The Buttermilk Factory நிறுவனத்தின் பெயரைக் கேட்டவுடனேயே மிகவும் பிடித்துபோனது. கொரோனா குறித்த அச்சம் இருந்தாலும், நேரில் சென்று நிறுவனத்தை பார்வையிட வேண்டும் என முடிவெடுத்தேன். ஞாயிறுக் கிழமை போகலாம் என முடிவெடுத்து நிறுவனர் மோகன்ராஜிடம் கூறினேன். ஞாயிறுகளில் கூட்டம் அதிகமாக இருக்கும், மற்ற நாட்களில் பார்க்கலாமே என்றார். அடுத்த சில நாட்களில் வேலை இருந்ததால் வேறு வழியில்லாமல் ஞாயிறு அன்று ‘தி பட்டர்மில்க் பேக்ட்ரி’-யில் மோகன்ராஜை சந்தித்தேன்.

குன்றத்தூரில் இவரது பட்டர்மில்க் ஃபேக்ட்ரி செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இதுபோன்ற குளிர்பான கடைகள் கண்ணாடி கூண்டுக்குள் இருக்கும். ஆனால் அழகான குடிசையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

எப்படி இந்த ஐடியா தோன்றியது என மோகன்ராஜிடம் கேட்டபோது,

“சென்னைதான் சொந்த ஊர். கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஞ்சினியரிங் படித்து முடித்தவுடன் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் வேலை கிடைத்து சேர்ந்தேன். ஆனால் வேறு எதாவது செய்ய வேண்டும் என தோன்றிக்கொண்டே இருக்கும். ஆனால் வேலையில் இருந்ததால் எதையும் தொடர முடியவில்லை. அதனால் வேலையை விட்டால்தான் நினைத்ததை செய்ய முடியும் என ஹெச்.சி.எல். வேலையை விட்டேன்,” என்றார் மோகன்ராஜ்.

Mohanraj

The Buttermilk Factory நிறுவனர் மோகன்ராஜ்

வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் நான் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என அப்பா விரும்பினார். அதனால் அரசு வேலைகளுகான நுழைவுத் தேர்வு எழுதத்தொடங்கினேன். அதேபோல, சொந்தமாக தொழில் தொடங்குவது குறித்தும் சிந்தித்தேன். ஒருவழியாக ஏர் இந்தியாவில் பகுதி நேர வேலை கிடைத்தது. இந்த சூழலில் ஓ.எம்.ஆர். சாலையில் பிரியாணி கடை தொடங்கலாம் என முடிவெடுத்து. நானும், என் நண்பனும் பணிபுரிந்து கொண்டே பிரியாணி கடை தொடங்க முடிவெடுத்தோம், பிரியாணியை பொறுத்தவரை மாஸ்டர்தான் முக்கியம்.

சரியான மாஸ்டர் அமையாதது, நாங்கள் சரியாக நிர்வாகம் செய்யாதது என்பது உள்ளிட்ட காரணங்களால் மூன்றே மாதத்தில் அந்த கடையை மூட வேண்டிய சூழல் உருவானது. சுமார் 2 லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம். இனி தொழில் தொடங்கினால் நேரடியாக நாமே கவனித்தால்தான் சரியாக இருக்கும் என்பது மட்டுமே எனக்கு கிடைத்த படிப்பினை.

சில மாதங்கள் இப்படியே சென்றன. இனியும் வேலையில் இருந்தால் சரியாக இருக்காது என ஏர் இந்தியாவின் பகுதி நேர வேலையை விட்டுவிட்டேன் என என்னிடம் மோகன்ராஜ் தன் தொழில் பயணத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கடையில் கூட்டம் வரத்தொடங்கியது.

15 நிமிடங்கள் மட்டுமே எங்களால் உரையாட முடிந்தது. சரி வாடிக்கையாளர்களைப் பார்த்த பிறகு பேசிக்கொள்ளலாம் எனக் காத்திருந்தேன்.  ஆனால் அதன் பிறகு உரையாடலை தொடர முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக மக்கள் வந்துக்கொண்டே இருந்தனர். வெயில், ஞாயிறு ஆகிய இரு காரணிகளால் ‘பட்டர்மில்க் ஃபேக்ட்ரி’-யில் கூட்டம் களைக்கட்டியது. அதனால் உரையாடலை போனில் தொடரலாம் என விடைபெற்றேன்.

போனில் தொடர்ந்து உரையாடலில், ஏர் இந்தியா வேலையை விட்ட பிறகு பல கட்ட யோசனைகள் இருந்தன. ஆனால் சில ஐடியாக்களுக்கு அதிக முதலீடு தேவைப்பட்டது. முதலில் வேலையில்லை, இரண்டாவது ஏற்கெனவே தொழிலில் சில லட்சங்களை இழந்துவிட்டோம் என்பதால்  அதிக முதலீடு இல்லாத தொழிலாக இருக்க வேண்டும் என்பதும் யோசனையில் இருந்தது.

இயற்கை பானத்தில் கிடைத்த ஐடியா

தொழில் தொடங்க, பலரை சந்தித்து உரையாட வேண்டியது இருந்ததால், மோகன்ராஜ் அடிக்கடி பயணத்திலே இருக்க வேண்டி இருந்ததாக தெரிவித்தார். அப்போது ஒரு நாள் மோர் குடித்தேன். உப்புத் தண்ணீர் என்றுதான் அதனை சொல்ல வேண்டும். அந்த நிலையில்தான் மோர் இருந்தது. அப்போதுதான்,

“மோருக்கு என பிரத்யேகமாக ஒரு நிறுவனம் தொடங்கலாம் என திட்டமிட்டேன். இதுவரை இருந்தவை எல்லாம் ஜூஸ் கடைகள் மட்டுமே. மோருக்கு என எதுவும் இல்லை. காபி டீ எல்லாம் மிக சமீபமாக வந்தவை. ஆனால் மோர் காலம் காலமாக நம்முடைய பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதால் விற்பனையாகும் என நம்பினேன்.”

இதற்கான கடை அமைக்க இடம் தேடினால் சில லட்சங்கள் அட்வான்ஸ் மற்றும் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல்  வாடகை  கொடுக்க வேண்டி இருந்தது. ஒரு வேளை சிறப்பான வருமானம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது. தவிர, குளிர் மற்றும் மழை காலங்களில் வாடகையே கொடுக்கக் கூட முடியாத சூழல் இருந்தால் என்ன செய்வது என யோசித்தேன்.

buttermilk factory

இந்த சமயத்தில்தான் குன்றத்தூரில் அப்பா வைத்திருந்த இடம் குறித்த சிந்தனை வந்தது. கொஞ்சம் புறநகர் என்றாலும் தொகை அடிப்படையில் எந்த ரிஸ்கும் இல்லை என்பதால் குன்றத்தூரிலே மோர் கடை தொடங்க முடிவெடுத்தேன்.

குன்றத்தூர் என முடிவான போது இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினேன். முதலாவது வழக்கமான கடையாக இது இருக்கக் கூடாது, வித்தியாசமாக இருக்க வேண்டும் என யோசித்தேன். அதனால் குடிசையில் கடையை வடிவமைத்தோம். அதேபோல இடம் மீதம் இருந்ததால் நர்சரி அமைத்தேன்.

மழை மற்றும் குளிர் காலங்களில் நர்சரி மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்பதற்காக உருவாக்கினேன். சில்லரை விற்பனை மட்டுமல்லாமல் மொத்தமாகவும் விற்பனை செய்துவருகிறேன். சுமார் 7,000 செடிகள் விற்பனை செய்திருக்கிறேன்.

’தி பட்டர்மில்க் ஃபேக்டரி’ என பெயரிட்டு ஆரம்பத்தில் மோர் மற்றும் கரும்பு சாறு மட்டுமே விற்பனை செய்தோம். அதுவும் மண்குடுவையில்தான் (தற்போது கொரோனா காரணமாக பேப்பர் கப்களில் வழங்குகிறோம்) வழங்குகிறோம். இந்த இரண்டுக்கும் வரவேற்பு அதிகமாக இருந்தது. இதன் பிறகே லஸ்ஸி உள்ளிட்ட இதர பானங்களை அறிமுகம் செய்தோம்.

2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த கடையை தொடங்கினோம். ஓர் ஆண்டில் ஒரளவுக்கு வளர்ச்சி அடைந்தோம். ஆனால் முதலாம் ஆண்டில் கொரானா வந்ததால் கடையை மூடவேண்டி இருந்தது. அதன் பிறகு கடையை திறந்தாலும் எங்களுக்கு பயம் இருந்தது.

 

lassi

சளி, காய்ச்சல் முக்கியப் பிரச்சினையாக இருப்பதால் மோர் உள்ளிட்ட பானங்களை மக்கள் அருந்துவார்களா எனும் சந்தேகம் இருந்தது. ஆனால்,

“பிஸினஸ் நன்றாகவே இருந்தது. மழை காலங்களில் பிஸினஸ் சரிந்தாலும் எங்களின் மோருக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது வார நாட்களில் தினமும் சுமார் 5000 ரூபாய் அளவுக்கு விற்பனையாகிறது. விடுமுறை நாட்களில் சுமார் 8,000 ரூபாய்க்கு மேலே விற்பனை நடக்கிறது என மோகன்ராஜ் கூறினார்.

மோரை பலவகைகளில் அளிக்கிறார்கள் இவர்கள். 15 ரூபாயில் வெறும் மோர் தொடங்கி, லஸ்ஸி, ஜூஸ், மில்க் ஷேக் என பலவகை பானங்களை விற்பனை செய்கிறது ’தி பட்டர்மில்க் ஃபேக்டரி’.

அடுத்த கட்டம்?

விற்பனை நன்றாக இருக்கும் சூழலில் அடுத்த கட்ட திட்டம் குறித்து கேட்டபோது, எங்கள் முன் பல கட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பதற்குள் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்துவருகிறது. முதலாவது, நகரின் பிற பகுதிகளில் கிளை தொடங்கும் திட்டம் இருக்கிறது. முக்கியப் பகுதிகளில் இடம் கொடுக்கவும் சிலர் முன்வந்திருக்கிறார்கள்.

அதேபோல, எங்களின் சுவை நன்றாக இருப்பது மட்டுமல்லாமல் சீராக இருப்பதால் பிரான்ஸைசி கேட்டும் சிலர் பேசி வருகின்றன. மூன்றாவதாக மொத்தமாக மோர் உள்ளிட்டவற்றை கொடுக்க முடியுமா என சில பெரு நிறுவனங்கள் கேட்டிருக்கின்றன. இதுபோல விரிவாக்கத்துக்கு பல வாய்ப்புகள் எங்கள் முன் இருக்கின்றன என மோகன்ராஜ் தெரிவித்தார்.

தொழில் தொடங்குவதற்கு ஐடியா தேவை என பலரும் பல விதமான யோசனைகளில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் தொழிலுக்கு ஐடியாவை விட எக்ஸிகியூஷனே முக்கியம். எக்ஸிகியூஷன் சிறப்பாக இருந்தால் வெற்றியடையலாம் என்பதற்கு இப்போதைய உதாரணம் ’தி பட்டர்மில்க் பேக்டரி’

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்