பங்குச்சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்படுவது என்பதெல்லாம் எப்போதாவது நடக்கும் நிகழ்வு. அந்த நிகழ்வு மார்ச் 13 நடந்தது. அன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சுமார் 10 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டுக்கு (ஜனவரி 22) பிறகு பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்படுவது இப்போதுதான். 45 நிமிடங்களுக்குப் பிறகு தொடங்கிய வர்த்தகத்தின் முடிவில் சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. அதாவது அன்று ஒரே நாளில் பத்து சதவீதம் அளவுக்கு சரிந்து, அந்த சரிவில் இருந்து 16 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து முடிந்தது. அதற்கு அடுத்த நாள் நிப்டி குறைந்தபட்சமாக 8555 புள்ளி வரை சரிந்தது.

பங்குச் சந்தை வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

கடந்த ஆண்டு மத்தியில் ஆட்டோமொபைல் துறையில் கடும் விற்பனை சரிவு இருந்தது. அதனை தொடர்ந்து பல எப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் விற்பனை சரிந்த நிலையில் அதனை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. தவிர தொடர்ந்து பல காலாண்டுகளாக ஜிடிபி வளர்ச்சி சரிந்துகொண்டே இருந்தது. இது போன்ற நிச்சயமற்ற சூழலில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அளவுக்கு இருப்பதால் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் கடும் நெருக்கடி உருவாகி இருக்கிறது. இதுநாள் வரையில் மருத்துவப் பிரச்சினையாக இருந்தது. தற்போது சர்வதேச பொருளாதார பிரச்சினையாக மாறி இருக்கிறது. சர்வதேச பரிவர்த்தனைகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. விமான போக்குவரத்து கடுமையான சரிந்திருக்கிறது.

கொரோனா வைரஸால் உயிரிழப்புக் குறைவாக இருந்தாலும் வேகமாக பரவுவதாலும், தற்காப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததாலும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் கடும் அச்சத்தில் உள்ளன. கடந்த வாரத்தில் ரூ.10,000 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. மார்ச் மாதம் மட்டும் சுமார் 30,000 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. இதேபோல கச்சா எண்ணெயில் உருவாகி இருக்கும் வர்த்தகப் போரும் கவலை தரும் விஷயமாக மாறி இருக்கிறது.

இதனால் தொடர்ந்து நான்காவது வாரமாக பங்குச்சந்தை நிகர சரிவில் முடிந்திருக்கின்றன. மார்ச் 13-ம் தேதி முடிவடைந்த வாரத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் 1330 பங்குகள் தங்களுடைய 52 வார குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகி வருகின்றன. பிஎஸ்இ 500 பிரிவில் உள்ள பங்குகளில் சுமார் 75 பங்குகள் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சரிந்திருக்கின்றன.

பங்குகள் அடமானம்

பொருளாதாரச் சூழல் சரியில்லை என்றாலும் பங்குகளை அடமானம் வைத்த்திருந்ததும் சரிவுக்கு முக்கியமான காரணமாகும். வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் பலர் பங்குகளை அடமானம் வைத்து பணத்தை திரட்டிருப்பார்கள். ஒரு பங்கின் விலை 100 ரூபாய் என கொண்டால், இந்த பங்குகின் அடமானமாக வைத்து சுமார் 50 ரூபாய் வரை நிறுவனங்கள் கடன் வழங்கும். ஒரு வேளை அடமானம் வைத்த பங்கின் மதிப்பு குறைந்துகொண்டே வரும் பட்சத்தில் வங்கிகள் இந்த பங்கினை விற்கத்தொடங்கும்.

கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தையில் சரிவு இருந்ததால், கடந்த வார சரிவு காரணமாக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள பங்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. நேற்றைய சரிவுக்கு இதுவும் ஒரு காரணம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதலீடு செய்யலாமா?

தற்போது சந்தை சரிந்திருப்பதால் முதலீட்டில் இழப்பு மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பங்குகள் / மியூச்சுவல் பண்ட்களை விற்பதன் மூலம் நிரந்தர நஷ்டம் அடையவே வாய்ப்பு உள்ளன. அதனால் பதற்றத்தில் பங்குகளை விற்கும் முடிவினை எடுக்க வேண்டாம். பொதுவாக மிகவும் குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்று லாபம் பார்க்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற மனநிலை மிகவும் குறைவான நபர்களிடமே இருக்கும். பங்குகள் குறையும் போது இருக்கும் பங்குகளை விற்று நஷ்டம் அடைவதும், பங்குச்சந்தை தொடர்ந்து உயரும் போது அதிக பிரீமியத்தில் பங்குகளை வாங்கி நஷ்டமடைவதும் சிறு முதலீட்டாளர்களின் வழக்கமாக இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் பங்குச்சந்தை 20 சதவீதம் சரிந்துவிட்டது. அதனால் இனி சரிய வாய்ப்பில்லை என்னும் முடிவுக்கு வர முடியாது. இதற்கு கீழும் சரியலாம். அதனால் புதிய முதலீடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தொடங்குவது நல்லது. இந்த சரிவினை முதலீட்டுக்கான வாய்ப்பாக பார்க்கும் பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் நல்ல லாபம் பார்க்க முடியும்.

2000-ம் ஆண்டு சரிவு மற்றும் 2008-ம் ஆண்டு சரிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் முக்கியமான பங்குகள் இரு மடங்குக்கு மேல் உயர்ந்தன. ஒவ்வொரு முறை சரிவுக்கு பிறகும் சந்தை உயரும். அதனால் பதற்றப்படவேண்டாம் என்பதே சந்தை வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கு சந்தை பற்றிய அறிவு முக்கியம். அதைவிட முக்கியம் மனநிலைதான். அனைவரும் பதற்றத்தில் இருக்கும் போது நாம் உற்சாகமாகவும், அனைவரும் உற்சாகமாக இருக்கும் போது நாம் பதற்றப்பட்டு முதலீட்டை எடுத்தால் மட்டுமே நமக்கு சம்பாதிக்க முடியும் என்று கூறுவார்கள். பொருளாதார மந்தநிலை, நிதித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல், கொரோனா வைரஸ் தாக்கம், கச்சா எண்ணெய் சரிவு போன்ற பல பிரச்சினைகள் இருந்தாலும் தற்போதைய சந்தையை முதலீட்டுக்கான வாய்ப்பாக பார்க்கவேண்டும். இது போன்ற வாய்ப்பினை முதலீட்டாளர்கள் தவறவிடக் கூடாது.

நன்றி யுவர் ஸ்டோரி தமிழ்