எந்தவிதமான செயல்திட்டமும் இல்லாமல் சில தொழில்முனைவோர்களை அவ்வப்போது சந்தித்து உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். திட்டம் எதுவும் இல்லை என்பதால் பல டாபிக்களில் உரையாட முடியும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்.

அப்படி உரையாடும் சில நபர்களில் ஒருவர்தான் ஆனந்த் மணி. ரிப்போர்ட்பீ நிறுவனத்தின் நிறுவனர். தற்போது இந்த நிறுவனத்தை எக்ஸீட் நிறுவனம் வாங்கிவிட்டாலும், இன்னும் முழுமையாக வெளியேறவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை காலை பாம்குரோவ் ஓட்டலில் காலை உணவுக்காக சந்தித்தோம். அப்போது பல விஷயங்களை பற்றிபேசினோம். அதில் ஒன்றுதான் ‘கல்ப்பு’ ‘Gulppu’.

ஆனந்த் மணியின் ஆலோசனையில் சதீஷ் மற்றும் அனந்த் இணைந்து ‘கல்ப்பு’ நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். இந்த நிறுவனம் ரோஸ்மில்க் விற்பனை செய்கிறது என்று எளிமையாக சொல்லிவிடலாம். ஆனால் இதற்கான திட்டமிடல், யுக்தி, யுத்தியை செயல்படுத்துவதில் பல சவால்களை சந்தித்தாகக் கூறினார்.

கல்ப்பு நிறுவனர்கள்

’கல்ப்பு’ நிறுவனர்கள் சதீஷ் மற்றும் அனந்த்

‘கல்ப்பு’ உருவான கதை

சில நாட்களுக்கு முன்பு ‘கல்ப்பு’ என்னும் பெயர் நினைவுக்கு வரவே, ஆனந்த் மணி மூலமாக சதீஷுடன் உரையாடினேன். கல்ப்பு நிறுவனம் எப்படி உருவானது என்பதை விளக்கமாகக் கூறினார்.

ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் எம்பிஏ முடித்துவிட்டு சில ஓட்டல்களில் வேலை செய்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து சில நிறுவனங்களைத் தொடங்கி சரியாக அதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. இந்த நிலையில், ரோஸ்மில்க்கு என பிராண்ட் எதுவும் இல்லை எனத் தெரிந்தது. அதனால் 2020ம் ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாகப் பேசினோம்.

ஏற்கெனவே ஓட்டல் துறையில் இருந்ததால் செஃப்களின் பழக்கம் இருந்தது. அதனால் ரோஸ்மில்க் தயாரித்து சோதனை செய்துவந்தோம். அப்போதுதான் முதல் லாக்டவுன் வந்தது.  பிறகு மீண்டும் ஜூன் மாதம் சோதனையைத் தொடங்கினோம். நண்பர்கள், தெரிந்தவர்களுக்குக் கொடுத்து சோதனை செய்து புராடக்ட்டை வடிவமைத்தோம்.

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ‘கல்ப்பு’ என்ற பெயரில் ரோஸ்மில்க்கை சந்தைக்குக் கொண்டு சென்றோம், என்றார் சதீஷ்.

கீழ்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள சிறிய கடைகளில் எங்களுடைய புராடக்ட்களைக் கொண்டு சென்றோம். ஆரம்பத்தில் பேப்பர் கப்களில் மூடி அப்படியே அடைத்துக்கொடுத்தோம். சிறிது சிறிதாக தினசரி விற்பனை அதிகரித்துவந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் வளர்ச்சி அடையமுடியவில்லை. அதற்குள் மழைகாலம் வந்துவிட்டது. அதனால் உற்பத்தியை நிறுத்தி என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை திரும்பிப் பார்த்தோம்.

முதலில் விலை. ஆரம்பத்தில் ஒரு கப் ரோஸ்மில்க் 25 ரூபாய் என நிர்ணயம் செய்திருந்தோம். இது அதிக விலை, என சிலர் சொன்னதால், 20 ரூபாயாக விலை குறைக்கலாம் என முடிவெடுத்தோம்.

இரண்டாவது பிரச்சினை பேப்பர் கப். பேப்பர் கப் அகலமாக இருக்கும். அதனால் பிரிட்ஜில் அதிக பாக்கெட்களை வைக்க முடியாது. விற்பனை சரிவுக்கு இதுவும் ஒரு காரணம். அதனால் பேப்பர் கப்களில் இருந்து பாட்டிலுக்கு மாறினோம். அதனால் கூடுதலான பாட்டில்களை ஒவ்வொரு பிரிட்ஜிலும் வைக்க முடிந்தது.

Gulppu

மூன்றாவது காரணம்; சற்று சிக்கலானது. சிறிய டீ கடைகள், பேக்கர்கள், அலுவலகம் அருகே அமைந்திருக்கும் கடைகள் மற்றும் பெட்டிகடைகள் தான் எங்களுடைய வாடிக்கையாளர்கள்.

இதில் சில கடைக்காரர்கள் இரவில் பிர்ட்ஜினை ஆப் செய்துவிடுவார்கள். காலையில் ஆன் செய்வதால், உள்ளே இருக்கும்பொருட்கள் குளுமை அடைய இரண்டு மணி நேரம் ஆகிறது. அதனால் ரோஸ்மில்க் பாட்டில்களைக் கொண்டு செல்லும்போது 3 டிகிரி வெப்பநிலையில் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்தோம். அதனால் கடைகளுக்குக் கொண்டு செல்லும்போது ரோஸ்மில்கை குளுமையாக கொண்டு செல்வதால் வாடிக்கையாளர்களால் உடனடியாக அருந்த முடிந்தது.

அடுத்து நாங்கள் செய்த முக்கியமான விஷயம் தினசரி கடைகளுக்கு செல்ல வேண்டும் என்பதுதான். ஒருவர் போய் ஆர்டர் எடுப்பது மற்றொரு பணியாளர்கள் சரக்கை கொண்டு செல்வது என்னும் முறையை மாற்றினோம்.

காலையில் நான்கு மணி முதல் 8 மணி வரை உற்பத்தி நடக்கும். எட்டுமணிக்கு பிறகு நேராக கடைகளுக்குச் செல்லத் தொடங்குவோம். ஒருவரே ஆர்டர் மற்றும் விற்பனையை பார்த்துக் கொள்வதால் கடைக்காரர்களுடன் தொடர்பு அதிகரிக்கிறது.

சந்தையில் இருக்கும் தேவையை பொறுத்து ரோஸ்மில்க்கை ரீபில் செய்வோம். எந்தவிதமான வேதி பொருட்களை நாங்கள் சேர்க்கவில்லை என்றாலும் மூன்று நாட்களுக்கு ரோஸ்மில்க்கை பயன்படுத்தலாம். இருந்தாலும் 2 சதவீதம் அளவுக்கு வீணாகும் வாய்ப்பு இருக்கிறது. இது சந்தையில் இருக்கக் கூடிய அளவுதான்.

முதல் முறை நாங்கள் செய்த தவறுகளை முழுமையாக சரிசெய்தோம். இரண்டாவதாக கடைக்காரர்களுக்கு என்ன பயன் இருக்கிறது என்பதை விளக்கினோம். எங்களுடைய பொருளின் மூலம் 35 சதவீதம் உடனடியாக லாபம் என்பதை புரியவைத்தோம். அதனால் கடைக்காரர்களும் எங்களுடைய விற்பனைக்கு முக்கியப் பங்கு வகித்தார்கள்.

இதற்கு மற்றொரு காரணம் நாங்கள் கேஷ் அண்ட் கேரியில்  செயல்படுகிறோம். எங்கள் மூலமாக அவர்களுக்கு லாபம் இருக்கும் எனத் தெரிந்தால் மட்டுமே கேஷ் அண்ட் கேரி முறை வேலை செய்யும். கடன் கொடுத்து வாங்குவது என்பது இந்த பிஸினஸுக்கு சரிவராது.

இத்தனை விஷயங்களைச் சரிசெய்து மீண்டும் ஜனவரி 25-ம் தேதி முதல் மீண்டும் சந்தைக்கு செல்லத் தொடங்கினோம்.

”முதலில் 10 கடைகளுக்கு சப்ளை செய்யத் தொடங்கினோம். தற்போது 118 கடைகளுக்கு மேல் சப்ளை செய்கிறோம். சில நாட்களில் 1,200 பாட்டில்கூட விற்பனை செய்திருக்கிறோம். சராசரியாக 800 பாட்டில்கள் வரை விற்பனை செய்கிறோம்,” என்றார் சதீஷ்.

லாக்டவுன் சவால்கள்

இந்த நிலையில்தான் கடைகள் செயல்படுவதற்கு நேரக்கட்டுப்பாடு  விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லாக்டவுன் விதிக்கப்பட்டது. அதனால் எங்களுடைய உற்பத்தியை நிறுத்திவிட்டோம். எங்களுடைய பொருட்களை மூன்று நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் தற்போது சந்தைக்கு செல்வதால் அதிக இழப்பு ஏற்படும். லாக்டவுனுக்கு பிறகுதான் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என சதீஷ் கூறினார்.

Gulppu

அப்படியானல் பணியாளர்களுக்கு சம்பளம் எனக் கேட்டதற்கு,

“நாங்கள் பகுதி நேர பணியாளர்களை வைத்து மட்டுமே செயல்படுகிறோம். எங்களிடம் வேலை செய்பவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. ஸ்விக்கி உள்ளிட்ட வேறு நிறுவனங்களில் அவர்கள் வேலை செய்வாரக்ள். காலையில் 12 மணிக்கு வேலை முடிவடைந்துவிடும் என்பதால் தற்போதைக்கு பணியாளர்கள் பிரச்சினை இல்லை என்றார். எங்களிடம் வேலை செய்வது என்பது பணியாளர்களுக்கு முக்கியமான வேலை அல்ல. அவர்களுக்கு பகுதி நேர வேலை மட்டுமே என்பதால் தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்துகிறோம்,” என்றார்.

அடுத்தகட்ட திட்டம் குறித்து தெரிவிக்கையில், தற்போது ரோஸ்மில்க் மட்டுமே தயாரிக்கிறோம். விரைவில் பாதம்மில்க், ஜீரண மோர் உள்ளிட்ட பிரிவுகளிலும் களம் இறங்குகிறோம். அதேபோல இதுவரை சில்லரை விற்பனை செய்துவந்தோம். இனி மொத்தமாகவும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம், என விளக்கினார்.

”புராடக்டை கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டோம். பிஸினஸ் மாடல் மற்றும் போதுமான பணியாளர்கள் இருப்பதால் கூடிய விரைவில் ஒரு நாளைக்கு 5,000 பாட்டில்கள் என்னும் இலக்கை தொடமுடியும். லாக்டவுன் முடிந்த பிறகுதான் இதற்கான பணிகளைத் தொடங்க முடியும். இந்த இலக்கு எட்டக்கூடியது,” என சதீஷ் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கல்ப்பு என்னும் பெயர் காரணத்தைக் கேட்டதற்கு, ஒரே கல்ப்பில் குடித்துவிட்டேன் என பள்ளி மாணவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். நாமும் பேசி இருக்கிறோம். அதாவது நல்ல சுவை இருந்தால் மட்டுமே கல்ப்பு என்பது சாத்தியம். அதனால் கல்ப்பு என்னும் பெயரை சூட்டினோம் என்று முடித்தார் சதீஷ்.

விரைவில் ரோஸ்மில்கின் புதிய பெயர் ‘கல்ப்பு’ என மாறக்கூடும்.

நன்றி  : யுவர் ஸ்டோரி தமிழ்