இந்தியாவில் சில்லரை வர்த்தகம் மற்றும் மொத்த வர்த்தகம் நடந்தாலும் மொத்த வர்த்தகத்துக்கு என பிரத்யேக இடம் இல்லை. ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளில் மொத்த வர்த்தகத்துக்கென பிரத்யேக சந்தைகள், மால்கள் இருக்கிறன. மொத்த வர்த்தகத்துக்கென பிரத்யேக சந்தை அல்லது இடம் இருக்கும்போது சந்தையின் அளவு மேலும் பெரிதாகும், சர்வதேச கவனம் பெரும். அப்படியானால் இந்தியாவில் மொத்த வர்த்தகமே நடக்கவில்லையா? அப்படி கூறமுடியாது. பெரிய அளவுக்கு மொத்த வர்த்தகம் நடக்கிறது. ஆனால் அவை தனித்தனியாக ஒவ்வொரு ஊர்களிலும் நடக்கிறது.
உதாரணத்துக்கு ரிச்சி சாலையில் செல்போன், கம்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களை மொத்தமாக வாங்கலாம். இதுபோல சென்னையில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தொழிலுக்கு பிரதானம். அதேபோல பருப்பு சந்தைக்கு விருதுநகரும், துணி பிரிவின் மொத்த சந்தைக்கு சூரத் முக்கியமான இடமாக விளங்குகிறது. இதுபோல ஒவ்வொரு நகரமும் அல்லது நகரத்தின் ஒரு பகுதி குறிப்பிட்ட பொருளுக்கான மைய இடமாக விளங்குகிறது. இவை அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால், மொத்த விலை சந்தையும் ஒரே இடத்தில் அமைந்தால் அதுதான் ‘மார்க்கெட் ஆப் இந்தியா’ ‘Market of India’. ஆம் நம்ம சென்னையின் மையப்பகுதியில் இந்த மொத்தவிலை சந்தை தொடங்க இருக்கிறது.
2022-ம் ஆண்டு இந்த மையம் தொடங்கப்பட இருக்கிறது. பெரம்பூரில் உள்ள எஸ்பிஆர் சிட்டியில் இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மொத்தவிலை சந்தை, குடியிருப்புகள், பள்ளி என சிறு நகரமே கட்டப்பட்டுவருகிறது. கடந்த வாரம் இதன் Experience Centre-யை விசிட் செய்து மார்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் அசோக் குமாரிடம் உரையாடினோம்.
சென்னையில் இது ஏன் தொடங்கப்பட்டது, இங்கு என்னென்ன வசதிகள் இருக்கும், இதன் மதிப்பு என்ன உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து உரையாட முடிந்தது. இதுபோன்ற அனைத்து தொழில் நடவடிக்கைகளையும் அரசுகள்தான் எடுக்கும். சர்வதேச அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் கூட இதுபோன்ற மையங்களை அரசுதான் எடுத்திருக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் கோயம்பேடு சந்தை மாநில அரசு முயற்சியால் தொடங்கப்பட்டது. ஆனால் இவையெல்லாம் ரீடெய்ல் சந்தை அளவிலே இருந்தது. ஆனால் மொத்த விலை சந்தை குறித்து இதுவரை எந்த மையமும் தொடங்கப்படமாலே இருந்தது. எஸ்பஆர் குழுமத்தின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிதேஷ் காவத் சர்வதேச அளவில் இது போன்ற மையங்களைப் பார்த்திருக்கிறார்.
இதுபோல ஒரு மையத்தை இந்தியாவில் கொண்டுவந்தால் என்ன என்னும் யோசனையின் விளைவே இந்த ‘மார்கெட் ஆப் இந்தியா’. இந்த எண்ணம் வந்ததற்கு பிறகு இரு ஆண்டுகளுக்கு மேலாக திட்டங்களை உருவாக்கிய பிறகே இந்த கட்டுமானப் பணிகளை நாங்கள் தொடங்கினோம் என அசோக்குமார் பேசத் தொடங்கினார். Sஇதுபோன்ற மையத்தை ஏன் சென்னையில் அமைக்க திட்டமிட்டீர்கள் என்று கேட்டதற்கு, “இந்த இடத்தின் மொத்த பரப்பளவு 63 ஏக்கர். மொத்த விலை சந்தைக்கென பிரத்யேக மையம் அமைக்க வேண்டும் என்றால் நகர்புறத்தில்தான் அமைக்க வேண்டும். இவ்வளவு பெரிய இடம் மும்பை, டெல்லி, பெங்களுரூ போன்ற நகரங்களில் முக்கிய இடத்தில் கிடைக்காது. தவிர எஸ்பிஆர் குழுமத்தின் நிறுவனர்கள் சென்னையில் பல ஆண்டுகளாக தொழிலில் இருப்பதால் சென்னையை தேர்ந்தெடுத்தோம்,” எனக் கூறினார்.
என்னென்ன வசதிகள்?
புவியியல் அடிப்படையில் இந்த இடம் முக்கியமானது. சென்னை துறைமுகம், ரயில் நிலையம், அருகில் 3 மெட்ரோ நிலையங்கள், சென்னையில் முக்கியப் பகுதி என்பதால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு எளிதாக இருப்பதால் அதிக மக்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் வந்துசெல்ல முடியும். அதனால் இந்த இடம் செயல்படத்தொடங்கிய சில நாட்களில் சென்னையின் முக்கிய அடையாளமாக இந்த இடம் இருக்கும் என அசோக் கூறினார். மேலும் மொத்த விற்பனை நிலையங்கள் மட்டுமல்லாமல், ரீடெய்ல் பிரிவுக்கான மால் வர இருக்கிறது.
தியேட்டர்கள், பொழுதுபோக்கு மையம், உணவு விடுதி, மிகப்பெரிய கார் பார்க்கிங் மையம், வங்கிக் கிளைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, அடுக்குமாடி குடியிருப்புகள் என தேவையான அனைத்து வசதிகளும் இங்கு இருக்கும். தவிர இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் பலவும் இங்கே தங்களுடைய கிளையை நிறுவ இருக்கிறார்கள். சென்னை புறநகர் அல்லது வெளியூர்களில் இருப்பவர்கள் மொத்தமாக ஏதேனும் வாங்க நினைத்தால் சென்னையின் ஒவ்வொரு பகுதியும் செல்லத் தேவையில்லை. தேவையானவற்றை பார்த்து ஆர்டர் கொடுத்தால் பொருட்கள் தங்களுடைய இருப்பிடத்துக்கு வந்துசேரும்.
இதுவரையில் மால்களில், கடைகள் வாடக்கைக்கு மட்டுமே கொடுப்பார்கள். ஆனால் இந்த முறையில் நாங்கள் கடையை விற்பனை செய்கிறோம். குறைந்தபட்சம் 30 லட்ச ரூபாயில் இருந்து கடையை விற்பனை செய்கிறோம். சதுர அடிக்கு ஏற்றவாறு விலையில் ஏற்றம் இருக்கும். இதர மால்களில் மாத வாடகையே லட்சக்கணக்கில் இருக்கும்போது இரண்டு மூன்று ஆண்டுகளில் செலுத்தக்கூடிய வாடகையில் இங்கு ஒரு ஸ்டோரை வாங்கமுடியும்.
ஒட்டுமொத்தமாக, ரூ.5,500 கோடி மதிப்பிலான இந்த ’Market of India’ 63 ஏக்கர் நிலப்பரப்பளவில் 5,000-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களுடன் அமைய உள்ளது. வழக்கமான மால்களில் வாடிக்கையாளர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருட்கள், ஜெம்ஸ், ஜூவல்லரி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். தற்போது 60 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. ரெரா விதிமுறைகளின் படி 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மார்க்கெட் ஆப் இந்தியா செயல்படத் தொடங்கும் என கூறினார் அசோக்குமார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எல்ஐசி கட்டிடத்தை பார்ப்பதற்காகவே மக்கள் சென்னைக்கு வருவார்கள். மார்க்கெட் ஆஃப் இந்தியாயும் சென்னையின் ஒரு அடையாளமாக மாறுமா? 2022 வரை காத்திருப்போம்.
நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்
Recent Comments