இந்தியாவில் தொழில் தொடங்கி வெற்றி பெருவதே சவாலாக இருக்கும் சூழலில், இங்கிருந்து வேலைக்காக அமெரிக்கா சென்று அங்கு சில ஆண்டுகள் வேலை செய்து, அதன் பிறகு அங்கு ஒரு நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெறுவதெல்லாம் அசாதாரண சாதனை. இந்த சாதனைக்குச் சொந்தகாரர் ஜெயபிரகாஷ் விஜயன்.

Tekion Corp நிறுவனத்தின் நிறுவனர். சில வாரங்களுக்கு முன்பு 15 கோடி டாலர் அளவுக்கு Tekion திரட்டிய நிதியால் பில்லியன் டாலர் நிறுவனமாக மாறி இருக்கிறது. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் நான்கு ஆண்டுகளில் யுனிகார்ன் க்ளப்-ல் இணைந்திருக்கிறது. Tachyon என்பது இயற்பியல் வார்த்தை. ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய பொருள். இந்த வார்த்தையை நேரடியாக ட்ரேட் மார்க் செய்ய முடியாது என்பதால் Tekion என மாற்றி பெயர் வைத்திருக்கிறார்கள். நேற்று நாம் செய்த செயலை விட இன்று சிறப்பாக எதையாவது செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த பெயர் வைத்ததாக ஜெய் விஜயன் தெரிவிக்கிறார்.

காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். இருந்தாலும் இவரது கவனம் படிப்பு வேலை அடுத்த கட்டம் என்பதிலே இருந்தது. இவர் கல்லூரி படிக்கும்போது கம்ப்யூட்டர் வரத்தொடங்கின. அதனால் ஒரு கணிப்பொறி மையத்தை இவரது குடும்பம் தொடங்யது. இருந்தாலும் இந்த தொழிலை பெரிதாக வளர்க்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் கடனும் இருந்ததால் கடனை கட்டவேண்டிய சூழலும் உருவானது. இந்தியாவில் வேலைக்குச் சென்றால் கடனை அடைக்க முடியாது என்பதால் வெளிநாட்டில் வேலை செய்யத் திட்டமிட்டார் ஜெய் விஜயன்.

ஓமன் மற்றும் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் வேலைசெய்த விஜயன் அமெரிக்காவில் உள்ள ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஆரக்கிள் கோர்ஸ் முடித்த சிலரில் இவரும் ஒருவர். சிங்கப்பூரில் நல்ல வேலையில் இருந்ததால் அமெரிக்கா செல்ல தயங்கி இருக்கிறார். தவிர சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு எளிதாக வரமுடியும் என்பதாலும் சிங்கப்பூரிலே இருக்கலாம் என்னும் முடிவுக்கு வந்துவிட்டார். சிங்கப்பூர் வேலை நல்ல வேலை என்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பும் இழந்துவிட்டால் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டி இருக்கும் என நண்பர்கள் அறிவுறுத்தியதால் அமெரிக்காவுக்குச் சென்றார்.

ஆரக்கிளை தொடர்ந்து VMware நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அந்த நிறுவனத்தின் ஒரு புராஜக்ட் தோல்வியடைந்த நிலையில் அதனை மீட்க வேண்டி இருந்தது. அதனால் அந்த பொறுப்புக்கு விஜயன் சென்றார். சம்பளத்தை விட பங்குகளும் அங்குக் கொடுக்கப்பட்டன. நல்ல வளர்ச்சி இருந்தால் ஒரு கட்டத்தில் சம்பளத்தை விட பங்குகள் மூலம் மாதம் அதிக வருமானம் கிடைத்தது. அதற்குக் காரணம் VMware நிறுவனத்தின் வளர்ச்சியின் காரணமாக பங்குகள் வேகமாக உயர்ந்தது. அந்த சமயத்தில் டெஸ்லா வளர்ச்சி அடையும் ஒரு நிறுவனம். அங்கிருந்து அழைப்பு வருகிறது. டெஸ்லாவின் உயரதிகாரிகள் மற்றும் அதன் தலைவர் எலான் மஸ்கை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அனைத்து விஷயங்களும் சுமூகமாக இருந்தாலும் சம்பள விஷயம் சரியாக இல்லை. ஏற்கெனவே வாங்கும் சம்பளத்தைவிட குறைவான சம்பளம், தவிர அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகள் மதிப்பை இழக்க வேண்டி இருக்கும் என்பதால் அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டார்.

டெஸ்லாவில் பங்குகள் கொடுப்பதாக உத்தரவாதம் இருந்தாலும் அந்த பங்குகள் உயர்வதற்கு மேலும் சில ஆண்டுகள் பிடிக்கக் கூடும் என்பதால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். மீண்டும் ஓர் ஆண்டுக்கு பிறகு டெஸ்லா நிறுவனத்திடம் இருந்து மீண்டும் அழைப்பு வருகிறது. இந்த முறை கொஞ்சம் பெரிய பொறுப்புக்கு என்பதால் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு டெஸ்லா நிறுவனத்தில் இணைகிறார். ”டெஸ்லா ஒரு அற்புதமான வாய்ப்பு. அதற்கு முன்பு எனக்கு ஆட்டோமேடிவ் துறையில் அனுபவமில்லை, அதே சமயம் டெஸ்லா சற்று மாறுபட்டதாகவும் இருந்தது. எலான் மஸ்கின் கனவின் ஒரு சிறிய பகுதிக்கு உயிர் கொத்ததில் மகிழ்ச்சி,” என்றார் ஜெய் விஜயன்.

டெஸ்லா நிறுவனம் தற்போது பெரிய நிறுவனம். வெற்றியடைந்த பிறகே அவரை பற்றி பலரும் படிக்கிறார்கள். ஆனால் அதற்கான திட்டங்களை பத்தாண்டுகளுக்கு முன்பே எலன் மஸ்க் வைத்திருந்தார். அவருடன் உரையாடியதில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என விஜயன் பலமுறை கூறியிருக்கிறார். வி.எம்.வேர் நிறுவனத்தில் செய்த வேலையை விட பல மடங்குக்கு அதிக வேலை செய்ய வேண்டி இருந்தது. நான் டெக்னாலஜி பகுதிக்கு மட்டுமே பொறுப்பு. ஆனால் பல துறைகள் இணைந்துதான் அந்த காரை உருவாக்க வேண்டும் என்பதால் எனக்கு மட்டுமல்லாமல் பல துறைகளை சேர்ந்தவர்களுக்கும் நெருக்கடி இருந்தது. இருந்தாலும் சொந்த சாப்ட்வேரில் இயங்கும் காரை நாங்கள் வடிவமைத்தோம்.

தற்போது அந்த கார் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டெஸ்லாவில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் வேலை செய்ததால் கொஞ்சம் இடைவெளி தேவைப்பட்டது. அதனால் விலகுகிறேன் எனக் கூறினேன். ஆனால் நீங்கள் தேவைப்பட்டால் சில வாரங்கள் ஒய்வு எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார் மஸ்க். ஆனால் அதுபோதுமானதாக இருக்கவில்லை. டெஸ்லாவில் இருந்து வெளியேறிய போது, ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது என்னுடைய Tekion நிறுவனத்துக்கான திட்டம் இருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்கமுடியவில்லை..

Tekion திட்டம்

அமெரிக்காவில் ஆட்டோமொபைல் துறை என்பது மிகப்பெரிய சந்தை. சுமார் 850 பில்லியன் டாலர் அளவுக்கு இதன் மதிப்பு இருக்கிறது. இதுவிற்பனை மட்டும். விற்பனைக்கு பிந்தையை சேவையை கணக்கில் எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. ஆனால் கார் வாங்குவதோ அல்லது சர்வீஸ் விடுவதோ அவ்வளவு எளிதாக இல்லை. வாடிக்கையாளர், கார் தயாரிப்பு நிறுவனங்கள் (ஒஇஎம்), விற்பனை மையங்கள் மற்றும் சேவை மையங்கள் என நான்கு தரப்பு உள்ளன. இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் பெரிய இடைவெளி இருந்தது. இந்த இடைவெளியை இணைக்கும் பணியை Tekion செய்கிறது. ஆரம்பத்தில் எங்களுடைய புராடக்டை மேம்படுத்த சில காலம் எடுத்துக் கொண்டோம். தவிர இதனை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதற்கு மேலும் அதிக காலம் ஆனாது. இது ’சிக்கன் அண்ட் எக்’ பிராபளம் என ஜெய் கூறினார்.

வினியோகம் செய்யும் நிறுவனங்களிடம் சென்றால் ஒஇஎம் நிறுவனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டார்களா எனக் கேட்கிறார்கள். ஒஇஎம் நிறுவனங்களிடம் சென்றால் விற்பனையாளர்கள் உங்களை ஏற்றுக்கொண்டார்களா என கேள்வி எழுப்பினார்கள். இதனால் முதல் ஆர்டர் கிடைக்க காலதாமதம் ஆனது. அதன் பிறகு ஒவ்வொரு பெரிய நிறுவனங்கள் மற்றும் டீலர்களை இணைத்தோம். இப்போது ஆட்டோமொபைல் துறையில் உள்ள பல நிறுவனங்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அட்வென்ட், ஏர்பஸ், எக்ஸார், இண்டெக்ஸ் வென்ச்சர்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்ரன. (இவரும் தனிப்பட்ட முறையில் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்) தற்போது சர்வதேச அளவில் 450 பணியாளர்கள் உள்ளனர்.

பெங்களூரு மற்றும் சென்னையில் Tekion அலுவலகம் செயல்பட்டுவருகிறது. ஆனால் தற்போது அமெரிக்காவில் மட்டுமே டெகியான் கவனம் செலுத்திவருகிறது. இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால் விரைவில் இந்திய சந்தையில் டெகியான் செயல்படத் தொடங்கும் என ஜெய் தெரிவித்தார். தற்போது பில்லியன் டாலர் சந்தை மதிப்பு என்பது பெரிய விஷயமாக இருந்தாலும் பில்லியன் டாலர் வருமானத்தை இலக்காகக் கொண்டு டெகியான் செயல்படுகிறது. இறுதியாக ஜெய் விஜயன் கூறுவது, “நீங்கள் வாழ்நாளில் செய்யும் தவறுகளில் இருந்து மட்டும் கற்றுக்கொள்வது போதுமானதல்ல, மற்றவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வது நல்லது,” என்கிறார்