அண்மையில் ஓடிடி-யில் ‘ஜெயம் ரவி’ நடித்த ‘பூமி’ திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளிவந்தது. விவசாயம் சார்ந்த படம், மற்றும் தமிழர் பாரம்பரியம் பேசும் படமாக இது எடுக்கப்பட்டதால், இப்படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ‘பூமி’ வெளியாகியதும், அதில் பல படங்களில் நாம் ஏற்கனவே பார்த்த கார்ப்பரேட் எதிர்ப்பு கொள்கையை மையமாகக் கொண்டு, விவசாயிகள் பிரச்சனைகளும் பேசப்பட்டிருந்தது.
அதனால் பூமி படம் ரிலீஸ் ஆனதும் அதற்கு பாசிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரத்தொடங்கியது. கார்ப்பரேட்டை குறிவைத்து பல மீம்களும், விவசாயம் பற்றி காட்டப்பட்ட சில விஷயங்கள் தவறுகளோடு இருந்ததாகவும் பலர் விமர்சனம் செய்தனர். ‘பூமி’ போன்ற விவசாயம் சார்ந்த படங்கள் அறிவுறுத்தும் முக்கியமான விஷயம், விவசாயம் என்பது ஒரு லாபகரமான தொழில், படித்தவர்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும், விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
ஆனால் இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே பலர் நல்ல வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் அர்ச்சனா ஸ்டாலின். இவர்களைப் போன்றோர் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை மீட்டெடுக்க பல முயற்சிகளை தொழில் ரீதியாக செய்து வருகிறார்கள். பொறியாளர் ஆன அர்ச்சனா, பல கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு, தற்போது இவர் விவசாயப்பிரிவில் இருக்கிறார், இவர்கள் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் தயாரிப்புகளுக்கு முன்பே விலை நிர்ணயம் செய்து அதை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.
அதாவது விவசாயிகளுக்கு நமக்கு என்ன கிடைக்கும் என்பது அவர்களிடம் முன்பே தெரிவித்துவிடுகிறார்கள். அதேபோல வாராந்திர அடிப்படையில் காய்கறிகள் மற்றும் பழங்களை சென்னையில் இருக்கும் குடும்பங்களுக்கு விநியோகம் செய்கிறது அர்ச்சனாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘My Harvest’. கிட்டத்தட்ட பூமி படத்தில் சொல்லப்பட்டதை போலவே இவர்களும் செய்கிறார்கள். இவர் ‘பூமி’ படத்தை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள ஆவலானோம். இந்த படத்தில் சொல்லப்பட்டிருப்பவற்றில் எது உண்மை என நினைக்கிறீர்கள். எதனை தவிர்த்திருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் அர்ச்சனாவுடன் உரையாடினோம்.
பூமி படத்தை குறித்து சாதகமான சில விஷயங்களைப் பேசிய பிறகு எதிர்மறையான விஷயங்களை குறித்துபேசலாம் என்றார் அர்ச்சனா. “ஜெயம் ரவி போன்ற பிரபலமான நபர்கள் இதுபோல விவசாயம் சார்ந்த படங்களில் நடிக்கும்போது விவசாயத்துக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வாழ்வின் ஆதாரம் விவசாயம்தான் என்னும் அடிப்படை புரிதல் மக்களுக்கு ஏற்படும், விவசாயம் குறித்து தெரிந்துகொள்ள தொடங்குவார்கள். இந்த படம் விவசாயம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது,” என்றார்.
உதாரணத்துக்கு ஒரு புத்தகத்தை எடுத்தால் அதில் தலைப்புகள் இருக்கும், கருத்துகளும் இருக்கும். ஆனால் அந்த புத்தகத்தில் தலைப்புகள் சரியாக இருந்து, அதுகுறித்து தவறாக எழுதப்பட்டிருந்தால் அதுதான் பூமி. இந்த படம் சொல்லவந்த விஷயங்கள் பெரும்பாலானவை சரி. ஆனால் கருத்தை படமாக எடுக்கும்போது சரியாக பிரதிபலிக்கவில்லை.
”ஒருங்கிணைந்த விவசாயம் செய்வதன் மூலமாக கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் நகரத்துக்கு வராமலே அங்கேயே மேம்பட்ட வாழ்க்கையை வாழ முடியும் என்பது சரி. ஆனால் அதற்காக இருக்கும் வேலையை விட்டுவிட்டு, கிராமத்துக்கு போய் விவசாயம் செய்ய வேண்டும் என முடிவெடுத்து விசாயத்தை தொழிலாக பார்த்தால் அது முடியாது.” திருவள்ளுரூரில் இருந்து பல சிறு விவசாயிகள் எண்ணூர் அருகே உள்ள தொழிற்சாலைகளில் தினமும் வேலைக்கு சென்றுவந்தனர். நாங்கள் சென்ற பிறகு அவர்கள் அந்த வேலையை விட்டு விட்டு அவர்களிம் இருக்கும் நிலத்தை விவசாயம் செய்வதன் மூலம் வேலைக்கு செல்லும் அளவுகான வருமானம் ஈட்டுகின்றனர். அவர்களிடம் இடம் இருந்தது, விவசாயம் குறித்த புரிதல் இருந்தது அவர்களிடம் இருந்த பிரச்சினை சரியான விலை கிடைக்காதது உள்ளிட்ட வேறு சில விஷயங்கள்தான்.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் விவசாயம் செய்த வெண்டைக்காய்களை அதிகபட்சம் 15 ரூபாக்கு விற்றிருக்கிறார்கள். சமயங்களில் மூன்று ரூபாய்க்கு கூட விற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சுமார் 20 ரூபாய் அளவில் விலை நிர்ணயம் செய்திருப்பதால் அவர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் கிடைக்கிறது. இதனால் சொந்த ஊரிலே அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. ஆனால் தொழிலாக நினைத்தால் சாத்தியம் இல்லை.
அதேபோல இந்த படத்தில் காட்டப்படும் ஒருங்கிணைந்த பண்ணை முறை என்பது எதோ புதிதாக தொடங்கப்பட்டது அல்ல. பல இடங்களில் ஏற்கெனவே செய்திருப்பதுதான். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு இயல்பாக இந்தவகை விவசாயம் இருந்தது. ”வீடுகளில் ஆடு மாடு கோழி இருக்கும். இவை விவசாயத்துக்கு பயன்படும். தற்போது விவசாயத்துக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக ஆடு, மாடு கோழி வளர்க்க தொடங்குகிறோம். அதேபோல ஒட்டுமொத்த நிலத்தையும் ஒரே பயிராக நடமாட்டார்கள். பிரித்து பிரித்து நடும்போதுதான் குறிப்பிட்ட இடைவெளியில் வருமானம் கிடைக்கும். மொத்த இடத்துக்கும் நெல் பயிரிட்டால் நான்கு மாதங்களுக்கு பிறகுதான் வருமானம் கிடைக்கும். அதனால் இந்த முறையிலான விவசாயம் புதிதல்ல.” ஆனால் ஏற்கெனவே சொன்னதுபோல தற்போது புதிதாக தொடங்குவது என்பது முடியாத செயல். கிராமங்களில் இருப்பவர்கள் நகரத்தை நோக்கி நகராமல் இருப்பதை ஒரளவுக்கு தடுக்க முடியும். ஆனால் நகரத்தில் இருப்பவர்கள் மீண்டும் கிராமத்தை நோக்கிச் செல்ல திட்டமிட்டால், பெரும் பணத்தை சம்பாதித்த பிறகுதான் இதெல்லாம் சாத்தியம்.
பணத்தை இலக்காகக் கொள்ளாமல் இருந்தால் சில காலத்துக்கு பிறகு பணம் சம்பாதிக்கலாம். உள்நாட்டு பொருட்களை, நிறுவனங்களை ஊக்குவிக்கலாம் என்பதை ஏற்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் எதிர்ப்பு மனநிலை என்பது தவறானது. ’மைஷார்வெஸ்ட்’ ஒரு பிராண்டாக இல்லை என்றால் எப்படி என்னால் மக்களைச் சென்றடைய முடியும். தொடர்ச்சியாக அவர்களுடன் தொழில் நடத்த முடியும். கார்ப்பரேட் எதிர்ப்பு என்பதை ஏற்கவில்லை. அதேபோல, பூமி படத்தில் காட்டப்பட்டது சினிமாதனம் என்றாலும் அதனால் பெரிய பிரச்சினை இல்லை.
ஆனால் கோவில் கலசங்களில் இருக்கும் விதையை பயன்படுத்த முடியும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆறு மாதங்களுக்கு விதையை பயன்படுத்தாமல் இருந்தாலே அந்த விதையின் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்படும். அதனால் விதை விஷயத்தில் மேலும் கவனமாக காட்டி இருக்கலாம். அதேபோல ஆறு லட்ச ரூபாய் வருமானம் என்பது எங்கேயாவது நடக்கலாம். அதுபோன்று நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த வருமானம் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படலாமே தவிர, அந்த வருமானம் கிடைக்கும் என விவசாயத்தை அணுக முடியாது. ஒட்டுமொத்தமாக விவரித்தால் நல்ல சிலபஸ், ஆனால் பாடம் வேறு எனக் கூறினார் அர்ச்சனா.
கார்ப்பரேட் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவிட்டு தற்போது சொந்த நிறுவனம் மற்றும் விவசாயமும் செய்துவரும் விக்னேஷிடம் உரையாற்றினோம். விவசாயம் தற்போது லாட்டரி போல வருமானம் கொடுக்கிறது. “சில ஆண்டுகளுக்கு முன்பு சவுக்குக்கு 8,000 ரூபாய் வரை விலை கிடைத்தது. ஆனால் தற்போது 3,000 ரூபாய் கூட கிடைப்பதில்லை. அதனால் விவசாயத்தில் நிச்சயமற்ற சூழல் எப்போது நிலவுகிறது. தண்ணீர், சரியான மகசூல், போதுமான விலை என அனைத்தும் சரியாக இருந்தால்தான் லாபம் கிடைக்கும்,” என்றார். விக்னேஷ் சுந்தரம்.
என்னுடைய நிலம் காவேரி ஆற்றுபடுகைக்கு மிக அருகில் இருக்கிறது. அதிகபட்சம் ஒரு கிலோமிட்டர். ஆனால் 2016ம் ஆண்டு தண்ணீர் இல்லை. வாரம் ரூ.15,000த்துக்கு சில வாரங்கள் தண்ணீர் வாங்கி நிலத்துக்கு பாய்ச்சினேன். அதனைத் தொடர்ந்து 4 லட்ச ரூபாய் செலவு செய்து ஆழ்துழாய் கிணறு தோண்டினேன். அப்போது என்னிடம் வேறு வேலை இருந்தது. அதனால் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இங்கு செலவு செய்தேன். ஒருவேளை விவசாயத்தை மட்டும் செய்பவராக இருந்தால் கடன் வாங்க வேண்டி இருக்கும். அதற்கு பெரிய தொகை வட்டி கட்ட வேண்டும். ஒரு கட்டத்தில் நிலத்தை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். என்னிடம் நிலம் இருக்கிறது, விவசாயமும் செய்கிறேன் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் விவசாயம் மட்டுமே செய்கிறேன் என முடிவெடுத்தால் யோசித்து எடுக்க வேண்டும்.
ஒரிருவர் லாபம் ஈட்டுவதால் ஒட்டுமொத்த விவசாயமும் லாபம் கொழிக்கும் தொழில் என கருதக்கூடாது. கிராமத்தில் இருக்கும் விவசாயகளுக்கு இதுபோன்ற படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் விவசாயப் பின்னணியில் இருந்துவிட்டு பல ஆண்டுகளுகளாக வேலைக்கு வெளியூர்களுக்கு சென்றவர்களுக்கு விவசாயம் குறித்த புரிதல் இருக்காது. அவர்களுக்கு நகரத்தில் வேலை செய்வதற்குப் பதிலாக சொந்த ஊரில் விவசாயம் செய்யலாமே என்ற எண்ணம் இதனால் தோன்றலாம்., என்றார்.
நண்பர்கள் சேர்ந்து குத்தகைக்கு ஒரு நிலத்தை எடுங்கள். விவசாயம் குறித்த புரிதலை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு நிலத்தை வாங்குவது குறித்து திட்டமிடலாம். விவசாயத்தில் தொடர்ச்சியான, சீரான வருமானம் கிடைக்காது என்பதுதான் இதல் உள்ள ரிஸ்க். பல வருமான வாய்ப்புகளில் விவசாயமும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் விவசாயத்தை மட்டும் நம்பி எந்தத் திட்டத்தையும் வகுக்க வேண்டாம் என விக்னேஷ் நம்மிடம் கூறினார்.
நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்
Recent Comments