கிரிக்கெட் இல்லை என்றால் இடதுகையை பயன்படுத்த முடியும் என்னும் உண்மையே நம்மில் பலருக்கும் தெரியாமல் போயிருக்கும். காலம் காலமாக இடது கையை பயன்படுத்துவது மரியாதை குறைவு என்பது உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஒரு குழந்தை இயல்பாக இடதுகையில் வேலைகளை செய்யத் தொடங்கினால் அதனை மெல்லமாக மாற்றும் முயற்சியில் பெற்றோர்கள் சிலர் ஈடுபடுகின்றனர். வேறு வழியில்லாமல் குழந்தைகளும் ஆரம்பகால சிரமங்களுடனே வலதுகையை பயன்படுத்தத் தொடங்குகின்றன.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடது கையை பயன்படுத்துவது குறித்து கவலைப் படுவதில்லை. ஆனால் இடது கைப் பழக்கம் இருக்கும் குழந்தைகளுக்கான பொருட்கள் சந்தையில் கிடைப்பது என்பது மிகவும் அரிது. ஸ்கேல், ஷார்ப்னர், புத்தகம் கத்திரிகோல் என குழந்தைகள் பயன்படுத்தும் எந்த பொருளும் எளிதாக இவர்களுக்குக் கிடைக்காது. தவிர பரிட்சை எழுதும் டேபிள்கள் கூட பொதுவாக வலது கைப் பழக்கம் உடையவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும்.

Left Hand vs Right hand

இதுபோன்ற இடதுகை பழக்கம் உடையவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நினைத்து தொடங்கப்பட்ட முயற்சியே Thelefthandshop. இந்த தளம் இடது கை பழக்கம் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை இணையம் (https://thelefthandshop.in/) மூலம் விற்பனை செய்கிறது. பூனேவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது ஹைதராபாத்திலும் செயல்பட்டுவருகிறது.

தீபாவளி அன்று பஸ் கிடைக்காத இரு நண்பர்கள் உருவாக்கியதுதான் ரெட்பஸ். அது போல இடதுகை பழக்கம் உள்ள தன்னுடைய மகனுக்கு தேவைப்படும் பொருட்கள் கிடைக்கவில்லை என்பதாலே இந்த நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் Sandeep Pavitter Singh. இடது கை பழக்கம் உடையவர்கள் பயன்படுத்தும் ஒரு பேனா ரூ.1500க்கும் ஒரு ஷார்ப்னர் 600க்கும் அமேசானில் விற்பனையானது. இதை நம்மால் வாங்கமுடியும் என்றாலும் பலரும் இதேபோல இத்தனை காஸ்ட்லியாக இதை வாங்கமுடியாது என்னும் காரணத்தால் இந்த நிறுவனத்தை தொடங்கியதாகக் கூறினார் சந்தீப்.

Thelefthandshop என்ன தீர்வுகளை அளிக்கிறது?

சந்தீபின் மகன் கைவினைப் பொருட்கள் செய்வது, வீட்டுப்பாடம் எழுதுவதில் பெரும் சிக்கல்கள் இருந்தது. இந்தியாவில் அதற்கான பொருட்களே இல்லை. வெளிநாட்டில் இதுபோன்ற பொருட்கள் உள்ளன. ஆனால் அங்கிருந்து இங்குகொண்டுவதற்கு அதிக செலவானது. சர்வதேச அளவில் சுமார் 10 முதல் 12 சதவீதத்தினர் இடதுகை பழக்கம் இருப்பவர்கள்தான். அதனால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு குறைந்த விலையில் கல்விக்கான சாதனனங்களை கொண்டுவந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்னும் நோக்கத்தில் இந்த நிறுவனத்தை 2016-ம் ஆண்டு தொடங்கினோம், என்றார் சந்தீப்.

இடதுகை பழக்கம்

மகனுடன் சந்தீப் பவித்தர் சிங்

ஆரம்பத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கி விற்பனை செய்தோம். அதன் பிறகு இந்தியாவில் உள்ள நிறுவனங்களிடம், பிரத்யேகமாக தயாரிக்க முடியுமா என பேச்சுவார்த்தை தொடங்கினோம். ஆனால்,

குறைந்தபட்ச ஆர்டர் லட்சங்களில் இருந்தால்தான் முடியும் என தெரிவித்துவிட்டதால், கொஞ்சம் பிரீமியம் விலை கொடுத்து பொருட்களை வாங்கி விற்பனை செய்தோம். இந்தியாவில் இதுபோன்ற தொடங்கப்பட்ட முதல் நிறுவனம் நாங்கள்தான். எங்களுக்கு பிறகு சிலர் இதுபோன்ற நிறுவனம் தொடங்கி இருக்கிறார்கள் என்றும் சிங் தெரிவித்தார்.

தற்போது, ‘மைலெப்ட்’ ’Myleft’ என்னும் பெயரில் நாங்களே சொந்தமாக சில பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கி இருக்கிறோம். மிகக் குறைந்தவிலையில் இடதுகை பழக்கம் இருக்கும் குழந்தைகளுக்கான பொருட்களை விற்கிறோம். ஆனாலும் பெரிய அளவில் தயாரிக்கும் போதுதான் இன்னும் குறைவான விலையில் தயாரிக்க முடியும், என்றார்.

இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்குத் தேவையான பொருட்கள் சந்தையில் உள்ளது என்பதற்கான விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது அவசியம். அதைவிட முக்கியம் பெற்றோர்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இடது கையை பயன்படுத்துவது பெரிய குற்றம் அல்ல என்னும் எண்ணத்தை பெற்றோர்களுக்கு உருவாக்க வேண்டும் என சிங் தெரிவித்தார்.

Thelefthandshop வருங்காலத் திட்டங்கள்

நாங்கள் சுயமுதலீட்டில் தொடங்கி இயங்கும் நிறுவனம். இதுவரை நாங்கள் வென்ச்சர் கேபிடல் நிதி எதுவும் வாங்கவில்லை. அதே போல மார்க்கெட்டிங்குக்கும் பெரிதாக செலவு செய்யவில்லை. இதுவரை எங்கள் வாடிகையாளர்களே எங்களின் தூதுவராக இருந்திருக்கிறார்கள்.

சீரான வளர்ச்சி மூலம் 50,000-க்கும் மேலான வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு 50 சதவீத வளர்ச்சியை நாங்கள் அடைந்து வருகிறோம் என சிங் தெரிவித்தார்.

ஆரம்பக்கட்டத்தில் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தோம். இனி மைலெப்ட் என்னும் எங்களுடைய புராடக்டை சர்வதேச அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுவருகிறோம்.

இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் சிக்கல்கள் உள்ளன. அதனால் சர்வதேச நாடுகளுக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம். அதேபோல கடந்த லாக்டவுனுக்கு பிறகு விற்பனையில் பெரிய ஏற்றம் இருக்கிறது. அதே சமயம் சில லாஜிஸ்டிக்ஸ் சிக்கலும் இருந்தன, மேலும் எங்களுடைய தளத்தில் மட்டுமல்லாமல் இதர தளங்களிலும் விற்பனை செய்துவருகிறோம்.

myleft

விற்பனை குறித்து பேசியபோது,

“எங்களுடைய மொத்த விற்பனையில் தென் இந்தியாவில் சுமார் 90% அளவுக்கு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் விழிப்புணர்வே இதற்குக் காரணம். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் எங்களுடைய விற்பனையில் 7 சதவீதம் அளவில் உள்ளது. முதல் இரண்டு இடத்தில் மகாராஷ்டிராவும் கர்நாடகமும் உள்ளன.”

இடது கை பழக்கம் உடையவர்கள் பயன்படுத்து பேனா மற்றும் கத்திரிகோல் ஆகியவை எங்களிடம் அதிகம் விற்பனையாகும் பொருட்கள் என சிங் தெரிவித்தார்.

மேலும், மொத்த சந்தையில் இடதுகை பழக்கம் பத்து சதவீதம் என்றாலும் வலது கை பழக்கம் உடையவர்கள் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்றும் சிங் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி, பராக் ஒபாமா, ரத்தன் டாடா, சச்சின், கங்குலி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள், மார்க் ஜூகர்பெர்க், ஆர்பர்ட் ஐன்ஸ்டீன், சார்லி சாப்ளின் என சர்வதேச அளவில் பலர் இடதுகை பழக்கம் உடையவர்கள்தான். இடது கையை பயன்படுத்துவது பிழையோ, குற்றமோ அல்ல என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்.

மிகச் சிறிய வாய்ப்பாக இருந்தாலும் பெருமளவு சந்தையை பிடிக்க Theleft handshop-ன் முயற்சிக்கு வாழ்த்துகள்.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்