வளர்ந்துவரும் துறையான ஒடிடியில் களம் இறங்குகிறது ‘Contus’ நிறுவனம். ஐபிஎம் நிறுவனத்தில் வேலை செய்த ஸ்ரீராம் மனோஹரன் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து 2008-ம் ஆண்டு ’கான்டஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

ஆரம்பத்தில் சேவை நிறுவனமாக இருந்த இது, தங்களுக்கு சேவையில் கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு புராடக்ட் நிறுவனமாக மாற்றினார்கள். இந்த நிலையில், ஓடிடி ஏன் தொடங்க வேண்டும், ஓடிடிக்கான தேவை இருக்கிறதா என்னும் பல கேள்விகளுடன் ஸ்ரீராம் உடன் உரையாடலை தொடங்கினேன். ஒவ்வொரு கேள்விகாக பதில் அளித்தார்.

ஒடிடி தளத்துக்காக ஐடியா எப்படி உருவானது?

நாங்கள் ஐடி புராடக்ட் நிறுவனமாக செயல்பட்டு வருகிறோம். எங்களிடம் பல புராடக்ட்கள் உள்ளன. அதில் ஒரு புராடக்ட்தான் Vplayed. உதாரணத்துக்கு ஏதேனும் ஒரு நிறுவனம் ஒடிடி தொடங்க வேண்டும் என முடிவெடுத்தால் அதற்கான தொழில்நுட்பத்தை நாங்கள் வழங்கினோம். இந்த புராடக்ட்டுக்கு சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

ஓடிடி-யை தொடங்கும் நிறுவனமே அதற்கான டெக்னாலஜியை உருவாக்கலாம் என தோன்றலாம். ஆனால் இதற்கான டெக்னாலஜியை உருவாக்குவதற்கு இரு ஆண்டுகள் ஆகும். ஆனால், எங்களுடைய புராடக்ட் மூலம் ஒரு சில வாரங்களில் ஓடிடி தளத்தை தொடங்க முடியும். அந்த நிறுவனங்கள் கன்டெண்டில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.

ஓர் ஆண்டில் 150 படங்களுக்கு மேல் வெளியாகியது. ஆனால் முக்கியமான ஒடிடி நிறுவனங்கள் அதிகபட்சம் 10 படங்கள் கூட வாங்குவதில்லை. இதற்கு முன்பாக சில படங்கள் சில நாட்களுக்காவது தியேட்டரில் ஓடியது. ஆனால் இனி பெரிய படங்களுக்கு மட்டுமே தியேட்டர் கிடைக்கும், சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. அதனால் அதிகளவில் கன்டெண்ட் இருப்பதால்  ஓடிடியில் பெரிய வாய்ப்பு இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம், என்றார்.

Sriram

ஸ்ரீராம் மனோஹரன்

இதனால், GudSho எனும் ஓடிடி தளத்தை இவர்களே தொடங்கிவிட்டனர். அது தற்போது செயல்படவும் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே அதிக ஓடிடி தளங்கள் உள்ளன. இதில் GudSho-வின் பங்கு என்னவாக இருக்கும்?

ஒடிடி இப்போதுதான் வளரத்தொடங்கி இருக்கிறது. இன்னும் பெரிய அளவுக்கு வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உள்ளன. தற்போது இருக்கும் ஓடிடியை சிறு நகரங்களில் இருப்பவர்களுக்கு ஏற்றதாக இல்லை. முதலாவது பல மொழிகளில் கன்டெண்ட் உள்ளது. தவிர சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் அவை வேலை செய்கின்றன.

ஆண்டுக்கு 1000 ரூபாய் அல்லது மாதத்துக்கு 500 ரூபாய் கட்டணம் என்பது சிறு நகரங்களில் உள்ளவர்களுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் GudSho-வில் படத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாய் என்னும் அளவில் நிர்ணயம் செய்கிறோம். இந்தியாவில் ஸ்மார்ட் போன் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தவிர, விரைவில் 5ஜி வர இருக்கிறது. இந்த சூழலில் 20 ரூபாய்க்கு படம் பார்க்க முடியும் என்பதால் வளர்ச்சிக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது.

ஒரு காலத்தில் சில டிவி சானல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான டிவி சானல்களுக்கு சந்தையில் வாய்ப்பு உள்ளது.  அதனால் ஒடிடி சந்தையில் இன்னும் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

நீங்கள் ஒரு டெக்னாலஜி நபர். சினிமா / மீடியா தொழிலை எப்படி கையாளுகிறீர்கள்?

முக்கியமான முடிவை மட்டுமே நாங்கள் எடுக்கிறோம்.  கன்டெண்ட் தொடர்பாக முடிவெடுப்பதற்கு அந்தந்த துறையில் வல்லுநர்களை வைத்திருக்கிறோம். நாங்கள் சென்னையில் இருந்து கொண்டு மார்கெட்டிங் மூலமாக சர்வதேச அளவில் தொழில் புரிகிறோம். அதனால் எங்களுடைய மார்கெட்டிங் மூலம் அதிக மக்களை சென்றடைய திட்டம் வைத்திருக்கிறோம். அதிக மக்களை சென்றடைவதன் மூலமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.

பிஸினஸ் மாடல் என்ன?

நிரந்தரமான பிஸினஸ் மாடல் கிடையாது. சிறிய படங்களுக்கு பார்வையாளர்கள் அடிப்படையில் வருமானத்தை பகிர்ந்துகொள்வோம். ஓரளவுக்கு நல்ல ரேட்டிங் இருக்கும் படங்குகளுக்கு குறைந்தபட்ச தொகை மற்றும் வருமானப் பகிர்வு இருக்கும். பெரிய படங்களுக்கு மட்டுமே நல்ல தொகை முதலீடு செய்வோம். இதுதான் இந்தத் துறையின் பிஸினஸ் மாடல். இதைவிட முக்கியம் நல்ல கன்டெண்ட்களை கொண்டுவருவதுதான் முக்கியமான சவால்.

ஸ்கேம் 1992 என்னும் வெப்சீரியஸ் வெளியாகும் வரை சோனி லைவ் என்னும் ஒடிடி தளம் குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதேதான் இங்கேயும். நல்ல கன்டென்ட்களை பிரபலப்படுத்தும்போது குட்ஷோவும் எளிதில் மக்களை சென்றடையும்.

dunsho

ஓடிடி மற்றும் GudSho-வின் எதிர்காலத் திட்டம்?

ஏற்கெனவே சொன்னதுபோல இப்போதுதான் ஓடிடி தளங்கள் வளரத்தொடங்கி இருக்கிறது. இனி நேரடியாக ஒடிடியில் கன்டெண்ட் பார்ப்பது மிக வேகமாக உயரும். சில படங்கள் யூடியூப் தளத்தில் மில்லியன் கணக்கில் வியூஸ் உள்ளன. நாங்கள் ஒவ்வொரு படத்துக்கும் கட்டணம் நிர்ணயம் செய்வதால் சில லட்சம் பார்வையாளர்கள் மூலமே கூட பெரும் தொகையை ஈட்ட முடியும்.

தவிர தமிழுக்கென அல்லது தென் இந்திய மொழிக்கென பிரத்யேக ஓடிடி இல்லை. அதனால் எங்களுடைய தளம் வெற்றியடையும் என நம்பிக்கை வைக்கிறோம்.

நாங்கள் 13 ஆண்டுகளாக தொழில்நுட்ப நிறுவனமாக சென்னையில் செயல்பட்டுவருகிறோம். இதுவரை நாங்கள் நிதி திரட்டியதில்லை. அதேபோல ஒடிடிக்கு தேவையை நிதியுடன்தான் களம் காண்கிறோம்.

குட்ஷோவை பொறுத்தவரை படங்கள், வெப்சீரியஸ், ஸ்டான்ட் அப் ஷோ என பல தளங்களில் செயல்பட இருக்கிறோம். பல தயாரிப்பு நிறுவனங்கள், கிரியேட்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறோம். 

எப்போது லாஞ்ச் செய்யபோகிறீர்கள்?

https://www.gudsho.com/ தளம் தயாராக இருக்கிறது. இதுவரை உரிமம் வாங்கி இருக்கும் படங்களை அப்லோடு செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. தற்போது உள்ள படங்கள் பெரும்பாலும் இலவசமாக பார்க்க முடியும். சில வாரங்களில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும், என்றார் ஸ்ரீராம் மனோஹரன்.

நன்றி  : யுவர் ஸ்டோரி தமிழ்