க்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் ஓ.டி.டி தொழில்நுட்பம்மூலம் பலவிதமான படங்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன. ஹர்ஷத் மேத்தாவின் கதை சோனி லைவ் சேனலில் வந்ததைத் தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸில் பேட் பாய்ஸ் பில்லினர்ஸ் (Bad Boy Billionaires) என்னும் சீரிஸ் வெளியாகியிருக்கிறது. இதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, சுப்ரதா ராய் ஆகியோர் எப்படி முறைகேடு செய்தார்கள் என்பது துல்லியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சீரிஸில் சொல்லப்படும் மூன்று பேர் பற்றியும் பார்ப்போம்.

மல்லையா: கெட்ட நேரத்தின் ராஜா!

யுனைடெட் புரூவரிஸ் நிறுவனத்தின் தலைவர் விட்டல் மல்லையா. அவரின் ஒரே மகன் விஜய் மல்லையா. இந்தியாவில் மதுவுக்கு சமூக அங்கீகாரம் இல்லையென்பதால், விட்டல் மல்லையா பொதுவெளியில் பிரபலம் ஆக வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தார். பணம் இருந்தாலும் அதைக் காண்பித்துக்கொள்வதில் தயக்கம் கொண்டவராகவே இருந்தார்.

சுப்ரதோ ராய்

சுப்ரதோ ராய்

விஜய் மல்லையாவின் 28-வது வயதில் அவரின் அப்பா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதனால் வேறு வழியில்லாமல் 1983-ம் ஆண்டு யூபி குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை.

அப்பாவுக்கு நேர்மாறாகப் பொதுவெளியில் தன்னைக் காண்பித்துக்கொள்ளவும், மது குடிப்பதை ஒரு ‘லைஃப் ஸ்டைலாக’ மாற்றுவதிலும் அதிகம் கவனம் செலுத்தினார் விஜய். அப்போது நாட்டின் பல பகுதிகளில் மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மது தொடர்பான எந்தவிதமான விளம்பரங்களும் வெளியிடக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது.இதனால் கிங்ஃபிஷர் (சோடா) என்னும் பெயரை வெளியில் கொண்டு வர பல வகையான விளம்பரங்களை வெளியிட்டார். அப்போதுதான் ‘King of Good Times’ என்னும் டேக் லைன் வெளியிடப்பட்டது.

இந்த நேரத்தில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்னும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்காக விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த அலெக்ஸ் வில்காக்ஸ் என்பவரை சி.இ.ஓ-வாக நியமனம் செய்தார். ஆரம்பத்தில் பட்ஜெட் விமான நிறுவனம் என்னும் அடிப்படையில் அலெக்ஸ் இணைந்தார். ஆனால், ஓராண்டுக்குப் பிறகு, அதிக செலவானதால் அலெக்ஸ் விலகினார். மாடல்களைப் பணிப்பெண்களாக நியமனம் செய்வது, உணவு அதிகம் கொடுப்பது உள்ளிட்ட காரணங்களால் 20% கூடுதலாக செலவானது. முதல் 18 மாதங்களில் ரூ.347 கோடி அளவுக்கு நஷ்டம் வந்தது. ஆனாலும், புதிய விமானங்களை வாங்க பல மில்லியன் டாலர் செலவு செய்தார். இதற்காக பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கினார்.

மல்லையா, நீரவ் மோடி
சுப்ரதோ ராய்

மல்லையா, நீரவ் மோடி சுப்ரதோ ராய்

இந்த நிலையில், ஏர்டெக்கான் நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கினார். ஃபார்முலா ஒன் டீம், ராயல் சேலஞ் பெங்களூரு என விளையாட்டிலும் இறங்கினார். 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இந்த அனைத்து முதலீடுகளும் தவறாக முடிய, கச்சா எண்ணெய் விலை 145 டாலராக அதிகரித்ததால், லாபத்தை அடையவே முடியவில்லை.

இந்த நிலையில், 2009-ம் ஆண்டு ஐ.டி.பி.ஐ வங்கியில் 20 கோடி டாலர் அளவுக்குக் கடன் வாங்கினார் மல்லையா. கிங்ஃபிஷர் நிறுவனம் கொடுத்த வருமானம் குறித்த எதிர்பார்ப்பு அடிப்படையிலும், கிங்ஃபிஷர் பிராண்ட் மதிப்பு அட்டிப்படையிலும் கடன் தரப்பட்டது.

‘‘இது சரியான முடிவல்ல. கிங்ஃபிஷர் மற்றும் யுபி குழுமம் விரைவில் திவாலாகும்’’ என வெரிடாஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சொல்ல, அதை அப்படியே நிராகரித்தார் மல்லையா. பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தாரும், ‘‘விமான நிறுவனத்தை விற்று, பிரச்னையைத் தீர்க்கலாம்’’ என மல்லையாவுக்கு ஆலோசனை வழங்க, அதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

விமான நிறுவனத்தின் பிரச்னை தொடர்ந்து அதிகரித்தது. பணியாளர்களுக்கு குறிப்பாக, இந்தியாவில் இருக்கும் பணியாளர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை. இதனால் கிங்ஃபிஷர் பணியாளரின் மனைவி தற்கொலை செய்துகொள்ள, மல்லையா தனது 60-வது பிறந்தநாளை கோவாவில் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடியது கடும் சர்ச்சைக்குள்ளானது.

கிங்ஃபிஷர் கடனுக்காக வாங்கிய தொகை வேறு தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டதாக சி.பி.ஐ வழக்கு தொடுக்க, அடுத்து சிறைதான் என்பதைப் புரிந்துகொண்ட மல்லையா, லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியா கொண்டுவரும் முயற்சி தொடர்கதையாக நடந்துவருகிறது. அவர் வாங்கிய கடனில் (ரூ.9,000 கோடி) பெரும்பகுதி இன்னும் அவரிடமிருந்து திரும்பப் பெறமுடியாமலே இருக்கிறது.

வெறும் பேப்பரில் பித்தலாட்டம்

குஜராத்தைச் சேர்ந்தவர் நீரவ் மோடி. இவரின் அப்பாவும் தாத்தாவும் ஜுவல்லரி தொழிலில் இருந்தவர்கள். இவரின் உறவினர் மெகுல் சோக்சி, கீதாஞ்சலி ஜெம்ஸ் என்னும் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் நீரவ் மோடி 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்தியாவில் டைமண்டின் தலைநகரம் சூரத். வெளிநாடுகளில் இருந்துவரும் டைமண்டை பாலிஷ் செய்வதுதான் இங்கு முக்கியத் தொழில். சுமார் 10 லட்சம் நபர்கள் இந்தப் பணியில் இருக்கிறார்கள். சர்வதேச அளவில் நடக்கும் பாலிஷ்களில் 90% சூரத்தில் நடக்கிறது.

மல்லையா, நீரவ் மோடி சுப்ரதோ ராய்... செய்த குற்றம் என்ன? - ஓ.டி.டி சீரிஸ் சொல்லும் உண்மைகள்!

மெகுல் சோக்ஸியின் நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு, டைமண்ட் பாலிஷ் செய்யும் நிறுவனத்தைத் (FireStar Diamond) தொடங்குகிறார். ஆனால், இதில் பெரிய அளவில் லாபம் இல்லை. அதனால் ரீடெயில் பிரிவைத் தொடங்கினார். ஆனால், அந்த வேலையை ஏற்கெனவே பல நிறுவனங்கள் செய்துவந்ததால், அவரது நிறுவனத்தை சொகுசு பிராண்டாக மக்களின் மனதில் பதிக்கத் திட்டமிட்டார். இதற்கு அதிகம் செலவு செய்தார். அதே நேரம், சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்தார். இதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் ரகசியமாகவே இருந்தது.

வங்கி நடைமுறையில் இருக்கும் ஒரு சிறிய ஓட்டையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் நீரவ். நம் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் லெட்டர் ஆஃப் அன்டர்ஸ்டாண்டிங் (letter of undertaking) என்னும் பத்திரத்தை வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு ஈடாக பிணை கொடுக்க வேண்டும். ஆனால், நீரவ் மோடி பணம் தரவில்லை. மாறாக, வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தொடர்ந்து இந்தப் பத்திரத்தைப் பெற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள ஒரே ஒரு கிளை (மும்பை) மூலம் பலமுறை இந்தப் பத்திரத்தை வாங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், அந்த வங்கியின் துணைப் பொது மேலாளர் ஓய்வு பெற்றுவிட, புதிய மேலாளரிடம் பத்திரத்தைக் கேட்கிறார் நீரவ். புதிதாக வந்த அதிகாரி பிணை கேட்க, ‘‘இதுவரை அப்படி எதுவும் கொடுத்ததில்லை’’ என்று பதில் சொல்ல, நீரவ்வின் பழைய கணக்குகள் ஆய்வுக்குள்ளாகின்றன. அதன் பிறகு, அவர் செய்த மோசடி வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது இங்கிலாந்து அரசாங்கம். ஆனால், அவரிடமிருந்து ஒரு ரூபாய்கூட பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கிடைக்கவில்லை.

பொன்ஸி திட்டத்தில் பல ஆயிரம் கோடி மோசடி..!

இந்த ஓ.டி.டி சீரிஸை எதிர்த்து சத்யம் ராமலிங்க ராஜு வழக்கு தொடுத்திருப்பது போலவே, சில நாள்களுக்கு முன்பு சஹாரா நிறுவனம் வழக்கு தொடுத்து, நிறுத்த பார்த்தது. ஆனால், நீதிமன்றம் அதற்குச் சாதகமாக இல்லை. சஹாராவின் தலைவர் சுப்ரதோ ராய் செய்த குற்றம் என்ன?

1978-ம் ஆண்டு சஹாரா நிறுவனத்தைத் சுப்ரதா ராய் தொடங்கினார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இவர், இதற்கு முன்பாக சிறுசிறு தொழில்களைச் செய்து வந்தார். அந்தத் தொழிலுக்காக கிராமங்களுக்குச் செல்லும்போது பலரிடம் பணம் இருப்பதையும் அந்தப் பணத்தை முதலீடு செய்ய வழியைத் தேடி வருகிறார்கள் என்பதையும் உணர்ந்தார். அப்போது பொதுத்துறை வங்கிகளும் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செல்லவில்லை. அதனால் சிறு முதலீட்டாளர்களிடம் தினமும் 10 ரூபாய், 20 ரூபாய் என வசூலிக்கத் தொடங்கினார். குறிப்பிட்ட காலத்தில் (மூன்று ஆண்டுகளில்) இரட்டிப்பு என விளம்பரம் செய்தார். ஆரம்ப காலத்தில் முதலீடு செய்தவர்களுக்கு சொன்னபடி பணத்தைத் திருப்பித் தந்தார். இதனால் சஹாரா நிறுவனம் பிரபலமானது. பல மாநிலங்களில் புதிய ஏஜென்ட்டுகள் சேர்க்கப்பட, அவர்களின் கடும் உழைப்பில் நிறுவனம் வேகமாக வளர்ந்தது.

முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைக் தர வேண்டும் என்றால், தொடர்ந்து புதியவர்கள் சஹாராவில் முதலீடு செய்ய வேண்டும். இதற்காகத் தொடர்ந்து விளம்பரங்கள் தருவது, ஏழைகளுக்கு உதவுவது, திருமணங்களை நடத்தி வைப்பது என சமூகத்தில் முக்கிய முகமாகத் தன்னை முன்நிறுத்திக்கொண்டார். சுப்ரதோ. இதனால் புதிய முதலீட்டாளர்கள் பலர் வந்தனர். தொடர்ந்து முதலீடுகள் கிடைத்து வந்ததால், ரியல் எஸ்டேட் (ஆம்பி வேலி), மீடியா, கிரிக்கெட் ஸ்பான்ஸர், மியூச்சுவல் ஃபண்ட் எனப் பல நிறுவனங்களைத் தொடங்கினார். 2004-ம் ஆண்டு அவரின் மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியது எல்லோர் கண்களையும் உறுத்தியது.

ஆரம்ப காலத்தில் சரியாக முதலீடுகளைத் திருப்பித் தந்த சுப்ரதோ, அதற்கடுத்து பணத்தைத் திருப்பித் தரவில்லை. டெபாசிட் முதிர்வடையும்போது, அதை மறுமுதலீடு செய்ய முதலீட்டாளர்களை நிர்ப்பந்தம் செய்தார். அதுவும் குறுகியகாலத்தில் இரட்டிப்பாகும் என உத்தரவாதம் வழங்கப் பட்டதால், முதலீட்டாளர்கள் பணத்தை எடுக்காமல் மீண்டும் முதலீடு செய்தனர்.

ஒரு கட்டத்தில் கிராமங்களில் டெபாசிட் தொகையை வசூலிக்க சஹாரா பணியாளர்கள் வருவதில்லை. கிராமங்களில் இருப்பவர்கள் அந்தந்த மாவட்டத் தலைநகரில் உள்ள அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சொல்ல, பலரும் பணத்தைத் தொடர்ந்து செலுத்த முடியாத நிலை உருவானது. பணம் கட்டவில்லை என்றால் ஏற்கெனவே இருக்கும் பணத்தையும் எடுக்க முடியாது என்னும் கடிதத்தை சஹாரா நிறுவனம் அனுப்ப, முதலீட்டாளர்கள் கொதித்தெழுகிறார்கள்.

இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது என்னும் நிலையில், ‘‘எப்போது ஐ.பி.ஓ கொண்டு வருவீர்கள்’’ எனப் பத்திரிகையாளர் சேகர் குப்தா கேள்வி கேட்க, அடுத்த சில மாதங்களில் ஐ.பி.ஓ கொண்டு வர இருப்பதாக ராய் பதில் சொல்ல பிரச்னையில் சிக்கினார். ஐ.பி.ஓ வருவதற்காக நிதி சார்ந்த தகவல்களைப் பொது வெளிக்குக் கொண்டு வர, இதை ஆய்வு செய்த செபி கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. ‘சஹாரா நிறுவனம் முதலீட் டாளர்களிடம் பணத்தைத் திரட்ட அனுமதி கிடையாது’ என செபி சொன்னது. ‘‘எங்களிடம் முதலீடு செய்தவர்கள் சஹாரா குழுமத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் செபி வரம்புக்கு நாங்கள் வரத்தேவையில்லை’’ என சஹாரா சொல்ல, இந்த வாதத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ‘‘பொதுமக்களிடம் பணம் திரட்டியதில் ஒழுங்குமுறை ஆணையங்களின் விதியைப் பின்பற்றவில்லை. எனவே, மக்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூ.25,000 கோடியைத் திரும்பத் தர வேண்டும’’் என உச்ச நீதிமன்றம் சொல்ல, அடுத்த சில மாதங்களில் சுமார் ரூ.20,000 கோடியை ரொக்கமாகத் திருப்பிக் கொடுத்ததாக சஹாரா அறிவித்தது. ஆனால், அதற்கான ஆதாரம் வேண்டும் என்று செபி கேட்க, 137 லாரிகளில் ஆவணங்களை செபி அலுவலகத்தில் சமர்ப்பித்தது சஹாரா. இதைக் கண்டு ஆத்திரமடைந்த செபி, சஹாரா நிறுவனத்தின் மீதான நெருக்கடியை மேலும் அதிகரித்தது. சஹாரா, பணத்தைத் திருப்பித் தந்துவிட்டதாகச் சொன்ன 20,000 நபர்களுக்கு செபி கடிதம் அனுப்பியது. பலருக்கும் பணம் தரப்படவில்லை என்ற உண்மை வெளியாக, 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் லக்னோவில் அவர் கைது செய்யப்பட்டு, இன்றும் சிறையிலேயே இருக்கிறார். ஆனால், பெரும்பாலான முதலீட்டாளர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்ட வசமானது.

இந்த டாக்குமென்ட்ரியானது ஆங்கிலத்தில் இருப்பதால், பலரும் பார்க்க முடியும் என்றாலும், இதைத் தமிழில் கொண்டு வந்தால்தான் சாதாரண மனிதர்களும் பார்ப்பார்கள். இதைப் பொழுதுபோக்காகப் பார்க்காமல் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், எப்படி ஏமாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்னும் கண்ணோட்டத்தில் முதலீட்டாளர்கள் பார்த்து பாடம் படிக்க வேண்டும்!