பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகிவரும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன.
கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகியிருந்தன. இன்னும் பல நூறு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக வேண்டிய நிலை. இதுவரை வந்திருக்கும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, பங்கு நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதில் என்ன?
கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் உலகளவில் பங்குச் சந்தை கணிசமாக இறங்கியது. ஆனால், புதிய முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து முதலீடு செய்ததால் பங்குச் சந்தை உயர்ந்தது. எனினும், பங்கு நிறுவனங்களின் லாபம் எப்படி இருக்குமோ என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து முதல் காலாண்டு முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். ஆனால், அவை எதிர்பார்த்ததைப்போல சாதகமாக வரவில்லை. இதை அடுத்து, இரண்டாம் காலாண்டு முடிவுகளாவது லாபம் தருகிற மாதிரி இருக்குமே என்று எதிர்பார்த்தனர். கடந்த சில வாரங்களாக வெளியாகும் காலாண்டு முடிவுகள் நிறுவனங்களின் லாபம் கணிசமாக உயர்ந்து வருவதை நம் அனைவருக்குமே எடுத்துச் சொல்வதாக இருக்கிறது.
லாபம் உயரக் காரணம்?
இந்த நிலையில் இரண்டாம் காலாண்டில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு என்ன காரணம் என ஈக்வினாமிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம். அவர் சொன்னதாவது…
‘‘ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஐ.டி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை எடுத்துக்கொண்டால், வருமான வளர்ச்சியைவிட லாப வளர்ச்சி இருந்தது. இதற்கு முக்கிய காரணம், ஐ.டி நிறுவனங்களின் செலவுகள் பெருமளவுக்குக் குறைந்திருப்பதுதான். உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணம், அலுவலகத்தில் அன்றாடம் நடக்கும் செலவுகள் கணிசமாகக் குறைந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஐ.டி துறையில் லாப வளர்ச்சி இருந்தது.
உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, மூலப்பொருள்களின் விலை குறைவே செப்டம்பர் காலாண்டு வளர்ச்சிக்குக் காரணம்.ஊரடங்கு நேரத்தில் பெரும்பாலான துறை களுக்கான தேவை குறைந்தது. அதனால் பல முக்கியமான மூலப்பொருள்களின் விலை குறைந்தது. கச்சா எண்ணெய், உலோகங்கள் எனப் பலவற்றின் விலையும் குறைந்தது.
உற்பத்தித் துறையைப் பொறுத்த வரை, குறைந்தபட்சம் சில மாதங் களுக்கான மூலப்பொருள்களை வாங்கி வைப்பார்கள். அதனால் ஜூன் காலாண்டில் வாங்கி வைத்த மூலப் பொருள்களை செப்டம்பர் காலாண்டில் பயன்படுத்தியதால், உற்பத்தித்துறை சார்ந்த நிறுவனங்களின் லாபம் உயர்ந்திருக் கிறது.
வங்கித் துறையிலும் லாபம் உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தான். கொரோனா காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது. தவிர, கடனைச் சரியாகச் செலுத்தவில்லை என்றால்கூட வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனால் இந்தக் காலாண்டில் வங்கிகள் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்யும் தொகை குறைந்தது. இதனால் வங்கிகளின் லாபம் உயர்ந்தது.
ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் தேவை இருப்பதால், விற்பனை உயர்ந்தது. ஆனால், கனரக வாகனங்களில் எதிர்மறை வளர்ச்சியே நிலவுகிறது. அதேபோல, பார்மா மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறையிலும் தேவை இருப்பதால், வளர்ச்சி இருக்கிறது. ஆனால், பார்மா துறை நிறுவனங்களின் சந்தை மதிப்பு கொஞ்சம் அதிகம் என்றே நினைக்கிறேன்.
வளர்ச்சி நீடிக்குமா?
இரண்டாம் காலாண்டான செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி, மூன்றாம் காலாண்டான டிசம்பர் காலாண்டிலும் நீடிக்க வாய்ப்பில்லை. ஜூன் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்களில் விற்பனை இல்லை. அதனால் இந்தக் காலாண்டில் கூடுதலாக விற்பனையானது. அதனால் முதல் காலாண்டுக்கும் சேர்த்தே இரண்டால் காலாண்டில் விற்பனை நடந்திருக்கிறது. அதனால் இந்த வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் மட்டுமே நடந்ததாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்த காலாண்டிலும் விற்பனை வளர்ச்சி இருந்தால் மட்டுமே உண்மையான வளர்ச்சி என நாம் கணக்கில்கொள்ள முடியும்.
உற்பத்தித்துறை நிறுவனங்களைப் பொறுத்த வரை, ஜூன் காலாண்டில் மூலப்பொருள்களின் விலை குறைவாக இருந்தது. ஆனால், செப்டம்பர் காலாண்டில் விலை உயர்ந்துள்ளது. அதனால் நடப்புக் காலாண்டில் உற்பத்தித் துறை நிறுவனங்களின் லாபம் குறைவாகவே இருக்கும்.
செப்டம்பர் காலாண்டில் வங்கிகளின் வாராக்கடனுக்கு முக்கியத்துவம் தரவில்லை. ஆனால், நடப்புக் காலாண்டு என்பது வங்கிகளுக்கு முக்கியமான காலாண்டு. எவ்வளவு கடன்கள் வாராக்கடன் பட்டியலுக்கு வரும் என்பது இந்தக் காலாண்டில் தெரிந்துவிடும். அதனால் டிசம்பர் காலாண்டில் வங்கிகளின் லாபம் குறையக்கூடும்.
இதைவிட முக்கியம், கொரோனா பரவல். ஐரோப்பாவில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் எப்படி இருக்கும் என்பது நவம்பர், டிசம்பர் மாதங்களில் தெரியவரும். ஒருவேளை, இந்தப் பரவல் அதிகமாக இருந்தால், நிறுவனங்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
சுருக்கமாகச் சொன்னால், இரண்டாம் காலாண்டு முடிவுகளை வைத்து நாம் உற்சாகம் அடைய தேவையில்லை’’ என சொக்கலிங்கம் கூறினார்.
எச்சரிகையாக இருக்கவேண்டிய நேரமிது என்பதில் சந்தேகமே இல்லை.
Recent Comments