சில பெயர்கள் காலத்தால் அழிக்க முடியாமல் நிலைத்துவிடும். போட்டோகாபி என்பதுதான் செயல் என்றாலும் ஜெராக்ஸ் என்னும் பெயரே நிலைத்துவிட்டது. சமீபத்தில் அப்படி பிரபலமான ஒரு பெயர்தான் Zoom.

கொரானாவுக்கு முன்பாகவே ஜூம் இருந்தாலும் மக்கள் வெளியே செல்லமுடியவில்லை என்பதால் ஜூம் பயன்படுத்தத் தொடங்கினார்கள். கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகள் இருந்தாலும் Zoom என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. போட்டி நிறைந்த சந்தையில் ஜூம் எப்படி இருக்கும் என்பது காலப்போக்கில்தான் நமக்கு தெரியும்.

இந்த நிலையில், ஜூம் நிறுவனத்தின் புராடக்ட் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவின் தலைவராக இருப்பவர் ஒரு தமிழர். அவர் தான் வேல்சாமி சங்கரலிங்கம். அவரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் உள்ள வேல்சாமி, பிறந்தது விருதுநகர் மாவட்டத்தில். இந்திய நேரப்படி காலையிலும் அமெரிக்க நேரப்படி இரவிலும் எங்களுடைய ஜூம் சந்திப்பு நடைபெற்றது.

வேல்சாமி

வேல்சாமி சங்கரலிங்கம்

இந்தியாவில் இருந்து அமெரிக்கா எப்படிச் சென்றார், ஜூம் செய்திருக்கும் விஷயங்கள் என பல விஷயங்களை உரையாடினோம்.

ஆரம்பகாலம்

விருதுநகரில் பிறந்தவர் வேல்சாமி சங்கரலிங்கம். 10ம் வகுப்பு வரை சொந்த ஊரில் படித்தவர், அதனைத் தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள மான்போர்ட் போர்டிங் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ படித்து முடிந்த பிறகு, சில காலம் டிசிஎம் நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பிறகு அமெரிக்காவுக்கு மேல் படிப்பு படிக்க சென்றுவிட்டார். இலியான்ஸ் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நிர்வாகமும் படித்தார்.

படிக்கு பிறகு ஐபிஎம் மற்றும் ஆண்டர்சன் கன்சல்டிங் நிறுவனத்தில் பணியாற்றினார் வேல்சாமி சங்கரலிங்கம். இதனைத் தொடர்ந்து ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலை செய்தார். அந்த நிறுவனத்தை பின்னாளில் வெப்எக்ஸ் நிறுவனம் வாங்கியது. பின்னர் வேறு சில நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார். இங்கு பணியாற்றும்போதுதான் ஜூம் நிறுவனத்தின் எரிக் யுவானை சந்திதார் வேல்சாமி. அங்கு இருவரும் நண்பர்களானார்கள். வெப் எக்ஸ் நிறுவனத்தை சிஸ்கோ வாங்கியதை அடுத்து அங்கிருந்து விஎம்.வேர் நிறுவனத்துக்கு மாறினார் வேல்சாமி.

இந்தியாவில் இருந்து வேல்சாமி சென்றது போல எரிக் யுவான் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கச் சென்றவர். வெப் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஜூம் நிறுவனத்தை எரிக் தொடங்கினார். ஜூம் நிறுவனத்தின் வளர்ச்சியை கோவிட் பெரிய அளவுக்கு உயர்த்தியது. இந்த நிலையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரிய குழு தேவை என்பதால் வேல்சாமியை முக்கியப் பொறுப்புக்கு அழைத்திருக்கிறார் எரிக். இவரது அழைப்பை தொடர்ந்து ஜூம் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பை ஏற்றார் வேல்சாமி.

Zoom ஆரம்பகாலம்

ஜூம் நிறுவனத்தின் ஆரம்பகாலம் குறித்து விவரித்தார் வேல்சாமி. கோவிட்டுக்கு முன்பாகவும் ஜூம் இருந்தது. ஆனால் அப்போது பெரிய அளவில் இல்லை.

2018-ம் ஆண்டு இந்த பிரிவில் 10-ம் இடத்தில் இருந்தோம். ஆனால் கோவிட் வந்த பிறகு அசுர வளர்ச்சி ஏற்பட்டு, ஜும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்தது. 2020ம் ஆண்டு ஜூம் ஆண்டு என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சி இருந்தது.

தற்போது இந்த வளர்ச்சியை நீடிப்பதற்கான பணியில் இருக்கிறோம். அலுவலகம் சார்ந்த பணிகள், கல்வி, குடும்ப நிகழ்வுகள், மதசார்பு நிகழ்வுகள் என பலவகைகளில் ஜூம் பயன்படுகிறது.

உதாரணத்துக்கு அமெரிக்காவில் எனக்குத் தெரிந்து ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ குழு இருக்கிறது. கோவிட் காலத்தில் அவர்களால் ஷோ நடத்தமுடியவில்லை. இதனால் ஜூம் மூலமாக அந்த ஷோவினை நடத்தினார்கள். அவர்களுக்கு சர்வதேச அளவில் இருந்து பல பார்வையாளர்கள் கிடைத்தார்கள். கோவிட் காரணமாக தனிப்பட்ட நேரடி தொடர்பு குறைந்திருந்தாலும் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்கள் கிடைத்த்திருக்கிறார்கள்.

ஜூம் வருவதற்கு முன்பு பிஸினஸ் சூழல் வேறு வகையில் இருந்தது. உதாரணத்துக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு மூன்று மணி நேரம் விமானப் பயணம் செய்து, அதன் பிறகு அரை மணி நேரம் மீட்டிங் சென்று மீண்டும் விமான நிலையம் வந்து சென்னை வர வேண்டும். 30 நிமிட மீட்டிங்குக்கு ஒரு நாள் வீணாகும். ஆனால் இனி அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.

கோவிட் முடிந்த பிறகு ஜூம் போன்ற செயலிகளுக்கு தேவை குறையுமே என கேட்டதற்கு?

இப்போது அதுதான் எங்களுக்கு முன்பு உள்ள சவால். ஒப்பீட்டளவில் தேவை குறைந்தாலும், தேவை இருந்துகொண்டுதான் இருக்கும். சில ஆண்ட்களுக்கு முன்பு இதுபோன்ற செயலிகளில் மீட்டிங் நடப்பது அரிதாக நடக்கும். ஆனால் இனி நேரடியாக நடப்பதுபோல, ஜூம் போன்ற செயலிகளின் மூலமும் மீட்டிங்குகள் நடக்கும்.

யார் ஜூமை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு விளக்கமாக பதில் அளித்தார். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஜூம் செயலியை பயன்படுத்துகின்றன. அதுவும் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் அதிக பயன்பாடு இருக்கும்.

”உதாரணத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் சர்ச்களில் எங்களுடைய செயலி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல பல சேவைகளுக்கு பயன்படுகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியாவில்தான் எங்களுக்கு வாடிக்கையாளர்கள்,” என ஜூம் குறித்த தற்போதைய செயல்பாடுகளை குறித்து வேல்சாமி விளக்கினார்.

அடுத்து?

ஜூம் தற்போது பெரிய பிராண்டாகிவிட்டது. அடுத்த கட்டத்துகான திட்டம் என்ன எனும் கேள்விக்கு விரிவான பதில் அளித்தார் வேல்சாமி.

zoom app

தற்போது ஜூம் ஒரு செயலியாக இருக்கிறது. அடுத்தகட்டமாக ஜூம் ஒரு பிளாட்பாரமாகக் கொண்டு செல்ல இருக்கிறோம். சாட், போன் சேவைகள் உள்ளன. ஜூம் ஆப்ஸ் உள்ளது. இதில் நாம் இருவரும் ஜூம் மூலம் இணைந்திருக்கிறோம். இதன் மூலம் வேறு செயலிகளை பயன்படுத்த முடியும். உதாரணத்துக்கு ஜூம் மூலமாக கேம் விளையாட முடியும்.

இ-காமர்ஸ் என்பது தெரியும். வீடியோ காமர்ஸ் போன்று ‘ஆன் ஜூம்’ ’On Zoom’ என்னும் திட்டத்தை கொண்டுவர இருக்கிறோம். உதாரணத்துக்கு நீங்கள் மியூசிக் அல்லது யோகா சொல்லிக்கொடுக்க முடியும் என்றால் உங்களுக்கு அத்தொழிலை எப்படி விற்க வேண்டும் என்பது குறித்து தெரிய தேவையில்லை. எங்களுடன் இணைந்துவிட்டால் போதும் மற்ற விஷயங்களை ஜூம் பார்த்துக்கொள்ளும்.

உதாரணத்துக்கு டிக்கெட் கட்டணம் வசூலிப்பது, அதிகபட்ச லிமிட் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஜூம் கவனித்துக்கொள்ளும். நீங்கள் கற்றுக்கொடுக்கும் விஷயத்தை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும்.

எங்களுடடைய ஜூமை அடிப்படையாக வைத்து அதற்கு மேலே வேறு எதேனும் சாப்ட்வேர் உருவாக்கிக்கொள்ள முடியும். இதனையும் ஒரு வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம்

இதுபோல பல பிளாட்பார்ம்களின் நாங்கள் செயல்பட இருக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் பெரிய சந்தை இருக்கிறது. இந்தத் துறையில் பல நிறுவனங்கள் இருக்கின்றன என்பதால் போட்டி குறித்து நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, எங்களுடைய வளர்ச்சி குறித்து மட்டுமே நாங்கள் சிந்திக்கிறோம் என வேல்சாமி கூறினார்.

இந்த பெருந்தொற்று ஜூம் நிறுவனத்துக்கு அபரிவிதமான வளர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த வளர்ச்சியை, ஜூம் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லுமா என்பது இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகே தெரியவரும்.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்