1993ம் ஆண்டு ஒரு கடையில் ஆரம்பித்த கல்யாண் ஜூவல்லர்ஸ் இன்று 60-க்கும் மேற்பட்ட சொந்த ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. நூறு வருடங்களுக்கு முன்பு இவர்களது முன்னோர்கள் தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்றவர்கள். நிறுவனத்தின் வளர்ச்சி, தங்கத்தின் விலை சரிவு, எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ்.கல்யாணராமனிடம் திருச்சூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். மலையாளம் கலந்த தமிழில் நம்மிடம் பேசினார். அந்த விரிவான பேட்டியிலிருந்து..

உங்களின் இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது?

115 வருடங்களுக்கு மேலாக எங்களது குடும்பம் பிஸினஸில் இருந்தது. 93-ம் ஆண்டு ஜுவல்லரி பிஸினஸை நாங்கள் எடுத்துக்கொண்டோம். அப்போது ஆர்டர் எடுத்துதான் நகைகளை விற்றுவந்தார்கள். அதை மாற்றுவதற்காக கார் பார்க்கிங் வசதி கொண்ட பெரிய கடையை முதலில் திருச்சூரில் ஆரம்பித்தோம். வியாபாரம் நன்றாக இருந்தது. அப்போது பாலக்காட்டில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இங்கே வருவார்கள். அங்கு ஏன் இன்னொரு ஷோரூம் திறக்க கூடாது என்று கேட்டதால் பாலக்காட்டில் ஆர்ம்பித்தோம். எனக்கு இரு மகன்கள். ஆளுக்கு ஒரு ஷோ ரூம் கொடுத்தால் என் வேலை முடிந்தது என்றுதான் அப்போது நினைத்தேன். மக்கள் ஆதரவும், கடவுள் கருணையாலுமே வளர்ச்சி சாத்தியமானது.

சர்வதேச நிலவரங்கள்தான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. விலையில் நிலவும் ஏற்ற இறக்கத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?

தங்க நகைகளை செய்வதன் மூலம் கிடைக்கும் செய்கூலிதான் எங்களுக்கு லாபம். குறைந்த லாபம், அதிக எண்ணிக்கையில் விற்பனைதான் எங்களது இலக்கு. எங்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவுக்கு ஏற்ப ஹெட்ஜிங் செய்துவிடுவோம். இதன் மூலம் தங்கத்தால் எங்களுக்கு லாபமும் வராது நஷ்டமும் வராது. தங்கத்தின் ஏற்ற இறக்கத்தில் நாங்கள் லாபம் சம்பாதிக்கவில்லை. அதற்கான திட்டமோ, ரிஸ்க்கோ நாங்கள் எடுக்கவில்லை.

செய்கூலி மட்டும்தான் உங்களது லாபம் எனில் ஒரு ஷோரூம் பிரேக் ஈவன் ஆக எவ்வளவு காலம் ஆகும்?

நல்ல வியாபாரம் நடக்கும்போது. அதிகபட்சம் இரண்டு வருடங்களில் பிரேக் ஈவன் அடைந்துவிடலாம்.

பணியாளர்களை சார்ந்துதான் இந்த வியாபாரம். அவர்களுக்கான உடை, பயிற்சி, பாதுகாப்பு மற்றும் சம்பளம் உள்ளிட்ட விஷயங்களை பற்றி சொல்லுங்கள்?

எப்படி வியாபாரம் செய்யவேண்டும், எப்படி பேச வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்சி மையங்கள் இருக்கின்றன. மேலும் எங்களது அனைத்து நகைகளையும் பார்கோட் மூலம்தான் விற்கிறோம். அதனால் கடையில் களவுபோக வாய்ப்பில்லை. மேலும் எங்களிடம் இருப்பவர்கள் பல வருடமாக இருப்பவர்கள். அவர்களுக்கு தேவையான சம்பளத்தை கொடுக்கிறோம். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் எங்களிடம் இருக்கும் பணியாளர்களில் 90 சதவீதத்துக்கு மேல் நாங்கள் டீடிஎஸ்(tax deducted at source) பிடிக்கும் அளவுக்கு சம்பளம் கொடுக்கிறோம்.

உங்களது அனைத்து ஷோரூம்களும் உங்களுக்கே சொந்தமானவை. பிரான்சைசி மூலம் விரிவாக்கம் செய்யும்போது இன்னும் அதிக மக்களை சென்றடையலாமே?

’’நம்பிக்கை அதானே எல்லாம்” இதுதான் எங்களது ஸ்லோகன். இந்த நம்பிக்கையை உறுதி செய்யும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அவர்கள் எதாவது செய்யும் போது நம்பிக்கை போய்விடும். மக்களை ஏமாற்றியது போல ஆகிவிடும். மேலும் பிரான்சைசி எடுத்தவர்கள் அவர்களது லாபத்தை மட்டுமே பார்ப்பார்கள். அதனால் பிரான்சைசி கொடுக்கும் எண்ணம் இல்லை.

அமிதாப் பச்சனையும், ஐஸ்வர்யா ராயையும் விளம்பர தூதராக நியமித்திருக்கிறீர்கள். இந்தியா முழுவதும் பிரபலமானவர்களை விளம்பர தூதராக நியமித்து, குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்கிறீர்கள் என்பதால்தான் இந்த கேள்வியை கேட்டேன்..

பிரான்சைசி கொடுக்கும்போது எங்களுக்கும் மக்களுக்கும் இடையே தூரம் அதிகமாகிவிடும். மேலும் நாங்கள் பிரான்சைசி கொடுத்தவரை நம்பவேண்டியதாகிவிடும். slow and steady wins the race. மேலும் முக்கியமான மாநிலங்களில் எங்களது ஷோ ரூம் இருக்கிறது. பிரான்சைசி மூலம் ஒரு வருடத்தில் 50 ஷோரூம்கள் ஆரம்பிக்கலாம். இல்லை, மூன்று வருடத்தில் 50 சொந்த ஷோரூம்கள். நாங்கள் மெதுவாக செல்லவே விரும்புகிறோம்.

சமீப காலங்களில் தங்க நகை கடைகள் ஐ.பி.ஓ. வெளியிட்டு வருகிறார்கள். உங்களது திட்டம் என்ன?

ஐ.பி.ஓ. செல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பணம். தேவையான பணம் இருக்கிறது. விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் லாபத்தில் இருந்து எடுக்கலாம். இல்லை வங்கியில் கடன் வாங்கிக்கொள்ளலாம். அடுத்து நிறுவனத்தின் மதிப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும் சென்று ஐந்து நகை கடைகளை சொல்லுங்கள் என்று சொன்னால் அதில் கல்யாணும் இருக்கும். ஐ.பி.ஓ. இல்லாமலே இது இரண்டும் எங்களுக்கு இருக்கிறது.

இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை. ஒரு வேளை இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு அதிக பணம் தேவைப்பட்டால் அப்போதைக்கு பரிசீலனை செய்யலாம்.

அனைத்து பொருட்களிலும் ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருகிறது. தங்கத்தில் எப்படி இருக்கிறது?

இதுவரை ஆன்லைன் மூலம் விற்பனையை ஆரம்பிக்கவில்லை. நவம்பர் மாதம் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். ஆனாலும் அதிக மதிப்பு பொருட்கள் என்பதால் ஆன்லைனில் பெரிய அளவு விற்பனை இருக்காது என்று நினைக்கிறேன். தங்கத்தை பொருத்தவரை ஆன்லைனில் பெரிய போட்டி இருக்காது. இருந்தாலும் விழா காலங்களில் பரிசீலிப்பதற்கு இவை பயன்படும் என்பதால் ஆரம்பிக்கப்போகிறோம்.

அடுத்த சில வருடங்களில் தங்கம் விலை குறையும் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். உங்களது வியாபாரம் எப்படி இருக்கும்?

விலை குறைந்தாலும் விழாக்களுக்கு வாங்குபவர்கள், பரிசளிக்க வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். தங்கத்தை முதலீடாக பார்ப்பவர்கள் வேண்டுமானாலும் காத்திருந்து வாங்கலாம்.

ரிசர்வ் வங்கி தங்க நகை சீட்டில் சில விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறதே? இதனால் சீட்டு போடுபவரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா?

பெரிய அளவுக்கு குறையவில்லை. சீட்டு போடுபவருக்காக சில பிரத்யேக டிசைன்களை உருவாக்கி இருக்கிறோம். அந்த டிசைன்கள் எங்களுடைய கடைகளில் கிடைக்காது. மேலும் இன்னும் பல குடும்பங்கள் மொத்தமாக நகையை வாங்க முடியாது என்பதால் அவர்கள் சீட்டில் இணைகிறார்கள். நம்முடைய அடுக்குமாடி வேலை நடந்துகொண்டிருக்கிறது என்றாலும் வீட்டுக்கு இ.எம்.ஐ. கட்டுவதை போல, இதுதான் நகை என்பதை வாடிக்கையாளர்களுக்கு காண்பித்து விட்டதால் அவர்கள் சீட்டில் சேருகிறார்கள்.

நன்றி ‘தி இந்து’.