அடுத்த வருடத்தைப் பற்றி யோசிப்பதுதான் தலைவரின் வேலை – ஜே.கிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

உலகம் முழுவதும் பல வகையான தொழில் அல்லது வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் அவை அனைத்தும் இந்தியாவில் இல்லை. உதாரணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விளையாட்டை நாம் விளையாட்டாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் விளையாட்டிலும் வர்த்தகம் இருக்கிறது. இங்கிலீஷ் பிரீமியர் லீக், என்.பி.ஏ. போன்றவை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துவந்தாலும், 2008-ம் ஆண்டில்தான் இந்தியாவில் ஐ.பி.எல் வந்தது, வெற்றிபெற்றது. அந்த சமயத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சி.இ.ஓ.வாக இருந்தவரும், இப்போது யுனிமிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஜே.கே. என்ற ஜே.கிருஷ்ணனிடம் விரிவாக பேசினோம். அந்த உரையாடலிலிருந்து…

உங்களின் ஆரம்பகாலம் பற்றி.?

அப்பாவுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை. ஆனாலும் நான் வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சென்னை ஐஐடியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தேன். அதன் பிறகு கல்கத்தாவில் உள்ள ஐ.ஐ.எம்-ல்z படித்தேன்.

அப்போதே நிர்வாகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

பொறியியல் படித்துவிட்டு உடனே வேலைக்குச் சென்றால் பெரிதாக எதையும் சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் பொறியியல் படித்து முடித்தும் எந்த வேலைக்கும் போகாமல் நேரடியாக ஐஐஎம்.க்கு படிக்க சென்றேன்.

உங்களின் முதல் வேலை என்ன?

ஐ.ஐ.எம்.-ல் படிக்கும் போதே வேலை கிடைத்துவிட்டது. ஆரம்பத்தில் புளூஸ்டார் நிறுவனத்தில் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் வேலையில் சேர்ந்தேன். அங்கு சில காலம் இருந்த போதுதான் கம்ப்யூட்டர்கள் சந்தையில் வந்தன. அப்போதைக்கு சில நிறுவனங்கள் மட்டுமே கம்ப்யூட்டர் விற்பனை செய்துவந்தன. அந்த சமயத்தில் கம்ப்யூட்டர் பாயின்ட் (1985) ஆரம்பிக்கப்பட்டது. அந்த ரிடெய்ல் நிறுவனத்தின் முதன்மை துணைத்தலைவராக வேலைக்கு சேர்ந்தேன்.

எப்போது தொழில்முனைவோராக மாறினீர்கள்?

எப்போதும் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று யோசித்துக்கொண்டிருப்பேன். மேலும் டெக்னாலஜியிலும் ஆர்வம் அதிகம். கம்ப்யூட்டர் பிஸினஸும் தெரியும் என்பதால் அப்போதைய நண்பர்கள் உதவியுடன் மைக்ரோலேண்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தோம். அதன் பிறகு அந்த நிறுவனத்திலிருந்து விலகி, நெட்லிங்க் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தை தனியாக ஆரம்பித்தேன்.

என்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், சிஃபி (இணையதள சேவையை அப்போதைக்கு கொடுத்த நிறுவனங்களுள் இதுவும் ஒன்று) நிறுவனத்துக்கு ஆலோசகராகவும் இருந்தேன். 1990களின் இறுதியில் அவர்கள் அமெரிக்க சந்தையில் நிதி திரட்டி வந்தார்கள். அவர்களுக்கு உதவியாக பல வேலைகளை செய்திருக்கிறேன்.

டெக்கான் சார்ஜர்ஸுக்கு வந்தது எப்படி?

எங்களுடை நெட்லிங்க் டெக்னாலஜீஸ் நிறுவனம், பத்திரிகைகளுக்கு தேவையான இணையதள தொழில்நுட்பத்தைக் கொடுக்கும் நிறுவனம். அதாவது பத்திரிக்கையாளரே உடனடியாக செய்திகளை இணையதளத்தில் பதிவேற்றும் வசதியை செய்துக்கொடுக்கும் நிறுவனம். 2005-06-ம் ஆண்டுகளில் டெக்கான் கிரானிக்கிள் நிறுவனம் எங்களது வாடிக்கையாளராக இருந்தது. அவர்களுக்கு இந்த சேவையை வழங்கும் போது அந்த நிறுவனத்துடன் தொடர்பு ஏற்பட்டது.

அப்போதுதான் பிசிசிஐ, ஐ.பி.எல்-க்கான அறிவிப்பை வெளியிட்டது. டெக்கான் நிறுவனமும் ஆர்வமாக இருந்தது. விளையாட்டுகள் மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தை கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். அப்போதுதான், இந்த பிரான்ஸைசி எடுக்கும் போது கிடைக்கும் லாபம் என்ன, அதில் உள்ள இடர்பாடுகள் என்ன என்பது குறித்து பலவிதமாக பேசினோம். டெக்கான் நிறுவனத்துக்கு ஒரு அணி கிடைத்தது. அந்த அணியின் சி.இ.ஓ.வாக நான் நியமிக்கப்பட்டேன்.

இந்த வர்த்தகத்துக்கு இதற்கு முன்பு வெற்றிகரமான மாடல் இல்லை! இதை எப்படி சாத்தியமாக்கினீர்கள்?

வெளிநாடுகளில் இதற்கான மாடல் இருந்தது. மேலும் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. ஒவ்வொரு அணிக்கும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வீரர்களுக்கு செலவு செய்ய முடியாது. அதனால் யார் யாரை எடுக்க வேண்டும், எந்த விலையில் எடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டோம்.

வீரர்கள் தேர்வு முடிந்த பிறகுதான், ஸ்பான்ஸர்களை பார்க்கச் சென்றோம். அது எங்களுக்கு கொஞ்சம் எளிதாக இருந்தது. உதாரணத்துக்கு, அப்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் கில்கிரிஸ்ட், வி.வி.எஸ். லஷ்மன், ரோஹித் சர்மா ஆகியோர் இருந்தார்கள். அவர்கள் உங்களுடைய லோகோவை அணியும் போது உங்களின் பிராண்டுக்கு இன்னும் கூடுதல் மதிப்பு இருக்கும் என்று சொல்லி அவர்களிடம் பிஸினஸ் பேசினோம். மேலும், ஒரு ஆட்டம் டிவியில் ஒளிப்பரப்பாகும் போது ஒரு பிராண்ட்க்கு எவ்வளவு நேரம் பப்ளிசிட்டி கிடைக்கிறது. அதே நேரத்துக்கு ஒரு சேனலில் பிரைம் டைமில் இதற்கு எவ்வளவு செலவாகும் என்று ஒப்பிட்டு விளம்பரம் வாங்கினோம்.

மேலும் ஸ்பான்ஸர்களுக்கு வி.ஐ.பி. டிக்கெட் கொடுக்க முடிவு எடுத்தோம். மேலும் இந்த டிக்கெட்டை நீங்களே பார்க்காமல் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுக்கும் போது இன்னும் பிஸினஸ் பலமாகும் என்கிற ரீதியில் பிஸினஸ் பேசினோம். அதே சமயத்தில், ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் என்பதால், உள்ளூரில் இருக்கும் பல முக்கிய நிறுவனங்களிடம் பேசினோம்.

முதல் வருட ஐ.பி.எல்-ல் உங்களுடைய டெக்கான் அணி கடைசி இடத்தில் இருந்தது. அதனால் அடுத்த வருடத்தில் உங்கள் ஸ்பான்ஸர்கள், கட்டணத்தை குறைக்க சொன்னார்களா?

இது இயல்பாக நடக்கக் கூடியதுதான். ஆனாலும் நாங்கள் அவர்களை சம்மதிக்க வைத்தோம். முதலில் எத்தனை அணிகள் விளையாடினாலும் ஒருவர்தான் வெற்றி அடையமுடியும். விளையாட்டில் தோற்பதால் உங்களின் பிராண்டுக்கு எந்த மதிப்பும் குறையாது. மேலும், டெக்னான் சார்ஜர்ஸ் அணி இனி அரையிறுதிக்கு செல்லாது என்று தெரிந்த பிறகும், ஹைதராபாத்தில் நடந்த டெக்கான் அணியின் இறுதி ஆட்டத்தில் மொத்த அரங்கும் நிறைந்திருந்தது என்று சொல்லி இருந்தோம்.

மேலும், முதல் வருடத்தில் ஐ.பி.எல். எப்படி நடக்கும் என்று பல ஸ்பான்சர்கள் பயந்தார்கள். நாங்கள் ஏற்கெனவே ஐ.சி.எல்.-ஐப் பார்த்துவிட்டோம் என்கிற ரீதியில் சிலர் பேசினார்கள். ஆனால் ஐ.பி.எல்.-ன் வெற்றி காரணமாக அடுத்த வருடத்தில் ஸ்பான்சர்கள் பிடிப்பதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

இரண்டாவது ஐ.பி.எல்லில் டெக்கான் அணி வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் உங்களது ஸ்பான்ஸர்ஷிப் கட்டணத்தை அதிகப்படுத்தினீர்களா?

இதுவும் பிஸினஸில் ஒரு பகுதிதான்.

விளையாட்டில் எதற்கு சியர் கேர்ள்ஸ்?

விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்காமல் பொழுதுபோக்கு என்ற அம்சத்தோடு அதை ஒரு பேக்கேஜ் ஆக மாற்றிக் கொடுக்க நினைத்தோம். அதனால்தான் பட்டாசு, அதிக விலை டிக்கட் வாங்குபவர்களுக்கு தனியாக கார் நிறுத்தும் வசதி, உணவு என பேக்கேஜாக கொடுத்தோம். இதில் சியர் கேர்ள்ஸ்களும் அடக்கம்.

ஏன் டெக்கான் சார்ஜர்ஸ் சி.இ.ஒ. பொறுப்பில் இருந்து விலகினீர்கள்?

நெட்லிங்க் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை டெக்கான் நிறுவனம் வாங்கிவிட்டது. மேலும் எனக்கு அடுத்தடுத்த திட்டங்கள் இருந்தது. அதனால்தான்.

இருந்தாலும், ஒரு அணியின் சி.இ.ஒ. என்பது கவர்ச்சிகரமான பதவி, விளையாட்டுக்கு எதிர்காலம் இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் புது நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள்?

நான் சி.இ.ஓவாக இருந்தாலும் கூட, பணியாளர்தானே. நான் தலைவர் கிடையாதே. மேலும், தனியாக பிஸினஸ் நடத்த வேண்டும் என்பதால் வந்துவிட்டேன்.

எதாவது ஒரு கிரிக்கெட் அணிக்கு உங்களது ஆலோசனை தேவைப்படுகிறது என்கிற பட்சத்தில்?

ஆலோசனை கொடுப்பதுபற்றி எந்த பிரச்னையும் இல்லை. நான் திறந்த மனதோடு இருக்கிறேன்.

உங்களுடைய யுனிமிட்டி சொல்யூஷன்ஸ் பற்றி?

நிறுவனங்களுக்கு சமுக வலைதளங்களை அமைத்துத் தருவதுதான் எங்கள் பணி. நாம் எப்போதுமே சமூகத்துடன் இணைந்துதான் வாழ்ந்து வருகிறோம். உதாரணத்துக்கு நமக்கு எதாவது தெரியவில்லை என்றால், நம் பக்கத்து வீட்டுகாரரிடமோ அல்லது நண்பர்களிமோ கேட்போம். ஆனால் இதற்கு ஓர் எல்லை இருக்கிறது. தொழில்நுட்பம் மூலம் இந்த எல்லையை நாம் உடைக்கலாம். உங்களுடைய கேள்விக்கு உங்கள் நிறுவனத்தில் இருக்கும் யாரிடமாவது பதில் இருக்கலாம். அந்த பதில்கள் கிடைக்கும் போது, உங்கள் வேலை முடியலாம். இப்போதைய பிரச்னை என்னவென்றால் உங்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரியாது. இந்த பிரச்னைகளுக்கு மற்றவர்களிடம் ஒரு தீர்வு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது. இந்த புள்ளியை இணைக்கும்போது, அது சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் பல பொறுப்புகளை வகித்திருப்பதால் உங்களிடம் இந்தக் கேள்வி? தலைமை பொறுப்பேற்பவர் எப்படி இருக்கவேண்டும்?

கம்பெனி இப்போது எப்படி நடந்துக்கொண்டிருக்கிறது. என்ன பிரச்னை என்பதையெல்லாம் சி.இ.ஓ. கவனிக்கத் தேவை இல்லை. அடுத்த காலாண்டுக்கு அடுத்த வருடத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிடுவதுதான் சி.இ.ஓ.வாக இருப்பவர்கள் செய்ய வேண்டும். துணைத்தலைவர் மார்க்கெட்டிங், துணைத்தலைவர் மனிதவளம் என்று பிரிவுகளை உருவாக்குகிற அதே சமயத்தில் எதிர்கால திட்டத்துக்கான துணைத் தலைவரை சி.இ.ஓ. நியமிக்க வேண்டும் அல்லது அவரே எதிர்காலத்தை பற்றி யோசிக்க வேண்டும்.

நன்றி ‘தி இந்து