ட்டுமொத்தத் தொழில்துறையே கோவிட் 19-ல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் புதிதாக நிதி திரட்ட முடிகிறதென்றால், ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? குழந்தைகளின் கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுப் பிரிவில் செயல்பட்டுவரும் நிறுவனமான ஃபிளின்டோபாக்ஸ் சில நாள்களுக்கு முன்னர் 7.2 மில்லியன் டாலர் அளவுக்கு நிதியைத் (லைட்பாக்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம் முதலீடு செய்தது) திரட்டியது.

சென்னையைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், குழந்தைகளின் திறனை மேம்படுத்த `ஃபிளின்டோபாக்ஸ்’ என்னும் புராடக்டையும், ப்ரீ ஸ்கூல் பிரிவில் கல்வி நிறுவனங்களுக்கான பாடத்திட்டத்தையும் வழங்கிவருகிறது. இந்த நிதித் திரட்டலைத் தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் இணை நிறுவனர் அருண்பிரசாத் துரைராஜுடன் பேசினோம்.

லாக்டௌன் காலத்தில் நிறுவனம் பெற்ற அனுபவம்..?

‘‘இதுவரை பந்த், மழை, வெள்ளம், புயல் போன்ற தற்காலிக சிக்கல்களை மட்டுமே நாம் சந்தித்துவந்தோம். முதன்முறையாகப் பல மாதங்கள் லாக்டௌன் என்பதை நாம் பார்க்கிறோம். இது புது அனுபவம். இதை நாங்கள் புரிந்துகொள்ளவே இரு வாரங்கள் ஆனது. அதன் பிறகு அடுத்த சில மாதங்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்பது புரிந்தது. அதைத் தொடர்ந்து பணியாளர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவித்தோம்.’’

லாக்டௌன் காலத்தில் வருமானம் எப்படி இருந்தது?

‘‘2 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளின் திறன் வளர்ப்பு, விளையாட்டு, புதியவற்றைக் கற்றுக்கொள்ளுதல், கிரியேட்டிவிட்டி போன்றவற்றை மேம்படுத்தும் ஆக்டிவிட்டிகளை உருவாக்குகிறோம். லாக்டௌன் காலத்தில் லாஜிஸ்டிக்ஸ் போன்ற பல பிரச்னைகள் இருந்தன. அதனால் வருமானம் இல்லை. மாறாக, நிறைய புதிய வாடிக்கையாளர்கள் எங்களை அணுகினார்கள்.

லாக்டௌன் தொடங்கிய காலத்தில் குழந்தைகள் டி.வி பார்த்தார்கள், கேம்ஸ், மொபைல் என அடுத்தடுத்து டிஜிட்டல் மூலமாக அவர்களைக் கையாள முடிந்தது. `குழந்தைகளிடம் மொபைலைக் கொடுப்பது நிரந்தரத் தீர்வல்ல’ என்று உணர்ந்த பெற்றோர்கள், அவர்களின் திறனை வளர்க்கத் திட்டமிட்டனர். அதனால் எங்களுக்குப் பல புதிய விசாரணைகள் வந்தன. இதனால் வருமானம் திருப்திகரமான நிலையில் உள்ளது. பிப்ரவரி மாத வருமானத்தில் 70% அளவுக்கு ஜூன் மாத வருமானம் இருந்தது.’’

நெருக்கடியான இந்த நேரத்தில் ஏன் நிதி திரட்ட வேண்டும்… வேல்யூவேஷன் குறைவாக இருக்குமே?

‘‘இந்த ஆண்டு தொடக்கத்திலே நிதி திரட்டும் யோசனையில் இருந்தோம். கோவிட் சிக்கல் எழுந்தபோது, ஏன் நிதி திரட்ட வேண்டும் என்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் எங்களிடம் இருந்தன. முதலாவது, ஒரே நாளில் சந்தையில் தேவை குறைந்துவிடாது. இரண்டாவது, ப்ரீ ஸ்கூல் புராடக்டுக்கான தேவை.

ப்ரீ ஸ்கூல் பிரிவில் ஒரு வகுப்பறையிலுள்ள அத்தனை மாணவர்களுக்கும் 20 நாள்களுக்குத் தேவையான புராஜெக்டுகளை / பாடத் திட்டங்களை பள்ளிகளுக்கு வழங்குவோம். இன்னும் சில மாதங்களுக்கு ப்ரீ ஸ்கூல் நடக்காது. அதனால் இந்தப் பாடத்திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நினைத்தோம்.

ப்ரீ ஸ்கூல் நிலையிலுள்ள ஒரு குழந்தைக்கு 20 நாள்களுக்குத் தேவையான ஆக்டிவிட்டியை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு நிதி தேவைப்பட்டது, வெற்றிகரமாக ப்ரீ ஸ்கூல் @ ஹோம் (Flintoclass@HOME) என்னும் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம்.

கோவிட்-19 நேரத்தில் நிதி திரட்டினால் கொஞ்சம் குறைவான மதிப்பீட்டில்தான் நிதி கிடைக்கும். ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கான நிதி கையில் இருந்தால்தானே அடுத்தகட்ட வளர்ச்சி இருக்கும்… எனவே, வேல்யூவேஷனை மட்டும் கருத்தில்கொண்டு செயல்படாமல் நிதி திரட்டினோம்.’’

நாம் தினமும் பல ஜூம் மீட்களைக் கடக்கிறோம். கல்வித்துறையில் இருக்கும் உங்களின் கருத்து என்ன?

‘‘லாக்டௌன் தொடங்கிய சமயத்தில் இது போன்ற இணையவழிக் கூட்டங்களுக்கு ஒரு தற்காலிகத் தேவை உருவானது. தவிர, புதிதாக இருந்ததால் பலரும் புதிய முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது இதற்கான கவர்ச்சி குறைந்துவிட்டது. இப்போது தேவை இருக்கும் இடங்களில் மட்டுமே ஆன்லைன் மீட்டிங்குகள் நடைபெறுகின்றன. பள்ளி, அலுவலகக் கலந்தாய்வுக் கூட்டங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. மற்றபடி நேரில் சந்தித்துப் பேசுவதையே பலரும் விரும்புகின்றனர்.’’

இணையவழிக் கல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘‘தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தற்காலிக வழியே தவிர இணைய வழிக் கல்வி நிரந்தரத் தீர்வாகாது. குறிப்பாக இன்ஜினீயரிங், எம்.பி.ஏ போன்ற படிப்புகளை இணையவழியில் படிப்பதால் பயன் இல்லை. பாடத்தைக் கற்றுக்கொள்வதைவிட மற்ற மாணவர்களுடன் உரையாடுவது, ஒரு பிரச்னைக்குக் கிடைக்கக்கூடிய பல தீர்வுகளை விவாதிப்பது போன்ற பல விஷயங்களுக்காகத்தான் எம்.பி.ஏ படிக்கச் செல்கிறோம். ஆனால், இணையம் மூலம் வெறும் பாடத்தை படிப்பது எந்த வகையிலும் பயன் தராது. அதேபோல, தற்போதைய சூழலில் வீட்டிலிருந்து பணிபுரிவதுதான் நம்மிடம் இருக்கும் ஒரே வழி. அதனால் அந்த வழியைப் பின்பற்றுகிறோம். மற்றபடி, வீட்டிலிருந்து பணியாற்றுவது நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதே எங்களுடைய முடிவு’’ என வித்தியாசமான தனது சிந்தனையைச் சொன்னபடி பேட்டியை முடித்துக் கொண்டார் அருண்பிரசாத் துரைராஜ்.

நன்றி : நாணயம் விகடன்