20 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூட்டரின் ஆரம்பக்கட்டம் எப்படி இருந்ததோ அந்த நிலையில் தற்போது ரோபோகளும் ட்ரோன்களும் உள்ளன. ரோபோடிக்ஸ் இன்று வேகமாக வளர்ந்து வரும் சூழலில், இதனை பள்ளி மாணவர்களுக்குச் கற்றுக்கொடுக்கும் நிறுவனம் ’எஸ்பி ரோபோட்டிக்ஸ்’ ‘SP Robotics’.

தற்போது மாணவர்கள் பிரிவில் மட்டும் கவனம் செலுத்தும் இந்த நிறுவனம் பல கட்டங்களைத் தாண்டியே இந்த நிலைமையை அடைந்திருக்கிறது. இதன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்நேக பிரியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இனி அவர் கூறியதன் முழுமையான வடிவம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (EEE ) படித்தேன். 2008-ம் ஆண்டு சேர்ந்தவுடனே ரோபோட் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அப்போது பல கல்லூரிகளில் நடக்கும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். அதே சமயத்தில், அப்போதைய நண்பர் (தற்போதைய கணவர்) பிரணவனும் இதே பிரிவில் ஆர்வமாக இருந்தார். நான் புரோகிராமிங் அடிப்படையில் ரோபோட்களை உருவாக்கி வந்தேன். அவர் வேறு வடிவத்தில் ரோபோட்களை உருவாக்கி வந்தார் என்று உற்சாகமாகத் தொடங்கினார்.

SP Robotics நிறுவனர்கள் ஸ்னேஹ ப்ரியா மற்றும் பிரணவன் இருவருக்குமே ரோபோட்களில் ஆர்வம் இருந்ததால், இணைந்து போட்டிகளில் கலந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று முடிவெடுத்து இந்தியாவின் முக்கியமான ஐஐடி, என்ஐஐடி என அனைத்து இடங்களில் நடக்கும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ள சென்று வந்துள்ளனர். பல அனுபவங்கள், தொடர்புகள் எங்களுக்குக் கிடைத்தன. எங்கள் ரோபோட்களின் பிசிபி (printed circuit board) சிறப்பாக இருந்ததைப் பார்த்து பலரும் எங்கு கிடைத்தது எனக் கேட்டனர். நாங்களே இதனை உருவாக்கினோம் எனக் கூறவே பலரும் அவர்களுடைய சர்கியூட்டை வடிவமைத்து கொடுக்கக் கேட்டனர், என்றார் ஸ்னேஹா. மூன்றாம் ஆண்டில் என்னுடைய பெயர் மற்றும் பிரணவன் பெயரின் முதல் எழுத்தை அடிப்படையாக வைத்து ’எஸ்பி ரோபோட்டிக்ஸ்’ என பெயரை பதிவு செய்து போட்டிகளுக்கு சென்றோம். அதே ஆண்டில் சர்வதே அளவில் நடக்கும் போட்டிகளுக்கும் செல்லத் தொடங்கினோம்.

நான்காம் ஆண்டில் நிறுவனங்களுக்குத் தேவையான ரோபோட்களை தயாரிக்க முடிவெடுத்தோம். அப்போதுதான் எங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது. இதுவரை நாங்கள் செய்து வந்தது புராஜக்ட். ஆனால் நிறுவனங்களுக்குத் தேவையானது புராடக்ட் என்று. அதன் பிறகு நிறுவனங்களுக்கு என்னத் தேவை என்பதை கணிக்கத் தொடங்கினோம். 2012-ம் ஆண்டு இறுதி ஆண்டு. எனக்கு L & T -யில் வேலை கிடைத்தது. அதேபோல பிரணவுக்கும் நல்ல வேலை கிடைத்தது. ஆனால், நாங்கள் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த விரும்பினோம். நல்ல வேலையை விட வேண்டாம் என்னும் ஆலோசனைகள் வந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஓரளவு வருமானம் ஈட்டியிருந்ததால் அந்த நம்பிக்கையில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடிவெடுத்தோம்.

2013-ம் ஆண்டு முதல் ஊழியரை அமர்த்தினோம். 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ’ரோபோட் பிரிவில்’ என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்தோம். நிறுவனங்களுக்குத் தேவையானதை செய்தோம், கோச்சிங் மையம் வைத்திருந்தோம், ஆன்லைன் மூலம் சில பொருட்களை விற்றோம், ஸ்மார்ட் ஹோம் உருவாக்கிக் கொடுத்தோம். இது போல பல வேலைகளைச் செய்ததால் நான்கு ஆண்டுகளில் 10 மடங்கு அளவுக்கு வருமானம் உயர்ந்தது. “நிறுவனம் தொடங்கி பல கட்டங்களில் எங்கள் சேமிப்பில் இருந்து சுமார் 1 கோடி வரை முதலீடு செய்து, பல ப்ராஜக்டக்ளை செய்ததில் 1 கோடி வரை வருமானம் ஈட்டினோம். அதையே முதலாக்கி மீண்டும் எங்கள் விரிவாக்கத்துக்குப் பயன்படித்தினோம்,” என்றார் ஸ்னேஹ ப்ரியா.

முக்கிய முடிவு

ஒரே சமயத்தில் பல வேலைகள் செய்வதால் கவனம் சிதறுகிறது. அதனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செய்யத் திட்டமிட்டோம். அப்போது கல்வியில் கவனம் செலுத்தலாம் என முடிவெடுத்தோம். இப்போது ஐடி துறையில் நாம் முக்கியமான இடத்தில் இருக்கிறோம், தமிழகத்தில் அதிக ஐடி ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூட்டர் கோச்சிங் மையங்கள் அதிகமாக இருந்தன. அதனால் மாணவர்களிடம் கம்யூட்டர் சார்ந்த விழிப்புணர்வு உயர்ந்தது. பலருக்கு கம்யூட்டர் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வம் பிறந்தது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ரோபோட்களுக்கான தேவை சந்தையில் அதிகம் இருக்கும். ஆனால் ரோபோ குறித்து மாணவர்களுக்கு பரிட்சயம் இருக்காது. அதனால் பள்ளி மாணவர்களிடம் ரோபோவை எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தோம். அதனால் நல்ல லாபம் இருந்த சில விஷயங்களை தள்ளிவைத்து இதில் கவனம் செலுத்தினோம்.

அண்ணாநகர் மற்றும் மயிலாப்பூரில் இரண்டு மையங்களைத் தொடங்கினோம். மாணவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் ஆசிரியர்களுக்குத் தான் தட்டுப்பாடு இருந்தது. ரோபோ குறித்து தெரிந்திருக்க வேண்டும், மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்னும் ஆர்வம் இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தோம். நல்ல திறமையுள்ள ஆட்களுக்கு பெரிய நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும். சுமாரான திறன் இருப்பவர்களை அமர்த்தினால் அவர்களும் கற்றுக்கொண்ட பிறகு வெளியேறிவிடுகின்றனர். அதனால் இரண்டு மையங்களையும் மூட வேண்டிய நிலை ஒரு கட்டத்தில் ஏற்பட்டது.

நன்றாக செயல்பட்டுக் கொண்டுந்த பிஸினஸின் திசையை மாற்றி அதனையும் மூட வேண்டிய நிலை. ஆசிரியர்கள் இல்லாமல் கம்யூட்டரே சொல்லிக் கொடுக்கும் நிலைமைக்கு சிலபஸ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டோம். இதற்கு அதிக செலவாகும் என்பதால் நிதித் திரட்டும் பணியில் இறங்கினோம். சென்னை ஏஞ்சல் மற்றும் இந்தியன் ஏஞ்சல் நெட்வோர்க்கிடம் இருந்து ரூ.2 கோடி நிதியை பெற்றோம். ஐந்து மாதத்தில் புதிய புராடக்டை உருவாக்கினோம், என்றார்.

மாணவர்கள் வீட்டில் இருந்தே இந்த கோர்ஸை படிக்கலாம். பல மாணவர்கள் எங்களிடத்தில் படித்தார்கள். ஆனால் இதில் சில சிக்கல்கள் இருந்தன. குழந்தைகளின் கல்விக்கான செலவு செய்ய முடியும், ஆனால் லேப்டாப் வாங்க முடியாது. ஒரு வேளை இருந்தாலும் அப்பா பயன்படுத்திய நேரத்துக்குப் பிறகே குழந்தைகளுக்கு கிடைக்கும், அப்படியே கிடைத்தாலும் குழந்தை தனியாக லேப்டாக் கையாளுவதில் பெற்றோருக்கு இருக்கும் பயம் என பல காரணங்களால் இதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.

ஒரு முறை தோற்றுவிட்டோம் என்பதற்காக மீண்டும் கோச்சிங் செண்டர் முறையை தொடங்கக்கூடாது என்பதெல்லாம் பிஸினஸ் முடிவாக இருக்காது. முதல் முறை தோற்றத்துக்குக் காரணம் ஆசிரியர்கள் இல்லாமை. ஆனால் தற்போது ஆசிரியர்களே தேவைப்படாது (ஆனால் ஒரு facilitator வேண்டும்) என்பதால் துணிந்து களம் இறங்கினோம். இப்போது பிரான்ஸைசி முறையில் மேக்கர் லேப் (maker lab) என்னும் பெயரில் இந்த மையங்களை அமைத்து வருகிறோம்.

மாணவர்களுக்கு ஏற்பப் பயிற்சி

ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அதனால் மாணவர்களுக்கு ஏற்ப பயிற்சி வழங்கப்படும். ஒரு முறை புரியவில்லை என்றால் வேறு முறையில் கற்பிக்கப்படும். அதுவும் புரியவில்லை என்றால் வேறு முறை என கம்யூட்டர் சொல்லிக் கொடுக்கும். மொத்தமாக மாணவருக்கு புரியவில்லை என்றால் நேரடியாக தலைமை அலுவலகத்தில் உள்ள ஆசிரியர்களிடம் உரையாடும் வாய்ப்பினை வழங்குகிறோம். அதேபோல எந்தெந்த இடத்தில் மாணவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து எங்களது புரோகிராமில் தொடர்ந்து மாற்றத்தை செய்து வருகிறோம். தவிர மாணவர்களுக்கு இதனை நாங்கள் ஒரு விளையாட்டு போலவே சொல்லித் தருகிறோம்.

உதாரணத்துக்கு ஒரு வயலில் ட்ரோன் மூலம் தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும் என்பது திட்டமாக இருந்தால் அதனை மாணவர் எப்படி செய்ய வேண்டும் என்பது சொல்லிக் கொடுக்கப்படும். இதில் ட்ரோன் இயக்குவது, லாஜிக், சயின்ஸ் என அனைத்தும் புரியும். டெக்னாலஜி குறித்த ஆர்வம் வந்த பிறகு மாணவர்கள் தாங்களாகவே படிக்கத் தொடங்குவார்கள். ஒரு பிரான்ஸைசி மையம் தொடங்க 20 லட்சம் வரை செலவாகும். இந்த முதலீட்டை இரு ஆண்டுகளில் திரும்பப் பெற முடியும். நாங்கள் நேரடியாக மையங்களை இயக்குவதைவிட உள்ளூர் தொடர்பு இருப்பவர்கள் நடத்தினால்தான் இதனை வெற்றிகரமாக நடத்த முடியும், என்கிறார் ஸ்னேஹ ப்ரியா.

அடுத்து என்ன?

தற்போது மீண்டும் நிதித் திரட்டும் பணியில் இருப்பதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இது குறித்து அறிவிப்போம். ரோபோடிக்ஸை ஐடி-யில் பணிபுரிபவர்கள் அல்லது ஓரளவுக்கு உயர் பொறுப்பில் இருப்பவர்களின் குழந்தைகளே அதிகமாகப் படிக்கின்றனர். இது குறித்த விழிப்புணர்வை அனைத்து சமூகத்துக்கும் ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்கு நிதி தேவை. இதுவரை இவர்களின் நிறுவனம் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளித்துள்ளதாக கூறும் நிறுவனர்கள், இந்தியா முழுவதும் ‘Sp Robotics’ விரிவுப் படுத்துவதே இலக்கு என்கின்றனர். மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்நிறுவனத்தை ரோபோட்டிக்ஸ் பிரிவில் முக்கியமான நிறுவனமாக ஆக்க வேண்டும் என்பதே தங்களின் லட்சியம் எனக் கூறி நமக்கு விடைகொடுத்தார் ஸ்நேஹ ப்ரியா.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்