டெக்னாலஜி துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ந்து வருவதுபோல விவசாயத்திலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெருகிவருகின்றன. இந்தியாவில் விவசாயம் செய்யும் முறையை புரிந்துகொண்டால்தான் விவசாயம் சார்ந்த அக்ரி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தேவை அதிகரிகும்.

இந்தியாவில் சராசரியாக ஒரு விவசாயி வசம் 2.5 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் ஒரு விவசாயி வசம் 440 ஏக்கர் நிலம் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் விவசாயம், விவசாயம் சார்ந்த பணியாளர்கள், விவசாயம் சார்ந்த விற்பனையாளர்கள் என பாதிக்கும்மேற்பட்ட இந்தியர்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். அதனால் விவசாயத்தில் தீர்க்க வேண்டிய பல சவால்கள் இருப்பதால் பல நிறுவனங்கள் இங்கு உருவாகின்றன.

அதில் ஒரு நிறுவனம்தான் ’வேகூல் ஃபூட்ஸ்’ ‘Waycool foods’. சென்னையைத் தலைமையாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்த்திக் ஜெயராமனிடம் வேகூல் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து உரையாடியதிலிருந்து…

Karthik Jayaraman

Waycool foods இணை நிறுவனர் கார்த்திக் ஜெயராமன்

ஏன் வேகூல் ஃபூட்ஸ்?

ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினீயர் படித்தவர். படித்து முடித்தபிறகு அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அங்கேயே சில காலம் இருந்துவிட்டு அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார் கார்த்திக். இந்தியா வந்து டாடா மோட்டார்ஸ், டிம்கென் இந்தியா ரிசர்ச் நிறுவனங்களில் வேலை பார்த்தார். அடுத்தகட்ட வளர்ச்சி தேவை என்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஐஎஸ்பி-ல் எம்பிஏ படித்துவிட்டு மெக்கென்ஸி நிறுவனத்தில் சில காலம் வேலை பார்த்தார்.

இதனைத் தொடர்ந்து அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார். 2013-ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் ஒரு மந்த நிலை ஏற்பட்டது. அப்போது அந்த சூழலில் இருந்து எப்படி மீளவேண்டும் என நிறுவனம் ஒரு குழு அமைத்தது. அதில் இவரும் இருந்தார். அந்த மந்த நிலையில் இருந்து மீண்டு வந்துவிட்டாலும் அடுத்து என்ன என்று யோசித்தன் விளைவுதான் வேகூல் ஃபூட்ஸ்.

”என்னுடைய முக்கியமான திறமையே சப்ளைசெயின் மேனேஜ்மெண்ட்தான். அதனால் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்-ல் தேவை இருக்கும் துறையில் எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். சப்ளை செயினில் தேவை இருக்கும் துறை விவசாயம்தான். காரணம் இந்தியாவில் பல விவசாயிகள் உள்ளனர். பல இடங்களில் பொருட்கள் தயாராகி, பல இடங்களுக்குச் செல்கிறது. இதில் ஒரு சிஸ்டத்தை உருவாக்கி இவற்றை ஒருங்கிணைக்கும் பட்சத்தில் பெரிய அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என நினைத்தேன்,” என கார்த்திக் ஜெயராமன் கூறினார்.

ஆரம்பகாலம்

தென் இந்தியா மூலம் பல விவசாய மையங்களுக்கு முதல் ஆறு மாதம் பயணம் செய்தோம். இந்தத் துறை எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தோம். ஒரு காலத்தில் நாம் உணவுக்காக போராடிக் கொண்டிருந்தோம், ஆனால்  தற்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்திருக்கிறோம். அரசி, கோதுமை, காய்கறி, பழம், பால் என அனைத்து பிரிவிலும் முதல் அல்லது இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால் இது சரியாக சந்தைக்கு வருகிறதா என்றால் கேள்விக்குறிதான்.

உடனே இடைத்தரர்கள் பலர் லாபம் பார்க்கிறார்கள் என்று சொல்லக்கூடும். ஆனால் இடைத்தரகர்கள் இல்லையெனில் இந்தத் தொழிலில் இழப்பும் அதிகமாக இருக்கும் என்பதுதான் நிஜம். இந்தியா போன்ற பாதிக்கும் மேற்பட்டவரகள் விவசாயத்தை நம்பி இருக்கும்போது இடைத்தரகர்கள் இல்லை எனில் விவசாயம் லாபகரமாக இருக்காது.

பல விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்கி சந்தைக்கு கொண்டுவருவது இடைத்தரகள்தான். அதேபோல மகாராஷ்டிராவில் இருந்து ஒர் லாரி வெங்காயம் வருகிறது என்றால், ஒரு நபர் மட்டுமே விற்பனை செய்ய முடியாது. பல கட்டங்களைத் தாண்டிதான் நம் வீட்டு அருகில் உள்ள காய்கறி கடையில் கிடைக்கிறது.

ஒரு விவசாயிடம் இருந்து வாங்கி, சிறிய ஆட்டோ, பல சிறிய ஆட்டோவில் இருந்து லாரியில் மாற்றி சந்தைக்குக் கொண்டு வர வேண்டிய சூழல்தான் இருக்கிறது. காரணம் பலரும் சிறு விவசாயிகள். ஒவ்வொரு முறை பொருட்களை ஏற்றி இறக்கும் பட்சத்தில் செலவு கூடுகிறது. அதேபோல விவசாயப் பொருட்களின் சேதாரம் அதிகரிக்கிறது. சேதாரம் அதிகரிப்பதால் மீண்டும் அந்த பொருளின் விலை உயருகிறது.

அதனால் விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்கி நேரடியாக நுகர்வோருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிஸினஸ் மாடல்.

விவசாயிகளைச் சென்றடைவதற்கு முன்பு யாருக்குத் தேவை என்பதை ஆராய்ந்தோம். சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள், கடைகள், பேக்கரிகள் என வாடிக்கையாளர்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தால் அவர்களிடன் தேவை வேறு மாதிரியாக இருந்தது.

வேகூல்

Waycool foods குழுவினர்

உதாரணத்துக்கு ஒரு ஹோட்டல் நடத்துபவர் மற்றும் மளிகைக் கடைக்காரர் காலையில் 3 மணிக்கு பொருட்களை வாங்க மார்க்கெட் செல்ல வேண்டி இருக்கிறது. ஒன்று அவர் நேரடியாக செல்ல வேண்டும் இல்லை அதற்கென பணியாளர்கள் இருக்க வேண்டும். இது அவர்களுக்கு பெரிய சிக்கல். அவர்களுக்குத் தேவையான பொருட்களை யாராவது கொண்டுவந்து சரியான நேரத்தில் சேர்க்கும் பட்சத்தில், அவர்கள் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும். ஒரு ஓட்டல் நடத்துவதற்கு 250-க்கும் மேற்பட்ட பொருட்கள் தேவை என்றால், இதனை வாங்குவதே அவர்களுக்கு பெரும் சிக்கல்.

அதனால் ஒரு நாளைக்கு எவ்வளவு காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைத் தேவை என்பதை வாடிக்கையாளர்களிடம் இருந்து புரிந்துகொள்கிறோம். அதற்கு ஏற்ப விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறோம். இருந்தாலும் எங்கள் தேவையில் 100 சதவீதமும் விவசாயிகளிடம் இருந்து வாங்குவதில்லை. 70 சதவீதம் நேரடியாக வாங்குகிறோம், மீதமுள்ள பொருட்களை சந்தையில் இருந்து வாங்குகிறோம், என்று விளக்கினார்.

பிஸினஸ் மாடல்

வாடிக்கையாளர்களுக்குத் தேவையான மொத்த காய்கறி மற்றும் பழங்களை அவர்களுக்கு தேவையான சமயத்தில் கொண்டு சேர்ப்பதுதான் எங்களுடைய முக்கியப் பணி. அரசி, பருப்பு, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை தேவையான நேரத்தில் அவர்களுக்குக் கொடுக்கிறோம்.

காய்கறி மற்றும் பழங்களில் பிராண்ட் பெயர் இன்னும் இந்தியாவில் பிரபலமாகவில்லை. ஆனால் அரிசி மற்றும் பருப்பு வகைகளில் எங்களுடைய சொந்த பிராண்ட்-யை அறிமுகம் செய்திருக்கிறோம். பழங்களை பொறுத்தவரை இந்தியாவில் இருந்து மட்டும் வாங்காமல் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்கிறோம். 80,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நாங்கள் கொள்முதல் செய்கிறோம்.

இப்போதைக்கு ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உள்ளனர். எப்படியும் ஒரு மாதத்துக்கு 25,000 வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்கிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் கோவையை சுற்றிய சில நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்குகிறோம்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் 800 தாலுக்காக்கள் உள்ளன. இதில் 262 தாலுக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவுப்பொருட்களை நாங்கள் வினியோகம் செய்கிறோம்.

அதேபோல், நாங்கள் பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டே ஆர்டர்கள் பிடிப்பதில்லை. இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு ஆர்டர் என்ன என்பது எங்களுக்கு இன்று தெரிந்துவிடும். இதனை தெரிந்துகொண்ட பிறகுதான் பொருட்களை வாங்கவே தொடங்குவோம். இந்த தொழிலில் முக்கிய சவாலே பொருட்கள் வீணாவதை எப்படி குறைக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.

அதேபோல Sunny bee என்னும் ரீடெய்ல் ஸ்டோர்களை நடத்திவருகிறோம். ஆனால் இந்த கடைகள் பிரான்ஸிசி அடிப்படையில் நடத்திவருகிறோம். இப்போதைக்கு ஆறு கடைகள் உள்ளன. இதனை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம், என்றார் கார்த்திக்.

WayCool

நிதி நிலைமை?

நிறுவனம் தொடங்கும்போது சுமார் 1 மில்லியன் டாலர் தொகையுடன் முதலீடு செய்தோம். இதுவரை 46 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டை பெற்றிருக்கிறோம். செயல்பாட்டு அளவில் நாங்கள் லாபத்தில்தான் இருக்கிறோம். ஆனால் விரிவாக்கம் மற்றும் முதலீடு அதிகமாக இருப்பதால் ஒட்டுமொத்த அளவில் லாபம் இல்லை.

முதலீடு மற்றும் விரிவாக்கத்தை நிறுத்தினால் லாபம் ஈட்டலாம். ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு லாபம் ஈட்டும் திட்டமில்லை. இப்போதைக்கு வரிவாக்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறோம்.

1,300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேரடியாக இருக்கிறார்கள். மறைமுகமாக 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர். நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை 3,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறோம். 2020-ம் நிதி ஆண்டில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை இருந்தது. கடந்த 2021-ம் நிதி ஆண்டில் 1,000 கோடி விற்பனையை தொட்டிருக்கிறோம்.

கடந்த முறை நிதி திரட்டும் போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 105 மில்லியன் டாலராக இருந்தது. அப்போது முதல் நான்கு மடங்கு அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.

போதுமான நிதி இருக்கிறது. இருந்தாலும் முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறோம். பெரிய திட்டங்களுடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம் என கார்த்திக் ஜெயராமன் நமக்கு விடை கொடுத்தார்.

அதோடு WayCool Foods, இரு தினங்களுக்கு முன் சித்தி வினாயக் அக்ரி ப்ராசசிங் (SV Agri) என்ற இந்தியாவின் மிகப்பெரிய உருளைக்கிழங்கு கொள்முதல் நிறுவனத்தில் சுமார் $5 மில்லியன் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை டெக்னாலஜி துறையில் மட்டுமே ’யுனிகார்ன்’ நிறுவனங்களைப் பார்த்தோம். இனி விவசாயம் சார்ந்த துறையிலும் ’யுனிகார்ன்’ அந்தஸ்து பெறும் நிறுவனங்கள் உருவாகும் சூழல் உருவாகி இருக்கிறது மகிழ்சிகரமான செய்தி தான்.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்