சன் 10 டாலர் விலை நிர்ணயம் செய்யலாம் எனத் தெரிகிறது. சீரம் இன்ஸ்டிட்யூட் `சுமார் 1,000 ரூபாயில் இருக்கலாம்’ எனத் தெரிவித்திருக்கிறது. ஆனால், விநியோகம், யாருக்கு முதலில், பதுக்கல், நாடுகளின் விட்டுத் தராமை (Protectionism) போன்றவை பிரச்னையாக இருக்கலாம்.’’

கோவிட் தொற்று நோய்க்கான தடுப்பூசி மருந்தின் விலை அதிகமாக இருக்காது என்று சொல்லியிருப்பது நிம்மதி தரும் விஷயமாக இருக்கிறது. தடுப்பூசி மருந்து சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்பதுதான் நம் எல்லோரது எதிர்பார்ப்பாக இருக்கிறது!