ஏர்டெல், டிமார்ட், ஸ்டார் டிவி என பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கென உள்ள ஒற்றுமை என்ன என்று கேட்டால் நம்மால் யோசிக்கவே முடியாது. காரணம் இவை அனைத்தும் வெவ்வேறு பிரிவுகளில் செயல்படும் நிறுவனங்கள். ஆனால் இந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் அலுமினியாக இருப்பார்கள். கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சி.இ.ஓ.கள் HUL நிறுவனத்தில் இருந்து சென்றவர்கள். ஹெச்.யூ.எல். நிறுவனத்தின் பணிபுரிந்தவர்கள் என்றால் சந்தையின் அதன் மதிப்பே தனி.

ஹெச்.யூ.எல். நிறுவனத்தின் பணிபுரிந்தவர்கள் மட்டும் எப்படி தலைமைப் பொறுப்புக்கு எளிதாக வருகின்றனர். நிறுவனத்தில் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது. மற்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு ஏன் அவர்களால் எளிதாகச் செல்ல முடிகிறது, என்பது குறித்து, ‘தி சி.இ.ஓ ஃபேக்டரி’ (The CEO Factory) என்னும் புத்தகத்தை சுதிர் சீதாபதி எழுதி இருக்கிறார்.

1999ல் இந்த நிறுவனத்தில் சேர்ந்தவர் தற்போது நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருக்கிறார். நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் மட்டுமல்லாமல் நிறுவனத்தில் உள்ள முன்னாள் மற்றும் தற்போதைய உயரதிகாரிகளுடன் உரையாடி இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஹெச்யூஎல். நிறுவனம் எப்படி இவ்வளவு தலைமைச் செயல் அதிகாரிகளை உருவாக்குகிறது, அதன் வழிமுறைகள் என்னென்ன, நிறுவனம் எப்படி செயல்படுகிறது என பல விஷயங்களை இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.

நான்கு விஷயங்களில் ஹெச்யூஎல் கவனம் செலுத்துகிறது. மிடில்கிளாஸ் மனநிலை, திறமை, எந்த இடத்திலும் பொறுப்பாகப் பணியாற்றுவது, நிறுவனத்தின்  மதிப்புகளை (Core Values) மாற்றாமல் இருப்பது ஆகியவையே நிறுவனம் அதிக தலைவர்களை உருவாக்குவதற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். இதற்கடுத்து entrepreneur professionals என்பது முக்கியமான மற்றொரு காரணம். அதாவது நிறுவனத்தின் பணியாளராக இருந்தாலும் தொழில்முனைவோருக்குக் கிடைக்கக் கூடிய அனுபவம் கிடைக்கும். தொழில்முனைவோர் ரிஸ்க் எடுக்கிறார் என்றால் அவருடைய சொந்த பணத்தில் எடுப்பார். ஆனால் இங்கு நிறுவனத்தின் முதலீட்டில் தேவைப்படும் புதிய முயற்சிகளுக்கான அனுமதி கிடைக்கும். மிடில்கிளாஸ் மனநிலை என்பதற்கு ஹெச்யூஎல் கொடுக்கும் விளக்கம் வேறு.

நடுத்தர மக்கள்தான் அடுத்த கட்டத்துக்கு நகருவதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பார்கள், வளர்ச்சிக்கான உத்வேகம் இருக்கும். அதேசமயத்தில் அவர்கள் பணம் செலவழிப்பதிலும் கன்சர்வேட்டிவாக இருப்பார்கள். இதுதான் பெரும்பாலான இந்தியர்களின் மனநிலை. இந்த மனநிலை இருப்பவர்கள்தான் வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ள முடியும் என்பது ஹெச்.யூ.எல். நிறுவனத்தின் எண்ணம்.

திறமை என்பது வெறும் விற்பனை இலக்கு நம்பர்களின் அடிப்படையில் மட்டும் இருக்காது. திறமையான பணியாளரைக் கண்டறிந்து, அவருக்கு பலவிதமான வாய்ப்புகளைக் கொடுத்து பயிற்சி கொடுப்பார்கள். சமயங்களில் கடுமையான சவால்கள் கொடுக்கப்பட்டு பட்டை தீட்டப்படுவார்கள்.  பதவி உயர்வு என வரும்போது அது அவ்வளவு எளிதாக இருக்காது. ஒருவேளை செயல்பாடுகள் சரியில்லை என்றால் ஹெச்.ஆர் குழு நிராகரித்துவிடும்.

செயல்பாடுகள் நன்றாக இருந்தாலும் குறுகியகாலத்தில் பதவி உயர்வு கிடைக்காது. முதல் 10, 12 ஆண்டுகளுக்கு பெரிய அளவுக்கு பதவி உயர்வு இருக்காது. ஹெச்.யூ.எல் நிறுவனத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் இருந்தால்தான் அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியும். ஆரம்பக்காலக் கட்டத்தை தாண்டிவிட்டால் அடுத்தடுத்து பதவி உயர்வுகள் திறமைக்கு ஏற்ப வேகமாக இருக்கும். இது சரியான நடைமுறை என நாங்கள் சொல்வதில்லை ஆனால் இதுபோன்ற நடைமுறையால் குறுகியகாலத்தில் சூப்பர் ஸ்டார்கள் உருவாகுவதை ஹெச்.யூ.எல்.விரும்பவில்லை என சுதிர் எழுதி இருக்கிறார்.

பணியிடம்

ஹெச்.யு.எல் என்னும் பெயரைக் கேட்டவுடன் எப்.எம்.சி.ஜி துறையில் பெரிய பட்டியலிட்ட நிறுவனம், அதனால் பெரு நகரங்களில் ஏ.சி. அறைகளில் பணியாற்றலாம் என பொதுவான எண்ணம் தோன்றும். ஆனால் இங்கு இதெல்லாம் நடக்காது. ஐஐஎம்-ல் படித்திருந்தால் கூட முதல் சில மாதங்கள் கிராமங்கள் அல்லது சிறு நகரங்களில்தான் பணி இருக்கும். இந்தியா முழுவதிலும் பணியமர்த்தப்படுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கிம்பர்ளி க்ளார்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ் ஐயரிடம் உரையாடினேன். இவர் தமிழகத்தைப் பூர்விமாகக் கொண்டவராக இருந்தாலும் தமிழகத்தில் அதிகம் தங்கியதில்லை. ஹெச்.யூ.எல் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் டிரெனியாக இருக்கும்போது திண்டுக்கல் மற்றும் பொள்ளாச்சியில் சில மாதங்கள் பணியாற்றினார்.

சிறு நகரங்களில் பணியாற்றும்போதுதான் நிறுவனத்தின் செயல்பாட்டினை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அதேபோல வாடிக்கையாளர்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக இதுபோல பணியமர்த்துவார்கள் என உரையாடும்போது என்னிடம் தெரிவித்தார். அதேபோல கொஞ்சம் அடுத்தகட்டத்துக்கு செல்லும்போது விமானத்தில் பிஸினஸ் வகுப்பு, நடசத்திர ஓட்டல் என வேறுவிதமான வாழ்க்கை பயிற்சியும் இங்குக் கிடைக்கும்.

தொழில்முனைவு அனுபவம்

ஹெச்.யூ.எல். நிறுவனத்தில் பணியாற்றுவது வேலை என்றாலும் தொழில் புரிவதன் மூலம் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும். ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால் யுனிலிவர் நிறுவனம் சர்வதேச அளவில் காபி தொழிலில் இருந்து வெளியேறத் திட்டமிட்டது. ஆனால் அப்போது இந்திய காபி பிரிவை கவனித்து வந்த குழு மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஓர் ஆண்டு காலம் அவகாசம் கொடுங்கள், காபி பிரிவை லாபப் பாதைக்கு கொண்டுவருகிறோம் என தலைமையிடம் பேசுகிறார்கள். தலைமை அனுமதி கொடுக்கிறது. குறைந்த முதலீட்டில் தொழிற்சாலை விரிவுப்படுத்தப்படுகிறது. விளம்பர நிறுவனத்தை மாற்றி அமைத்து காபி பிரிவை அந்த குழு வளர்ச்சி அடைய வைக்கிறது. அந்த காபி பிராண்ட்தான் புரூ. இதுபோன்ற வாய்ப்புகள் மற்ற நிறுவனத்தில் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என சுதிர் கூறுகிறார். இதுபோல அதிகாரிகள் நினைப்பதை செயல்படுத்தும் வாய்ப்பு ஹெச்.யூ.எல். நிறுவனத்தில் இருக்கிறது.

தொழில்கொள்கைகள்

நிறுவனத்தின் கொள்கைகள், மதிப்புகள் குறித்து மணிக்கணக்காக பேசலாம். ஆனால் கடினமான காலத்தில் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கும் பணியைதான் பெரும்பாலானவர்கள் செய்வார். ஆனால் ஹெச்.யூ.எல். நிறுவனம் வித்தியாசமானது என விளக்குகிறார் சுதிர் சீதாபதி. 2017-ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இதனால் வரிக்கு மேல் வரி செலுத்துவது குறைந்தது. அதனால் இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஒரு ரூபாய் ஷாம்புவில் 7 சதவீதம் அளவுக்கு வரி மீதமாகிறது. ஆனால் இந்தத் தொகையை எப்படி வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடியும்?

அதனால் நிறுவனம் மூலம் சேமித்த தொகையை மொத்தமாக சேர்த்து மத்திய அரசுக்கு வழங்க ஹெச்.யு.எல். நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் இந்த தொகையை வசூலிப்பதற்கு அரசிடம் வழியில்லை.  வசூலிப்பதாக இருந்தால் அபராதமாகத்தான் வசூலிக்க முடியும். ஆனால் இந்த சூழலில் அது முடியாது. சில மாத விவாதங்களுக்குப் பிறகு இந்தத் தொகையை மத்திய அரசு பெற்றுக் கொண்டது. இந்த சூழ்நிலைகள் ஹெச்.யு.எல். பணியாளர்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் இங்கிருந்து அதிக சி.இ.ஓகள் உருவாகின்றனர் என புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் ஹெச்யுஎல் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த புத்தகத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடியும்.

கறை நல்லது

சோப்பு தூள் பிரிவில் சர்ப் என்பது முக்கியமான பிராண்ட். ஆனால் 2005-ம் ஆண்டு வாக்கில் இந்த பிராண்ட் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. சாக்லேட் கறையை நீக்கும், இங்க் கறையை நீக்கும், அனைத்து கறைகளையும் நீக்கும், துவைத்தால் சாயம் போகாது, துணி வெளுக்காது, மற்ற பவுடர்களை விட குறைவான நேரத்தில் வேலை செய்யும் என பல விளம்பர யுத்திகளை பயன்படுத்தியாகிவிட்டது. ஆனால் பெரிய வளர்ச்சி இல்லை. அதேபோல விலையை குறைப்பது, தள்ளுபடி வழங்குவது, அதிக அளவில் வழங்குவது என எந்த உத்தியும் பயன் அளிக்கவில்லை. இந்த நிலையில் Modern Parenting குறித்து நிறுவனத்துக்கு தெரிய வருகிறது.

பிரேசில் நாட்டில் குழந்தைகள் விளையாடி ஆடைகள் கறை இருந்தால், அந்த கறையை ஊக்குவித்து மேலும் விளையாட அனுப்புகிறார்கள். ஆனால் இந்திய தாய்மார்களுக்கு குழந்தைகள் விளையாடி ஆடைகளில் கறை இருந்தால் பிடிக்காது. இந்த நிலையில், ‘கறை நல்லது’ என்னும் விளம்பரத்தை எடுத்து சர்ப் பிராண்டின் புதிய விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். தற்போது ஹெச்.யு.எல். நிறுவனத்தின் முக்கியமான ஐந்து பிராண்ட்களில் சர்ப் ஒன்று. 2000 -2010 இந்த பத்தாண்டு காலத்தில் சிறந்த பத்து விளம்பரங்களில் கறை நல்லது விளம்பரத்தையும் எக்கனாமிக் டைம்ஸ் பட்டியலிட்டிருந்தது. இதைத்தவிர இப்புத்தகத்தில் HUL குறித்து இடம்பெற்றுள்ள சுவாரசிய விஷயங்கள் இதோ:

ஹார்லிக்ஸ், பூஸ்டை வாங்குவதற்காக காரணம் என்ன?

பிராண்ட் எக்ஸ்டென்ஷன் ஏன் தோல்வி அடைகிறது (கிஸான் சில்லி சாஸ்)

ஹெச்.யூ.எல் விளம்பரத்துக்காக ஓர் ஆண்டு செய்யும் தொகை ரூ.3,500 கோடி. இவ்வளவு தொகை செலவு செய்ய என்னக் காரணம்?

இந்துலேகா நிறுவனத்தை வாங்குவதற்கான காரணம்

நிறுவனத்தின் பலவிதமான உத்திகள் மற்றும் தோல்விகள் பொருளுக்கு தள்ளுபடி கொடுத்தால் விற்பனை உயருமா?

தள்ளுபடி கொடுக்காமல் அதிக வாடிக்கையாளர்களை எப்படி சென்றவடைவது?

வருமானத்தை அளவிடுவது விற்பனைதான். ஆனால் தயாரிப்பை அல்லது மூலப்பொருளைக் கையாளுவதன் மூலம் பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் எப்படி?

டி மார்ட் சி.இ.ஓ ஹெச்.யு.எல். அலுமினி. இங்கு ஸ்டோர் மேலாளர்களுக்கு விற்பனை என்பது இலக்கல்ல. இன்வெண்ட்ரியை எப்படி கையாளுகிறார்கள், சேதத்தை எப்படி குறைக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்கள் மதிப்பிடப்படுவார்கள். விற்பனையை விட மற்றவை ஏன் முக்கியம்?

ஹெச்.யு.எல். நிறுவனத்தின் பணியாளர் செலவு என்பது மொத்த வருமானத்தில் 4 சதவீதம் மட்டுமே. இதர எப்.எம்.சிஜி நிறுவனங்களில் 10 சதவீதம் கூட உள்ளன. பணியாளர்கள் செலவினத்தை எப்படி குறைக்கிறார்கள்?

அதே சமயத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களும் இங்கு அதிகம். 2018-ம் ஆண்டு நிலவரப்படி, ”HUL நிறுவனத்தில் 143 அதிகாரிகள் ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்கள்.

எட்டு நபர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை ஆறு நபர்களுக்கு வழங்கி, அவர்களிடம் இருந்து 10 நபர்களுக்கு உண்டான வேலையை வாங்க வேண்டும் என ஹெச்.யு.எல். தலைவர் சஞ்சிவ் மேத்தா விளையாட்டாகக் கூறுவார்.

இதுபோல ஹெச்.யூ.எல். நிறுவனத்தின் உத்திகள், தவறு, தோல்விகள், வெற்றிகள், கொள்கைகள், பணியாளர் நலன் என பல விஷயங்கள் குறித்து இப்புத்தகம் மூலம் தெரிந்துகொள்ளாம். ஹெச்.யு.எல். நிறுவனத்தில் சில ஆண்டு காலமாவது பணியாற்ற வேண்டும் என்பது எம்பிஏ படிப்பவர்களின் இலக்கு என்று சொன்னால் அது மிகையல்ல.
நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்