தொழில்துறையினர் அனைவருக்கும் தங்களது தொழில் குறித்து கணிப்புகள் இருக்கும். தங்களது தொழிலின் வருமானம் எவ்வளவு குறையும் அல்லது எவ்வளவு உயரும் என்பதை கணக்கிட்டு அதனை அடிப்படையாக வைத்து திட்டங்களை தீட்டுவார்கள். ஆனால் யாரும் வருமானம் பூஜ்ஜியமாகும் என்பதை கணித்திருக்க மாட்டார்கள்.

கொரோனா காலத்தில் சில தொழில்களுக்கு வருமானம் பூஜ்ஜியம் என்னும் நிலையிலே இருந்தது. குறிப்பாக சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் ஆறு மாதங்களுக்கு மேல் வருமானமே இல்லை.

இந்த காலகட்டத்தை எப்படி கடந்தார்கள் அடுத்த கட்டத் திட்டம் என பல விஷயங்கள் குறித்து, ஜிடி ஹாலிடேஸ் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் மணிகண்டனை சந்தித்தோம்GT HOLIDAYS சுற்றுலாத் துறையில் செயல்பட்டுவரும் சென்னை நிறுவனம். தமிழகத்தில் ஆறு கிளைகளும் பெங்களூருவில் ஒரு கிளையுடனும் செயல்பட்டு வருகிறது.

சுற்றுலாத் துறைக்கு எப்படி வந்தீர்கள் என்னும் கேள்வியுடன் உரையாடலை தொடங்கினோம்.

கல்லூரி நாட்களில் உதித்த ஐடியா

இந்தத் துறையில் எங்களுக்கு முன்னோடி என்னுடைய தாத்தாதான். கன்னியாகுமரியில் ஓட்டல் நடத்திவந்தார். குடும்பம் தொழிலில் இருந்ததால் படிப்பைவிட தொழிலில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இருந்தாலும் நான் மோசமாக படிக்கும் மாணவன் கிடையாது. சராசரியை விட கொஞ்சம் மேலாகவே படிப்பேன்.

கல்லூரி

கல்லூரி நாட்களில் கார்த்திக்

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் படிக்க இடம் கிடைத்தது. நான் கலகலப்பாக இருப்பவன். ஆனால் அங்கு இருப்பவர்கள் மிகவும் சீரியஸான மாணவர்கள். அவர்கள் பேசுவதெல்லாம் 0.25 மார்க்கில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கமுடியவில்லை என பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களைக் குறை கூறவில்லை. ஆனால் என்னால் அங்கு இயல்பாக இருக்க முடியவில்லை.

பாதியில் வந்துவிடலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் வீட்டில் படிப்பு முடித்துவிட்டு வா, அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பிறகு யோசிக்கலாம் எனக்  கூறிவிட்டனர். அதனால் வேறு வழியில்லாமல் படிப்பை தொடர்ந்தேன். சுற்றுலா சம்பந்தமான ஊரில் இருந்து வந்திருப்பதால் ஒவ்வொரு வாரமும் எங்காவது வெளியே செல்ல வேண்டும் என தோன்றியது. அதனால் முடிந்த அளவுக்கு சுற்றுலாவுக்குச் சென்றேன்.

பொறியியல் கல்லூரிகளில் ஐவி (industrial visit) செல்வது என்பது வழக்கம். இதனை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்போம். அப்போது எங்கள் நண்பர்களில் யாரோ ஒருவர் ஐவி செல்ல இருப்பதாகவும் அதற்கு  சுமார் ரூ.2,500 செலவு ஆகும் என பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், அந்த ஊருக்கு செலவதற்கு அவ்வளவு செலவு ஆகாது என்பது எனக்கு தெரியும்.

அதனால் மாணவர்களுக்கு ஐவி ஏற்பாடு செய்து கொடுத்தால் என்ன என தோன்றியது.

நமக்குப் பிடித்த விஷயத்தை செய்யலாம். இதன் மூலம் வருமானமும் ஈட்டலாம் என்பதால் இந்த விஷயத்தை செய்யத் தொடங்கினேன். வரும்காலத்தில் இதுவே என்னுடைய தொழிலாக மாறியது என கார்த்திக் தெரிவித்தார்.

கல்லூரியிலே இதனைத் தொழிலாக நடத்த முடிந்ததா என்னும் கேள்விக்கு விரிவாக பதில் அளித்தார் கார்த்திக். ஐவி என்பது முழு நேரமாக செய்ய முடியாது. ஒரு செமஸ்டரில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் எனக்கு வருமானம் ஈட்டும் தொழிலாக இருந்தது.

கல்லூரி கட்டணமாக அப்பா செலுத்திய தொகையை இந்த தொழிலில் இருந்து எடுத்தேன்.

ஆரம்பத்தில் எங்கள் டிபார்ட்மெண்ட்க்கு மட்டுமே ஐவி ஏற்பாடு செய்தேன். குறுகிய காலத்தில் கல்லூரியில் தெரிந்த நபராக மாறினேன். இதைவிட முக்கியம் அடுத்த செமஸ்டரில் கோவையில் உள்ள மற்ற கல்லூரி நண்பர்களும் ஐவி ஏற்பாடு செய்துதர வேண்டும் எனக் கேட்டனர்.

’வா மச்சான் ஐவி போகலாம்’ என்பது அப்போது எங்களின் டேக் லைனாக இருந்தது. எங்கள் கல்லூரிக்கு என்னுடைய ஹாஸ்டல் அறையே அலுவலகமாக இருந்தது. வெளி கல்லூரி மாணவர்களுக்காக ஆர்.எஸ்.புரத்தில் அலுவலகம் எடுத்து நடத்தி வந்தேன். இப்போது முழுநேர தொழிலே இதுதான். ஆனால் கல்லூரியில் படித்துக்கொண்டே இதனை நடத்தினேன். என்னுடைய வாழ்நாளில் நான் மறக்க முடியாத நாட்கள் அவை.

சுற்றுலாவே தொழில்

படிக்கும்போதே டிசிஎஸ்-ல் வேலை கிடைத்தது. நல்ல வேலை என்பதால் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால் அந்த வேலையும் சரி வராது என்பது ஒரே மாதத்தில் தெரிந்துவிட்டது. கல்லூரியை விட மிகவும் சீரியஸானவர்கள் அங்கு இருந்தனர். வாழ்க்கையில் கேரியர் முக்கியம். ஆனால் மிகவும் சீரியஸாக அனுக கூடாது என்பது என் எண்ணம். அதனால் அந்த வேலையை விட்டுவிட்டேன்.

அப்போது சுற்றுலாவில் உள்ள வாய்ப்புகள் என்ன என பட்டியலிட்டால் கார்ப்பரேட் டூர் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் வசம் இருந்தது. உள்ளூர் நிறுவனர்கள் தனி நபர்களை நம்பியே இருந்தனர். கார்ப்பேட் டூர் என்பது காக்ஸ் அண்ட் கிங்ஸ், தாமஸ் குக் போன்ற நிறுவனங்களிடம் இருந்தன. இதற்கான காரணம் என்ன என யோசித்தேன்.

உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் பணம் கொடுக்கும் முறையில் ஏற்பு இல்லை. எதற்கெடுத்தாலும் விதிமுறை இருக்கும் என்பது உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களின் கவலையாக இருக்கிறது. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேறு சிக்கல் இருக்கிறது.

ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பணியாளர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார்கள் என்னும் பட்சத்தில் சில சதவீத தொகையை முன்பணமாக கொடுக்க வேண்டும். இந்த தொகையை உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் வேறு வழியில் பயன்படுத்திவிட்டால் என்ன செய்ய முடியும் என கவலைப்பட்டன. இதனால் இந்த இரு துருவமும் இணையவே இல்லை. இந்த இடத்தில் ஒரு பிஸினஸ் வாய்ப்பு இருக்கிறது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன்.

கல்லூரியில் கோபி டூர்ஸ் என்னும் பெயரில் நிறுவனத்தை நடத்தினேன். அதனை அடிப்படையாக வைத்து ஜிடி ஹாலிடேஸ் என்னும் பெயரில் நிறுவனத்தை 2007ல் முதலீடுகள் ஏதும் இல்லாமல் தொடங்கினேன் என நிறுவனத்துகான முன் கதையை கூறினார் கார்த்திக்.

karthik manikandan

புதிய ஐடியாக்களால் வளர்ச்சிப் பாதையை நோக்கி

கார்ப்பரேட்களை நோக்கி பல முறை நான் முயற்சி செய்தேன். இறுதியாக ஒரு நிறுவனம் அவர்களின் டீலர்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் வாய்ப்பு வழங்கியது. இந்த வாய்ப்பில் லாபம் கிடைக்கவில்லை என்றாலும் கூட பரவாவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டேன். அந்த நிறுவனத்தின் டீலர்களுக்கு எங்களுடைய செயல்பாடுகள் மிகவும் பிடித்திருந்தது.

ஒரு டீலரே மற்ற துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் டீலராக இருப்பார்கள். அதனால் பல துறையை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கின. அதன் பிறகு இந்தியாவுக்குள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கும் சுற்றுலா அழைத்துச் செல்லத் தொடங்கினோம் எனக் கூறினார்.

இந்தத் தொழிலில் செய்த புதுமைகள் குறித்து பகிர்ந்தார் கார்த்திக். எங்களுக்கு ஆர்டர் கிடைத்ததால் மட்டுமே நாங்கள் நிலைத்திருக்க வில்லை. தொடர்ந்து புதுமைகள் புகுத்தியதால் மட்டுமே தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்துவந்தன. நாங்கள் செய்த புதுமைகள் பெரிய விஷயங்கள் கிடையாது. மிகச் சாதாரண விஷயங்கள்தான். ஆனால் அவை இந்தத் துறையில் செய்யப்படாமலே இருந்தது.

விமானத்தில் செல்லும் போது, சம்பந்தப்பட்டவர்களின் பெயர் எழுதி சீட்டினை முன்பதிவு செய்திருப்போம். அவர்களுக்கு பிரத்யேக வரவேற்பு கொடுப்போம். அதேபோல என்னதான் வெளிநாட்டு, வெளிமாநில உணவுகளை ரசித்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அந்த உணவை நம்மவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானது தோசை, அரிசி சாதம், ரசம், தயிர் போன்றவைகள்தான்.

அதனால் எந்த ஊரில் என்ன கிடைக்குமோ அதனை மட்டும் கொடுக்க மாட்டோம். இங்கிருந்தே தேவையானதை நாங்கள் எடுத்துச் செல்வோம். நினைத்து பாருங்கள் வெளிநாட்டில் ரசம் கிடைத்தது என்றால் வந்தவர்கள் மறக்கவே மாட்டார்கள் என கார்த்தி கூறினார்.

அடுத்த கட்டமாக கொரோனா காலத்தில் எங்களின் வருமானம் முற்றிலும் நின்றுபோனது. மக்கள் வெளியே செல்லத் தயங்கும் பட்சத்தில் சுற்றுலாவுக்கு எங்கு வருவார்கள். ஆனாலும் நாங்கள் யாரையும் வேலையை விட்டு நீக்கவில்லை.

எங்களுக்கு ஆறு கிளைகள் உள்ளன. 80-க்கும் மேற்பட்டவர்கள் வேலையில் இருக்கிறார்கள். வேலையில் இருந்து யாரையும் நீக்கவில்லை. ஆனால் வருமானமே இல்லை என்னும்போது முழு சம்பளத்தை எப்படி கொடுக்க முடியும்?. சம்பந்தபட்டஊழியர்களின் தேவைக்கு ஏற்ப தொகையை வழங்கினோம். இந்த கால கட்டத்தில் பணியாளர்களை பயன்படுத்தி ஆண்டி வைரல் மாஸ்க் மார்க்கெட்டிங் வேலையைச் செய்தோம். ஆனால் இவையெல்லாம் சிறு துரும்புதான்.

கடந்த நிதி ஆண்டில் ரூ.90 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டினோம். ஆனால் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வருமானம் கிடையாது. அக்டோபருக்கு பிறகு கொஞ்சம் இந்தத் துறையில் சிறிய வெளிச்சம் தோன்றி இருக்கிறது. இருந்தாலும் கோவிட்-க்கு முந்தைய வருமானம் இன்னும் வரவில்லை. ஆனால் தற்போது புதிய ஆர்டர்கள் வரத்தொடங்கி இருக்கின்றன.

புதிய ட்ரெண்ட் என்ன?

தற்போது புதிய டிரெண்ட் உருவாகி இருக்கிறது. இதுவரை எங்களுக்கு கார்ப்பரேட் பெரிய வருமானம் கொடுத்துவந்திருக்கிறது. ஆனால் இனி Destination wedding அதிகமாகும் எனத் தோன்றுகிறது. கோவிட்க்கு முன்பு ஒரு திருமணத்துக்கு 2,000 நபர்கள் என்பது சாதாரணமாக இருந்தது. ஆனால் தற்போது குறைந்த நபர்களை வைத்து திருமணத்தை நடத்தும் போக்கு தொடங்கி இருப்பதால் வெளிநாட்டுக்கு அல்லது வெளியிடத்துக்குச் சென்று திருமணத்தை நடத்த பலரும் தயாராக இருக்கிறார்கள்.

ஒருவேளை கோவிட் வரவில்லை என்றால் எப்படி குறைந்த நபர்களை வைத்து திருமணத்தை நடத்துவது என்னும் தயக்கம் அனைவருக்கும் இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த தயக்கம் இல்லை.

100 நபர்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று திருமணம் நடத்தினால் 20 லட்ச ரூபாயில் முடிக்க முடியும். உள்ளூரில் நடத்தினால் இதே செலவு ஆகும். அதே செலவில் முக்கியமானவர்களை வைத்து மட்டுமே திருமணம் நடத்தினால்போதும் என்னும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். வரும் காலத்தில் இது அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது என சுற்றுலாத் துறையில் உள்ள ட்ரெண்ட் குறித்து விளக்கினார் கார்த்திக்.

ஒவ்வொரு சிக்கலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு மட்டுமே அவை தெரியும். ஜிடி ஹாலிடேஸ்-க்கு தெரிந்திருக்கிறது.!

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்