தொழில் நுட்பத்தில் உருவாகும் மாறுதல், பிஸினஸ் மாடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தொழில்நுட்பத்தால் உருவானதுதான் இ-காமர்ஸ். பொருட்களை வாங்குவதற்கு ஏன் கடைக்கு செல்ல வேண்டும் வீட்டில் இருந்தபடியே வாங்குவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதுதான் இ-காமர்ஸ். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவமாக உருவாகி இருக்கிறது சோசியல் காமர்ஸ்.

ஈரோட்டைச் சேர்ந்த மிதுன் ஆதித் மற்றும் அனுஷா ஆகிய இருவர் உருவாக்கிய நிறுவனம் Spotkwik. பெங்களூருவை தலைமையாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டுவருகிறது. சிலிகான் பள்ளத்தாக்கில் இருக்கும் முதலீட்டு நிறுவனம் இந்த நிறுவனத்தில் கணிசமாக முதலீடு (25 லட்சம் ரூபாய்) செய்திருக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.7 கோடியாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

Spotwik founders

Spotwik நிறுவனர்கள் மிதுன் மற்றும் அனுஷா

ஆன்லைன் நிறுவனங்களில் லைப் ஸ்டைல் புராடக்ட்கள் வாங்குகிறோம். துணி வகைகள், ஷூ, நகை உள்ளிட்ட பலவும் வாங்குகிறோம். வாங்கும் பொருளின் தரத்தில் எந்த வித்தியாசம் இருக்காது. ஆனால் வாங்கும் பொருள் நமக்கு ஏற்றதாக இருக்குமா, அந்த அளவு நமக்கு பயனுள்ளதாக இருக்குமா என்பதுதான் சிக்கல்.

42 அளவுள்ள சட்டையை 40 அளவு நபர் போட்டால் எப்படி இருக்கும். இ-காமர்ஸில் உள்ள சிக்கல் இதுதான். இந்த சிக்கலை களைவதற்காக வளர்ந்துவரும் துறைதான் சோசியல் காமர்ஸ்.

கே.எஸ்.ஆர். கல்லூரியில் பொறியியல் படித்த மிதுன், இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பாக விப்ரோ நிறுவனத்தில் சில மாதங்கள் பணியாற்றி இருக்கிறார். இதனை தொடர்ந்து ஹெச்.ஆர். நிறுவனத்தை தொடங்கி அந்த நிறுவனம் தோல்வியில் முடிந்தது. இதற்கடுத்துதான் Spotkwik நிறுவனத்தைத் தொடங்கினார்.

புதிய நிறுவனத்துக்கான யோசனை எப்படி உருவானது என்னும் கேள்வியுடன் உரையாடலை தொடங்கினேன். நண்பனின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அவர் ஆன்லைனில் ஒரு ஷூ ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அந்த ஷூ அவருக்கு சரியாக பொருந்தவில்லை. அதனால் கடைசி நேரத்தில் கடையில் சென்று வாங்கினோம். அப்போதுதான் ஏஐ முறையில் இந்த ஷூ இவருக்கு எப்படி பொருந்தும் என்பதை கணிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என யோசித்தன் விளைவுதான் இந்த நிறுவனம், என்றார்.

ஆன்லைனில் வாங்குவதால் நேரம் மீதமாகிறது என்பது உண்மை. ஆனால் தவறான பொருட்களை வாங்கும் பட்சத்தில் இரு மடங்குக்கு நேரம் வீணாகிறது. இந்த சிக்கலை தவிர்ப்பதற்காகதான் spotkwik செயலியை நாங்கள் உருவாக்கினோம்.

இதைவிட, முக்கியம் நீங்கள் புதிதாக வாங்கும் ஆடை உங்களுக்கு எப்படி பொருந்துகிறது என்பதை புகைப்படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்தினை கேட்ட பிறகு ஆர்டர் செய்யலாம். அதாவது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஷாப்பிங் செய்வதை போன்ற அனுபவம் எங்கள் செயலி மூலம் கிடைக்கும் என்றார். தவிர விற்பனையாளர்களுடன் வாடிக்கையாளர்கள் பேரம் பேசம் முடியும். டீல் ஓகேயான பிறகு ஆர்டர் செய்யலாம்.

வழக்கமான இ-காமர்ஸ் மாடலில் ஒரு பொருள் உங்களுக்கு எப்படி பொருந்துகிறது என்பதை பார்க்க முடியாது, அதனை புகைப்படம் எடுத்து மற்றவர்களிடம் கருத்து கேட்க முடியாது மூன்றாவதாக பேரம் பேச முடியாது. ஆனால் சோசியல் காமர்ஸில் இவையெல்லாம் சாத்தியம் என மிதுன் தெரிவித்தார்.

எங்களது உரையாடல் பிஸினஸ் மாடல் குறித்து திரும்பியது. கடந்த ஜனவரி மாதம் இவர்களுடைய செயலியை அறிமுகம் செய்தனர். இதுவரை 10,000-க்கும் மேற்பட்டவர்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். மிக சமீபத்தில் ஆப் அறிமுகம் செய்தோம். அடுத்த ஆறு மாத்தில் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் எங்களிடம் இருப்பார்கள். அதற்கான வேலையை செய்துவருகிறோம்.

ஸ்பாட்விக்

இதுவரை, 10-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களை நாங்கள் இணைத்திருக்கிறோம். எங்களது செயலி மூலம் நடக்கும் விற்பனையில் எங்களுக்கு குறிப்பிட்ட சதவீத மார்ஜின் கிடைக்கும், என்று விளக்கினார்.

எதிர்காலம் எப்படி?

2010-ம் ஆண்டு இ-காமர்ஸ் எப்படி வளர்ந்து வரும் துறையாக இருந்ததோ அதேபோல தற்போது சோசியல் காமர்ஸ் வளர்ந்து வருகிறது. இது ஒரு புதிய சந்தையாக மாறிவருகிறது. தவிர தற்போதைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக, அதில் கிடைக்கும் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலே பொருட்களை வாங்குகிறார்கள். அதனால், தற்போது சிறிய சந்தையாக இருந்தாலும் மிகப்பெரிய சந்தையாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை உயர்த்தும் பணியில் இருக்கிறோம்.

எங்களுடைய ஐடியா மற்றும் செயல்பாடு நன்றாக இருப்பதால்தான் சிலிகான் பள்ளத்தாக்கில் இருக்கும் முதலீட்டாளர்களின் முதலீடு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. தவிர ஐஐஎம் பெங்களூரு லான்ச்பேட் என்னும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 280-க்கும் மேற்பட்ட புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 31 நிறுவனங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் நாங்களும் ஒருவர் என மிதுன் தெரிவித்தார்.

அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்கள் உள்ளன. அதேபோல மீஷோ உள்ளிட்ட இதர விற்பனை முறைகளும் உள்ளன. ஆனால் சோசியல் காமர்ஸ் தற்போதுதான் பிரபலம் அடைந்துவருகிறது. நடப்பு காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில்) 30 லட்சம் விற்பனையை இலக்காகக் கொண்டு செய்ல்பட்டுவருகிறோம். இந்த எல்லையை அடைந்த பிறகு அடுத்த கட்ட நிதி திரட்டலை செய்ய இருக்கிறோம். புதிய நிதி கிடைத்ததும் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை உயர்த்தும் நடவடிக்கையில் இருக்கிறோம் என மிதுன் தெரிவித்தார்.

இ-காமர்ஸ் பரபரப்பாக செயல்பட்டதுபோல இனி சோசியல் காமர்ஸும் பரபரப்பான துறையாக மாறக்கூடும்.

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்