தமிழகத்தில் டெக்னாலஜி துறையின் முன்னோடிகளில் ஒருவர் முருகவேல் ஜானகிராமன்‘மேட்ரிமோனி’ பிரிவில் பல நிறுவனங்கள் இருந்தாலும், 20 ஆண்டுகளுக்கும் முன்பே தொலைநோக்கோடு ஆன்லைன் வடிவில் காலடிவைத்ததால் பெரும்பான்மையான சந்தை ‘பாரத் மேட்ரிமோனி’ வசமே இருக்கிறது.

தற்போதைய கோவிட் சூழலால் இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், விரிவாக்கத் திட்டங்கள், கோவிட் காலத்தை எப்படி கையாண்டனர் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் மேட்ரிமோனி.காம் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன்.

Matrimony

மேட்ச்மேக்கிக் என்னும் தொழிலின் அடிப்படை மாறவில்லை. ஆனால் நீங்கள் தொழிலுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்ன?

முருகவேல்: முன்பெல்லாம் ஒரு வரன் பார்க்கிறார்கள் என்றால் பெற்றோர்களே எங்கள் தளத்தில் அதிகமாக பதிவு செய்வார்கள். ஆனால், தற்போது 70 சதவீததுக்கு மேல் திருமணத்தில் சம்பந்தப்பட்ட பெண் அல்லது ஆண்களே பதிவு செய்கிறார்கள். பெற்றோரின் பங்கு 15 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 15 சதவிதத்தில்தான் உறவினர்கள், சகோதர சகோதரிகள் நண்பர்கள் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் திருமணத்துக்கு வரன் பார்ப்பதில் ஆன்லைன் என்பது கடைசி வாய்ப்பாக இருந்தது. ஆனால் தற்போது முதல் சாய்ஸாக மாறி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்தவர்கள், நண்பர்கள் வட்டத்தில் பார்த்துவிட்டு எங்கேயும் கிடைக்கவில்லை என்னும்பட்சத்தில்தான் இணையத்துக்கு வரன் தேடி வருவார்கள்.

அடுத்ததாக எங்களுடைய வாடிக்கையாளர்களில் 90 சதவீதத்துக்கு மேல் மொபைல் ஆப் மூலமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் நிறுவனம் தொடங்கியபோது டெக்ஸ்டாப்தான். ஆனால் தற்போது மொபைல் இருப்பதால் உடனுக்குடன் அவர்களால் தகவல்களை தெரிந்துகொள்வது மற்றும் முடிவெடுப்பது நடக்கிறது.

இதைவிட முக்கியம் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரு நகரங்களில் இருப்பவர்கள்தான் இணையம் மூலமாக வரன் தேடினார்கள். ஆனால் தற்போது டயர் 3 நகரங்களில் இருந்து எங்களுக்கு 40 சதவீத வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தொழில்நுட்பத்தில் என்ன மாற்றங்களை அல்லது புதுமைகளை செய்திருக்கிறீர்கள்?

முருகவேல்: வரன் தேடி எங்களிடம் பதிவிடும் போது மொபைல் நம்பர் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய விதி. ஒருவேளை பாதுகாப்புக் காரணமாக உங்களுடைய நம்பரை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என நினைத்தால்கூட அதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு அழைப்பு வரும். ஆனால் உங்களுடைய நம்பர் யாருக்கும் தெரியாது.

அதேபோல, உங்களுடைய புரோபைலை யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். தவிர எந்த ஊரில் இருப்பவர்கள், எந்தத் தொழிலில் இருப்பவர்கள், இவ்வளவு வருமானம் இருப்பவர்கள் என யாருக்கு உங்கள் புரோபைல் செல்ல வேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே காண்பிக்கலாம். தற்போது, ‘வெரிஃபை’ என்ற புதிய அம்சத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

படிப்பு, சம்பளம், இருப்பிடம், வேலை, உள்ளிட்டவற்றுக்கு சான்றிதழை சமர்பிக்கும் போது அவற்றை பார்த்து நாங்கள் பரிசீலனை செய்து சான்றிதழ் வழங்குவோம். இதனால் வரன் தேடுவோருக்கு எளிதாக வேலை முடியும். அடுத்து வீடியோ காலிங் வசதி இருக்கிறது. இதுபோல பல புதிய வசதிகள் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிகழ்ந்துள்ளது.

முருகவேல்: நாங்கள் பல பிரிவுகளை உருவாக்கி இருக்கிறோம். டாக்டர்ஸ் மேட்ரிமோனி, டைவர்ஸி மேட்ரிமோனி, டிபென்ஸ் மேட்ரிமோனி என பல பிரிவுகளை உருவாக்கி இருக்கிறோம். காரணம் ஒவ்வொருவரின் தேவையும் பழக்கவழக்கமும் வேவ்வேறானது. அதுபோலதான், ஐஐடி, ஐஐஎம் மேட்ரிமோனியும். இவர்களைப் போன்றவர்களுக்கு நாங்கள் வாய்ப்பை கொடுக்கிறோம்.

இப்போதுதான் இதைத் தொடங்கி இருக்கிறோம். மிகக் குறைவான புரோபைல்கள்தான் வரும். எங்கள் ஒட்டுமொத்த புரபைலில் இவற்றின் விகிதம் மிக மிக குறைவு. ஒரு பபேவில் உள்ள பல பதார்த்தங்களை போலதான் இதுவும்.

கடந்த ஆண்டு லாக்டவுன் அறிவித்தபோது என்ன நினைத்தீர்கள்? ஏனெனில் அனைவரும் பாதுகாப்பில் கவனம் செலுத்தும்போது, திருமணம் என்பது அத்தியாவசியத் தேவையில் வராதே?

முருகவேல்: கணிக்க முடியாமல்தான் நாங்களும் இருந்தோம். ஆனால் புதிதாக பதிவு செய்பவர்கள் முன்பை விட அதிகமாகவே இருந்தது. காரணம், அப்போது பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தனர். தவிர, வரன் தேடத்தொடங்கினால் குறைந்தபட்சம் ஆறு முதல் ஒர் ஆண்டு காலம் வரை ஆகலாம் என்பதால் பலர் முன்பதிவு செய்தனர்.

கடந்த நிதி ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. லாக்டவுன் சமயத்தில் கிட்டத்தட்ட 30% கூடுதலாக வரன் தேடி ரெஜிஸ்ட்டர் செய்தனர்.

முதல் அலையில் நம்மிடம் தீர்வு இல்லை, அதே சமயம் பாதிப்பும் குறைவாக இருந்தது. இரண்டாம் அலையில் நம்மிடம் தீர்வு இருக்கிறது. அதே சமயம் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. தற்போது பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் என இரண்டாம் அலையில் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது தடுப்பூசி போடும் பணி வேகம் எடுத்திருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நிலைமை சரியாகும் என நம்புகிறேன்.

லாக்டவுன் சூழலில் அலுவலகம் நடத்தும் முறையில் செய்த மாற்றங்கள் என்ன?

முருகவேல்: தற்போதும் முதல் லாக்டவுனிலும் முழுமையாக வொர்க் பிரம் ஹோம் முறைதான். ஆனால் நாங்கள் ஹைபிரிட் மாடலில் இயங்கினோம். வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களும் இருந்தார்கள். அலுவலகம் வருபவர்களும் இருந்தார்கள். வரும் காலத்திலும் ஹைபிரிட் முறையில்தான் இயங்குவோம்.

வெளிநாடுகளில் கிளை தொடங்க இருக்கிறீர்கள். இந்தியாவில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் வெளிநாட்டில் இருக்குமா?

முருகவேல்: தற்போதும் துபையில் எங்களுக்கு அலுவலகம் இருக்கிறது. ஆனால் அங்கிருக்கும் இந்தியர்களை கவனம் செலுத்துகிறோம். அடுத்து வங்கதேசம் மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில் டாக்காவில் அலுவலகம் தொடங்க இருக்கிறோம். அதற்கடுத்து இலங்கையில் அலுவலகம் தொடங்க இருக்கிறோம். இந்த இரு நாடுகளை இந்தியாவை போலவே இருக்கும் என்பதால் அங்கு வாய்ப்பு இருக்கும் என நம்புகிறோம்.

மேட்ச் மேக்கிங் பிரிவில் உங்களுடைய மொத்த சந்தை எவ்வளவு?

முருகவேல்: ஒட்டுமொத்த இந்தியாவில் 60 சதவீதத்துக்கு மேலான சந்தை எங்கள் வசம்தான் இருக்கிறது. ஆனால் தென் இந்தியாவை எடுத்துக்கொண்டால் 90 சதவீதத்துக்கும் மேலான சந்தை எங்களுடையதுதான். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் 95 சதவீதம் என்று கூட சொல்லலாம்.

கடந்த நான்கு நிதி ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறதோ?

முருகவேல்: வளர்ச்சி சீராக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டுமே சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கத்தை கூடுதலாக சேர்த்திருக்கிறோம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் கூடுதலாக கேஷ்-யை பேலன்ஸ்ஷீட்டில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது ரூ.285 கோடி அளவுக்கு நிறுவன மதிப்பு இருக்கிறது. இது தவிர புதிய அலுவலகம் கட்டுவதற்காக இடம் வாங்கி இருக்கிறோம். அதனால் நிதி நிலைமை ஸ்திரமாக இருக்கிறது.

மேட்ச்மேக்கிங் நன்றாக இருக்கிறது. ஆனால் இதர பிரிவுகள் எப்படி உள்ளன?

முருகவேல்: mandaps.com மற்றும் வெட்டிங் சர்வீசஸ் எனும் இருதளங்கள் தோடங்கியுள்ளோம். இதில் 18,000 மண்டபங்கள் மற்றும் 20,000 திருமண சேவை நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேட்ச்மேக்கிங் பிரிவில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இதர சேவைகளில் வாடிக்கையாளர்களையும் சேவை நிறுவனங்களையும் இணைக்கிறோம். தற்போது பெரிய ஆடம்பரம் இல்லாமல் திருமணம் செய்கிறார்கள், அதனால் இந்த சேவைகளில் பெரும் தாக்கம் இருக்கிறது. கோவிட்க்கு பிறகுதான் இந்த பிரிவுகள் பழைய வளர்ச்சியை அடையும்.

Murugavel

எதிர்காலத்தில் இந்த பிஸினஸில் வாய்ப்பு எப்படி இருக்கும்?

முருகவேல்: சில நாட்களுக்கு முன்பு எங்களுடைய பணியாளர்களிடம் உரையாடும்போது கூறியதை உங்களிடமும் சொல்கிறேன். உலகத்தில் மூன்று முக்கியமான சேவைகள் தவிர்க்க முடியாதது மற்றும் முக்கியமானது. கல்வி, மருத்துவம் மற்றும் திருமண சேவைகள். இவை மூன்றுக்குமான தேவை இருந்துகொண்டேதான் இருக்கும்.

எப்.எம்.சி.ஜி. நிறுவனங்களைவிட நீங்கள் மார்க்கெட்டிங்குக்கு அதிகம் செலவு செய்வது போல தெரிகிறதே? எம்.எஸ். தோனி ப்ராண்ட் அம்பாசிடராக தொடர்வாரா?

முருகவேல்: எங்களுக்கு இரண்டே செலவுகள்தான். பணியாளர்கள் மற்றும் மார்கெட்டிங் சார்ந்த செலவுகள். ஒவ்வொரு சமயமும் புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டி இருப்பதால் மார்கெட்டிங் என்பது என்பது தவிர்க்க முடியாதது. 125 கோடி ரூபாய்க்கு மேல் இதற்காக செலவு செய்கிறோம்.

அதேபோல எம்.எஸ்.தோனிக்கும் எங்களுக்குமான உறவு நன்றாக இருக்கிறது. குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கைக் கொண்டவர். எங்களின் பிராண்ட் தூதராக இருக்கிறார்.

தற்போது லிவிங் டுகெதர், டேட்டிங் ஆப்ஸ் அதிகரிக்கிறது. திருமணமே வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இதனால் உங்களுக்கு எதேனும் பாதிப்பு ஏற்படுமா?

முருகவேல்: சமூகத்தில் பலவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். இவையெல்லாம் தற்காலிமான நடவடிக்கையே. தவிர இவர்கள் பெரும்பான்மை கிடையாது. இன்னும் திருமணத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள்தான் மிக பெரும்பான்மையாக இருக்கிறார்.

திருமணம் என்பது நம்பிக்கை சார்ந்தது. நான் அமெரிக்காவில் வேலை பார்த்தபோது 60 வயது நபர் அடுத்த வாரத்தில் திருமணம் என அழைத்தார். எனக்கு ஆச்சர்யம். இந்த வயதில் எப்படி எனக் கேட்டேன். அதற்கு 25 ஆண்டுக்கு மேலாக லிவிங் டுகெதரில் இருந்தோம். தற்போது திருமணம் செய்துகொள்கிறோம் எனத் தெரிவித்தார். இதெல்லாம் இந்தியாவுக்கு ஏற்புடையதாக இருக்காது.

தற்போது விவாகரத்து எண்ணிக்கை உயரந்திருப்பதாக கருதுகிறீர்களா?

முருகவேல்: விவாகரத்துக்கு செய்பவர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இது மொத்தத்தில் ஒரு சதவீதம் கூட கிடையாது. அமெரிக்காவில் விவாகரத்து விகிதம் 40க்கு மேல் இருக்கிறது.

ஒரு திருமணம் தாமாக வெற்றி அடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து திருமணங்கள் வெற்றி அடைந்தன. ஆனால் தற்போது திருமணத்தை வெற்றி அடைவதற்கு தேவையான முயற்சியை, மெனக்கெடுதல் தேவைபடுகிறது. மரியாதை, விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேவைப்படுகிறது. இவையெல்லாம் இருந்தால்தான் திருமணத்தை வெற்றிபெற வைக்கமுடியும்.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்