ஒரு பத்திரிகையாளராக புதிய மனிதர்களையும் அவர்களைப் பற்றி படிப்பதும் வழக்கமான பணியாகவே இருக்கும். ஒரு நாள் linkedin சமூக வளைதளத்தை பார்த்துகொண்டிருந்த போது ரதீஷ் கிருஷ்ணனின் பெயர் தென்பட்டது. அதில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் Head of Experiments என குறிப்பிட்டிருந்தது.

சினிமாத் துறையில் என்ன புதுமையான விஷயங்களை செய்ய முடியும் என்பதில் ஆர்வமாக இருந்ததால் ரெக்வெஸ்ட் கொடுத்து அவருடன் உரையாடி நேரில் சந்திக்க திட்டமிட்டேன். மூன்று முறைக்கு மேல் நேரில் சந்தித்து உரையாடியதை தொடர்ந்தே இந்த கட்டுரைக்கான வடிவம் கிடைத்தது. மூன்று சோதனைகளுக்கு நல்ல பலன் இருந்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இவை மற்ற மனிதவளத்துறையினருக்கு பயன்படலாம்.ரதீஷ் உடன் உரையாடியதன் சுருக்கமான வடிவம்.

ஆஸ்பயர் (Aspire)

தியேட்டர் நிறுவனங்களில் மனிதவளத்தை கையாளுவது கடினமாகும். பெரும்பாலானவர்கள் சேவைத் துறை ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கு அதிக சம்பளமும் கொடுக்க முடியாது. அதே சமயத்தில் அவர்களை தொடர்ந்து வெளியேறவும் அனுமதித்தால் நிறுவன சேவையின் தரம் குறைந்துவிடும். இல்லையெனில் தினமும் புதிதாக பணிக்கு வருவார்கள், அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதையே ஒரு பணியாக வைத்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி, இருக்கும் ஊழியர்களை முடிந்தவரை தக்கவைப்பதுதான். ஓரளவுக்கு மேல் சம்பளத்தை உயர்த்த முடியாது. அதனால் பணியாளர்களின் தேவையை புரிந்து கொள்ள திட்டமிட்டோம். ஐடியில் பணிபுரிபவர் அல்லது ரூ.50,000க்கும் மேல் சம்பாதிப்பவரின் தேவை வீடு, கார், சுற்றுலா என்பதாக இருக்கும். ஆனால் குறைந்த சம்பளத்தில் பணிபுரிபவரின் ஆசைகள் மற்றும் தேவைகள் என்னவாக இருக்கும் என்பதை யோசிக்க முடியாது.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்களும் சிறிது நேரம் யோசித்துவிட்டு மேற்கொண்டு படிக்கலாம்…

அவர்களின் தேவை முற்றிலும் மாறுபட்டது. தியேட்டரில் பணிபுரிந்தாலும் குடும்பத்துடன் வந்து படம் பார்க்க வேண்டும் என நினைப்பார்கள். காரணம், குடும்பத்துடன் படம் பார்ப்பதே அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும். ஒரு கம்யூட்டர் கோர்ஸ், கிரிக்கெட் பேட், குடும்பத்துடன் தீம் பார்க், சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளாக இருந்தன. இவர்களின் தேவை இதுதான் என்பதை கண்டறியவே எங்களுக்கு பல மாதங்கள் தேவைப்பட்டன. இவர்களின் அதிகபட்ச தேவையே வீட்டுக்கு ஏசி வாங்க வேண்டும் என்பதுதான், என்கிறார் ரதீஷ். அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது போல ஒரு திட்டத்தை உருவாக்கினோம். இதற்கு ’ஆஸ்பயர்’ (Aspire) என பெயரிட்டோம்.

தினமும் பணிக்கு வந்தால் குறிப்பிட்ட புள்ளிகள், ஒர் ஆண்டு பணி செய்திருந்தால் இவ்வளவு புள்ளிகள், சரியான உடையில் இருப்பது, சரியான சேவை உள்ளிட்ட அனைவராலும் பின்பற்றக்கூடியவற்றை அடிப்படையாக கொண்டு புள்ளிகளை வழங்கினோம். இந்த புள்ளிகளை பயன்படுத்தி அவர்களுக்கு விருப்பமான பொருளை தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் இதனை பணமாக மாற்றமுடியாது. இந்த பொருள் தேவை என்றால், எங்கு கிடைக்குமோ அந்த கடைக்கு ஆர்டர் செய்துவிடுடோம். பணியாளர்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு எங்களிடம் இருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.

தியேட்டர் துறையில் வெளியேறுவோர்கள் விகிதம் எங்களிடத்தில்தான் குறைவு. மேலும் இந்த புள்ளிபட்டியில் முதல் சில இடங்களில் வருபவர்கள் சி.இ.ஓ உடன் மதிய உணவு அருந்தும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

தீர்க்கத்தான்

மென்பொருள் துறையினருக்கு hackathon நடத்தப்படுவதுண்டு. ஆனால் சேவைத் துறையில் இருப்பவர்களுக்கு என்ன செய்யலாம் என யோசித்து ’தீர்க்கத்தான்’ என பெயரிட்டு பணியாளர்களை கலந்துகொள்ள வைத்தோம். சத்யம் சினிமாஸில் உள்ள பல விஷயங்கள் அங்குள்ள பணியாளர்கள் உருவாக்கிய ஐடியாதான். “எங்கள் அலுவகத்தில் லேப் உள்ளது. அங்கு உருவாக்கப்பட்டதுதான் பல ஐடியாக்கள். உதாரணத்துக்கு பாப்கார்ன் மில்க்‌ஷேக் எங்களுடைய ஊழியர் ஒருவர் உருவாக்கியதுதான். அதேபோல தியேட்டரில் இருந்து படம் பார்த்து வெளியே செல்லும் போது குப்பை போடும் பாக்ஸ் சில மாதங்களுக்கு முன்பு வைத்தோம். குளிர்பானம், பிளேட் மற்றும் இதர குப்பைகளை போடுவதற்கு என அந்த பெட்டியை வைத்தோம். அந்த ஐடியா எங்களுடைய பணியாளர் ஒருவர்தான் கொடுத்தார். இதனால் ஒரு காட்சி முடிந்த பிறகு அடுத்த காட்சிக்கு தியேட்டரை விரைவாக தயார் படுத்த முடிந்தது.”

ஒரு நிறுவனத்தில் பணி செய்பவர்களால்தான் அங்கு மேலும் என்ன செய்ய முடியும் என்பதை கண்டறிய முடியும். ஐடியா என்பது மெத்த படித்தவர்களுக்கும் டெக்னாலஜியில் உள்ளவர்கள் பேசக் கூடிய வார்த்தை என்பதை மாற்றி, நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கினோம். இவை சிறு சிறு மாற்றங்கள் என்றாலும் பணியாளர்களுக்கு திறமைகளுக்கு வாய்ப்பளிப்பதால் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது.

பயிற்சி

அடுத்த நாங்கள் செய்த முக்கியமான விஷயம் externship. எங்களிடம் தற்போது பணியாற்றும் பலர் இந்தத் திட்டத்தின் கீழ் வந்தவர்கள்தான். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் நாங்கள் இந்த திட்டத்துக்கு எந்தவிதமான ஊக்கத் தொகையும் வழங்குவதில்லை. (வெளியூரில் இருந்து வருபவர்களாக இருந்தால் தங்குவதற்கென சிறிய தொகையை மட்டும் வழங்குகிறோம்). எந்த விதமான தொகையும் இல்லாமல் எப்படி இந்த பயிற்சிக்கு வருகிறார்கள் என்பதில்தான் இந்தத் திட்டத்துக்கான வெற்றி இருக்கிறது. இந்த பயிற்சிக்கு வருபவர்களுக்கு நாங்கள் கொடுப்பது வாய்ப்புகள் தான். SPI Cinemas ரதீஷ் கிருஷ்ணன் உடன் ’Externship’ பயிற்சிக்கு வந்த இளைஞர்கள் படித்து முடித்தவர்கள், ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு செல்லும் காலத்தில் இருப்பவர்கள், நீண்ட காலம் வேலைக்குச் செல்லாமல் இருந்து தற்போது வேலைக்கு தயாராகுபவர்கள் என பல வகையான நபர்களும் எங்களிடம் பயிற்சிக்கு வருகிறார்கள்.

எஸ்பிஐ குழுமத்தில் பல புராஜக்ட்கள் இருப்பதால் பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கான வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அதனால் பயிற்சிக்கு வருபவர்கள், பயிற்சி முடிந்த பிறகு பெரும்பாலானவர்கள் இங்கே பணியாற்ற விரும்புகிறார்கள். எங்களுக்கு சரியான பணியாளர்கள் கிடைத்துவிடுகிறார்கள், பணியாளர்களுக்கும் திருப்தியான வேலை கிடைத்துவிடுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் இந்த பயிற்சியை நாங்கள் வழங்கி வருகிறோம். இது போல சின்னச்சின்னதாய் பல பரிசோதனை முயற்சிகளை செய்துவருகிறோம் என ரதீஷ் கிருஷ்ணன் கூறினார். மனிதவளத்துறையை கவனிப்பவர்கள் இந்த யோசனைகளை பரிசீலனை செய்யது தங்கள் அலுவலகங்களிலும் புதிய யோசனைகளை செயல்படுத்தலாம்.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்