நாம் டிவி வாங்க நினைக்கிறோம். ஆனால் தற்போதைய லாக்டவுன் சூழலில் முடிவில்லை. எப்போது கடை திறக்கிறதோ அப்போது நமக்கு பிடித்த டிவியை வாங்கிக்கொள்வோம். அதேபோல ஃபர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் உள்ளிட்ட சில பொருட்கள் நமக்கு பிடித்திருந்தால் போதும், கிடைக்கும்போது வாங்கிக்கொள்வோம், இல்லை ஆன்லைனில் ஆர்டர் செய்வோம்.

லாக்டவுன் முடிந்த பிறகு இந்த கடைகள் திறந்தவுடன் இதுவரையில் நடக்காமல் இருந்த விற்பனை சில வாரங்களில் மொத்தமாக நடக்கும். ஆனால், சில துறைகளில், விற்பனை என்பது காலத்தைப் பொறுத்தது. கடந்த கால விற்பனையை இவர்களால் துரத்தி பிடிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு துறைதான் சலூன்.

அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் கணக்குப்படி, தமிழகத்தில் 45,000-க்கும் மேற்பட்ட அழகுநிலையக்கள் உள்ளன. இதுதவிர, 1.25 லட்சத்துக்கு மேலான முடித்திருத்தும் நிலையங்கள் உள்ளன. குறைந்தபட்சம் 4 லட்சத்துக்கும் மேலான பணியாளர்கள் இந்தத் துறையை நம்பி இருக்கிறார்கள். அழகு நிலையங்களில் உள்ள பணியாளர்களில் 35 சதவீதம் அளவுக்கு வட கிழக்கு இந்தியாவில் இருந்து வந்து பணிபுரிகின்றனர்.

சலூன் துறை

மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு சலூன் செல்வது என்பது பெரும்பாலானவர்களின் வழக்கம். ஒருவேளை இந்த காலகட்டத்தில் செல்லவில்லை என்றால் எப்போது செல்வார்களோ அப்போது பயன்படுத்திக் கொள்வார்கள்.

சராசரியாக நாம் ஒர் ஆண்டுக்கு 12 முறை சலூன் செல்கிறோம் என்றால் லாக்டவுன் காலத்தில் நாம் சலூன் செல்வது கணிசமாக குறைந்திருக்கிறது. இந்த காலத்தில் இழந்த வருமானத்தை அவர்களால் மீட்கவே முடியாது. தவிர ஊரடங்கு அமலில் முதலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் துறையாக சலூன் இருக்கிறது. தட்டுப்பாடுகளைக் கடைசியாக விலக்கும் துறையாகவும் சலூன்களே இருக்கிறது.

இந்த நிலையில், நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி.கே.குமரவேலிடம் பேசினோம். கிட்டத்தட்ட கடந்த ஆண்டு லாக்டவுன் முதலே பெரிதும் அடிவாங்கிய துறையாக சலூன்கள் இருப்பதால், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், இழப்பு பற்றி பேசினார்.

ck kumaravel

நேச்சுரல்ஸ் இணை நிறுவனர் சிகே குமாரவேல்

இதுவரை, சலூன் என்பது முறைப்படுத்தப்படாத துறையாக இருந்தது. இதனை முறைபடுத்தி ஒரு துறையாக நடத்திவருகிறோம். சுமார் 650-க்கும் மேற்பட்ட பிரான்ஸைசிகள் மூலம் நேச்சுரல்ஸ் செயல்பட்டுவருகிறது. ‘நெகட்டிவ் வொர்க்கிங் கேபிடலில்’ செயல்படும் துறை என்பதால் ஆரம்பகாலகட்டத்தில் முதலீடு செய்தால் மட்டும் போதுமானது.

ஒரு சலூனுக்கு ரூ.50 லட்சம் முதலீடு செய்தால் போதும் அதன் பிறகு முதலீடே தேவைப்படாது. வாடகை, ஊழியர்கள் சம்பளம், மூலப்பொருட்களுக்கான செலவு என கிடைக்கும் வருமானத்தை பொறுத்து செலவு செய்வோம்.

சராசரியாக ஒரு மாதத்தில் ஸ்டோர் மூலம் ரூ.7 அல்லது ரூ. 8 லட்சம் வருமானம் இருக்கும். இதில் செலவுகள் போக பிரான்ஸைசி எடுத்தவர்களுக்கு 10 சதவீதமும், நேச்சுரல்ஸ் நிறுவனத்துக்கு 10 சதவீதம் அளவும் கிடைக்கும். மிகவும் எளிமையான பிஸினஸ் மாடல். ஆனால் இதெல்லாம் கொரோனா வருவதற்கு முன்புதான். கடந்த ஆண்டு முதல் பெரும் சிக்கலை சந்தித்துவருகிறோம்.

அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் மாத கடைசியில் லாக்டவுன் அறிவித்ததாலும் மார்ச் முதல் வாரத்திலே வாடிக்கையாளர் சலூன் வருவது குறைந்தது. காரணம் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை ஊக்குவிக்க செய்யத் தொடங்கினார்கள். லாக்டவுன் அறிவிக்கபப்ட்டது முதல் வருமானம் என்பது பூஜ்ஜியம்தான்.

இந்த சமயத்தில், கடை வாடகைக்கு எடுத்துள்ள இடம் உரிமையாளர்கள் வாடகை வேண்டாம் என்று பலர் கூறியதையும் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் சிலர் 50 சதவீத வாடகையாவது கொடுங்கள் எனக் கேட்டனர். மிகச்சிலர் மட்டுமே 100 சதவீத வாடகை வேண்டும் என எங்களிடம் கேட்டனர்.

நிதி நெருக்கடியை சமாளிக்க பிரான்ஸைசி எடுத்தவர்கள் பல வகைகளில் சமாளித்தார்கள். நகையை அடமானம் வைப்பது, வங்கியில் கடன் வாங்குவது, வெளிநபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவது என பல வகைகளில் சமாளித்தார்கள். இந்தத் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் நடந்தது,” என அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்.

லாக்டவுனுக்கு பிறகு கடையை திறந்தோம். ஆனால் பழைய வருமானத்தை எங்களால் அடையவே முடியவில்லை. வீடுகளுக்குச் சென்று சேவை வழங்குவதைத் தொடங்கினோம். ஆனால், அதற்கும் பெரிய வரவேற்பு இல்லை. இருந்தாலும் நம்பிக்கை அடிப்படையில் தொடர்ந்து கடையை நடத்திவந்தோம்.

ஒவ்வொரு மாதமும், அடுத்தமாதம் விற்பனை அதிகரிக்கும் என நம்பினோம். ஆனால் 50% முதல் 60 சதவீதம் அளவுக்குதான் வருமானம் இருந்தது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளும் எங்களது வருமானத்தில் முக்கியப் பங்கு வகித்தன. ஆனால் அவையும் எளிமையாக நடப்பதால் எங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கும்போதுதான் இரண்டாம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. கடந்த லாக்டவுனில் நிதி என்பது பெரும் சிக்கலாக இருந்தது. ஆனால் இந்த முறையில் உயிர் பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது. கடனை விட வாழ்வே பெரிய சிக்கலாகி இருக்கிறது.

மரண விகிதம் பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் இருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில்தான் இந்தத் துறையில் ஏற்றம் இருக்கும்.

இதுவரை வரி வரம்புக்குள் இல்லாத துறையில் தற்போது வரி செலுத்திவருகிறோம். 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்துகிறோம். ஒவ்வொரு மாததும் ரூ.5 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி செலுத்தி இருக்கிறோம். இந்த வரி விகிதத்தை  குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கு நீக்கலாம். அல்லது வரி விகிதத்தையாவது குறைக்கவாவது செய்து ஊக்குவிக்கலாம். வரி குறையும் போது வாடிக்கையாளர் செலுத்தும் தொகையும் குறையும். இதனால் வாடிக்கையாளர்கள் வருவதற்கான சூழ்நிலை உருவாகும்.

தடுப்பூசி செலுத்தும் வேகம் மற்றும் வரி விகிதங்களில் கொடுக்கக் கூடிய சலுகைகள் மட்டுமே இந்தத் துறையை காப்பாற்றும். எங்களிடம் மட்டும் 11,000 நபர்கள் வேலையில் இருக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்றுவதில் எங்களுக்கு மட்டுமல்லாமல் அரசாங்கத்துக்கும் பொறுப்பு இருக்கிறது என சி.கே.குமரவேல் தெரிவித்தார்.

இந்தத் துறையில் இருக்கும் மற்றொரு முக்கிய நிறுவனமான கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணனிடன் உரையாடினேன்.

green trends

கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன்

மற்ற நிறுவனங்களைப் போல எங்களுக்கும் லாக்டவுன் காலத்தில் வருமானம் ஏதும் இல்லை. கடந்த லாக்டவுனில் முதல் மூன்று மாதங்களில் வருமானம் இல்லை. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் வருமானம் உயர்ந்தது. லாக்டவுனுக்கு முன்பு இருந்த வருமானத்தில் அதிகபட்சம் 80 சதவீதம் கிடைத்தது. தற்போது மீண்டும் லாக்டவுன் என்பதால், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எங்களிடன் உள்ள ஸ்டோர்களில் சுமார் 140 ஸ்டோர்கள் அளவுக்கு சொந்த ஸ்டோர்கள். மீதமுள்ளவை பிரான்ஸைசி அடிப்படையில் செயல்படுகின்ன்றன. வருமானம் இல்லை என்றாலும் எங்கள் ஸ்டோர்களில் உள்ள பணியாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்குகிறோம். தவிர பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் ஈடுப்பட்டிருக்கிறோம்.

ஒருவேளை பணியாளர்கள் இறக்கும்பட்சத்தில் அவர்களின் குடும்பத்துக்கு இரு ஆண்டு சம்பளம் மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருக்கிறோம்.

தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு. அதனால் மட்டுமே தொற்றுகுறையும். அப்போதுதான் நாம் பழைய நிலைமைக்கு மீள முடியும். ஜூலை மாதத்தில் இருந்து மீண்டு வரமுடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டால் அடுத்த இரு ஆண்டுகள் எங்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தொழில்களுக்குமே சாதமாக அமையும் எனக் கருதுகிறோம். மக்கள் வீட்டுக்குள்ளே இருப்பதால் வெளியே வருவதற்கு விரும்புவார்கள். அப்போது அனைவருக்குமே வாய்ப்பு உருவாகும்.

எந்தத் தொழிலுக்கும் வாடிக்கையாளர்கள்தான் பிரதானம். வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வாய்ப்பினை வழங்குவார்கள் என நம்புகிறோம் என கோபாலகிருஷ்ணன் நம்மிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் துணைத்தலைவர் (All india hair and beauty association) ஆண்டனி டேவிட் பகிர்கையில்,

அதிகம் பாதிப்படைந்திருப்பதால் பலர் இந்தத் தொழிலை விட்டு வெளியேறலாமா என்று யோசிக்கின்றனர். இதற்கு நகரின் பிரதான இடத்தில் கடை வைக்க வேண்டும். அப்படியானால் வாடகை அதிகம். வருமானமே இல்லாமல் வாடகை கொடுத்து தொழிலை நடத்துவது என்பது சிரமமாக இருக்கிறது, என்கிறார்.

கடந்த லாக்டவுனில் சுமார் 3,000 கடைகள் மும்பையில் மட்டும் மூடப்பட்டன. இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும். தவிர கடந்த ஆண்டு இந்தியாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சலூன் மற்றும் அழகு நிலைய உரிமையாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் 850 கடைகள் மூடப்பட்டுள்ளதாக ஆண்டனி தெரிவித்தார்.

ஆண்டனி

அகில இந்திய சிகை மற்றும் அழகுக் கலை சங்கத்தின் துணைத்தலைவர் ஆண்டனி டேவிட்

கொஞ்சம் கூட வருமானமே இல்லாத சூழலில் நாட்களை கடத்துவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இன்னும் சரியான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம், என்றார் ஆண்டனி.

கேரளாவில் கடந்த முறை கடைக்கு ரூ.10,000 என்று பணியாளர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை சில மாதங்களுக்கு அரசு வழங்கியது. அதேபோல கர்நாடாகாவில் ஒரு கடைக்கு ரூ.5000-ம் என்று பணியாளர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கியது. தமிழக அரசிடமும் இதேபோன்ற கோரிக்கையை மே மாதம் 1-ம் தேதி வைத்திருக்கிறோம். தற்போது புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால் இன்னும் தொடர்புகொள்ள முடியாத சூழலில் இருக்கிறோம். புதிய அரசுக்கும் பல விதமான பொறுப்புகள் இருக்கிறது என்னும் புரிதலில் காத்திருக்கிறோம்.

ஆறு மாதத்துக்கு வாடகை மற்றும் மின்சாரக் கட்டணத்தில் சலுகை, வங்கிக் கடன் சலுகை, ஜிஎஸ்டி குறைப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் கொடுத்திருக்கிறோம்.

இந்தத் தொழிலை நடத்தலாமா வேண்டாமா என தடுமாற்றத்தில் இருப்பவர்களுக்கு அரசின் உதவி மட்டுமே நம்பிக்கை அளிக்கும் என அந்தோணி டேவிட் நம்மிடம் தெரிவித்தார்.

இழந்த வாய்ப்புகளை பற்றி பேசுவதைவிட அடுத்து வரும் காலத்தை குறித்து திட்டமிடுவதே இப்போதைய தேவை என்பதே இவர்கள் சொல்லவிரும்பும் செய்தி. நம்பிக்கையுடன் இருப்போம்!

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்