‘தகவல்களை அறிவாக மாற்றும் வித்தையைக் கற்க வேண்டும்’
எஸ். அபய குமார். எம்.டி மற்றும் சி.இ.ஓ. ஷாசன் பார்மசூட்டிகல்ஸ்
கடந்த சில வருடங்களாக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், சில துறைகள் மட்டுமே பிரகாசமாக இருந்தன. அப்படிப்பட்ட துறைகளில் பார்மா துறையும் ஒன்று. இந்த நிலைமையில் சென்னையை சேர்ந்த பார்மா நிறுவனமான ஷாசன் பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அபயகுமாரிடம் விரிவாகப் பேசினோம். தன்னுடைய தொழில்முனைவு, ஆரம்பகால வாழ்க்கை பார்மா துறையில் அவர் சந்தித்த பிரச்னைகள் மற்றும் பார்மா துறையின் எதிர்காலம் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து…
ராஜஸ்தானைச் சேர்ந்த உங்கள் தந்தை எதற்காக தமிழ்நாடு வந்தார்?
அப்பாவின் பூர்விகம் ராஜஸ்தான் என்றாலும் நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடுதான். ராஜஸ்தானிலிருந்து 1935-ம் ஆண்டு மஹாராஷ்ட்ரா வந்தார். அதன் பிறகு அங்கேயும் எதுவும் சரியாக வேலை அமையாமல் சென்னையில் இருக்கும் துணிக்கடைக்கு மாதம் 20 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். பிறகு ஒரு சிறிய மளிகைக் கடை வைத்து அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பு, வீடு என தன்னுடைய பிஸினஸை பெரிதாக்கிக்கொண்டே வந்தார்.
அப்பாவே பிஸினஸ் நடத்திக்கொண்டிருக்கும் போது நீங்கள் ஏன் தனியாக ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?
கெமிக்கல் என்ஜீனியரிங் படித்த உடனேயே திருமணம் நடந்துவிட்டது. அப்போது எந்த வேலையும் இல்லை. அப்பாவுடனேயே பிஸினஸ் பார்த்து வந்தேன். ஒரு வருடத்துக்கு பிறகு தனியாக தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்று யோசனை தோன்றியது. அதனால் உணவுத்துறை உள்ளிட்ட மூன்று துறைகளில் புராஜக்ட் ரிப்போர்ட் தயாரித்து என் அப்பாவிடம் கொடுத்தேன். ஆனால் அப்பா இதுவரை நாம் தொழிற்சாலை ஆரம்பித்தது இல்லையே என்றார். இருந்தாலும் அவரது நண்பர் ஸ்ரீராம் குழுமம் தியாகராஜனிடம் என்னை அனுப்பி வைத்தார்.
அவர் அப்போது பல்க் டிரக் (பல்க் டிரக் என்பது மாத்திரைகள் தயாரிப்பற்கு முந்தைய நிலை, பவுடராக இருக்கும். இப்போது பல்க் டிரக் என்று அழைக்காமல் active pharmaceutical ingredient – API என்று அழைக்கிறார்கள்) துறையை சேர்ந்த ஒரு நிறுவனத்தை ஆந்திராவில் நடத்திவந்தார். இப்போதைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக ஆலோசனை சொன்னார். நானும் கெமிக்கல் என்ஜீனியர் என்பதால் சில காலம் பயிற்சி பெற்ற பிறகு, அப்பா கொடுத்த பணம், மற்றும் அப்பாவின் இன்னொரு நண்பர் செய்த முதலீட்டை அடிப்படையாக வைத்து ஷாசன் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
23 வயதில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள். ஆரம்ப கால பிஸினஸ் எப்படி இருந்தது?
நான் தொழில் துவங்கிய நேரத்தில் பெரும்பாலான மருந்துகளை இந்தியா இறக்குமதி செய்துகொண்டுதான் இருந்தது. மேலும், அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் இதுபோல நிறுவனங்கள் ஏதும் இல்லை. இப்போதுதான் buyers market வியாபாரம். ஆனால் நான் தொழில் துவங்கிய காலத்தில் sellers market தான். எங்களால் உற்பத்தி செய்ய முடியாத நிலை. பணம் கொடுத்து எங்களது மருந்துபொருட்களை வாங்கி சென்றார்கள். ஆனாலும் ஒரே ஒரு சிக்கல் இருந்தது. அனைத்து பார்மா நிறுவனங்களும் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய இடங்களில்தான் இருந்தது. அங்கிருந்து மூலப்பொருட்களை வாங்கி இங்கு மருந்துகளை தயாரித்து மீண்டும் அங்கிருக்கும் இன்னொரு மருந்து நிறுவனங்களுக்கு விற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் லாஜிஸ்டிக்ஸுக்கு கொஞ்சம் அதிக செலவு செய்ய வேண்டி இருந்தது.
அப்படியானல் அங்கேயே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கலாமே?
அதையும் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அதன் பிறகுதான் அதில் இருக்கும் சிக்கலை உணர்ந்துகொண்டேன். வட இந்தியாவில் 5 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தில் இருந்தேன். அந்த காலத்தில் போன் கிடையாது. வீட்டில் என் மனைவிக்கு ஒரு போன் செய்ய வேண்டும் என்றால் கூட காத்திருந்து பேச வேண்டும். நான் சொல்லும் ஹலோவை அந்த ஹாலில் இருக்கும் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்கு மேலும் நான் என்ன பேச முடியும். அதனால் அங்கு தொழிற்சாலை ஆரம்பிக்கும் திட்டத்தைக் கைவிட்டேன்.
தமிழ்நாட்டில் இருக்கும்போதே வீட்டுக்கு நேரம் செலவிட முடியாத நிலை. குழந்தை பிறந்துவிட்டதால் அம்மாவும் குழந்தையும் பிஸியாக இருந்தார்கள். அதனால் பிஸினஸில் கொஞ்சம் கவனம் செலுத்த முடிந்தது. வட இந்தியாவுக்கு போய்விட்டால் நிலைமை இன்னும் சிரமமாகும் என்பதால் வந்துவிட்டேன். அதன் பிறகு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அந்தத் தொழிற்சாலையை ஆரம்பித்தேன்.
அப்போது லைசென்ஸ் ராஜ் இருந்தது. மேலும் பார்மா நிறுவனம் தயாரிக்க பார்முலா வேண்டுமே?
இந்தியா டபிள்யூ.டி.ஓ.வில் 2000-ம் ஆண்டுதான் கையெழுத்திட்டது. அதனால் அதுவரை பார்முலா கிடைப்பதில் பிரச்னை இல்லை. இந்திய நிறுவனங்களுக்கு எந்த சட்டமும் கிடையாது. எந்த மருந்துகளை வேண்டுமானாலும் தயாரிக்கலாம்.
லைசென்ஸ்ராஜ் இருந்தாலும் கூட, எங்களது பார்மா நிறுவனம், அப்போது அது புதிய துறை. அதனால் லைசென்ஸ் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.
எப்போது பிரேக் ஈவன் அடைந்தீர்கள்.?
நிறுவனம் ஆரம்பித்த இரண்டு வருடங்களில் பிரேக் ஈவன் அடைந்துவிட்டோம்.
இன்னும் ஏபிஐ.யில் தான் இருக்கிறீர்களா இல்லை மாத்திரைகள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
2003-ம் ஆண்டில் இருந்து மாத்திரைகளை தயாரித்து வருகிறோம். இப்போது எங்களது மொத்த வருவாயில் 25 சதவிகித வருமானம் மாத்திரைகள் மூலம் வருகிறது.
சமீபகாலமாக பெரும்பாலான பார்மா நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்திருக்கிறது. ஆனால் உங்கள் நிறுவனத்தில் சொல்லிக்கொள்ளும் படியான லாபம் இல்லையே?
நிறுவனம் வளர வளர என் அண்ணன் மற்றும் தம்பி ஆகியோரும் நிறுவனத்துக்குள் வந்துவிட்டார்கள். 2004-ம் ஆண்டு குடும்பதைச் சேர்ந்தவர்கள் நிறுவனத்தை நடத்தாமல் புரபெஷனல்களை வைத்து நடத்த வைக்கலாம் என்று முடிவு செய்து புரபெஷனல்களிடம் கொடுத்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் 300 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் வந்துவிட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் 2011-ம் ஆண்டு மீண்டும் நான் பொறுப்புக்கு வந்தேன். இப்போதுதான் நிறுவனம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. இப்போது 800 கோடி ரூபாய் வருமானம் இருக்கிற நிறுவனம் இன்னும் இரண்டு வருடங்களில் 2000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளரும் என்று நம்புகிறேன்.
புரபெஷனல்கள் செய்த தவறு என்ன?
நிறைய இருக்கிறது. அவர்கள் பெரிய ரிஸ்க் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். ஹெட்ஜிங்கில் கொஞ்சம் தவறு உள்ளிட்ட சில தவறுகள். அது வேண்டாமே!
புரபெஷனல்கள் நிறுவனத்தை எடுத்துக்கொண்ட பிறகு என்ன செய்தீர்கள்?
அதன் பிறகு லைஃப் செல் என்னும் ஸ்டெம் செல்லை பாதுகாக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தேன். இதுபோல இன்னும் சில நிறுவனங்கள், கல்லூரி போன்றவற்றில் கவனம் செலுத்தினேன்.
சமீபத்தில் இந்திய பார்மா நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கி வருகிறார்கள். உங்களது நிறுவனத்தை வாங்குவதற்கு பேச்சு நடந்ததா?
இதுபோல பலர் வரத்தான் செய்வார்கள். ஆனால் எங்களுக்கு எங்கள் பிஸினஸ் மீது நம்பிக்கை இருக்கிறது. அதனால் இப்போதைக்கு விற்கும் பேச்சு இல்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தை நாங்கள் வாங்கினோம்.
பார்மா துறையில் அன்னீய முதலீட்டை பற்றி?
வரவேற்கிறேன்.
பார்மா நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஒரு பிரச்னையாக இருக்குமே?
நிச்சயமாக. ஒரு சிறிய தவறு நடந்துவிட்டால் கூட அவ்வளவுதான். அதனால்தான் பார்மா நிறுவனங்கள் தரத்தில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் எங்களது நிறுவனத்தில் ஒரு ஊழியர் அவருடைய பணி இடத்தை தாண்டி இன்னொரு இடத்துக்கு அனாவசியமாகச் செல்ல முடியாது.
இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
நான் நிறுவனம் ஆரம்பிக்கும் போது எந்தவிதமான தகவல்களும் இல்லை. ஆனால் இப்போது எல்லாவிதமான தகவல்களும் இருக்கிறது. அதை அறிவாக மாற்றினாலே போதும். தேவையானது கிடைக்கும். மேலும் முன்பெல்லாம் பிஸினஸ் ஆரம்பிக்க பணம் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. ஆனால் இப்போது பணம் இல்லாமலும் அறிவை மட்டுமே வைத்து எப்படி பிஸினஸ் செய்வது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி ‘தி இந்து’.
Recent Comments