தொழில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி ஏற்படுவது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் வழக்கு, பொது வெளியில் எதிரான தகவலை வெளியிடுவது என்பது அவ்வப்போது மட்டுமே நடக்கும். இப்போது அதுபோன்ற ஒரு சூழல் உருவாகி யிருக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பாரம்பர்யத்தை நோக்கிச் செல்ல திட்டமிட்டிருக்கும் சூழலில், பெரும் நிறுவனங்கள் தயாரிக்கும் தேன் உண்மையானது இல்லை என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre of Science and Environment) தெரிவித்திருக்கிறது.

டாபர், பதஞ்சலி, ஜண்டு, ஹிமாலாயா உள்ளிட்ட நிறுவனங் களின் தேன் 100% உண்மையான தேன் இல்லை. இதில் சர்க்கரை சிரப் சேர்க்கப்பட்டிருக்கிறது என சி.எஸ்.இ அமைப்பு தெரிவித்திருக்கிறது.

18 விதமான சோதனைகளில் சரியாக இருந்தால் மட்டுமே சுத்தமான தேன் எனச் சொல்லப் படுகிறது. ஆனால், தேர்ந்தெடுக் கப்பட்ட 13 பிராண்ட்களில் பெரும்பாலானவை இந்தச் சோதனை களில் தேர்வாகிவிட்டன. ஆனால், என்.எம்.ஆர் (Nuclear Magnetic Resonance) சோதனையில் பல நிறுவனங்கள் தோல்வி அடைந்து விட்டன.

இந்தியாவில் விற்பனை செய் வதற்கு என்.எம்.ஆர் சோதனை தேவையில்லை. ஆனால், இந்த நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தையில் கவனம் செலுத்துவதால் இந்தச் சோதனை அவசியமாகிறது.

இந்தச் சோதனை ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் செய்யப்பட்டது. சபோலா, மார்க்பெட் சொஹ்னா மற்றும் நேச்சுர் நெக்டர் ஆகிய நிறுவனங்களின் தேன் மட்டுமே என்.எம்.ஆர். சோதனையில் தேறின.

தற்போது கோவிட் தொற்று காலத்தில் ஆரோக்கியத்துக்காக மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். ஆனால், இதுபோன்ற தேனைப் பருகுவதால் நன்மை இருக்காது என சி.எஸ்.இ-யின் ஜெனரல் இயக்குநர் சுனிதா நரைன் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவிலே இதற்கான சர்க்கரை சிரப் உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. தவிர, சீனாவில் இருந்தும் இதுபோன்ற சிரப்கள் அதிகளவுக்கு இறக்குமதி செய்யப் படுகிறது.

சுத்தமான தேனில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரை சிரப்பை 50% முதல் 80% வரை சேர்த்தால் கூட நம்முடைய அனைத்து பரிசோதனை களில் இருந்தும் தப்பிக்க முடியும் என சுனிதா தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எங்கிருந்து தேன் வருகிறது என்பதை டிராக் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

தவிர, இதுபோன்ற கலப்படங் களால் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் தேன் தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கும் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது.

டாபர், பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்கள் நாங்கள் தயாரிப்பது 100% சுத்தமான தேன் எனக் கருத்து தெரிவித்திருக்கின்றன. இந்திய தரச்சான்று அமைப்பான எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 100-க்கும் மேற்பட்ட விதிமுறைகளை வகுத்துள்ளன.

இந்த அமைப்பின் அனுமதி யுடன் நாங்கள் விற்பனை செய்கிறோம் எனப் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பால்கிருஷ்ண ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

நாங்கள் தயாரிக்கும் தேன் 100% தூய்மையானது. தவிர, சீனாவில் இருந்து எந்தவிதமான சர்க்கரை சிரப்பையும் நாங்கள் இறக்குமதி செய்வதில்லை. அதுமட்டு மல்லாமல் ஜெர்மனியில் சோதனை செய்யப்படும் என்.எம். ஆர் சோதனை முறையை நாங்கள் எங்களுடைய ஆலையிலே செய்கிறோம் என டாபர் மறுத்திருக்கிறது.

டாபர் Vs மாரிகோ தரம் குறித்த யுத்தம்... போட்டிபோடும் நிறுவனங்கள்! - தேன் சந்தையில் திடீர் சர்ச்சை

டாபர் Vs மாரிகோ

இந்த நிலையில் டாபர் நிறுவனம் தங்களுடைய தேன் மிகவும் பாதுகாப்பானது என விளம்பரம் செய்தது. இதனால் மாரிகோ நிறுவனம், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சிலில் (Advertising Standards Council of India) முறையீடு செய்தது. டாபர் 100% தூய்மையானது என விளம்பரப்படுத்துவது முற்றிலும் தவறானது எனப் புகார் அளித்திருக்கிறது.

இந்த நிலையில் மாரிகோ மீது டாபர் புகார் அளித்திருக்கிறது. மாரிகோ நிறுவனத்தின் சபோலோ தேன் 100% தூய்மையானது அல்ல எனப் புகார் அளித்திருக்கிறது. ஆனால், சர்வதேச ஆய்வகங்களில் எங்களுடைய தேன் சோதனை செய்யப்பட்டிருக்கிறது என மாரிகோ விளக்கம் அளித்திருக்கிறது.

இந்த நிலையில் எங்கள் மீது தேவையற்ற புகார்களை மற்ற நிறுவனங்கள் அளித்திருக் கின்றன. இதனால் ஏ.எஸ்.சி.ஐ உள்ளிட்ட அமைப்புகளிடம் தெரிவித்திருக்கிறோம். ஆனால், இங்கு இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை எனில், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் என மாரிகோ தெரிவித்திருக்கிறது.

இதுவரை செய்யப்பட்ட அனைத்து சோதனைகளிலும் எங்களுடைய தேன் வெற்றி அடைந்திருக்கிறது. எந்த இடத்திலும் சிக்கல் ஏதும் இல்லை. இந்த நிலையில் போட்டி நிறுவனங்கள் எங்களது பிராண்ட் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்குமானால் அதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை களை நாங்கள் எடுப்போம் என்றும் மாரிகோ தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் தேனின் சந்தை மதிப்பு அபாரமானது. பெரிய அளவிலான சந்தை மதிப்பைக் கொண்டதுடன், எதிர்காலத்தில் அதன் மதிப்பு இன்னும் உயரும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய மதிப்புமிக்க பெரிய சந்தையைக் கைப்பற்றும் நோக்கில் ஒவ்வொரு நிறுவனமும் செயல் பட்டுவருகின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாகத் தேன் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டால் தனிநிறுவனங்களுக்கான பாதிப்பாக இது இருக்காது. மாறாக ஒட்டுமொத்த நிறுவனங்களுக்கான பாதிப்பாகவே இந்த நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடும்.

கடந்த காலங்களிலும் ஒரே துறையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இதுபோன்ற போராட்ட யுத்தங்களில் ஈடுபடும்போது ஒட்டுமொத்தமாக அந்தத் துறையே பாதிப் படைந்திருக்கிறது என்பதுதான் நம் கண் முன்னே இருக்கும் உண்மை.

தேனின் உயரும் சந்தை மதிப்பு!

டாபர் Vs மாரிகோ தரம் குறித்த யுத்தம்... போட்டிபோடும் நிறுவனங்கள்! - தேன் சந்தையில் திடீர் சர்ச்சை

சில பொருள்களின் சந்தை மதிப்பானது ஆச்சர்யம் தரக்கூடியதாக இருக்கும். தேனின் சந்தை மதிப்பும் அப்படித்தான். 2019-ம் ஆண்டு கணிப்பின்படி இந்தியாவில் தேனின் சந்தை மதிப்பு ரூ.1,730 கோடி ஆகும். இந்தச் சந்தை அடுத்த சில ஆண்டு களுக்கு சராசரியாக 10% அளவுக்கான வளர்ச்சி காணும் என்றும் கணிக்கப் பட்டிருக்கிறது. 2025-ம் ஆண்டு ரூ.3,000 கோடி சந்தையாக உயரும் வாய்ப்புள்ள துறையாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தேனின் பயன்பாடு இருப்பதால் அதன் சந்தை மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

நன்றி : நாணயம் விகடன்