இந்தியாவில் சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன; சீன மொபைல் நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் பெரும் பங்கை வைத்திருக்கின்றன. ஆனால், நமக்குத் தெரிந்த ஒரே சீனத் தொழில் அதிபர் ஜாக் மா மட்டுமே. கடந்த சில ஆண்டு களாகவே சீனாவின் தொழில்துறையின் முகமாக இவர் இருந்து வருகிறார். ஆனால், தற்போது புதிதாக ஜாங் ஷான்ஷான் (Zhong Shanshan) என்ற தொழில் அதிபர் சீனப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். தவிர, புளூம்பெர்க் வெளியிட்டுள்ள ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 11-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் ஜாங் ஷான்ஷான்.

யார் இந்த ஜாங் ஷான்ஷான், இதுவரை எந்தப் பட்டியலிலும் இல்லாத இவர், எப்படி திடீரென சர்வதேச கவனம் பெற்றார், இவர் என்ன தொழில் செய்கிறார், இவருடைய வாழ்க்கைப் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.

சர்வதேச அளவில் பெரிய பணக்காரராக இருக்க வேண்டுமென்றால், டெக்னாலஜி துறை சார்ந்த நிறுவனமாக இருக்கும்; இல்லையெனில், பெரிய வங்கி மற்றும் நிதித் துறையைச் சேர்ந்த நிறுவனங்களாக இருக்கும். இதுவும் இல்லையென்றால், பெருங்குழுமன் (conglomerate) என்று சொல்லப்படக்கூடிய பல துறையைக் கையாளும் நிறுவனமாக இருக்கும். ஆனால், ஜாங் ஷான்ஷான் இதில் எந்தத் துறையிலும் இல்லை.

சீனாவின் மிகப்பெரிய வாட்டர் பாட்டல் நிறுவனத்தை வைத்திருக்கிறார். தவிர, பார்மா நிறுவனம் வைத்திருக்கிறார். இவை இரண்டு மட்டுமே இவரது சொத்து மதிப்பு உயர்வதற்குக் காரணம். இந்தப் பட்டியல் வெளியான சமயத்தில் இவரது சொத்து மதிப்பு 77.8 பில்லியன் டாலர். ஆனால், இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 70.9 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஒரே ஆண்டில் இதுவரை இவ்வளவு பெரிய சொத்து மதிப்பு ஏற்றம் நடந்ததில்லை என புளூம்பெர்க் தெரிவித்திருக்கிறது.

ஜாங் ஷான்ஷான்

ஜாங் ஷான்ஷான்

ஷான்ஷான் ஆரம்ப காலம்..?

சீனாவில் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் ஜாங் ஷான்ஷான் . ஆனால், புரட்சி காரணமாக பள்ளிப்படிப்பை முடிக்க முடியவில்லை. அதனால் பல சிறுசிறு வேலைகள் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டார். கட்டுமானத் தொழிலாளர், பத்திரிகையாளர், விற்பனைப் பிரதிநிதி எனப் பல வேலைகள் செய்தார். இதன் பிறகு, சொந்தத் தொழில் தொடங்கினார்.

1996-ம் ஆண்டு வாட்டர் பாட்டில் நிறுவனத்தை (Nongfu Spring) தொடங்கினார். கடந்த செப்டம்பரில் இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியானது. இந்தப் பங்குகளுக்கு சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 1,148 மடங்கு அளவுக்கு விண்ணப் பங்கள் குவிந்தன. இந்த நிறுவனத்தில் 84% பங்குகள் ஜாங் ஷான்ஷான் வசம் உள்ளது. மக்களின் வருமானம் உயர்ந்து வருதல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அச்சம் அதிகரித்து வருதல் போன்ற காரணங்களால், இந்தப் பங்குகளுக்கு சந்தையில் நல்ல தேவை இருந்தது. 2014-ம் ஆண்டு கணக்கின்படி, ஒரு தனிநபர் ஆண்டுக்கு 41 லிட்டர் அளவுக்கு வாட்டர் பாட்டில் வாங்குகிறார். ஆனால், 2019-ம் ஆண்டு இது 59 லிட்டராக உயர்ந்திருக்கிறது. தவிர, சீன வாட்டர் பாட்டில் சந்தையில் 29% அளவுக்கு இந்த நிறுவனத்தின் வசம் உள்ளது. முதல் மூன்று வர்த்தக தினத்தில் 60% அளவுக்கு உயர்ந்த இந்தப் பங்கு தற்போது வரை 155% வரை உயர்ந்திருக்கிறது.

இவரது மற்றொரு முக்கிய நிறுவனமான பெய்ஜிங் வாண்டய் பயாஜிக்கல் பார்மா நிறுவனம் கடந்த ஏப்ரலில் ஐ.பி.ஓ வெளி யானது. இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு 2,447 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. தடுப்பூசிகள், மருத்துவச் சாதனைகள் தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தவிர, கோவிட் தடுப்பூசி சோதனைகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதனால் ஏப்ரலில் பட்டியலானதைவிட சுமார் 20 மடங்குக்குமேல் இந்த பார்மா நிறுவன பங்கு உயர்ந்து வர்த்தகமாகிறது. இந்த இரு நிறுவனங்களும் ஒரே ஆண்டில் பட்டியலாகி பெரும் வெற்றி பெற்றிருப்பதால், 66 வயதான ஜாங் ஷான்ஷான் சர்வதேச கவனம் பெற்றிருக்கிறார்.

தலைமறைவில் ஜாக் மா…

சொத்து மதிப்பு உயர்வதற்கு இவரது இரு நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சி காரணமாக இருந்தாலும் ஆசிய அளவில் முக்கிய பணக்காரராக உயர் வதற்கு ஜாக் மாவின் சரிவும் காரணம். கடந்த சில மாதங் களாகவே சிக்கலைச் சந்திக்கும் ஜாக் மாவின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலர் அளவுக்குச் சரிந்திருக்கிறது. இதனால் இந்தப் பட்டியலில் 25-வது இடத்துக்கு ஜாக் மா தள்ளப்பட்டிருக்கிறார். தவிர, அவர் மீது சீன அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதால், கடந்த இரு மாதங்களாக தலைமறைவாகவே இருக்கிறார் ஜாக் மா.

அட்டவணை

அட்டவணை

பின்னுக்குத் தள்ளப்பட்ட அம்பானி…

கடந்த ஆண்டு முகேஷ் அம்பானிக்கு சிறப்பான ஆண்டாக இருந்தது. ரிலையன்ஸ் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், கடைசி இரு மாதங்களில் சுமார் 20% வரை குறைந்ததன் காரணமாக இந்தப் பட்டியலில் 12-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 4-வது பணக்காரராக முகேஷ் அம்பானி இருந்தது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டில் 90 பில்லியன் டாலராக இருந்தது, தற்போது 76.5 பில்லியன் டாலராக சரிந்திருக்கிறது.

ஒரே ஆண்டில் 70 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக் கிறார் சீனாவின் ஷான்ஷான்.

நன்றி : நாணயம் விகடன்