வாழ்க்கை என்றாலே நல்லதும் கெட்டதும் சேர்ந்துதான் நடக்கும். ஆனால், 2020-ம் ஆண்டு கொஞ்சம் வித்தியாசமானது. பெரும்பாலான வர்களுக்கு பல கெட்ட விஷயங்களும், மிகச் சிலருக்கு எல்லா நல்ல விஷயங் களும் சென்றடைந்திருக்கிறது. அந்த ஒரு சிலரில் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர் எலான் மஸ்க்.

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் டெஸ்லாவின் சந்தை மதிப்பு 834 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. இதற்கு ஒருநாள் முன்பாக ஜனவரி 7-ம் தேதி சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் மஸ்க் முதல் இடத்தைப் பிடித்தார்.

2017-ம் ஆண்டு முதல் இந்தப் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் இருந்தார். தற்போது அந்த இடத்தை மஸ்க் பிடித்திருக்கிறார். டெஸ்லா நிறுவனத்தில் 21% பங்குகள் மஸ்க் வசம் உள்ளன. இது தவிர, டெஸ்லா நிறுவனத்தின் மாற்றத்தக்க பங்குகளை 2012 மற்றும் 2018-ம் ஆண்டு இயக்குநர் குழு வழங்கியிருக்கிறது.

இதனால் ஜனவரி 7-ம் தேதி வர்த்தக நிலவரப்படி, மொத்த பங்கு களின் சந்தை மதிப்பு 195 பில்லியன் டாலர்கள். இவருக்கு அடுத்து இருக்கும் ஜெஃப் பெசோஸ் சந்தை மதிப்பு 185 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

ஆனால், அமேசான் நிறுவனத்துக்கு 2020-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு தான். பொருள்களை வாங்குவதற்கு இணையம் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதால், அமேசான் பங்குகள் 1,880 டாலரிலிருந்து 3,180 டாலர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இருந்தாலும் இதைவிட டெஸ்லா ஏற்றம் அதிகம் என்பதால், மஸ்க் முதல் இடத்துக்கு வந்தார்.

ஓராண்டில் ஏற்றம்…

2020-ம் ஆண்டு டெஸ்லா பங்குகளுக்கு சந்தையில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த ஆண்டில் மட்டும் 743% அளவுக்கு ஏற்றம் இருந்தது. மேலும், இந்த ஆண்டில் மட்டும் எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்தும் மதிப்பு 150 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந் திருக்கிறது. கடந்த ஆண்டில் ஒரு மணி நேரத்துக்கு 127 கோடி ரூபாய் அளவுக்கு சம்பாதித்திருக்கிறார். கடந்த ஆண்டில் மட்டும் ஐந்து லட்சம் கார்களை டெஸ்லா விற்பனை செய்திருக்கிறது.

சர்வதேச அளவில் போக்ஸ்வேகன், டொயோட்டா, நிஸான், ஹூண்டாய், ஜிஎம், ஃபோர்டு, ஹோண்டா, ஃபியட் க்ரைஸ்லர் மற்றும் பெஜோ (Peugeot) உள்ளிட்ட ஒன்பது கார் நிறுவனங்களின் சந்தை மதிப்பைவிட டெஸ்லா சந்தை மதிப்பு அதிகம். ஆனால், சர்வதேச அளவில் விற்பனையாகும் கார்களில் ஒரு சதவிகிதத்துக்கும் கீழான எண்ணிக்கையில்தான் டெஸ்லாவின் கார்கள் விற்பனை ஆகின்றன. இதை சூசகமாகக் குறிப்பிட்டுத்தான் `How Strange’ என்னும் வார்த்தையைத் தன்னுடைய ட்விட்டரில் மஸ்க் எழுதியிருந்தார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ட்ரில்லியன் டாலர்..?

டெஸ்லா சந்தை மதிப்பு 800 பில்லியன் டாலர்களைக் கடந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட இலக்கு ட்ரில்லியன் டாலர் என்னும் யூகங்கள் சந்தையில் எழத் தொடங்கியிருக்கின்றன. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே சந்தை மதிப்பு அடிப்படையில் டெஸ்லா வைவிட அதிகமாகவும் ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பிலும் வர்த்தகமா கின்றன. (டெஸ்லாவுக்கு அடுத்த இடத்தில்தான் ஃபேஸ்புக் இருக்கிறது). அதனால் ட்ரில்லியன் டாலர் பட்டியலில் டெஸ்லா இணையும் எனக் கணிப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

ஆனால், நிறுவனம் மட்டுமல்லாமல், ட்ரில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைய இருக்கும் முதல் தனிநபர் எலான் மஸ்க் என சோஷியல் கேப்பிடல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாமத் புலிஹபிட்டியா (Chamath Palihapitiya) தெரிவித் திருக்கிறார்.

டெஸ்லாவின் ஏற்றத்தைப் பயன்படுத்தி பங்குகளை விற்க முதலீட்டாளர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்த விலையிலிருந்து மூன்று மடங்கு அளவுக்கு இதன் பங்குகள் உயரும் எனத் தெரிவித்திருக்கிறார். அடுத்த சில ஆண்டுகள் டெஸ்லா நிறுவனத்துக்குச் சாதகமான ஆண்டுகள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஷார்ட் போன டிரேடர்கள்…

ஆனால், ‘இந்த ஏற்றத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக டெஸ்லா இருக்கும்’ என்றும் ஒருசில வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார். அது 2007-ம் ஆண்டு நடந்த வீழ்ச்சிபோல மிகப்பெரிதாகவும் இருக்க வாய்ப்புள்ளதும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

மைக்கேல் பரி என்னும் பெரு முதலீட்டாளர் டெஸ்லாவின் பெரும்பாலான பங்குகளை ஷார்ட் பொசிஷன் எடுத்திருக் கிறார். பங்குகளை விலை மதிப்பு ஏற்புடையது அல்ல என்றும் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

வருமானம் 40 பில்லியன்; சந்தை மதிப்பு 800 பில்லியன்…

இது 17 ஆண்டு நிறுவனம். 2020-ம் ஆண்டு 5 லட்சம் கார் களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. 2021-ம் ஆண்டு 10 லட்சம் கார்களை விற்பனை செய்கிறது என்று வைத்துக் கொண்டால்கூட 40 பில்லியன் டாலர் (ஒரு கார் விலை 40,000 டாலர்) அளவுக்கு மட்டுமே வருமானம் கிடைக்கும். ஆனால், தற்போது சந்தை மதிப்பு 800 பில்லியன் டாலர் என்பதால், இந்த மதிப்பு நிச்சயம் சரிவடை யும் எனப் பலரும் தெரிவிக் கின்றனர்.

ஆனால், டொயோட்டா மற்றும் போக்ஸ்வேகன் ஆகிய இரு நிறுவனங்களின் விற்பனை 500 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும். இந்த இரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் ஆட்டோ மொபைல் துறையின் மொத்த சந்தை மதிப்பை டெஸ்லாவிடம் இருப்பதால் சரிவு நிச்சயம் எனக் கூறும் வல்லுநர்களும் இருக்கிறார்கள்.

டெஸ்லாவுடன் மோதும் ஆப்பிள்…

தவிர, ஆப்பிள் நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை 2024-ம் ஆண்டு செல்ஃப் டிரைவ் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால், இன்னும் சில ஆண்டு களானாலும் ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிளுக்கு முன் ஸ்மார்ட் போன் சந்தையில் பிளாக்பெரி இருந்தது நினைவில் இருக்கலாம். 2014-ம் ஆண்டு முதல் இதற்கான வேலைகளை ஆப்பிள் செய்து வருகிறது. இதற்காக டெஸ்லாவின் முன்னாள் பணியாளர்களை ஆப்பிள் பணியமர்த்தி இருக்கிறது.

தவிர, ஆப்பிளுக்கும் டெஸ்லாவுக்கு பழைய பகை ஒன்று மீதம் இருக்கிறது. 2017-ம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் கடும் நிதிச் சிக்கலில் இருந்தது. கிட்டத்தட்ட திவாலுக்கு அருகே சென்று தப்பித்தது என்று சொல்லலாம். அப்போது 60 பில்லியன் டாலருக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் விற்பதற்கு எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம்குக் சந்திக்க மறுத்துவிட்டதாக எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன் ட்வீட் செய்திருந்தார். ஆனால், தற்போது டெஸ்லாவின் சந்தை மதிப்பு 800 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கிறது.

இந்தப் பிரச்னைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்ட டெஸ்லாவின் சந்தை மதிப்பு தொடர்ந்து தாக்குப் பிடித்து நிற்குமா, இன்னும் வளர்ந்து ட்ரில்லியன் டாலர் மதிப்பைத் தொடுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு பதில், பொறுத்திருந்து பாருங்கள். காரணம், 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு டெஸ்லாவுக்கு முக்கியமானது.

பரபர விற்பனையில் இரு சக்கர வாகனங்கள்!

நம் நாட்டில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை அமோகமாக இருக்கிறது. நாடு முழுக்க உள்ள 1477 ஆர்.டி.ஓ அலுவலகங்களில் 1,270 அலுவலகங்கள் மூலம் கிடைத்த தகவல்கள்படி, கடந்த ஆண்டு டிசம்பரைவிட கடந்த டிசம்பரில் 2,18,775 கார்கள் அதிகமாக விற்பனை ஆகியுள்ளன. இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, கடந்த டிசம்பரில் 14,24,620 வாகனங்கள் விற்பனை ஆகின. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் 12,73,318 வாகனங்களே விற்பனை ஆகின. ஆனால், இந்த அதிவேக விற்பனையை நம்ப முடியாது. இன்னும் சில மாதங்களில் விற்பனை குறைந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்று எச்சரித்திருக்கிறது மாருதி நிறுவனம்!

நன்றி : நாணயம் விகடன்